அரசியல்

தான் யார் என்று வெளிப்படையாகக் காட்டிக் கொண்ட ரஜினி…

இல.வேந்தன்

” நீங்கள் பிரமிப்புடன் ரசிக்கும் ஒருவரை தூரமாக இருந்தே ரசிக்க வேண்டும். இன்னும் அருகில் சென்று ரசிக்க முயற்சி செய்யக்கூடாது. அப்படி அருகில் செல்ல முயன்றால் அவர்களின் சுயம் வெளியே தெரிந்து வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.” –
இது ஒருமுறை ரஜினி தன் ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ். ஆனால் இப்போது ரஜினியின் ரசிகர்களே ரஜினியின் மீது வெறுப்பு வரும் அளவுக்கு தன் சுயத்தை காட்டும் அவரது பேச்சாலே அவர் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

 1. துக்ளக் இதழின் விழாவிற்கு வாழ்த்த செல்லும் போது நிகழ்ச்சிக்கு எதை மட்டும் பேச வேண்டுமோ அதை மட்டுமே பேசி, மற்ற பத்திரிக்கை, பெரிய தலைவர்களை பற்றி சர்ச்சையாக பேசி பிரச்சனை கிளப்பும் விதமாக எதையும் பேசாமல்
  நாசுக்காக நாலு வாக்கியங்கள் பேசிவிட்டு நன்றி வணக்கம் என்று முடித்து வந்திருக்க வேண்டும்.
 2. இல்லையில்லை. அது பத்திரிக்கை விழா. அறிவாளிகளாம் வந்திருப்பாங்க. நானும் வரலாற்று சம்பவங்களையெல்லாம் பேசி அறிவாளின்னு தன்னை காண்பித்தே ஆகவேண்டும், பெரியாரை பற்றி பேசியே ஆகவேண்டும்,
  முரசொலி பற்றியெல்லாம் பேசியே ஆக வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், அதற்காக ஆதாரத்தோடு பேசியிருக்க வேண்டும். துக்ளக் பிளாக்ல வித்தாங்க.. 50 ரூபாய் கொடுத்து வாங்கினாங்க..
  துக்ளக்கில் அப்படி செய்தி வந்தது என்று சொல்வதற்கு முன் அது உண்மையா? அவர்கள் அப்படி பதிப்பித்திருந்தார்களா என்றாவது ஆராய்ந்து ஆதாரம் இருந்தால் மட்டுமே பேசி இருக்க வேண்டும்.
 3. பெரியாரைக் குறித்து 1971இல் நடந்ததாக ரஜினி ஒரு பொய்யான செய்தியை ஒரு மேடையில் பேசினார். அவர் பேசியது முழுவதும் ஆதாரமற்ற பொய்தான் என்று நாலாபக்கமும் அனைவரும் நிரூபிக்கின்றனர். சரி.. பேசியாச்சு.. பிரச்சனை கிளம்பிவிட்டது. என்ன செய்திருக்க வேண்டும்?
  தான் பேசிய செய்தி துக்ளக்கில் வந்தது தான் என்று நிரூபித்திருக்க வேண்டும்.

சில நாட்களுக்கு பிறகு, தான் பேசியது உண்மை தான் என்று ஆணித்தரமாகக் கூறி ஆதாரம் என்று துக்ளக் இதழுக்கு தொடர்பில்லாத அதுவும் இந்துவின் அவுட்லுக் என்று 2017ல் ஒருவர் எழுதிய கட்டுரையை காண்பித்து 1971ல் பெரியார் இப்படித்தான் செய்தார் என்று எழுதப்பட்டதை காண்பிக்கிறார்.
அதை தான் காண்பித்துவிட்டு நிரூபித்துவிட்டது என்று வழக்கமான சுறுசுறுப்பான ஸ்டைலில் குழந்தை முக பாவத்துடன் பேசிவிட்டு நகர்கிறார்.

