அரசியல் சொல்லப்படாத அமெரிக்க வரலாறு தொடர்கள்

அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 1 (போர்ட்டோரிகோ)

அமெரிக்காவின் தெற்கே, கியூபாவிற்கு அருகில் இருக்கும் ஒரு தீவு நாடுதான் போர்டோரிகோ. 16ஆம் நூற்றாண்டில், போர்டோரிகோவில் ஆண்டுவந்த தைனோ இன மக்களிடமிருந்து, ஆட்சியைப் பறித்தது ஸ்பெயின். ஏறத்தாழ 300 ஆண்டுகளாகத் தென்னமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தி வைத்திருந்தது போல, போர்டோரிகோவையும் பிடித்து வைத்திருந்தது.

ஸ்பெயினுடைய ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட அடிமைத்தனம் ஒரு புறமும், போர்டோரிகோவை ஆக்கிரமிக்கத் துடித்த போர்ச்சுகல், ஃபிரான்சு, பிரிட்டன் போன்ற நாடுகளின் அவ்வபோதைய படையெடுப்புகளினால் மறுபுறமும் எண்ணற்ற உயிரழப்புகளையும் பாதுகாப்பற்ற வாழ்நிலையையும் போர்டோரிகோ மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஸ்பெயின் போன்ற ஆதிக்க நாடுகளால் ஆப்பிரிக்காவிலிருந்து ஏராளமான மக்கள் அடிமைகளாகத் தென்னமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்டனர். காலனியாதிக்கத்தினால் பாதிக்கப்பட்ட தென்னமெரிக்கப் பூர்வகுடி மக்களும், அடிமைத்தனத்தினால் அவதிப்பட்ட ஆப்பிரிக்க மக்களும் ஒன்றாக கைகோர்த்து தென்னமெரிக்கா முழுவதும் ஆதிக்க நாடுகளை எதிர்த்துப் போராடி வந்தனர். தென்னமெரிக்காவின் பல நாடுகளின் விடுதலைக்காகப் போராடிய சைமன் பொலிவாரும், அவருக்குப் பின்னால் வந்த இன்னபிற போராளிகளும், போர்டோரிகோ மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினர்.

மக்கள் போராட்டத்தை ஒடுக்கியும், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளின் நுழைவைத் தடுத்தும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தென்னமெரிக்காவின் பல பகுதிகளை ஆக்கிரமித்தே வைத்திருந்தது ஸ்பெயின். அது ஸ்பெயினின் வீழ்ச்சியும், அமெரிக்க ஆதிக்கத்தின் துவக்கமும் ஒரு சேர நடைபெற்ற காலகட்டம். கியூபாவில் எப்படியும் கியூப மக்கள் ஸ்பெயினை வென்றுவிடுவார்கள் என்கிற சூழல் வந்தபோது, இடையில் புகுந்து கியூபாவிற்கு ஆதரவு தெரிவிப்பது போன்று ஸ்பெயினுடனான போரைத் துவங்கியது அமெரிக்கா. அருகருகே அமைந்திருக்கிற கியூபாவும் போர்டோரிகோவும் வேறு வழியின்றி இதனை ஆதரித்தன. போரின் இறுதியில் தென்னமெரிக்கப் பிராந்தியத்தை விட்டே வெளியேற சம்மதித்தது ஸ்பெயின். பேய் வெளியேறியதும் பிசாசு வந்த கதையாக, ஸ்பெயின் நடையைக் கட்டியதும் அமெரிக்கா காலடி எடுத்து வைத்தது. கியூபாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டாலும் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தினை அமெரிக்கா தன் வசம் வைத்துக் கொண்டது. போர்டோரிகோ, குவாம் மற்றும் பிலிப்பைன்சை தன்னுடைய காலனி நாடுகளாகவே எடுத்துக் கொண்டது அமெரிக்கா. 1959 இல் கியூபாவில் மக்கள் புரட்சி ஏற்படும் வரை, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது கியூபா. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் ஏற்பட்ட சர்வதேச அழுத்தத்தினால் 1946 இல் பிலிப்பைன்சுக்கு விடுதலை வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை 115 ஆண்டுகளாக போர்டோரிகோவை தனது காலனியாகவே வைத்திருக்கிறது அமெரிக்கா .

