இலக்கியம்

இராம், ஜானு, மோடி மற்றும் 8 மணி …….

இக்கதையின் நாயகியை உங்களிடம் எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியவில்லை. ‘அவள்’ பிறந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கின்றன. ‘அவளுக்கு’ இன்னும் பெயர்கூட வைக்கப்படவில்லை. அதனால் இப்போதைக்கு அவளை ‘அவள்’ என்றே வைத்துக்கொள்வோம். ‘அவளுடைய’ அம்மாவின் வயிற்றில் இருந்தவரைக்கும் ‘அவளுக்கென்று’ எந்தப்பெயரும் இருக்கவில்லை. அப்போது ‘அவளுக்கு’ அது தேவைப்பட்டிருக்கவும் இல்லை. அம்மாவின் வயிற்றில் வேறு யாருமில்லாமல் தனியாகத்தானே ‘அவள்’ இருந்தாள். அப்போதெல்லாம் “குழந்தை”, “குழந்தை” என்றுதான் வெளியில் இருப்பவர்கள் ‘அவளைக்’ குறிப்பிட்டு அழைத்துக் கொண்டிருந்தனர். உள்ளே இருந்த ‘அவளுக்கு’ அதுவெல்லாம் கேட்டுக்கொண்டுதானே இருந்திருக்கும். அதனால், வயிற்றுக்குள் இருக்கும் வரையிலும், தன்னுடைய பெயர் “குழந்தை” என்று தான் ‘அவள்’ நினைத்திருந்தாள்.

‘அவள்’ இப்போது அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியேவந்து மருத்துவமனை தொட்டிலில் படுக்கவைக்கப்பட்டிருக்கிறாள்.

“குழந்தைக்கு நிறைய முடி இருக்குல்ல” என்று யாரோ சொல்வதுகேட்டு, சத்தம் வந்தபக்கம் திரும்பிப்பார்த்தாள். அங்கே பக்கத்து தொட்டிலில் ஒரு சிறிய உருவம் படுத்துக்கிடந்தது.

‘நம்ம பேரு தான குழந்தை. இவங்க அந்த உருவத்தையும் குழந்தைன்னே கூப்புட்றாங்களே’ என்று அவள் குழம்பினாள்.

இன்னொரு பக்கத்திலிருந்து, “குழந்தை அவளோட ஆத்தாளையே உரிச்சிவச்சிருக்கு” என்று யாரோ சொல்வது கேட்டது. அந்தக் குரல் வந்த திசையில் மெல்ல திருப்பிப் பார்த்தாள்.

அங்கேயும் இன்னொரு தொட்டிலில் இன்னொரு சிறிய உருவம் படுத்துக்கிடந்தது.

இந்த வெளியுலகில் எல்லா உருவங்களின் பெயரும் ‘குழந்தை’ தான் போலிருக்கிறது என்று ‘அவள்’ நினைத்துக்கொண்டாள்.

“ஜானு, இப்ப வலி எப்படி இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே மருத்துவர் வந்தார்.

“இப்ப கொஞ்ச பரவால்ல டாக்டர். ஆனா எந்திரிக்கமுடியல” என்று மெல்லிய குரலில் மருத்துவரைப் பார்த்து பதில் சொன்னார் ‘இவளின்’ தாய்.

இப்போது ‘இவளுக்கு’ மேலும் குழப்பம்.

‘ஆத்தீ. இதென்ன வம்பாப் போச்சி. இந்த உலகத்துல எல்லா உருவத்துக்கும் குழந்தைன்னு தான் பேருன்னு நினைச்சோம். இப்ப அதுவும் இல்லையா. ஏதோ ஜானுன்னு கூப்புட்றாங்க’ என்று யோசித்தாள்.

