சினிமா தமிழ் சினிமா

பிரியமுள்ள பத்ம பூஷண் ரஜினிகாந்த் அவர்களுக்கு!

பிரியமுள்ள பத்ம பூசன் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம்.

Rajinikanthஉங்கள் அபிமான ரசிகனின் கடிதம் இது. இந்த கடிதத்தை தாங்கள் பார்க்க வாய்ப்பில்லை என தெரிந்தும் எழுதுகிறேன். உங்கள் திரைப்படம் வெளியாகும் தினத்தில் வீட்டில் உணவில்லை. எனினும் உங்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் லட்சக்கணக்கான ரசிகர்களை தாங்கள் எப்படி அறிய முடியாதோ அப்படி இந்த கடிதமும் உங்கள் கண்களில் படாமல் போகலாம். ஆனால் நமக்குள்ளான உறவு 30 ஆண்டுகாலம் என்பதை மறந்துவிடாதீர்கள். அதாவது எனது 10 வயதில் போக்கிரி ராஜா ரிலீஸ் அன்று என் அண்ணனுடன் படத்திற்கு வந்ததிலிருந்து நான் உங்கள் ரசிகன். எனவே இந்த கடிதம் எழுத எனக்கு உரிமை உள்ளதாக நினைக்கிறேன்.

1950 இல் இதே நாளில் பிறந்த நீங்கள் ஐந்து வயதான போது உங்கள் தாயை இழந்தீர்கள். ஆனால் உங்களை இந்த தமிழகம்  தாயாக அணைத்துக் கொண்டது. பெங்களூரில் நடத்துனராக பணியாற்றிய நீங்கள் இன்று இந்தியாவின் உச்சம்  தொட்ட சூப்பர் ஸ்டார்.

1975 இல் எனக்கு மூன்று வயதாகும் போது அபூர்வ ராகம் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தீர்கள். அதன் பின் மூன்று முடிச்சு, 16 வயதினிலே, காயத்ரி, போன்ற படங்களில் வில்லனாக நடித்தீர்கள். அப்போதும் எங்களை கவர்ந்தீர்கள்.

புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை என ஒரு சிறந்த நடிகனாக அடையாளம் தந்தீர்கள். ஆனால் உங்கள் அடையாளம் பில்லா, போக்கிரி ராஜா என்றுதான் விரிந்து சென்றது. அதன் உச்சம் பாட்சா, அண்ணாமலை, படையப்பா போன்ற படங்கள். இன்று வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் என 156 படங்களில் நடித்துள்ளீர்கள். மிகவும் சந்தோஷம்.

உங்கள் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல மட்டுமல்ல இந்த கடிதம். உங்களிடம் கேட்க சில கேள்விகள் இருக்கிறது ரஜினிகாந்த் அவர்களே! தமிழக இளைஞர்களின் சராசரி நிறமும் அழகும் கொண்ட நீங்கள் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட அடிப்படைக் காரணம் உங்கள் நடிப்பு மட்டுமல்ல. அதையும் தாண்டிய உங்கள் இயல்பான நடவடிக்கைகள்தான்.

ஆனால் உங்களை சூப்பர் ஸ்டாராக ஏற்றுக் கொண்ட, உங்களுக்கு கோடி கோடியாய் சொத்துக்களை உருவாக்கிய, உங்களுக்காக உயிரையும் விட துணிந்த, உங்கள் பிரமாண்டத்தை பின்பற்றும் லட்சக்கணக்கான ரசிகர்களை பற்றி நீங்கள் எப்போதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை தலைவா!

தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமாய் மாற்றிய கமல்ஹாசனும், தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் என சொன்ன அஜித்குமாரும் உங்களுடந்தான் உலாவுகின்றார்கள் தலைவா!

இதுவரை எங்களுக்கு என எந்த செய்தியும் தாங்கள் சொன்னதில்லை, சொல்லவும் தயாரில்லை என நினைக்கிறேன். ஏனெனில் எதுவும் சொல்லாத வரை தங்கள் அந்தஸ்து குறையாது என்ற அரசியலை தாங்கள் நன்கு உணர்ந்துள்ளீர்கள்.

1990-களில் அரசியல் சாயம் கொண்ட வசனங்களை நீங்கள் பேசத் துவங்கியதும் தமிழக மக்களை பாதுகாக்க இன்னொரு தேவதூதன் வந்ததாய் ஊடகங்கள் உளறிக் கொட்டின. என்ன செய்வது அது இந்த தமிழகத்தின் சாபக்கேடு. இருக்கட்டும்.

அரசியலுக்கு எவரும் வரலாம் என்பதில் நான் நம்பிக்கை கொண்டவன் என்பதால் உங்கள் வசனங்களும் உற்சாகம் தந்தது உண்மைதான். ஆனால்  உங்கள் ரசிகர்கள் எல்லா அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் என்பதை தாங்கள் அடிக்கடி மறப்பதுதான் விசித்திரமாக இருக்கிறது.

1996 இல் அதிமுக ஆட்சியை எதிர்த்து த.மா.காங்கிரஸ் கட்சிக்கு உங்கள் அண்ணாமலை சைக்கிளை கொடுத்தீர்கள். அப்போது கூட மாற்றம் தேவைப்பட்டது. பொறுத்துக் கொண்டோம். 2004 இல் பா.ஜ.க ஆட்சிக்கு தாங்கள் ஆதரவு தருவதாக வந்த தகவல்களை தாங்கள் மறுக்காததுதான் உங்களை பற்றி என்னைப் போல ரசிகர்களை யோசிக்க வைத்தது.

இப்போது திருச்சிக்கு உங்கள் ரசிகர்களில் சரிபாதியாக உள்ள இஸ்லாமிய மதத்தினரை கொன்றொழித்த  நரேந்திர மோடி வந்தபோது உங்கள் புகைப்படங்களை அவர்கள் பயன்படுத்தினார்கள். அதை தாங்கள் கண்டித்திருக்க வேண்டும் தலைவா.. ஆனால் அதுகுறித்து இதுவரை வழக்கம் போல வாய் திறக்கவில்லை.

எனவே தலைவா உங்களுக்கு ஒரு வேண்டுகோள்: தயவு செய்து இப்போதாவது பேசுங்கள்! நான் மதவெறியனை ஆதரிப்பவன். அல்லது அவனுக்கு எனது ஆதரவு இல்லை. ஏதாவது ஒன்று சொல்லுங்கள். மதவெறியனை ஆதரிக்கவில்லை எனில் எனது புகைப்படங்களை யாரும் மோடிக்கு ஆதரவாகப் பயன்படுத்தக் கூடாது என கட்டளையிடுங்கள்..

நீங்கள் பேசாமல் இருப்பது ஆபத்து என்பதை இப்போதாவது உணருங்கள். அமைதி நல்ல ஆயுதம்தான். ஆனால் அது பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது. எல்லாம் முடிந்த பின்பு ஆயுதத்தை பயன்படுத்துவது பயனற்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஆகவே இந்த பிறந்த நாள் செய்தியாக அபத்தமாக எதையும் சொல்லாமல் வழக்கம் போல அமைதியாக இருப்பதையே உங்கள் பிறந்த நாள் செய்தியாக எங்களுக்கு சொல்லுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி விடை பெறுகிறேன் தலைவா!

தங்கள் அன்புள்ள

ரஜினி ரசிகன்

Related Posts