அன்று மாலை வீட்டுக்கு வந்த பூங்குன்றன்….கை கால் கழுவிக் கொண்டு வந்தவுடன் “அம்மா உங்க ரெண்டு பேர் கிட்டயும் நா கொஞ்சம் பேசணும்… எனக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வாயேன்” என்று கேட்டவாறே ஹாலுக்கு வந்தான்.

கண்மணி கல்லூரி பேராசிரியை. அவரது கணவன் செல்வம் பள்ளி ஆசிரியர்.  மகன் பூங்குன்றன் ஐ பி எஸ் முடித்து  காவல் துறை அதிகாரியாக பணி புரிந்து வருகிறான். பூங்குன்றன் நேர்மையான, தைரியமானவன் மட்டுமல்ல முற்போக்கு சமுதாய மாற்றங்களை செயல்படுத்த நினைப்பவன்.

“சொல்லுப்பா….” காபியை கொடுத்து விட்டு அருகில் வந்து அமர்ந்தாள்  அம்மா. 

“அம்மா நா ஒரு முடிவு பண்ணிருக்கேன்… எனக்கு திருமணம் செய்ய பேசிட்டு இருக்கீங்க… சோ இந்த சமயத்துல நா என்னோட விருப்பத்தை சொல்லியே ஆகணும்….”

கண்மணி  புன்னகையுடன்.. “எதுன்னாலும் சொல்லுப்பா… உன் விருப்பம் தான் எங்க விருப்பமும்…”

“எல்லோரையும் போல சாதரணமா ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ள நா விரும்பல… முற்போக்கு சமுதாய மாற்றம்கறது ஒவ்வொருவரும் செயல் படுத்தினால் தான் நடக்கும்… அதனால சமூக

அக்கறை கொண்ட அல்லது சமூகத்தில் பாதிக்கப்பட்டதா ஒதுக்கப்படற  ஒரு பெண் தான் என் துணையாக நா விரும்பறேன்.

 அப்பா செல்வம் “சரிப்பா.. பெண்ணை பார்த்து முடிவு பண்ணிட்டயா?” என்று கேட்டார்.

“அது சம்பந்தமா யோசிச்சிட்டு இருக்கேன்… சொல்றேன் பா சீக்கிரமே…”

கடந்த ஒரு வருடமாகவே காதம்பரியை  தெரியும் பூங்குன்றனுக்கு. ஒரு ஆசிரமத்தில் ஆதரவற்ற பெண்ணாக யதேச்சையாக சந்தித்தான். சிறுவயதில் ஆதரவற்ற நிலையில் ஆசிரமத்திற்கு வந்த அவள் அங்கேயே தங்கி படித்து அங்கே உள்ளவர்களுக்கும் தன்னால்  இயன்ற உதவிகளை செய்து கவனித்து கொண்டு வந்ததோடு நல்ல முறையில் படித்து தற்போது ஒரு தனியார் பத்திரிகையில் பணி புரிந்தும் வருகிறாள்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தன்னால் இயன்ற வகையில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். அதற்கான போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறாள். பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும் அதற்கான அவளது எழுத்துகளிலும் கயவர்களுக்கு எதிரான ஆவேசத்தை அவன் அறிந்திருந்தான்.

சமூக மாற்றங்கள், சிந்தனைகள், அவலங்கள், அதற்கான மாற்றங்கள், அரசியல் பொது விஷயங்கள் என எல்லாவற்றையும் பற்றி பேசுவார்கள்.  அவளது பேச்சு அத்தனையிலுமே சமூக அவலங்களின் மீதான  அவளது அதிருப்தியையும் அதை போக்க வேண்டும் என்ற ஏக்கமும் புரிந்தது.

செல்வமும் கண்மணியும் ஏற்கெனவே சொன்னது போல் காதம்பரியை தன்  இணையாக  அவனது விருப்பத்திற்கு சம்மதித்தனர். ஒரு இனிய நாளின் உற்றார் பெரியோர்  மற்றும் நட்புக்களின் வாழ்த்தொலியின் மத்தியில் இருவரும் பதிவு திருமணத்தில் கை கோர்த்தனர்.

சூழ இருந்த சுற்றமும் நட்பும் கலைந்து சென்ற 2 நாட்களில் மொட்டை மாடியில் உலாத்திக் கொண்டு இருந்தார் செல்வம்…

“செல்வம் சார் நல்லா இருக்கீங்களா? “ காதம்பரியின் குரல்…

கேள்வியில் இருந்த வித்தியாசம், சார் என்ற வார்த்தை இரண்டிலும் குழம்பிய செல்வம் எதுவும் புரியாமல் பதில் சொல்லாமல் பார்த்தார்.

தொடர்ந்த காதம்பரி “ உங்களுக்கு என்னை இப்போ அடையாளம் தெரியல.. ஆனா ஒரு நிகழ்வை நான் சொன்னால் உடனே புரிஞ்சுப்பீங்க சார்…” என்று சொல்லி அவரை நேராக பார்த்து பேசினாள்.

இப்போதும் எதுவும் பேசாமல் ஏன் என்று கூட கேட்க தோன்றாமல் அமைதியாய் அவளை நோக்கினார் செல்வம்.

“13 வருடங்களுக்கு முன்னால் எட்டாம் வகுப்பு ஆசிரியரா நீங்க வேலை பார்த்துட்டு இருந்தப்போ நீங்களும் உங்க சக ஆசிரிய நண்பர்கள் ரெண்டு பேரும்  சேர்ந்து உங்க வகுப்பில் உள்ள ஒரு சின்ன பொண்ண பலாத்காரம் பண்ணீங்களே நினைவிருக்கா?”