ஒருவேளை சின்ன உருவமாக இருக்கிறவர்களுக்கு மட்டுமே ‘குழந்தை’ என்ற பெயர் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

‘அவள்’ இப்போது சுற்றிமுற்றிலும் பார்த்தாள். அந்த மருத்துவமனையில் சின்ன உருவமாக ஏகப்பட்ட ‘குழந்தை’கள் இருக்கிறார்கள். பல வண்ணங்களில் பல அளவுகளில் இருக்கிறார்கள். அதனால் “குழந்தை” என்று பொத்தாம்பொதுவாகக் கூப்பிட்டால், எல்லா குழந்தைகளும் திரும்பிப் பார்த்துவிடுவார்களே என்றும் யோசிக்கத்துவங்கினாள்.

சிறிதுநேரம் கழித்து, “உங்க குழந்தைக்கு பேர் வச்சிட்டீங்களா?” என்று மருத்துவமனை நர்ஸ் ஒருவர் கேட்டார்.

“இல்ல மேடம், நாங்க வீட்டுக்குப் போய் முடிவு பண்ணிட்டு சொல்றோம்” என்றாள் குழந்தையின் அம்மா ஜானு.

“இல்லங்க. நீங்க ஆஸ்பத்திரிய விட்டு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடியே கொழந்தையோட பேரைச் சொல்லிடனும். நாங்க நகராட்சிக்கு எழுதிக்குடுக்கனும். அதனால சீக்கிரமா யோசிச்சி சொல்லிடுங்க. இல்லன்னா உங்கள டிஸ்சார்ஜ் பண்ணமாட்டோம். புரிஞ்சிதா” என்று கொஞ்சம் அதிகாரமாகவே சொல்லிவிட்டு பதிலுக்கு எதிர்பார்க்காத முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தார்.

நர்சின் காதில் விழுந்ததோ இல்லையோ, “சரிங்க மேடம்” என்று கொஞ்சம் பதட்டத்துடன் அவளின் அம்மா ஜானு சொன்னதும்தான் ‘அவளுக்கு’ மனது ஆறுதல் அடைந்தது.

ஆக ‘அவளுக்கும்’ ஒரு புதிய பெயரை வைக்கத்தான் போகிறார்கள் என்பது இப்போது ‘அவளுக்குப்’ புரிந்துவிட்டது. என்ன பெயர் வைக்கப்போகிறார்கள் என்றும், அதனை எப்படி வைக்கப்போகிறார்கள் என்றும் ‘அவள்’ மிகுந்த ஆவல்கொள்ளத் துவங்கினாள்.

“குழந்தையப் பாக்கனுன்னு ஆசப்பட்றவங்க சத்தம்போடாம உள்ள போய் பாக்கலாம்” என்று வெளியே யாரோ சொல்லிக்கொண்டிருக்க, ஒரு கூட்டமாக அறையின் உள்ளே சிலர் வந்துகொண்டிருந்தனர்.

“நான்தான் உன்னோட அம்மம்மா” என்று குழந்தையிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் ஜானுவின் அம்மா.

“கொழந்த அப்படியே ஜானு மாதிரியே இல்லங்க?” என்று தன் கணவரிடம் கேட்டுக்கொண்டார்.

“ஆமா ஆமா” என்று உற்சாகத்துடன் பக்கத்திலிருந்து ஒரு குரல் வந்தது.

“இதான்  உன் தாத்தா. சரியா” என்று ஜானுவின் அப்பாவை குழந்தையிடம் அறிமுகப்படுத்தினார் ஜானுவின் அம்மா.

அப்படியே ஜானுவின் அண்ணனையும் அண்ணியையும் மேலும் சிலரையும் அறிமுகப்படுத்தினார்.

‘யப்பாடி, இத்தன பேரா என்னைய பாக்க வந்துருக்காங்க. நமக்கு பேருமட்டும் தான் இல்லையே தவிர, எக்கச்சக்க ஆளு இருக்கு’ என்று பெருமிதப்பட்டுக்கொண்டாள் குழந்தை.

