அரசியல்

மிஸ்டர் மோடி: PM _ CARES எனும் பெயரில் பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு சமாதிகட்ட திட்டமா? – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

இரண்டாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் தேசத்தை பதட்டத்திலேயே வைத்திருப்பதில் வெற்றி பெற்றுள்ளார். இதை நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும்!  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, சிவில் சட்டமான முத்தலாக் சட்டத்தை கிரிமினல் சட்டமாக மாற்றியது, நம்பிக்கையை மட்டுமே வைத்து பாபர் மசூதி – ராமர் கோவில் பிரச்சினையை முடித்தது,  உலக மாட்டுகறி ஏற்றுமதியில் இரண்டாம் இடம் பிடித்துள்ள இந்தியாவில் மாட்டுகறி சாப்பிட்டதற்காக அடித்து கொலை செய்வது, சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.ஆர்.பி என ஒரு பக்கம் மத அடையாள அரசியல் விளையாட்டை நடத்துவது.

    மற்றொரு பக்கம் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது, பெருமுதலாளிகளுக்கு மக்கள் வளங்களை வாரி வழங்குவது, இந்திய அரசியல் சாசன சட்டத்தை நீர்த்துப்போக செய்வது, நீதிமன்றங்கள் உள்ளிட்ட அரசு எந்திரங்களை காவிமயமாக்குவது, ரயில்வே பட்ஜெட்டை ஒழித்தது, திட்டக்குழுவை தீர்த்துக்கட்டியது போன்ற அவர்களது செயல்பாட்டால், எதிர் கட்சிகளின்  போராட்டங்களை ஆளும் கட்சியே வடிவமைப்பதும் நிகழ்கிறது. இதன் விளைவு ஆட்சிக்கு வரும்போது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளான ஆண்டுக்கு இரண்டுகோடி பேருக்கு வேலை உள்ளிட்டவையெல்லாம் புறம் தள்ளப்படுகிறது.

    இதோ கொரோனா எனும் வைரஸ் தேசியப் பேரிடராக வந்துள்ள இந்த சூழலில்கூட  காவிப்படையின் மக்கள் விரோத செயல்பாடுகள் நிற்கவில்லை. அதற்கு சிறந்த உதாரனம் பி.எம்.- கேர்ஸ்!

    தேசிய பேரிடர் காலத்தில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடம் தேசிய அளவில் நிதி திரட்டிட தேசிய அளவில் 1948 ஆம் ஆண்டு முதல் பிரதமர் தேசிய நிவாரண நிதி (Prime Minister’s National Relief Fund ) என்ற அமைப்பு உள்ளது. வெள்ளம், சூறாவளிகள் மற்றும் பூகம்பங்கள் போன்ற இயற்கை பேரழிவுகளில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், பெரும் விபத்துக்கள் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்க முதன்மையாக பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை ஓரளவு குறைக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இந்த நிதி முற்றிலும் பொது பங்களிப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் எந்தவொரு பட்ஜெட் ஆதரவையும் பெறவில்லை . இந்த நிதியில் பணம் செலுத்துவோருக்கு 100% வரிச்சலுகைகள் உண்டு, ஏறக்குறைய இது அறக்கட்டளை போன்ற அமைப்புதான்.

ஆனால் திடீரென கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளிவந்த அறிவுப்பு கொரோனா வைரஸ் எதிர்ப்புக்கு நிதியளிப்பவர்கள் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகள் நிவாரணம் (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund) அதாவது PM _ CARES என்ற அறக்கட்டளைக்கு நிதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது என்ன புது பெயரில் தேசிய பேரிடருக்கு வசூல் என பலரும் புருவம் உயர்த்தினர். இந்த புதிய அமைப்பு எதற்கு? ஏற்கனவே உள்ள பிரதமர் தேசிய நிவாரண நிதி என்ன ஆனது? அதுவும்  பிரதமர் தேசிய நிவாரண நிதியில் கடந்த 2019 டிசம்பர் மாதம் வரை செலவிடப்படாத 3.800 கோடி பணம் இருக்க அதோடு புதிதாக கொரோனாவுக்குக்காக வசூல் செய்யும் தொகையையும் சேர்த்து கொரோனோ எதிர்ப்பு நடவடிக்கையை செய்யவேண்டியதுதானே? 

