அரசியல்

இந்திய மக்களாகிய நாம் … என்.பி.ஆர் பிரிவினைத் திட்டத்தை புறக்கணிப்போம் ஒன்றுபட்ட இந்தியாவை பாதுகாக்கும், தேசபக்த போராட்டத்தில் இணைந்திடுவோம் !

அன்புள்ள சக இந்திய குடிமக்களே,

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர் – என்.ஆர்.சி பதிவேடுகள் குறித்து ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இப்பிரச்சனையில் ஒரு முடிவான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அதற்காக சில அடிப்படையான கேள்விகளையும், அதற்கான விளக்கங்களையும் இந்த கையேட்டில் வழங்குகிறோம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கு ஆபத்து?

குடியுரிமை திருத்த சட்டம் மட்டும் தனியாக ஒரு இந்தியரை பாதிக்காது ஆனால் அந்த சட்டத் திருத்தம் அரசமைப்பு சட்டத்தை பாதிக்கின்ற காரணத்தால் ஒவ்வொரு தேசபக்த இந்தியருக்கும் அந்த சட்டத்தை எதிர்க்கிற கடமை வருகிறது.

குடியுரிமை சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது. இந்த முறை செய்யப்பட்டிருக்கும் திருத்தம், குடிமகனுக்கான வரையறையில் மதத்தை புகுத்தியுள்ளது. அதையே எதிர்க்கிறோம். மேலும் அது இலங்கை உள்ளிட்ட, நாடுகளை உள்ளடக்காத காரணத்தால் தமிழர்களுக்கும் விரோதமான ஒன்றாக இருக்கிறது.

குறிப்பாக, ‘அகதி/ஏதிலி’ என்பதற்கான விளக்கமே அதில் இடம்பெறவில்லை எனவே இந்த சட்டம் பாதிப்பு ஏதுமில்லாத ஒரு அன்னியரும் இந்தியக் குடியுரிமை பெற வழிவகுக்கிறது. எனவே நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தாகும். இச்சட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் முன்பும் நம்மை அவமதித்திருக்கிறது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்கும் ஆபத்து உருவாக்கியுள்ளது.

இதனால்தான் சி.ஏ.ஏ எதிர்ப்பு முக்கியமாகும். மேலும் அது என்.ஆர்.சி திட்டத்தோடு இணைந்தால் இந்தியாவில் பிரிவினை உருவாக்கும் கருவியாக ஆகிவிடும்.

என்.பி.ஆர் – என்.ஆர்.சி கணக்கெடுப்பை எதிர்க்க வேண்டுமா?

என்.பி.ஆர் கணக்கெடுப்பு என்பது ‘மக்கள் தொகை’ பட்டியலை உருவாக்குவதற்கானதாகும். இந்த பட்டியல் மட்டும் தனியாக பிரச்சனை அல்ல. ஆனால் அதன் அடுத்த கட்டமாக ‘சந்தேகத்திற்குரிய’ குடிமக்கள் என நம்மில் ஒரு பகுதி மக்கள் வகைப்படுத்தப்படுவார்கள். அதுதான் பிரச்சனை. என்.பி.ஆர் திட்டத்தை புறக்கணித்தால் மட்டுமே நம்மால் பிரிவினை திட்டத்தை முன்தடுக்க முடியும்.

அதிகாரிகள் மற்றும் அரசியல் நோக்கம் கொண்டோர் கையில் ‘குடிமக்கள்’ யார் என தீர்மானிக்கும் அதிகாரத்தை கொடுப்பதைத்தான் என்.ஆர்.சி செய்கிறது. அது மிக ஆபத்து.

அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் குடிமக்கள் யார் என்று தீர்மானிப்பது எப்படி தவறாகும்?