போர்டோரிகோவிற்குள் அமெரிக்கா நுழைந்த கதை:

1898 ஜூலை 25 இல் , ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகள் போர்டோ ரிகோ தெற்கு கடற்கரை வழியாக ஊடுருவின. குவான்கா என்கிற சிறிய நகரத்திற்குள்ளும் பின்னர் பொன்சே என்கிற பெரிய நகரத்திற்குள்ளும் நுழைந்தன. ஜெனரல் நெல்சன் தலைமையில் 16,000 பேர் கொண்ட அமெரிக்கப் படை, போர்டோரிகோவை ஆக்கிரமிக்கும் நோக்கில் அடியெடுத்து வைத்தன. அதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே, ஸ்பெயினை எதிர்த்து மிகபெரிய ஆயுதப் போராட்டத்தை போர்டோரிகோவின் மக்கள் நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து அம்மக்களது எதிர்ப்புணர்வும் போராட்ட குணமும் உச்சத்தில் இருந்தது. அதனாலேயே போர்டோரிகாவின் பல பகுதிகளில், அமெரிக்கப் படைகளின் வருகையை அம்மக்கள் ஆதரித்தனர். 400 கால ஸ்பெயின் காலனிய ஆதிக்கத்திலிருந்து அமெரிக்கா தமக்கு விடுதலை வாங்கித் தரும் என்று நம்பினார்கள் போர்டோரிகோ மக்கள்.

அமெரிக்கா ஒருபுறம் ஸ்பெயினுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க போர்டோரிகோ மக்களும் மறுபுறம் சியலஸ், அட்சுண்டஸ், யாவ்கோ, மயாகுவாஸ், பகுதிகளில் ஸ்பெயினை எதிர்த்து கொரில்லாப் போர் நடத்திக் கொண்டிருந்தனர். இறுதியாக அமெரிக்காவுடன் ஓர் உடன்பாட்டிற்கு வர சம்மதித்தது ஸ்பெயின். 1898 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பிரான்சின் பாரிஸ் நகரில், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி போர்டோரிகோ, குவாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து, போர்டோரிகோவில் போராடிக் கொண்டிருந்த அந்நாட்டு மக்களிடமோ, போராட்டக் குழுக்களிடமோ எவ்வித பேச்சுவார்த்தையும் கருத்துக் கணிப்பும் நடத்தப்படவில்லை.

ஸ்பெயின் கொடி இறக்கப்பட்டு அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டது. புதிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் போர்டோரிகோ மக்களின் ஆயுதப் போராட்டம் தொடர்ந்தது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க முடியாமல் அமெரிக்காவினால் அப்போராட்டங்கள் நிர்மூலமாக்கப்பட்டது .

“நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த உங்களுடன் போர் புரிவதற்கு வரவில்லை நாங்கள். மாறாக, உங்களையும், உங்களது செல்வங்களையும் பாதுகாத்து வளர்ச்சிக்கு உதவவே வந்திருக்கிறோம் “

என்று போர்டோரிகோவை பிடித்ததும் அறிவித்தார் அமெரிக்க ஜெனெரல் நெல்சன் .

ஸ்பெயினை விரட்டிய பின்னர் , அவர்களை விட மிக மிக மோசமான ஆதிக்கத்தைத் துவங்கியது அமெரிக்கா . போர்டோரிகோ முழுவதும் அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. போர்டோரிகோ மக்கள் நாகரீகமடையாமல் இருப்பதாகவும், ஆட்சி செய்யும் திறமை அவர்களுக்கு இல்லை எனவும் பிரச்சாரம் செய்தது அமெரிக்க ஆளும் அரசு. உலகின் எல்லா காலனிய ஆதிக்கத்திற்கும் இதைத்தானே காரணமாகச் சொல்லி வந்தன ஆதிக்க நாடுகள் .

போராகர் சட்டம் :

போர்டோரிகோவை எவ்வாறு ஆள்வது என்பதனை தீர்மானிக்க இயற்றப்பட்ட முதல் சட்டம் இது. இச்சட்டம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது .

 1. அமெரிக்க அதிபரால் நியமிக்கப்படும் கவர்னரே போர்டோரிகோவை ஆட்சி செய்வார்.
 2. அமெரிக்க சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றம் அமைக்கப்படும்.
 3. கவர்னருக்கு அடுத்தபடியாக நியமன உறுப்பினர்களும் சிலர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் பங்கெடுப்பர். அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்களாக இருப்பார்.
 4. ஸ்பானிஷ் -ஐ தாய்மொழியாகக் கொண்ட போர்டோரிகோவில், ஆங்கிலமே முதன்மை கல்வி மொழியாக மாற்றப்படும். ஸ்பானிஷ் -ஐ இரண்டாம் நிலை சிறப்புப்பாடமாக பயிற்றுவிக்கப்படும்.

