வரலாறு

ரோஸாபார்க்ஸ்……..

அது ஒரு ரேசன் கடை..
அரசு அறிவித்த நிவாரணத்தை வாங்க மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
ரேசன் கடை ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு இடையே நிவாரணத்தை கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

இளைஞர்கள் பெண்கள் முதியவர்கள் சிறுவர்கள் என எல்லாரும் வெய்யில் தாக்கத்தை எதிர்க்கொண்டு வேர்வை வழிய வரிசையில் நிற்கிறார்கள். அப்போது 65 வயது மதிக்கத்தக்க ஒரு பிராமணர் ரேசன் கடைக்கு வந்தார். க்யூவில் நின்ற யாரையும் பொருட்படுத்தாமல்.. ரேசன் கடை உள்ளே சென்று தனது ரேசன் கார்டை நீட்டினார்.

‘கூட்டம் இல்லாத நேரத்தில் வரலாமில்லா சாமி’ என்று கடிந்துக்கொண்டே அவரின் ரேசன் கார்டை வாங்கி பதிவுசெய்து நிவாரணத்தை குடுத்தார். அவர் நிவாரணத்தை பெறும் போது வரிசையில் நின்ற யாரும் எதுவும் சொல்ல வில்லை. மாறாக அங்கு வரிசையில் நின்றிருந்த அந்த பிராமணர் ஒத்தவயதுடைய முதியவர்கள் பக்கம் அனைவரது பார்வையும் சென்றது.
ஆனால் அந்த முதியவர்கள் பார்வையோ ‘நாமும் பிராமணனாக பிறந்திருக்கலாமோ’ என்ற ஏக்கத்தில் இருந்தது.

சில நிமிடங்கள் நிசப்தம்.

மீண்டும் பரபரப்பு சலசலப்பு ரேசன் கடையைத் தொற்றிக் கொண்டது.
கூட்டம் கூடிக்கொண்டே போனது அனைவரும் களைத்து போய் கால் வலியோடு காத்து நிற்கிறார்கள். அப்போது மீண்டும் ஒரு பிராமணர் வருகிறார் ஆனால் அவருக்கு வயது 40 அல்லது 45 இருக்கும். இவரும் அந்த முதிய பிராமணர் போலவே உள்ள செல்கிறார்.

கூட்டத்தில் நாமெல்லாம் பைத்தியகாரங்களா என ஒரு சிலர் முனு முனுத்தார்கள்..ஆனால் யாருக்கும் சத்தமாய் கேள்வி எழுப்ப தெரியவில்லை.
பிராமணர் ரேசன் கார்டை நீட்டினார்.. 50 வயதுள்ள ஒரு பெண்மணி.. “என்ன இது யெம்புட்டு நேரம் நிற்கிறோம் அவரு இப்பதானானே வந்தாரு.. ? ஏ சாமி வரிசையில் நில்லுங்க.. உங்களுக்கெல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது.” என்று அந்த பெண் கேள்வி எழுப்பவும் கூட்டமும் அவளோடு சேர்ந்து ஆமா “எதுக்கு விட்டுக்கொடுக்கனும்”என்றது.

சுதாரித்துக்கொண்ட ரேசன் கடை ஊழியர்.. சாமி கார்ட குடுங்க..பொறவு வாங்க என்று அந்த பிராமணரை அனுப்பி விடுகிறார்.

இது நடந்தது நூற்றாண்டுக்கு முன்பு இல்லை. ஓராண்டுக்கு முன்பு 2020ல்.

ஆம்.!”ஏன் விட்டுக்கொடுக்கனும்?”

நிற்க.!

