சினிமா தமிழ் சினிமா

ராஜா ராணி … மூன்று கோணங்கள்!

Raja_rani_tamilபடத்தின் மொத்த கதைக்கும் இரண்டுவிதமான விளக்கங்கள் தரலாம்.

1)  காதலர்கள் தொலைந்துபோகலாம், காதலைத் தொலைத்துவிடாதீர்கள். – ஒவ்வொரு நாளையும் காதலோடு வாழ்ந்தால்தான் வாழ்க்கை அழகாகும். இதனை மிகத் தாமதமாக புரிந்துகொள்ளும் திருமணமான இருவரைப் பற்றிய கதை.

2) இளமையின் ஈர்ப்பும் ரசனையும் ததும்பும் காதலை இழப்பது நியதி. அமைக்க விரும்பும் வாழ்க்கை கைவசமாவது கடினம்தான், அமைவதை விரும்ப பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். காதலெல்லாம் ஒன்றுமேயில்லை.

கால்சென்டர் இளைஞனுக்கும், கல்லூரி மாணவிக்கும் காதல் வருகிறது. காரணம்? ‘பெண்களுக்கு இன்னசென்ட் ஆண்களை ரொம்ப பிடிக்கும்’ அவ்வளவுதான். தன் அப்பாவுக்கும், குடும்பத்துக்கும் பயந்த அந்த இளைஞன், தன் காதலியை நடத்தும் விதமும், ‘தற்கொலை’ செய்ததாகக் காட்டி வெட்டிவிடுவதும் பச்சையான சுயநலம். இறுதியில் இந்த சுய நலத்துக்கு பார்வையாளன் கைதட்டுகிறான்.

ஒரு வெட்டிப் பயலுக்கும் – சுட்டிப் பெண்ணுக்கும் காதல் வருகிறது. காரணம்? கிட்டத்தட்ட ஒன்றுமேயில்லை. செத்துப் போவதற்கெனவே படைக்கப்பட்ட அந்தக் காதலி, விபத்தில் சிக்கி செத்தும் போகிறாள். காதலுக்கு முன்னரும், பின்னரும், திருமணத்திற்கு முன்பும், பிறகும் குடித்தபடியே தன் வாழ்க்கையைத் தொலைக்கும் நாயகன். அவன் தன் மனைவியை நேசிக்கத் தொடங்குவதும், அவன் மனைவியின் நேசத்தை உணர்ந்துகொள்வதுமானது கதை.

இந்தக் கதைக்கு தரப்பட்டுள்ள சற்றும் பொருந்தாத எதிரெதிர் விளக்கங்களில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ, அதனை எடுத்துக் கொள்ளலாம். இப்படியொரு திரைக்கதையை அமைத்திருப்பது இயக்குனர் அட்லீயின் திறமையா? அல்லது குழப்பமா? என்ற கேள்விக்குள் செல்லவில்லை.

மூன்றாவது கோணம்:

ராஜா ராணி – வண்ணமயமான படம். திருமணத்திற்கு பிறகான வாழ்க்கைச் சிக்கலைக் காட்டி தீர்வு சொல்லும் படம். அழகிய காமிரா. சிறந்த இசை. இளைஞர்களைக் கவர்ந்த படம்.

அதையெல்லாம் விட, ‘வாங்கும் சக்தியுடைய’ நடுத்தர வர்க்கத்து மாந்தர்களை தேர்ந்தெடுத்துக் குழைத்த கதை. அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து, ஷாப்பிங் மால்களில் பொழுதுபோக்கி, ‘குடி’யும் குடித்தனமுமாக வாழ்க்கையைக் கொண்டாடும் கதை. இந்தப் படம் ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவின்’ படம். உலகம் முழுவதும் தனது ஊடக சாம்ராஜ்யத்தைக் கட்டியாளும் ஸ்டார் குழுமத்தின் 3 வது நேரடி தமிழ் முதலீடு.

ஆர்யாவுக்கும் – நயன்தாராவுக்கும் திருமணப் பத்திரிக்கையடித்தில் தொடங்கினார்கள் தங்கள் விளம்பரச் செயல்பாடுகளை. அவர்களைப் பொருத்தமட்டில் தேவை பரபரப்பு. ‘தனது நிறுவன திரைப்படத்தை’ திரும்பத் திரும்பக் காட்டி, பார்வையாளனின் சட்டையைப் பிடித்து திரையரங்கிற்குள் இழுத்துச் செல்லும் தொலைக்காட்சிகளில், ஸ்டார் விஜய் எந்த விதத்திலும் வித்தியாசமாக இல்லை.