அதற்குள் பின்னாலிருந்து “ஆம்பளப் புள்ளய பெத்துத்தாடீன்னு எவ்ளோ வாட்டி படிச்சிப் படிச்சி சொன்னேன். பொட்டப் புள்ளய பெத்துவச்சிருக்க. உன்னைய நம்பி புள்ளையார் பேரத்தான் வெப்பேன்னு சாமிக்குவேற வாக்கு குடுத்துத் தொலச்சிட்டேன்” என்று கோபமாக உரக்கக் கத்திக்கொண்டே, ஜானுவின் மாமியார் தனலட்சுமி குழந்தையின் அருகே வந்தாள். தனலட்சுமியுடன் குழந்தையின் தகப்பன் ராமும் வந்திருந்தான். ஆனால் அவன் யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் நடுநிலை வகிக்கப்போவதை அவனுடைய முகபாவமே காட்டிக்கொடுத்தது.

தனலட்சுமியிடம் சமாதானம் பேசக்கூட அஞ்சி அனைவரும் அமைதியாக அப்படியே நின்றனர்.

இப்போது தனலட்சுமியே, “ஐயரே, இங்க முன்னாடி வாங்க. கொழந்தையோட பொறந்த நேரத்த வச்சி, என்ன எழுத்துல பேரு வெக்கலாம்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க” என்றாள்.

“வேற யாராவது பேரு வச்சிடக்கூடாதுன்னு, கொழந்தையப் பாக்க வரும்போதே கூடவே ஐயரையும் கூட்டிட்டு வந்துருக்க்கா பாரேன்” என்று கூட்டத்தில் யாரோ ஒருவர் கிசுகிசுக்க,

“ஆமா, தனலட்சுமியா கொக்கா” என்று பதிலுக்கு வேறு யாரோ கிசுகிசுத்ததையெல்லாம் தனலட்சுமி கண்டுகொள்வதாக இல்லை.

தனலட்சுமி அழைத்ததும், பின்னால் நின்றுகொண்டிருந்த சுப்ரமணி ஐயர் குழந்தையின் அருகில் வந்தார். தன்னுடைய பையில் இருந்து ஏதோவொரு நோட்டை எடுத்தார். அதில் சிறுவயதுக் குழந்தைகள் கட்டம் வரைந்து விளையாடுவது போல், எதையெதையோ வரைந்தார். அவ்வப்போது கண்ணை மூடிக்கொண்டு யாருக்கும் புரியாத மொழியில் எதையோ முனகிக்கொண்டே வானம் நோக்கி தலையைத் தூக்கினார். பின்னர், தான் வரைந்த கட்டத்தின் நடுவே எதையோ எழுதினார்.

சில நிமிடங்கள் கழிந்தபின்னர், “லா, லோ, லே, லௌ” என்றார் சுப்ரமணி ஐயர்.

“என்னது இதெல்லாம்?” என்று முதன்முதலாக ராம் வாயைத் திறந்தான்.

“இந்த எழுத்துல ஏதாவது ஒன்னுலதான் உங்க கொழந்தையோடு ஆரம்பிக்கனும்” என்றார் சுப்ரமணி ஐயர்.

“இந்த எழுத்துலலாம் எப்டிம்மா பேரு வக்க முடியும்?” என்று பரிதாபக் குரலில் தனலட்சுமியிடன் கெஞ்சினான் இராம். தனலட்சுமி அதையெல்லாம் கண்டுகொள்வதாக இல்லை. மறுபக்கம், கடுங்கோபத்தோடு இருந்த ஜானுவின் முகத்தைப் பார்ப்பதற்குக் கூட இராம் அஞ்சினான்.

வேறு வழியின்றி, தன்னுடைய செல்போனை எடுத்து ஆளாளுக்கு இணையத்தில் அந்த எழுத்துக்களில் ஏதாவது நல்ல பெயராக கிடைக்கிறதா என்று பார்க்கத் துவங்கினர்.

திடீரென்று ஏதோ பெயர் கிடைத்துவிட்டதாக, “லோஸ்லியான்னு வப்பமா?” என்றான் இராம். அவனை நேருக்கு நேராகப் பார்த்து முறைத்தாள் ஜானு. பிக்பாஸ் மூன்றாவது சீசனில் வந்த லோஸ்லியாவின் அதிதீவிர விசிறி அவன் என்பதை ஜானு நன்கு அறிவாள்.