“எனக்கு வயது 42 தான் உடலாலும் மனதாலும் நான் களைத்துப்போகவில்லை.. விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்தே நான் களைத்துப் போனேன்”

வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராய் பெரும் புரட்சி போராட்டத்திற்கு வித்திட்டவர் கருப்பின பெண் ரோஸா பார்க்ஸ். 1955 ல் அமெரிக்கா பஸ்ஸில் தான் இருந்த இடத்தை வெள்ளை இனத்தவர்காக எழுந்து இடம் தராமல். சீட்டில் அமர்ந்து கொண்டு எழமாட்டேன் என்று சொன்னதற்காக கைதாகிறார்.
அப்போது அமெரிக்கா பத்திரிகைகள் ‘களைப்புற்றபெண்’என்று ரோஸாவை எழுதின.
ஆம்.. இன்று டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஏதோ பெட்டிகடையில் தீப்பெட்டி வாங்குவது போல் இந்திய ஊடகங்கள் செய்தி சொல்கிறதே அதே போல் அன்று அமெரிக்க ஊடகங்கள் ரோஸாவின் உரிமையை போராட்ட குணத்தை களைப்பு என்று உச்சரித்து.
அதற்கானப் பதிலடிதான்
“எனக்கு வயது 42 தான் உடலாலும் மனதாலும் நான் களைத்துப்போகவில்லை.. விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்தே நான் களைத்துப் போனேன்”

1956 க்கு முன்பு பேருந்தில் வெள்ளை இனத்தவர்க்கு ஒருவழி கறுப்பினத்தவருக்கு ஒரு வழி என்று சமரசமற்ற வழிமுறை. வெள்ளையர் ஒருவன் பஸ்ஸில் இடம் இல்லாமல் நின்றால் உட்கார்ந்து இருக்கும் கறுப்பினதவர் எழுந்து இடம் தரவேண்டும். 36 இருக்கைகளில் 10 மட்டுமே கறுப்பர்களுக்கு அந்த பத்தும் வெள்ளையர் வந்தால் எழுந்து இடம் தரவேண்டும். வெள்ளையர்கள் இறுவது இடத்திலும் காலியாக இருந்தாலும் கறுப்பர்கள் அமரக்கூடாது.இதை மீறும் கறுப்பினத்தவர்களுக்கு சிறை தண்டனை.
இந்த பாகுபாட்டை உடைத்தெறிந்து 1955ல் ரோஸாபார்க்ஸ் பஸ் சீட்டில் உட்கார்ந்து வெள்ளையர்க்கு இடந்தர மறுத்து கைதாகி பெரும் போராட்டமான “பேரூந்து புறக்கணிப்பு” போராட்டம் நடக்க காரணமாகியது. கறுப்பின மக்கள் அந்த போராட்டத்தில் வெற்றியும் அடைந்தார்கள். இப்படி யொரு போராளின் வாழ்கை வரலாறு புத்தகமாய் தமிழில் வந்திருப்பது மகிழ்ச்சி.

இங்கு பார்ப்பனிய ஆதிக்கம் இருந்தது இன்னும் ஏதோ வடிவில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அங்கு வெள்ளையர் ஆதிக்கம் இருந்தது இப்பொழுதும் இல்லாமல் இருக்காது. ஆதிக்க வெறி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள புதிய வடிவத்தில் வந்துக்கொண்டே இருக்கும். அதை எதிர்கொள்ள இதுபோன்ற மனித உரிமை போராளிகளை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த நூலை அந்த நோக்கில் நான் பார்கிறேன். மனிதம் மகத்தானது கற்றுக்கொண்டே இருப்போம்.