‘ஒய் திஸ் கொலவெறி’ – தனிப்பாடலாக பிரபலமானபோது ‘சோனி மியூசிக்’ என்ற கார்பரேட்டின் வியாபார உத்தியை நாம் கணக்குப் போட்டிருக்க மாட்டோம். அதன் பிறகு ராஞ்சனா வரை சோனியின் இசை வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது.

கார்பரேட் நிறுவனங்கள் நுழைந்த பின்னர் சினிமாவின் ஒவ்வொரு ரீலும் கணக்குப் போட்டே கட்டமைக்கப்படுகிறது. எந்திரன் திரைப்படத்தின் ஒவ்வொரு கட்டமும் காசாக்கப்பட்டது தொடங்கி நாம் இந்த மாற்றம் நம்மை உருத்தியபடியே தொடர்கிறது. ராஜா ராணியிலும் கதாப்பாத்திரங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடங்கி, உலவும் மால்கள் வரை ‘பிராண்டிங்’ தொடர்கிறது.

வணிக அடிப்படையில் இதுவொரு வளர்ச்சியென்றே பலரும் எழுதுகிறார்கள். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தில் குறிப்பிட்ட மாடல் நோக்கியா தொலைபேசியைப் பயன்படுத்தவும், குறிப்பிட்ட பிராண்ட் உடையை உடுத்தவும் செய்து, ‘விளம்பரமாக’ பயன்படுத்தப்பட்டது. இப்படி, சினிமாவுக்கு ஒரு புதிய வருமான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதென்பது அவர்களின் கணிப்பு. நதியா கம்மல், நதியா வளையல் போல – ஒரு குறிப்பிட்ட பொருளை பிரபலப்படுத்த சினிமாவை பயன்படுத்துவது தவறில்லை என்பது அவர்களின் வாதம்.

நதியா கம்மல் என்று விற்பனை செய்யப்பட்டதெல்லாம், ஒரே நிறுவனத்தின் உற்பத்தியானவை அல்ல. அவையெல்லாம் குறைந்த விலையில் கிடைத்தன. உண்மையில் தங்கக் கம்மல் வாங்கித் தர முடியாத குடும்பங்களில் ‘நதியா’ கம்மல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ராஜா ராணி உள்ளிட்ட திரைப்படங்களின் உள்ளீடாகக் கட்டமைக்கப்பட்டுள்ள வாழ்க்கை நுகர்வு விருப்பத்தை பார்வையாளனின் மனதில் உண்டாக்கி, ஒரு திருப்தியற்ற மனநிலையை ஏற்படுத்துகிறது. சில குறிப்பிட்ட மாடல் தயாரிப்புகளை, குறிப்பிட்ட வாழ்க்கை முறையை நம்மை அறியாமல் – மனதுக்குள் விதைக்கிறது.

ஒரு படைப்பாளன் – சமூகத்தின் இயல்பை உள்வாங்கி, தன் சொந்த அறிவோடு அதை ஒரு கதையாகப் பட்டைதீட்டுகிறான். அந்தக் கதை மீண்டும் சமூகத்தில் தன் பிரதிபிம்பங்களை உண்டாக்குகிறது. அதுவும் சினிமா ஒரு கூட்டுப் படைப்பாக இருப்பதால், அது எப்போதும் ஒரு வைர மாலையாகவே ஜொலித்து வந்திருக்கிறது. கார்ப்பரேட்டுகள் தங்கள் விருப்பப்படி முட்டையிடும் பிராய்லர் கோழிகளை விரும்புகின்றன. இதர படைப்பாக்கத் துறைகளில் ‘கலை கலா ரசிகர்களுக்கானது’, ‘கலை மக்களுக்கானது’ என இரண்டு தளங்கள் இருந்திருக்கின்றன.மக்கள் இன்றி வெற்றி சாத்தியமற்றதாகிப் போன காட்சி ஊடகத்தில் அந்தச் சண்டை ‘சினிமா என்பது வணிகம் மட்டுமே’, ‘சினிமா என்பது மக்களைப் பேசுவது’ என நடக்கிறது.

மனிதர்களை ‘வாங்கும் யந்திரமாக’ மாற்றும் வணிகக் கலை நிறைந்த உலகில் அன்பும் ஒரு விற்பனைப் பொருளாகிறது.

Related Posts