அந்த பெயருக்கு ஜானுவே “நோ” சொல்லலாம் என்று வாயைத் திறக்க முயற்சிக்கையில், தனலட்சுமி முந்திக்கொண்டு, “அது பிள்ளையார் பேரா?” என்று கேட்டாள்.

“இல்லம்மா” என்றான் இராம்.

“வேற பேரப்பாரு” என்றாள் தனலட்சுமி.

“பொம்பளக் கொழந்தைக்கு எப்படிம்மா புள்ளையார் பேரு வைக்க முடியும்?”

“பொம்பளப் புள்ளைய பெத்தது என் தப்பா? அத உன் பொண்டாட்டி கிட்ட கேளு.” என்று பொறிந்தாள் தனலட்சுமி.

இதற்கு மேல் விவாதிக்க விருப்பமில்லாமல், அம்மாவுக்கு பிடித்த ஏதாவதொரு பெயரை வைத்துவிட்டு தப்பித்தால் போதும் என்று இப்போது தோன்றியது அவனுக்கு. தன் மொபைலில் மீண்டும் அடுத்த பெயரைத் தேட ஆரம்பித்தான்.

“லௌக்கியா. இது பிள்ளையார் பேரேதான்” என்றான்.

இப்போதுதான் தனலட்சுமியின் முகம் மலர்ந்தது. ஆனால் குழந்தைக்கு அப்பெயர் சுத்தமாகப் பிடிக்கவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்பதை வாய் திறந்து சொல்லமுடியாமல், தனக்குத் தெரிந்த ஒரே போராட்ட வடிவத்தைத் தேர்ந்தெடுத்தாள் குழந்தை.

எல்லோர் கவனத்தையும் ஈர்த்து, தன் கோபத்தைக் காட்டுவதற்கு இப்போது உச்சா போனாள் குழந்தை. ஆனால் அதனைக் குழந்தையின் கோபமாக யாருமே புரிந்துகொள்ளவில்லை.

“இன்னும் அதேமாதிரி வேற ஏதாவது பேர் இருந்தாலும் சொல்லு. அதுல ஏதாவது ஒன்ன வச்சிக்கலாம்” என்று

“லோவிக்கா. இதுவும் பிள்ளையார் பேர்தான்” என்றான்.

தனலட்சுமியின் மகிழ்ச்சி தொடர்ந்தது. ஆனால் குழந்தைக்கோ இப்பெயரும் பிடிக்கவில்லை. கோபத்தின் வெளிப்பாடாக, உச்சாவுடன் சேர்த்து கக்காவும் போனாள் குழந்தை. இப்போதும் அதனை குழந்தையின் கோபமாக அவர்கள் பார்க்கவில்லை.

“லோலாக்‌ஷி. இதுவும் பிள்ளையார் பேர்தான்” என்றான் இராம்.

“இதுவே நல்லாருக்கு. இதையே வச்சிரலாம்” என்றாள் தனலட்சுமி.

அதற்கு வினையாற்றுவதற்கு முன்னரே, இவர்களின் படுக்கைக்கு அருகே வேகமாக ஓடிவந்த மருத்துவமனை நர்ஸ்,

“டிவிய ஏன் ஆஃப் பண்ணீங்க?”

என்று கோபமாகக் கேட்டார்.

“ஏங்க, டிவி போட்டே தான் இருக்கனுமா? அதுக்கும் பில்லப் போட்டுத் தீட்டலாம்னு பாக்குறீங்களா?” ன்னு ஏற்கனவே இருந்த கோபத்தை நர்சிடம் காட்டும் விதமாகக் கேட்டான் இராம்.