நான் நிரூபிக்கத்தான் போகிறேன் என்று முடிவெடுத்து அந்த ஆதாரத்தை மக்கள் மத்தியில் பேசுவதற்கு முன் குறைந்தபட்சம், மிக மிக குறைந்தபட்சம் இந்த பத்திரிக்கை துக்ளக் தானா என்றாவது பார்த்திருக்கவேண்டும். இல்லையென்றால்,
துக்ளக் நிறுவனத்திற்கும் அவுட்லுக் இதழுக்கும் தொடர்புள்ளதா? இந்து குழுமத்திற்கும் அவுட்லுக் குழுமத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்றாவது யோசித்திருக்க வேண்டும். அதையும் கூட யோசிக்க முடியாவிட்டால், குருமூர்த்தியிடமாவது கேட்டிருக்க வேண்டும்.


1971 சேலம் ஊர்வலத்தில் பெரியார் இராமர் சீதை சிலையை நிர்வாணபடுத்தவும் இல்லை. பெரியார் செருப்பு மாலை போடவும் இல்லை என்பதும், அவுட்லுக் இதழ் இந்து குழுமத்தின் ஒரு அங்கம் இல்லை என்பதும், அவுட்லுக் இதழே 1994 ஆம் ஆண்டுதான் துவங்கப்பட்டது என்பதும்,
பத்திரிக்கை துவங்குவதற்கு 23 ஆண்டுகளுக்கு முன்பே அதனால் ஒரு செய்தியினை வெளியிடமுடியாது என்பதும் ரஜினிக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு எழுதிக்கொடுத்து பேசச்சொன்ன ஆர்எஸ்எஸ் கூட்டாளிகளுக்கு தெரியாது என்றா நினைக்கிறீர்கள்?
நிச்சயமாகத் தெரியும். அவர்களை முட்டாள்கள் என்று நினைத்து கேலிசெய்து கடந்துபோவது நம்முடைய அறியாமையன்றி வேறில்லை.

ஆனால் ரஜினி தன்னை ஆர்.எஸ்.எஸ் பகடை காயாக விளையாடுகிறது என்கிற உண்மை புரியாமல், இது இந்து நிறுவனத்தின் பத்திரிக்கை தான் என்று அவுட்லுக்கை காண்பித்து இதோ ஆதாரம் என்றால் என்ன சொல்வது?
சரி அந்த கட்டுரையின் ஆதாரத்தில் ஏதாவது படத்தோடு ஆதாரம் உண்டா என்றால் அதுவும் இல்லை.
கார்டூனிஸ்ட் பாலா படம் தான் வருகிறது.

இந்த ஒட்டுமொத்த குழப்படிகளுக்கு நடுவே, இராமன் என்கிற கதாபாத்திரத்தை அவமதிப்பதோ அல்லது விமர்சிப்பதோ மிகப்பெரிய தவறு என்கிற கருத்தை எவ்வளவு நுணுக்கமாகவும் மறைமுகமாகவும் பொதுப்புத்தியில் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.
ஜேஎன்யூ விவகாரத்தை நன்றாக உற்றுகவனித்தால் இதேபோன்ற தந்திரத்தை அவர்கள் கையாண்டிருப்பதை நாம் அறிந்துகொள்ளமுடியும். வன்முறையை வலிந்து திணித்து, நம்முடைய மாணவர்களை சட்டவிரோதமாகக் கொடூரமாகத் தாக்கி, நாம் தான் வன்முறையைத் தூண்டியதாக வதந்தியும் பரப்பினர்.
உடனே, “நாங்கள் எப்போதும் வன்முறைக்கு எதிரானவர்கள். ஜனநாயகப்பூர்வமாகவே அனைத்தையும் எதிர்கொள்வோம்” என்று நம்மையே பொதுவெளியில் வாக்குறுதி கொடுக்கவைத்தனர். அதாவது, எந்த சட்டத்தையும் மதிக்காமல், காவல்துறை, இராணுவம், குண்டர்கள்,
பயங்கரவாதிகள் என அனைத்து ஆயுதத்தையும் பயன்படுத்தி அவர்கள் நம்மைத் தாக்குகிறபோதும், நாங்கள் திருப்பி ஓரடிகூட கொடுக்கமாட்டோம் என்று நம்வாயாலேயே சொல்லவைப்பது தான் அவர்களுடைய திட்டம். ஆனால் அனைத்து ஜனநாயக வழிகளையும் அடைத்துவிட்டு, அவர்கள் தொடர்ந்து நம்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டேதான் இருப்பார்கள்….