அதிர்ந்து உறைந்தார் செல்வம்…

“அம்மா அப்பா இல்லாம உறவினர் ஆதரவில் இருந்த அந்த ஏழை பொண்ணுக்கு நியாயம் கேட்க கூட யாரும் இல்லாம நிர்க்கதி ஆகி மானத்துக்கு பயந்து அந்த உறவினர்களும் அந்த பொண்ணை அந்த ஊரை விட்டு இந்த ஊர்ல இருக்கற ஆசிரமத்துக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்க.. தெரியுமா?”

எதோ ஒன்று புரிந்தும் புரியாததுமாய் வாயடைத்து நின்றார்… “நான் தா அந்த பொண்ணு” சர்வ சாதாரணமாய் சொல்லி விட்டு அவரை உற்று பார்த்தாள் காதம்பரி.

அதிர்ந்து உறைந்து நின்றார் செல்வம்.

“நல்லா யோசிச்சு பாருங்க…

மாதா பிதாவுக்கு அப்புறம் தெய்வத்தை விட உயர்வா ஆசிரியர தா  சொன்னாங்க…. உண்மைய சொல்லப் போனா  பிள்ளைங்க அம்மா அப்பா கூட இருக்கற நேரத்தை விட ஆசிரியர்கள் கூட இருக்கற நேரம் தான் அதிகம்… அவங்களை நம்பித்தானே பெத்தவங்க பிள்ளைங்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறாங்க….

ஆனா நீங்க மனித தன்மை இல்லாம இப்படி நடந்துகிட்டீங்களே… கண்ணியமா நடந்துக்க சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியரே காமுகனா மாறி இப்படி கேவலமா நடந்துகிட்டீங்களே.. உங்களை நம்பி மரியாதை வைக்கும் மாணவர்கள் மனநிலை என்னவாகும்? 

பிள்ளைகளுக்கு  வீட்டுக்கு அப்புறம் பாதுகாப்பான இடம் ன்னு பள்ளிக்கூடத்தை தான் மக்கள் நம்பறாங்க.. பொண்ணுகளை பள்ளிக்கூடத்துக்கு கூட நம்பி அனுப்ப முடியாதுன்னா  அது உங்களை போன்ற ஆசிரியர்களுக்கு கேவலம், பள்ளிகளுக்கு கேவலம்… உங்களை போன்ற ஆசிரியர்களால புனிதமான இந்த ஆசிரிய பணிக்கே கேவலம்..

உங்களை போன்றவர்களை எல்லாம் மிருகங்கள்னு கூட சொல்லி மிருகங்களை கேவல படுத்த கூடாது… மிருகங்கள் இப்படி நடந்துக்காது… எங்க பாத்தாலும் சின்ன குழந்தைகள் ன்னு கூட பாக்காம இப்படி நெறைய பேர் மனித தன்மையே இல்லாம நடந்துக்கறாங்களே… அவங்க எல்லோரும் ஒன்னு உணரனும்… பெண்கள் வெறும் போக பொருட்கள் இல்லை… தங்களை போல சக மனுசின்னு உணரனும்..  ஆண்களை போலவே அவர்களும் சுய உணர்வுள்ள ஒரு உயிர்ன்னு உணரனும்… குழந்தைகள் முதல் கொண்டு பெண்களை அந்த கண்ணோட்டத்துலையே பார்க்கிற உங்களை போன்ற ஆண்கள் திருந்தனும்…இல்ல வருந்தணும்…அவங்களை தண்டிக்கணும்…  இப்போ நீங்க வருந்துவீங்கன்னு நினைக்கிறேன்….

கொஞ்சம் நினைச்சுப் பாருங்க…. இப்படியே பெண் குழந்தைகள் எல்லாம் பாதிக்கப்பட்டா வருங்கால சமுதாயம் என்னவாகும்?  பெண் குழந்தைகளை பெத்துக்கவே எல்லோரும் பயப்படுவாங்க… பெண்கள் உலகம் பாதிக்கப்பட்டா ஆண் இனமும் அழிஞ்சு போகும்… மொத்த உலகமும் அழிஞ்சு போகும்…

உங்க மகனுக்கு எல்லா உண்மையும்  தெரியும், நீங்கங்கறது தவிர.  நானும் உங்க மகனும் எங்க உறவுக்காக ஒண்ணு சேரல… என்னை போல பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராட  சேர்ந்திருக்கோம்… இது தான் எங்க வாழ்க்கையோட லட்சியம்… பெண்களை பாதிக்கும் ஒவ்வொரு செயலுக்கும் எதிரா போராடுவோம்… நியாயம் கிடைக்க வைப்போம்… தப்பு செய்தவங்களை தண்டிக்க வைப்போம்… ஆண்கள் எல்லோரும் கெட்டவங்க இல்லை…. உங்க பிள்ளையை போல நல்ல இளைஞர்களையும் பெண்களையும் இணைத்து போராடுவோம்… இனி வரப்போற காலங்களில் தப்பு செய்ய ஒவ்வொருத்தரையும் பயப்பட வைப்போம்…. எங்க வாழ்நாள் முழுக்க இதுக்காகவே வாழ்வோம்…

உங்களுக்கு இப்போ நாங்க கொடுத்த தண்டனையே போதும்ன்னு நினைக்கிறேன்…”

கை கூப்பி விட்டு நகர்ந்தாள் காதம்பரி…

ஆயுள் தண்டனை கைதி போல உணர்ந்தார் செல்வம்.

-வசந்தா

Related Posts