“அட நீங்க வேற. பிரதமர் மோடி எட்டு மணிக்கு டிவில ஏதோ பேசப்போறாராம். எல்லாரும் கட்டாயமா டிவிய பாத்தே ஆகனுமாம். ஆஸ்பத்திரி, கடை, ஆபீஸ்னு எல்லாத்துக்கும் ஆபீசருங்க போன்மேல போன்போட்டு கன்டிசனா சொல்லிட்டே இருக்காங்க. அதான் ரூம் ரூமா போய் ஆன் பண்ணிட்டிருக்கேன். ஆஃப் பண்ணிடாதீங்க. என்னோட வேலையே போயிரும்”

என்று அந்த அறையில் உள்ளவர்கள் கேட்கிறார்களா இல்லையா என்று கூட கவனிக்காமல் ஒப்பித்துவிட்டு, அடுத்த அறைக்கு நகர்ந்துவிட்டார் நர்ஸ்.

எட்டு மணி ஆவதற்கு இன்னும் ஓரிரு நிமிடங்களே இருந்தபடியால், கவுன்ட் டவுன் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது தொலைக்காட்சியில். ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றிப் பார்த்தான் இராம். ஆனால், எல்லா சேனலிலுமே அதே கருப்புநிற பின்னணியில் காவிநிறத்தில் எழுதப்பட்ட கவுன்ட் டவுன் தான் ஓடிக்கொண்டிருந்தது.

“மோடி ஏதோ சொல்லப் போறாருன்னா, நம்ம நாட்டுக்கு ஏதாவது நல்ல செய்தியாத்தான் இருக்கும்.” என்று பெருமைபொங்க சொல்லிவிட்டு தொலைக்காட்சியையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சுப்ரமணி ஐயர்.

நிமிடங்களில் ஓடிக்கொண்டிருந்த கவுன்ட் டவுன், இப்போது நொடிகளுக்கு மாறியது. 50, 49,48, 47, 46, 45,… என்று நொடி நொடியாகக் குறைந்துகொண்டிருந்தது.

தொலைக்காட்சி வைக்கப்பட்டும் இடத்திற்கு அருகில் தான் இவர்களின் படுக்கை இருந்ததால், அக்கம் பக்கத்து படுக்கையில் இருந்த குழந்தைகளைப் பார்க்க வந்தவர்களும் இவர்களுக்கு அருகில் வந்துநின்று தொலைக்காட்சியை ஆவலாகப் பார்க்கத் துவங்கினர். இப்போது குழந்தையைச் சுற்றி பெருங்கூட்டம் கூடியிருந்தது.

‘எனக்கு பேரு வைக்கிறத விட்டுட்டு இவங்கல்லாம் என்னாத்துக்கு டிவிய பாத்துகிட்டு இருக்காங்க’ என்று கடுப்பானாள் குழந்தை.

‘ச்சை, இதுங்களயெல்லாம் வச்சிக்கிட்டு இந்த ஒலகத்துல இன்னும் எத்தன நாள்தான் நான் குப்ப கொட்டப் போறனோ. முடியலடா சாமீ’ என்று வழக்கம்போல தன்னுடைய கோபத்தை உச்சாவின் மூலமும் கக்காவின் மூலமும் அழுகையின் மூலமும் காட்டினாள் குழந்தை.

ஆனால் இம்முறை அவளின் அழுகையையும் உச்சா நாத்தத்தையும் கூட யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது 9, 8, 7, 6,… என்று ஒற்றைப்படையில் விநாடிகள் கவுன்ட் டவுனாக தொலைக்காட்சியில் குறைந்துகொண்டே இருந்ததிலேயே அனைவரின் கவனமும் இருந்தது.

3, 2, 1, 0 என்று கவுன்ட் டவுன் முடிந்ததும், டடேன், டடேன், டடேன், டடேன்…. என்று ஏதோ பரபரப்பு இசையின் பின்னணியில் பெருமையோடு முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் காட்டினர்.

“இந்தாளு என்னாத்த சொல்லப்போறானோ தெரில. ஏற்கனவே இப்படித்தான் நம்ம காசையெல்லாம் செல்லாம ஆக்கி உசுர எடுத்தான்.” என்று இராம் புலம்பிக்கொண்டிருந்தான்.

