அரசியல் கலாச்சாரம் சமூகம்

பெண்ணுக்கு மரியாதை – மாற்றத்தின் முதல் படி !

‘மரியாதை’ என்பதின் பொருள் என்ன? தன்னை விட பெரியவர்களை உயர்வாக எண்ணுவது மட்டும் தானா?…

இல்லை!! ஒருவரின் மீது மற்றொருவர் வைத்திருக்கும் அளவற்ற அன்பே மரியாதை. இந்த அளவற்ற அன்பால் என்ன பயன் ? அன்பு, தன்னை போல் அவரும் ஒரு சக மனிதர் என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தும். இந்த புரிந்துணர்வால் என்ன பயன்? அவருக்கு நாம் தீங்கு விளைவிக்கக்கூடாது. அவருக்குரிய எல்லா வாய்ப்புகளும் நியாயமாக கிடைக்க நாம் வழிவிட வேண்டும். அவரை நாம் அடிமையாக நடத்தக்கூடாது என இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம். எனவே ‘சக மனிதனுக்கு மரியாதை’ என்பது ஏற்ற தாழ்வினை போக்கும் சமத்துவமே!

ஆனால் இந்த மரியாதை பொதுப்படையாக அரசியல், பொருளாதாரம், சமுதாய நிலையில் எல்லோர்க்கும் கிடைக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆண் பெண் இடையே என்றாலோ நிலவரமே வேறு.

வெளியில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் பெரும்பாலான அப்பா, அண்ணன், நண்பன், காதலன், கணவன் ஏன் ஒரு வழி போக்கன் கூட தன்னை விட ஒரு பெண் அதாவது தன் மனைவி மகள் நண்பி காதலி ஒரு படி கீழே என ஆழ் மனதில் நம்புகிறான். இதற்கு ஆண்களை சொல்லி குற்றமில்லை, இச்சமுதாயம் தான் இப்படி யோசிக்க கற்றுகொடுத்திருக்கிறது.

‘போயும் போய் ஒரு பொம்பல/பொட்டச்சி பேசறா, அத கேட்டுட்டு இருக்கியே’ என்ற வரிகள் அனைவரும் கேட்டதே. ஒருவனை இகழ வேண்டுமென்றால் கூட அந்த இகழ் வார்த்தைகள் அவன் சார்ந்த பெண்ணை கலங்கப்படுத்தும் விதத்திலேயே அமைந்திருக்கும். ஒரு ஆணை மேலும் இகழ வேண்டும் என்றால் அவனை பெண்ணாக சித்தரித்து இகழ்கிறார்கள்.

காதலைப் பேசும் சினிமா கூட பெண்ணை ‘FIGURE’ என்று அழைத்து உயிரற்ற பொருளாக்கிவிட்டன.பெரும்பாலான சினிமாவில் ஒரு ஆணின் பெருமையை பரைசாற்ற அவன் எந்த அளவுக்கு பெண்களை வெறுக்கிறானோ அந்த அளவுக்கு அவன் நல்ல ஆண்மகன் என்றும், அவன் அப்படி இருப்பினும் ஒரு பெண் அவனை விரும்பினாள் என்றால் அவன் இன்னும் சிறந்த ஆண்மகன் என்றும் போற்றப்படுகிறான். இந்த  Misogynistic attitude ஆல் தான் சமுதாயத்தில் பல பாலியல் வன்முறை செயல்கள் அன்றாடம் அரங்கேறிகொண்டிருகின்றன.

இப்படி இச்சமுதாயத்தால் இகழப்பட்டும் தாழ்த்தப்பட்டும் இருப்பதை எண்ணிப் பார்த்தால், பெண் சிசுக் கொலை பற்றி ஒரு பெண் டாக்டர் கொடுத்த பேட்டி நினைவிற்கு வருகிறது ‘ In India Sex detection of the Foetus is allowed to detect Congenital disease… but it is mostly done to detect whether it is a Girl child or not? So are we a Congenital disease? I mean are we a disease? ‘

‘பெண்’ ஒரு நோய்  இல்லையெனில் ‘மரியாதை’ கிடைத்திருக்குமே,  ‘அவளும் சக மனிதரென்று’ ??

சமூகம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்!!!

நிர்பயாக்களுக்கு நீதி மட்டும் போதாது… மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும்!! 

Related Posts