இலக்கியம் சமூகம்

துன்பக்கேணி – யாருக்கு அவமானம்?

சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, பொன்னகரம் ஆகிய கொண்டாடப்பட்ட இரண்டு சிறுகதைகள் நீக்க்கியருக்கிறது. இந்தப் பிரச்சனையில் இரண்டு அம்சங்கள் முன்னுக்கு வருகின்றன. ஒன்று இந்த இரண்டு சிறுகதைகளும் தலித் மக்களை சிறுமைப்படுத்துவதாக இருக்கிறதா என்பது, இரண்டாவது அந்த நோக்கத்திலிருந்துதான் அது எழுதப்பட்டது என்பது.

முதலாவதாக புதுமைப்பித்தன் இந்தப் படைப்புகளை உருவாக்கியது 1930களில். இந்த இரு கதைகளில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், மனிதர்கள் அனைவரும் போன நூற்றாண்டில், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவர்கள். துன்பக்கேணியின் கதாநாயகி மருதி பறையர் வகுப்பைச் சார்ந்தவர் என்பது வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், பொன்னகரத்தில் வரும் எந்தப் பாத்திரமும் என்ன சாதி என்று குறிப்பிடப்படவில்லை.
துன்பக்கேணியின் கதாநாயகி மருதி அவள் வாழ்க்கையில் கடைசி நிமிடம் வரை துன்பங்களையே அனுபவிக்கிறாள். இறைக்க இறைக்க ஊறும் கேணி போல துன்பம் அவள் வாழ்க்கையில் வற்றாமல் சுரந்து கொண்டே இருந்தது என்பதை குறிப்பிடுவதற்காக அந்த தலைப்பு சூட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கால கதைமாந்தர்கள் பெரும்பாலானோரின் பெயரோடு சாதியையும் சேர்த்து சொல்வது வழக்கமாகவே இருந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின்பும் கூட சாதிப் பெயரை பின்னால் சேர்த்துக் கொள்வது ஒரு பெருமையாக, அடையாளமாகக் கருதப்பட்டது. இப்போது அந்த வழக்கு ஒழிந்து போயிருக்கிறது.

புதுமைப்பித்தன் கதைகளில் கடவுளும் கந்தசாமி பிள்ளையும், திருக்குறள் குமரேசப் பிள்ளை போன்ற தலைப்புகள் கூட இடம் பெற்றிருக்கின்றன. குமரேச பிள்ளையும், கந்தசாமிப் பிள்ளையும் அந்தக் கதைகளில் போற்றிப் பாராட்டப்படவில்லை. மாறாக, குமரேசப் பிள்ளை திருக்குறளை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துவதாகவும், சோத்துக்கு லாட்டரி அடிக்கும் எழுத்தாளராகவும் இன்னும் சொல்லப்போனால் காபி குடித்துவிட்டு பிராட்வேயிலிருந்து திருவல்லிக்கேணியில் இருக்கும் அவரின் வீட்டுக்கு நடந்து போவதா அல்லது காபி குடிக்காமல் டிராமில் போவதா என்று வறுமை பீடித்த மனிதராகவே கந்தசாமிப் பிள்ளை சித்தரிக்கப்படுகிறார். கந்தசாமிப் பிள்ளை கடவுளை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது மனைவியிடம் தன்னுடைய ஒன்றுவிட்ட சித்தப்பா என்று அறிமுகப்படுத்துகிறார். அப்படி அறிமுகப்படுத்தியவுடனேயே அவருக்கு சோறு போட அரிசி இல்லையே என்று கலங்கும் மன நிலையில் தான் அவருடைய மனைவி இருந்தார் என்று குறிப்பிடுகிறார்.

எனவே, ஒரு குறிப்பிட்ட சமூகம், புதுமைப்பித்தன் தங்களை கேவலமாக நடத்திவிட்டார் என்று கூறினால் அது நியாயமானதாக இருக்குமா?