இவ்வாறு சட்டமியற்றி போர்டோரிகோவின் ஒட்டுமொத்த ஆட்சியதிகாரத்தைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது அமெரிக்கா. ஹோண்டுரசை எப்படி வாழைப்பழ அடிமை தேசமாக மாற்றியதோ அதே போல் போர்டோரிகோவை சர்க்கரை அடிமை தேசமாக மாற்றத் துவங்கியது அமெரிக்கா. போர்டோரிகோவில் ஏற்கனவே கரும்பு உற்பத்தி செய்து வந்த சிறுவிவசாயிகளால், அமெரிக்கப் பெருமுதலாளிகளுடன் போட்டி போட முடியமல், அவர்கள் தங்களது விவசாய நிலங்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டு வெறும் கூலிகளாயினர். அமெரிக்காவின் சர்க்கரைத் தட்டுப்பாட்டைக் குறைந்த செலவில் நிவர்த்தி செய்கிற அடிமை நாடாக மாறியது போர்டோரிகோ. அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட போர்டோரிகோவின் முதல் கவர்னரான சார்லஸ் ஹெர்பெட் ஆலன் உலகின் மிகப்பெரிய சர்க்கரை சுத்திகரிப்பு நிறுவனமான “அமெரிக்கன் சுகர் ரிபைனிங்க்” கம்பனியின் அதிபரானார். பின்னாளில் அந்நிறுவனம் டொமினோ சுகர் என்று பெயர் மாற்றமடைந்தது. போர்டோரிகோவின் கவர்னர் பதவியைத் தனது நிறுவன வளர்ச்சிக்காகவே பயன்படுத்தினார் சார்லஸ்.

“ஒரு நாட்டின் கரையோரம் இருக்கும் தீவுகள் யாவும் அந்நாட்டிற்கே சொந்தம் என்பது எழுதப்படாத விதி” – அமெரிக்க அதிபர் தியோடர் ரூசுவெல்ட்

ஜோன்ஸ் சட்டம்:

முதல் உலகப்போரின் போது அமெரிக்காவிற்காக போரில் சண்டையிட்டு உயிர்த்தியாகம் செய்ய போர்டோரிகோ மக்கள் பயன்படுத்தப்பட்டனர். போரில் அமெரிக்காவிற்கு உதவினால், தங்களின் நாடு விடுதலை அடைய வாய்ப்புள்ளதாக நம்பினார் போர்டோரிகோ மக்கள். மேலும் அம்மக்களை ஆசை காட்டும் விதமாக 1916 இல் ஜோன்ஸ் சட்டத்தை அமல்படுத்தியது அமெரிக்கா. அதன்படி ,

 1. போர்டோரிகோ மக்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படும்
 2. ஆனால் அவர்கள் அமெரிக்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாது.
 3. அமெரிக்க மாநிலப்பகுதியாக போர்டோரிகோ இருக்கும், ஆனால் மற்ற அமெரிக்க மாநிலங்களுக்கு உள்ள எவ்வித உரிமையும் போர்டோரிகோவிற்குக் கிடையாது.
 4. போர்டோரிகோவின் ஆட்சியதிகாரம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது . 1-செயற்குழு, 2-உறுப்பினர்கள், 3-நீதிமன்றம்.
 5. அதிக அதிகாரமுள்ள செயற்குழுவை அமெரிக்க அதிபரே தேர்ந்தெடுப்பார். மற்ற உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 6. ஆங்கிலம் மட்டுமே போர்டோரிகோவின் ஆட்சிமொழியாக இருக்கும்.
 7. இவ்வுரிமைகளை (!) வழங்கியதற்காக, 20,000 போர்டோரிகோ படை வீரர்கள், முதல் உலகப்போரில் அமெரிக்காவிற்காகச் சண்டையிட வேண்டும்.

படிப்படியாக போர்டோரிகோவின் ஆட்சியதிகாரம் அமெரிக்க ஆட்சியாளர்களின் கையில் தஞ்சம் அடைந்தது. அமெரிக்கப் பெருநிறுவனங்களால், போர்டோரிகோவின் விவசாய நிலங்களை எளிதாகக் கைபற்ற முடிந்தது. ஒரு டாலருக்கும் குறைவான ஊதியத்திற்கே வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர் அம்மக்கள். இதனால் வறுமையும், ஏழ்மையும் அவர்களைச் சூழ்ந்தது.

“போர்டோரிகோவின் வரலாற்றிலேயே மிகக்கொடுமையான வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிலவும் காலம் இப்போதுதான் “

என அமெரிக்க அதிபரின் உள்துறை செயலரான ஹரோல்ட் கூட ஒப்புக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.

(தொடரும்….)

இ.பா.சிந்தன்

– தீபா சிந்தன்

Related Posts