ரோஸாபார்க்ஸை பஸ் போராட்டதோடு மட்டும் சுருக்கிவிட முடியாது. கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை கறுப்பினர் வெள்ளையர் க்கு சமமான வேலை சமமான சம்பளம். பள்ளியில் கல்வியில் சமவுரிமை என அனைத்து போராட்டத்திலும் ரோஸாபார்க்ஸ் பங்களிப்பு இருக்கிறது. அவரது சுயவாழ்வு சமூக வாழ்வு இரண்டையும் இந்த நூல் அழகாய் சொல்கின்றது.
அவரது வாழ்க்கை சிறு வயது முதல் இறக்கும் வரையிலும் உரிமைக்கான போராட்டம் நிறைந்தாகவே இருக்கிறது. துணிச்சலான போராளி அதே நேரத்தில் மிகவும் மென்மையான அகிம்சைவாதி நூல் ஆசிரியர் குறிப்பிடுவது போல் மிருதுவாய் ஒரு நெருப்பு.
ஒரு சிறிய புத்தகத்தில் எல்லா வரலாறு தகவலையும் சொல்ல முடியுமென்றால் கஷ்டம்தான். ஆனால் இந்த புத்தகம் அந்த முயற்சியை எடுத்திருக்கிறது.

‘ரோஸா பார்க்ஸ்’ படிப்பவர்கள்.. கறுப்பின மக்களின் வலிகள் அவமானங்கள் உரிமைகள் போராட்டங்கள் வெற்றி வரலாறுகளை முழுமையாய் படிக்க வேண்டிய அவசியத்தை இந்த புத்தகம் தந்துவிட்டு போகிறது.

இங்கு அப்பாவி இஸ்லாமியர்களை இஸ்லாமியர் என்ற அடையத்துக்கா குற்றம்சாட்டப்பட்ட படுவதும் பொய் வழக்கு போட்டு ஆண்டு கணக்கில் சிறையில் வைத்து பத்து இருபது ஆண்டுகள் கழித்து குற்றமற்றவர் என விடுதலை செய்வது போல் அங்கும் கறுப்பின மக்கள் மீது பொய் குற்றச்சாட்டுகள் பொய் வழக்கு நீண்ட கால சிறைச்சாலை அடைப்பு.என கொடுமைகள் நடந்தேறியதை இந்த புத்தகம் நமக்கு சுட்டிக்காட்டியிருக்கிறது.

நிக்சன் மார்டின் லூதர் கிங் போன்ற கறுப்பின தலைவர்கள் வாழ்வியலை அறிய தூண்டும் அறிமுக நூலாகவும் இது இருக்கிறது

ரோஸாவின் கணவர் பார்க்ஸ். குடும்ப அன்பால் பாலின சமத்துவத்தால் கறுப்பின உரிமை பேணும் போராட்ட பங்களிப்பால் தன் வாழ்வை அர்த்தப்படுத்தியதை இப்புத்தகம் சொல்ல மறக்கவில்லை.

புதிய கல்வி கொள்கை குடியுரிமை தடைதிருத்தசட்டம் நீட் தேர்வு புதிய வேளாண்மை சட்டம் என்று இந்தியா முதலாளித்துவ பழைய பார்ப்பனியங்களை புதிய வடிவில் கையில் எடுத்திற்க்கும் கால சூழலில்..
வெளிவந்திருக்கும் இந்த புத்தகத்தை அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

இங்கு பார்ப்பனிய ஆதிக்கம் இருந்தது இன்னும் ஏதோ வடிவில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அங்கு வெள்ளையர் ஆதிக்கம் இருந்தது இப்பொழுதும் இல்லாமல் இருக்காது. ஆதிக்க வெறி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள புதிய வடிவத்தில் வந்துக்கொண்டே இருக்கும். அதை எதிர்கொள்ள இதுபோன்ற மனித உரிமை போராளிகளை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இந்த நூலை அந்த நோக்கில் நான் பார்கிறேன். மனிதம் மகத்தானது கற்றுக்கொண்டே இருப்போம்.

பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகவே இதை கருதுகிறேன் ஆயினும்.. எந்த இடத்திலும் வாசிப்பை சோர்வடைய வைக்காத எழுத்துநடை.
மதிப்பு மிகுந்த நூல் ஆசிரியர்கள் மா.லைலாதேவி-ச.மாடசாமி அவர்களுக்கு
பேரன்பும் பெரும் நன்றியும்.

தோழமையுடன்.

  • பிச்சுமணி.

Related Posts