பிற

செஞ்சதுக்கம்!

கிராஸ்னாயா” (красная) என்னும் ரஷ்யச் சொல்லுக்கு “சிவப்பு” மற்றும் “அழகு” என்னும் இரு பொருள்கள் உள்ளன. “எரிந்துபோன இடம்” என்னும் பொருள்படும் “போசார்” என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்த சதுக்கத்திற்கு‍ 17 ஆம் நூற்றாண்டில் செஞ்சதுக்கம் என்னும் பெயர் ஏற்பட்டது‍ என்றும் கூறப்படுகிறது‍. எது‍ எப்படி‍ இருப்பினும் இச்சதுக்கம் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27 இல் நடைபெற்ற நிகழ்விற்கு‍ பின்னர்தான் அந்தப் பெயருக்கான முழுமையைப் பெற்றது‍ என்றே கூறலாம்…

அமெரிக்காவின் நகரங்களில் தொழிலாளர்கள் ஒவ்வொருவரின் கையிலும் சிவப்பு நிறக் கொடியுடன் ஒரு மனிதரின் உருவப்படத்தை சுமந்தபடி சோகமாக வீதிகளில் ஊர்வலம் வருகின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன.

Lenin's funeral by I.Brodsky

Lenin’s funeral by I.Brodsky

1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரஷ்யாவை நோக்கி இருந்தது. சோவியத் ரஷ்யா அன்றைய தினம் மயான அமைதியில் இரு‍ந்தது.

ஜனவரி 21, 1924 லெனினுடைய உடல் முதல்முறையாக ஓய்வு கொண்டது. ஜனவரி 27, 1924 மாலை சரியாக 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரஷ்ய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது.

இறுதியாக அவரது உடலைக் காண பல இலட்சம் மக்கள் திரண்டனர். உலக நாடுகளின் தொழிலாளர்களும் ஏராளமாக வந்தனர்.

உலகின் முதன் முதலாக உழைக்கும் மக்களின் அரசை ஏற்படுத்திய லெனினது உடலை அழியவிடக் கூடாது, அவரது உடலைப் புதைக்க வேண்டாம், எரிக்க வேண்டாம், பாதுகாப்போம் என்று‍ சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முடிவு எடுத்தது‍. சோவியத் விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விவாதித்தனர். இரசாயனங்களின் உதவியுடன் ஒரு கண்ணாடி பேழையில் அவரது உடலைப் பாதுகாக்க முடிவு செய்தனர். லெனினது துணைவியார் குரூப்கயா கூட இதனை விரும்பவில்லை.

சோவியத் யூனியனில் இருந்த மக்களின் அன்றைய நிலை, உணர்வு இவற்றைக் கணக்கிலெடுத்து ஸ்டாலினின் வற்புறுத்தல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டது. 1924 ஜனரி 27 ஆம் நாள் லெனினது‍ உடல் நிரந்தரமாக மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் மக்கள் பார்வைக்கு‍ வைக்கப்பட்டது.

செந்நிற கொடியுடன் லெனின் புகைப்படமிட்ட பதாகைகளை ஏந்தி ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள், பாதுகாப்புடன் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த லெனின் உடலுக்கு‍ அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்களும் தொலை தூரத்தில் இருந்து வந்து லெனின் உடலு‍க்கு‍ இன்றும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

வியர்வை சிந்தி உழைக்கும் கடைசி மனிதன் இருக்கும் வரை லெனினது பெயரும் மாஸ்கோ செஞ்சதுக்கமும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

Related Posts