“கொஞ்சம் அமைதியா இருங்கோ. மோடிஜீ என்ன சொல்றாருன்னு கேப்போம்” என்று தொலைக்காட்சிப் பெட்டிக்கு மிக அருகில் சென்றுகொண்டே பொருமினார் சுப்ரமணி ஐயர்.

“ஹமாரா தேஷ்கே…. மித்ரோன் ஹே…. ஆப்கீ மோடி சர்க்கார் ஹே… அச்சேதின் ஆயேகே…” என்று இந்தியில் சொற்பொழிவாற்றிக் கொண்டே போனார் மோடி.

“இன்னும் இந்தாளு, ஏக் காவ்ன் மே ரகு தாத்தா வை விடமாட்டானா…” என்று கூட்டத்தில் யாரோ ஒருவர் கடுப்பாகக் கத்தினார். அதே கோபம், சுற்றி நின்றுகொண்டிருந்த பெரும்பாலானோருக்கு இருந்தது.

“மோடி பேசிமுடித்தபின்னர், அதன் தமிழாக்கத்தை எங்களது தொலைக்காட்சி பிரத்யேகமாக வழங்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று மோடிக்குக் கீழே ஸ்க்ராலிங் ஓடிக்கொண்டிருந்தது.

ஒருவழியாக மோடி ஆற்றி சொற்பொழிவுக்குப் பின்னர், தமிழில் அதனை மொழிபெயர்த்து கூற ஆரம்பித்தனர்.

மோடி: “டீமானிட்டைசேன் கொண்டுவந்து தீவிரவாதத்தை ஒழித்ததுபோல், தேசவிரோதிகளை இந்த நாட்டைவிட்டே விரட்டுவதற்காக டீநேமைசேசன் என்கிற புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். அதாவது இந்த நொடிமுதல், இந்த நாட்டில் உள்ள அனைவரின் பெயர்களையும் செல்லாததாக அறிவிக்கிறேன். இனி உங்களுடைய பெயர்கள் எதுவுமே செல்லாது. உங்கள் பெயர்களைக் கொண்ட எந்த ஆவணமும் செல்லாது. நீங்கள் உடனடியாக, அரசு அலுவலகத்திற்கு சென்று, உங்களுக்கென்று ஒதுக்கப்படும் பிரத்யேக நம்பரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இனி நம்பர்தான் உங்கள் பெயர். இருபது இலக்கங்களைக் கொண்டதாக அந்த நம்பர் இருக்கும். நீங்கள் இந்துவாக இருந்தால், உங்கள் நம்பரின் முதல் இலக்கம் ‘1’ என்று ஆரம்பிக்கும். அடுத்த ஐந்து இலக்கங்கள் அவர்களது சாதியைக் குறிக்கும். அதுவே கிருத்துவர்களாக இருந்தால், அவர்களது நம்பர்களில் முதல் இலக்கம் ‘2’ என்றும் முஸ்லிம்களுடைய நம்பர்களின் முதல் இலக்கம் ‘3’ என்று இருக்கும்.”

மோடி: “இந்த புதிய நம்பர்களை அடுத்த நான்கு நாட்களுக்குள் வாங்காத எல்லோரும் நாடு கடத்தப்படுவீர்கள். எனக்கு 50 நாட்கள் கொடுங்கள், இங்கே அந்நிய முஸ்லிம்களைக் கண்டுபிடித்து, அவர்களை நாட்டைவிட்டே அடித்துவிரட்டி, இந்த தேசத்தையே முன்னேற்றிக் காட்டுகிறேன். பாரத் மாதா கீ ஜே….”

என்று மோடியின் உரையை தமிழில் விளக்கிமுடித்தனர்.

தமிழாக்கம் முடிந்தவுடன், “புதிய இந்தியா பிறந்துவிட்டது” என்று முழங்கிக்கொண்டே தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகள் தொடங்கின.