1948ல் துவங்கப்பட்டு இதுநாள் வரை செயல்பட்டு வரும் பிரதமர் தேசிய நிவாரண நிதி  இந்திய மக்களுக்கு சொந்தமானது. PM CARES  எனும் அறக்கட்டளை நிதி யாருடையது அல்லது யாருக்கு சொந்தமானது? மக்களிமிருந்து கோடிகோடியாய் திரட்டப்படும் பொது நிதியை கையாளும் ஒரு அமைப்பில் எந்தவொரு எதிர்கட்சி உறுப்பினர்களும், சமூக ஆர்வலர்கள், பிற சமூகத் தலைவர்களும் இல்லாமல் இருப்பது சரியா? 

தேசிய மக்கள் பணத்தை பிரதமரே ஒரு அறக்கட்டளை துவக்கி வசூல் செய்வது சரியா? இந்த அறகட்டளையின் தலைவராக பிரதமரும் பாதுகாப்புதுறை அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆக மூன்று உறுப்பினர்கள் என நான்குபேர் மட்டுமே ஒரு அறக்கட்டளை அதில் கோடிகோடியாய் வசூல் என்பது நியாயமா? உண்மையில் இந்த அறக்கட்டளையின் நோக்கம்தான்  என்ன? இத்தோடு அறிஞர் ராமசந்திர குஹா அவர்கள் எழுப்பிய கேள்விகளும் மிக மிக முக்கியமானது!

– இந்த  பொது அறக்கட்டளை அமைக்க முடிவு செய்யப்பட்டது எப்போது? 

– அவ்வாறு செய்ய கட்டாய காரணங்கள் என்ன? 

–  தற்போதுள்ள பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு எதிராக புதிய ஒரு அறகட்டளை  உருவாக்குவதன் நன்மைகள்? 

– இதன் அறக்கட்டளை சட்டங்களை எங்கு காணலாம் ? 

– எந்த சட்டத்தின் கீழ் இந்த அறக்கட்டளை  பதிவு செய்யப்பட்டுள்ளது? 

– அப்படியெனில் இந்த பதிவு எப்போது நடந்தது, ​​எங்கே நடந்தது? 

–  பதிவு செய்வதற்கு  துணை பதிவாளர் பிரதமரின் இல்லத்திற்கு சென்றாரா அல்லது  பிரதமர் துணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றாரா? 

– இந்த அறக்கட்டளையின் தலைவர்  இந்தியாவின் பிரதமராக இருக்கும் நபரா  அல்லது நரேந்திர மோடி எனும் தனி நபரா? 

-அறக்கட்டளையின்உறுப்பினர்கள்  தனிப்பட்ட பெயர்களில் உள்ளனரா அல்லது அதிகார பதவியில் உள்ளதால் உள்ளனரா? 

– PM-CARES அறக்கட்டளையின் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி என்ன? இதுதான் அவரது கேள்விகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியும் இதே பொருள்படும் கேள்விகளை எழுப்பி உள்ளார்.

இப்படி கேள்விகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் பதில்? வழக்கம் போல காவித் தலைவர்கள் தங்களது கள்ள மவுனத்தால் இதை கடந்து செல்ல, பொது வெளியில் அவர்களது சீடர்கள் இப்படி கேள்வி எழுப்புபவர்களை தேசத்துரோகி, பாகிஸ்தான் கைக்கூலி என வசைமாறிப் பொழியத்துவங்குவர். 

 ஆனால் ரத்தன் டாடா 1,500 கோடி  நன்கொடையை கொடுத்து கொரோனா எதிர்ப்பு பணியை துவங்க, லட்சம் கோடிகளை எட்டப்போகும் இந்த அறக்கட்டளை நிதி வசூல் எதற்கு பயன்படப் போகிறது என நினைத்தால்தான் அச்சம் அதிகரிக்கிறது. பேரிடர்  துயர் துடைக்க வருகின்ற பணம் என்னாகுமோ?

சரி கடைசியாக 

”கொலைமேற் கொண்டாரில் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து” 

என்ற திருக்குறளை மட்டும் அவர்களுக்கு சொல்லிவைப்போம்.

Related Posts