பாரதியார், தனது கரும்புத் தோட்டத்திலே என்கிற பாடலில் பிஜீ தீவின் கரும்புத் தோட்டங்களில் தமிழ் பெண்கள் வாடியதைப் பற்றி நெஞ்சுருக விவரித்திருக்கிறார் அந்தப் பாடலில்.

கரும்புத் தோட்டத்திலே – அவர்

கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி

வருந்து கின்றனரே!-ஹிந்து

மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்

சுருங்கு கின்றனரே!-அவர்

துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு

மருந்திதற் கிலையோ!-செக்கு

மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக்

பெண்ணென்று சொல்லிடிலோ-ஒரு

பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே!நினது

எண்ணம் இரங்காதோ?-அந்த

ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர்வெறும்

மண்ணிற் கலந்திடுமோ?-தெற்கு

மாகட லுக்கு நடுவினிலே,அங்கோர்

கண்ணற்ற தீவினிலே-தனிக்

காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார்-அந்தக்

நாட்டை நினைப்பாரோ?-எந்த

நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை

வீட்டை நினைப்பாரோ?-அவர்

விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்

கேட்டிருப்பாய் காற்றே!-துன்பக்

கேணியிலே எங்கள் பெண்க ளழுதசொல்

மீட்டும் உரையாயோ?-அவர்

விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர்

நெஞ்சங் குமுறுகிறார்-கற்பு

நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப்

பஞ்சை மகளிரெல்லாம்-துன்பப்

பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு

தஞ்சமு மில்லாதே-அவர்

      சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்

மிஞ்ச விடலாமோ!ஹே!

      வீர கராளி, சாமுண்டி, காளீ!

இந்தப் பாடலை எழுதும் போது பாரதி நெஞ்சுருகி அழுததாகக் கூறுவர். புதுமைப்பித்தன் ஒருவேளை துன்பக்கேணி என்ற வார்த்தையை இந்தப் பாடலில் இருந்து கூட பெற்றிருக்கக் கூடும். கரும்புத் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும், காபி தோட்டத்திலும் தமிழகத்துப் பெண்கள் அனுபவித்த கொடுமைகளையும், துயரங்களையும் இந்தக் கதையில் புதுமைப்பித்தன் எழுதுவதற்கு முன்பாக பாரதி வடித்திருக்கிறார்.

பாரதியின் பாடலில் இந்துப் பெண்கள் கற்பு நீங்கிடச் செய்யும் கொடுமை என்று பாடுகிறார். இந்த வரியை எடுத்துக் கொண்டு எவரேனும் இந்துப் பெண்கள் அத்துணை பேரும் கற்பிழந்ததாக சொல்லுகிறான் பாரதி, எனவே, இதை நீக்கிவிட வேண்டுமென்று கூறினால் ஏதாவது அர்த்தம் உண்டா?

கற்பு நெறியென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் பொதுவில் வைக்க வேண்டும் என்று கூறியவன் பாரதி. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவைதான் பெண்களுக்கான இலக்கணம் என்று சொன்னபோது நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத தன்மைதான் பெண்களின் இலக்கணம் என்று பாடியவன் பாரதி. எனவே, இந்து பெண்களை எல்லாம் அவன் அவமதித்தாக யாரேனும் சொன்னால் அது விவரமறிந்து சொல்வதாக ஏற்க முடியாது.

தனது பெண்கள் படும் துயரம் கண்டு குமுறியவன், அதன் மீது விமர்சனம் வைத்தவன் பாரதி. இந்த கோபத்தினால்தான், தனது இஷ்ட தெய்வம் காளியை இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாயே என்று கேட்கிறான். போகின்ற பாரதம் என்று ஒரு பாட்டை எழுதினான்.

அந்தப் பாடலில்

நீதி நூறு சொல்லுவாய் காசொன்று-
நீட்டி னால்வ ணங்குவாய் போ போ போ.

என்று பாடுகிறான்.

அன்று பாரதத்தில் நீதி பேசுவோர் அத்துணை பேரும் காசு கொடுத்தால் விலை போய்விடுவார்கள் என்று இதற்கு அர்த்தமா?