‘அப்போ எனக்கு பேரே வெக்கமாட்டீங்களா’ என்று நொந்துகொண்டதை உணர்த்தும் வகையில், தன்னுடைய சக்தி மொத்தத்தையும் ஒருன்கிணைத்து, வீல்வீல் என்று கத்தினாள் குழந்தை.

“இதெல்லாம் ஒன்னும் பிரச்சனையே இல்ல. நாட்ல தீவிரவாதி நெறய நொழஞ்சிட்டா.. அதான் மோடிஜீ இப்படி முடிவெடுத்துருக்கா. மோடிஜீ எது செஞ்சாலும் இன்னைக்கே பலன் தராது. போகப்போக பாருங்க ஓய், இந்த நாடு எங்கயோ போகப்போகுது” என்றார் சுப்ரமணி ஐயர்.

“நாடு எப்டியாவது போட்டும். எங்க கொழந்தைக்கு ஏதாவது ஒரு வழியை சொல்லுங்க” என்றாள் தனலட்சுமி.

“அதுக்கென்ன, பிரம்மாதமா செஞ்சிரலாம். நான்தான் பேர் வைக்கிறதுல ஸ்பெசலிஸ்ட். ஆனா என் பையன் வெங்கடாச்சலம் இருக்கானோல்லியோ, அவன் டெக்னாலஜில பெரிய வித்துவான். கம்ப்யூட்டர்லாம் வச்சுண்டு, நியூமராலஜில வித்த காட்டுவானக்கும். உங்க கொழந்தைக்கு ஏத்த நம்பரை, அவன் வெப்பான். அதக் கொண்டுபோய் கவர்மண்ட் ஆபீஸ்ல காசு கொடுத்தேள்னா ஓகே சொல்லிடுவா. இருங்கோ எம் புள்ளையாண்டான  வரச்சொல்றேன்” என்று போனை எடுத்தார் சுப்ரமணி ஐயர்.

“நம்ம தெரிஞ்சவா புள்ளைக்கு ஒரு நல்ல நம்பரா சொல்லுடா. ஆமா ஆமா, இந்துவே தான். நம்பர் ஒன்னுல ஆரம்பிக்கனும்…. அவங்க ___ சாதிக்குடும்பம். அதனால் அதையும் ரெண்டாவது நம்பரா சேத்துக்கோ….” என்று தன் மகன் வெங்கடாச்சலத்தோடு போனில் பேசிக்கொண்டிருந்தார் சுப்ரமணி ஐயர்.

“எதா இருந்தாலும், புள்ளையாருக்கு புடிச்ச நம்பரா பாத்து சொல்லுங்க” என்றாள் தனலட்சுமி.

‘என்னாது, மொதல்ல இருந்தா… நீங்களும் உங்க நாசமாப்போன ஒலகமும்…’ என்று இப்போது கடுப்பின் உச்சத்திற்கே சென்றாள் குழந்தை.

சுப்ரமணி ஐயர் அவருடைய பையனிடம் பேசி, நியூமராலஜிபடி குழந்தைக்கு ஒரு நம்பரைக் கேட்டுவாங்கிவிட்டார். எல்லோரும் மனநிறைவு அடைந்தவர்களாக, குழந்தையின் பக்கமாக திரும்பினார்கள.

“ஐயோ கொழந்தையக் காணோமே…” என்று தனலட்சுமி சத்தம்போட்டுக் கத்த, இராமும் மற்றவர்களும் தொட்டிலுக்கு மேலும்கீழும் பதறிப்போய் தேடிக்கொண்டிருந்தனர்.

ஜானுவுக்கு மட்டும் தன் உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருப்பதுபோல் தோன்ற, வயிற்றைத் தொட்டுப் பார்க்கிறாள். அவள் வயிறு மீண்டும் பெரிதாகியிருக்கிறது. இப்போது ‘குழந்தை’ மகிழ்ச்சியாக ஜானுவின் வயிற்றில் நீந்திக்கொண்டிருந்தது.

‘அவள்’ பெயர் மீண்டும் ‘குழந்தை’ என்றே தொடர்கிறது…

-இ.பா.சிந்தன்

Related Posts