இந்த இடத்தில்தான் அசாமின் அனுபவத்தை நாம் கவனிக்க வேண்டும். அந்த மாநிலத்தில் வாழும் ஒருவர் தன்னை இந்திய நாட்டின் குடிமக்கள் தான் என நிரூபிக்க பெரும் அலைக்களிப்புக்கு ஆளாக நேர்ந்தது. நிலமில்லாதவர்கள், வீடில்லாதவர்கள், பழங்குடி மக்கள், நாடோடிகள், விவசாய பெண்கள் என ஏழை எளிய மக்களே இதில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்படியொரு பாதிப்பை நாடு முழுவதும் அனுபவிக்க முடியாது. அவசியமும் இல்லை.

மேலும், அரசியல் நோக்கத்தோடு குடியுரிமை பிரச்சனையை கையாண்டால் அது பிரிவினைக்கு ஆயுதமாக மாறிப்போகும். இந்த திட்டம் வருவதற்கு முன்பே நாட்டின் உள்துறை அமைச்சர், மத அடிப்படையில் மக்களை பிரிக்கவுள்ள பாஜகவின் நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் பிறகும் நம்மால் என்.ஆர்.சி-என்.பி.ஆர் இரண்டையும் ஏற்கவே முடியாது. பிரிவினைக்கு துணை போக முடியாது.

என்.பி.ஆர் எடுத்துக்கொள்கிறோம், என்.ஆர்.சி உடனே எடுக்கமாட்டோம் என்கிறார்களே?

என்ஆர்சி பட்டியலை எத்தனை தாமதமாக அமலாக்கினாலும் பாதிப்பு ஒன்றுதான். என்.பி.ஆர் என்ற நிலையில்தான் நம்மால் அந்த கணக்கெடுப்பை நிறுத்த முடியும். என்.பி.ஆர் கணக்கெடுப்பை முடித்துவிட்டால், என்.ஆர்.சி திட்டத்தையோ அதன் பாதிப்பையோ தடுக்கவே முடியாது. இந்த திட்டத்தையே முழுமையாக கைவிடச் செய்ய வேண்டும். அதற்கு என்.பி.ஆர் புறக்கணிப்பு மட்டுமே வழிவகுக்கும்.

காங்கிரஸ் ஆட்சியிலேயே என்.பி.ஆர் கணக்கெடுப்பு செய்யப்பட்டது, இப்போது மட்டும் எதிர்ப்பது ஏன்?

காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட என்.பி.ஆர் 14 கேள்விகளைக் கொண்டிருந்தது. அதன் நோக்கம் ஆதார் அட்டை வழங்குவதே ஆகும். ஆனால் இப்போது பாஜக ஆட்சியானது 7 கேள்விகளை சேர்த்திருக்கிறது. அதில்தான் பெற்றோரின் பிறப்பிடம் மற்றும் பிறந்த தேதி மற்றும் தனி நபர் விபரங்களை கேட்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் நடத்திய என்.பி.ஆர் பட்டியலை வைத்துக்கொண்டு என்.ஆர்.சி தயாரிக்க முடியாது.

என்.பி.ஆர் கணக்கெடுப்பை புறக்கணிப்பது சாத்தியம்தானா?

நிச்சயமாக சாத்தியமே. புறக்கணிப்பது சில நபர்கள் மட்டும் அல்ல. நம்மால் என்.பி.ஆர் கணக்கெடுப்பை மட்டுமே புறக்கணிக்க முடியும் என்பதால் நிச்சயம் செய்ய வேண்டும்.

கேரள முதல்வர் பினராயி விஜயனை பின்பற்றி பல மாநில அரசுகள் இந்த கணக்கெடுப்பை எடுக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். எனவே கோடிக்கணக்கான மக்கள் ஏற்கனவே என்.பி.ஆர் புறக்கணிக்கவுள்ளார்கள். தமிழக அரசாங்கமும் இப்படி அறிவிக்க முடியும். அல்லது நாம் தகவல்களை கொடுக்க முடியாது என மறுக்கவும் முடியும். நாம் வாழும் பகுதியிலும் அதை செய்வோம். அதிகாரிகள் வந்தால் மறுப்பை சொல்வோம். (உதவி எண்: )

மார்ச் – ஏப்ரல் மாதங்கள் முழுவதும் ஒவ்வொரு வீடாக மக்களை சந்தித்து என்.பி.ஆர் கணக்கெடுப்பை புறக்கணிப்பதன் அவசியத்தை எடுத்துச் சொல்கிறோம்.