இதுதான் ஆர்எஸ்எஸ் காலங்காலமாக கடைபிடித்துவரும் டெக்னிக். நம்மை வீழ்த்துவதற்கான வலையினை தந்திரமாக விரிப்பார்கள். அதில் நம்மை அழகாக விழவும் வைத்துவிடுவார்கள்.

நம்முடைய ஆயுதத்தை திருட்டுத்தனமாகப் பறிப்பதும், அவர்களுடைய ஆயுதமான இராமனை பொதுவெளியில் நுணுக்கமாகத் திணிப்பதுமே அவர்களது வேலை… அதனை இன்றைக்கு ரஜினியின் மூலமாக செய்துகொண்டிருக்கின்றனர்…

நாம கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் மட்டுமல்ல, அனைத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டிய காலகட்டமும் இது தான்.

இத்தனை நாள் சூப்பர் ஸ்டார் இருக்கையில் மக்கள் மனங்களில் அமரவைத்ததில் ரஜினியின் மௌனம் பெரும்பங்கு வகித்தது. இப்போது பேசுவதையெல்லாம் அப்பவே பேசியிருந்தால் எப்போதோ அவமானப்பட்டு போயிருப்பார்.

குசேலன் படத்திற்காக மன்னிப்பு, படத்தில் போராடு என்று போதித்துவிட்டு போராடினால் நாடு சுடுகாடாகிவிடும் என்றெல்லாம் பேசிய ரஜினி முட்டாள் என்றோ, அவருக்கு அறிவில்லை என்றோ, துக்ளக் படிப்பவர் என்றோ இகழ்ச்சியாக கூறுவது தவறு.
அறிவு மட்டுமே ஒரு மனிதரை தீர்மானிக்கும் கருவி இல்லை. அறிவை படித்தோ, கேட்டோ வளர்த்து கொள்ளலாம். ஆனால் எது தவறு என்றால், ‘தான் ஓர் அறிவாளி. தனக்கு போதிக்கப்பட்டதெல்லாம் உண்மைதான்’ என்று நம்பி பொதுவில் பகுத்தறிவில்லாமல் பொறுப்பில்லாமல் பேசியது தான் தவறு. அறிவற்றவர்களின் பேச்சை நம்பி அதையே அறிவு என்று நம்பிய ரஜினி இழைத்தது இமாலய தவறு.

அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ‘தான் யார்?’ ‘தன் சிந்தனை மட்டம் என்ன?’ என்று வெளிப்படையாக காட்டிக்கொண்ட ரஜினிக்கும் காட்டவைத்த சங்கிகளுக்கும் கோடி நன்றிகளும் பாராட்டுகளும்.
இத்தோடு அவர் கருத்து பயணம் முடியப்போதில்லை. பெரியார் எதிர்ப்பிலிருந்து இப்போது தான் தன் அரசியல் பிரவேச பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.

It’s just beginning! wait and see folks!

(இப்போதும் அவரை பாதுகாக்கும் இரண்டு ஆயுதங்கள் உள்ளன. பெரியாரை இழிவுபடுத்தியதற்கு மன்னிப்பும், நடக்கபோவதில் மௌனமும். இத்தனை நாள் அமைதியாக இருந்து உச்சத்தை தொட்டத்தை போல, மீதி வாழ்க்கையையும் அவமானங்கள் இல்லாமல் நிம்மதியாக கழிக்கலாம்.

தனக்கு தொடர்பே இல்லாத, வரலாறு, அரசியல், அறிவியல், கணிதம், அறிவாளி என்று பேச ஆரம்பித்து அவரது சுயத்தை காட்டினால் அதற்கு அவரே முழுப் பொறுப்பு. அவரை இப்போது உசுப்பேத்தும் சங்கிகள் கூட அப்போது ‘பொறுப்பு’ துறப்பார்கள்).

Meaningless silence is always better than speaking meaningless words – Robert Stevenson.

பெரியாரை இழிவுப்படுத்தும் ரஜினிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நம் கண்டனங்கள்!

.

Related Posts