சி.ஏ.ஏ – என்.பி.ஆர் – என்.ஆர்.சி திட்டங்களை எதிர்த்து முஸ்லிம்கள் மட்டும்தானே போராடிக் கொண்டிருக்கிறார்கள்?

இந்திய நாட்டின் மீது நேசம் கொண்ட அனைவருமே களத்தில் உள்ளனர். முன்பே சொன்னது போல இது தேச பக்த கடமையாகும். பாஜக வின் பிரிவினை மிரட்டல் முஸ்லிம்களை குறிவைத்து இருப்பதால், அதற்கு எதிராக தேசியக் கொடியோடு முஸ்லிம் மக்கள் களத்தில் நிற்கிறார்கள்.

கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் மாநில அரசுகளே அந்த மாநில மக்களோடு இருப்பதால் அங்கெல்லாம் தொடர் போராட்டங்களுக்கு தேவை எழவில்லை. தமிழ்நாட்டிலும், இன்னபிற பாஜக ஆதரவு கொண்ட மாநிலங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எதிர்க் கட்சிகள் பல்வேறு வடிவங்களில் போராடுகிறோம். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், சில நடிகர்களும் இந்த தேசம் காக்கும் போராட்டத்தின் நியாயங்களை புரிந்துகொள்ள மறுக்கின்றனர். எனவே இதனை முஸ்லிம் மக்களின் அச்சம் சார்ந்த பிரச்சனையாக மட்டும் குறுக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் பார்வை தவறாகும்.

என்.பி.ஆர் கணக்கெடுப்பை புறக்கணித்தால் ஏதாவது பாதிப்பு வருமா?

என்.பி.ஆர் கணக்கெடுப்பை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் சாதாரண குடிமக்களுக்கு பிரச்சனை வரத்தான் போகிறது. என்.பி.ஆர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அடுத்து என்.ஆர்.சி பட்டியல் எப்போதுவேண்டுமானாலும் வரலாம். முதலில் ஏழை எளிய மக்கள் குடிமக்கள் ஆவணங்களை சேகரிப்பதற்காக கடுமையாக போராட வேண்டியிருக்கும். ஆவணங்கள் கொடுத்தாலும் அரசால் சந்தேகத்திற்குரியவராக கருதப்படும் மக்கள் அடுத்த பிரச்சனை எதிர்கொள்ள வேண்டி வரும். பிரிவினையால் ஏற்படும் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும்.

இந்த கணக்கெடுப்பை புறக்கணிப்பதால் வரக்கூடிய சிக்கல் பிரிவினை அளவுக்கு கடுமையானதல்ல. அரசாங்கத்தின் சில மிரட்டல்கள் வரக்கூடும். அதனை நாம் ஒற்றுமையால் வீழ்த்த முடியும். பல்வேறு வேற்றுமைகளைக் கொண்ட நம் நாட்டின் ஒரே பலம் ஒற்றுமையே ஆகும். எனவே ஒற்றுமையைக் காவுகேட்கும் என்.பி.ஆர் – என்.ஆர்.சி திட்டத்தை முறியடிப்பதே நம் முன் உள்ள ஒரேவாய்ப்பு.

எனவே,
என்.பி.ஆர் பதிவேட்டை புறக்கணிப்போம்
என்.ஆர்.சி திட்டத்தை தடுத்திடுவோம்

“இது இரண்டாம் விடுதலைப் போராட்டம் அல்ல,
பெற்ற விடுதலையை பேணிக்காக்கும் போராட்டம்!”

இரா.சிந்தன்.

Related Posts