அன்றைய சமூகத்தை அவன் விமர்சித்தான். அதிலிருக்கக் கூடிய தவறான போக்கை விமர்சித்தான். அந்த மக்களையெல்லாம் தன் உடன் பிறந்தோராய்க் கொண்டாடினான். அதனால்தான், அவர்களிடமிருந்த குறைகளை எல்லாம் களைய வேண்டுமென பேசினான்.

எனவே, மருதி துன்பக்கேணியின் நாயகி பாலியல் வற்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டாள் என்று சொல்வது மருதியை கேவலப்படுத்துவது அல்ல. அவளை இந்த நிலைக்குத் தள்ளிய சமூகத்தின் மீதான விமர்சனமே அது. எனவே, அந்தக் கதையைப் படிக்கிற யாருக்கும் மருதியின் பால் அனுதாபமும், இவ்வளவு துன்பங்களையும் தாங்கி நிற்பவள், போராளி என்று தோன்றுமே தவிர, வேறொரு எண்ணம் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை.

ஆங்கிலத்தில் ரூட்ஸ் (Roots) என்று ஒரு நாவல் இருக்கிறது. தமிழில் ஏழு தலைமுறைகள் என்கிற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை எழுதியவர் அலெகஸ் ஹேலி. குண்ட்டா கிண்ட்டே (Kunta Kinte) என்கிற கருப்பின ஆண் அடிமையாக பிடித்து வரப்பட்டு அமெரிக்காவில் வெள்ளையினத்தோடு கலந்து வாழ்ந்த கதை. ஏழாவது தலைமுயைச் சார்ந்த ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர். தன் மூதாதையர்கள் பாலியல் துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டதை விவரித்திருக்கிறார். இது அவருடைய குடும்பத்தை கேவலப்படுத்தும் செயல் அல்ல. இந்த சமூகம் ஒரு கருப்பின மனிதனை அவனது தலைமுறைகளை எப்படி வஞ்சித்திருக்கிறது என்கிற விமர்சனமே.

இதேபோன்று ஹேரி பீச்சர் ஸ்டோவ் (Harriet Beecher Stowe) எழுதிய அங்கிள் டாம்ஸ் கேபின் என்கிற நாவல் அமெரிக்காவையே புரட்டிப்போட்டது. அமெரிக்காவில் கருப்பினத்தவர் படும் துயரங்களை கையறு நிலையில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் இறை பக்தி மிகுந்த ஒருவருடைய நோக்கில் சொல்லப்பட்ட கதை இது. அந்தத் துயரங்களை விவரித்ததால் கருப்பின மக்கள் சிறுமைபட்டுவிடவில்லை. மாறாக, கருப்பின, வெள்ளையின ஜனநாயக சக்திகளிடம் மிகப்பெரிய கோபத்தை உருவாக்கியது. அது கருப்பர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது. அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்கே இந்த நாவல்தான் காரணமாக இருந்தது என்பதை ஆபிரகாம் லிங்கன் “இந்த சிறிய பெண் (ஹேரி பீச்சர் ஸ்டோவ்) தான் இவ்வளவு பெரிய யுத்தத்திற்கு காரணமானவள்” என்று பாராட்டினார். இன்று யாரேனும் அங்கிள் டாம்ஸ் கேபினை கருப்பர்களை இழிவுபடுதுகிற நாவல் என்று குறிப்பிட்டால் அவர்கள் உண்மையையும் வரலாற்றையும் மறுதலிக்கிறவர்களாகவே இருப்பார்கள்.

ஒரு பாலியல் துன்புறுத்தல் அதை வாசிக்கிற ஒருவரிடம் அது என்ன உணர்வை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தன்மை தீர்மானிக்கப்பட வேண்டும். மருதியைப் பற்றி வாசிக்கிற எவருக்கும் மனம் பதறுமே தவிர மகிழ்ந்துவிடாது. மருதியை அந்த நிலைக்குத் தள்ளிய பண்ணையார் மீதும், சமூகத்தின் மீதும் கோபம் பொங்கி எழும்.

புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அழகிரிசாமி போன்றவர்களெல்லாம் தங்கள் கதாபாத்திரங்களை நேசித்தவர்கள். அவர்களோடு வாழ்ந்தவர்கள். அந்த கதாபாத்திரங்களின் குறை-நிறைகளோடு தங்கள் மனிதர்களாக ஏற்றுக் கொண்டார்கள்.

60களின் இறுதியில் ஜெயகாந்தன் எழுதிய ஒரு கதையில், பள்ளியில் படிக்கும் உயர் சாதிப் பெண் சந்தர்ப்பவசத்தால் ஒரு மழை நாளில் இன்னொருவனோடு உறவு கொண்டுவிடுவாள். வீட்டிற்கு வந்ததும் தாயிடம் இதைச் சொல்லுவாள். கலங்கி அழுத தாய் சிறிது நேரத்திற்கு பிறகு அவளை அழைத்துக் கொண்டுபோய் தலையில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றிவிட்டு இத்தோடு இதற்கு முன்பு நடந்ததை மறந்துவிடு என்று சொல்லுவாள். கதையின் தலைப்பு அக்னி பிரவேசம்.
அந்தக் காலத்தில் இப்படி பெண்கள் ஏமாற்றப்பட்டால் அல்லது இணங்கியே கூட திருமணத்திற்கு முன் உறவு கொண்டால் அவளை சாகடித்துவிடுவது அல்லது சம்மந்தப்பட்டவனையே திருமணம் செய்து வைப்பது என்பதுதான் கதையில் கூட வழக்கம். ஜெயகாந்தனின் அந்த முடிவை எதிர்த்து அப்போது பிரபலமாக இருந்த பல எழுத்தாளர்கள் சண்டமாருதம் செய்தார்கள். கெட்டுப் போன பெண்ணுக்கு தலையில் தண்ணீரை ஊற்றினால் புனிதமாகிவிடுவாளா என்று கேட்டார்கள். ஜெயகாந்தன் எதை ஊற்றினால் அவள் புனிதமாவாள் என்று சொல்லுங்கள் அதை நான் ஊற்றுகிறேன். ஆனால், அவளை நான் சாகவிடமாட்டேன் என்று கூறினார். உங்கள் வீட்டில் இப்படி ஒன்று நடந்தால் கொன்றுதான் போடுவீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதனால் உயர் சாதி பெண்ணை சிறுமைப்படுத்த வேண்டுமென்று ஜெயகாந்தன் எழுதினார் என்று சொல்ல முடியுமா?

ஜெயகாந்தன் தன்னைப் பற்றி குறிப்பிடும்போது தன்னைப் போல் தமிழில் தனக்கு முன்பாக ஒருவர் எழுதியிருக்கிறார், அவர் புதுமைப்பித்தன் என்று தனக்கேயுரிய பாணியில் பதிலளித்திருந்தார். ஜெயகாந்தனும் புதுமைப்பித்தனும் தங்களுடைய பாத்திரங்களை உயிருள்ள மனிதர்களைப் போல நேசித்தவர்கள். அவர்களுக்காக வாதாடியவர்கள், போராடியவர்கள். அவர்களோடு கோபித்துக் கொண்டவர்கள். அவர்களோடு கொஞ்சி மகிழ்ந்தவர்கள். அவர்களின் எந்தப் பாத்திரத்தின் மீதும் பாத்திரங்களின் அடையாளங்களின் மீதும் அவர்களுக்கு வெறுப்பு கிடையாது. புதுமைப்பித்தன் மருதியை நேசித்தார். மருதிக்காக மனம் கலங்கினார். மருதியை இந்த நிலைக்கு ஆளாக்கிய சமூகத்தை கண்டித்தார் என்பதுதான். எனவே, புதுமைப்பித்தன் ஒரு சமூகத்தை இழிவுபடுத்திவிட்டதாகச் சொல்வது புரிதலில் உள்ள போதாமையே தவிர. உண்மையல்ல.

இரண்டாவதாக, தமிழகத்தின் விவாதச் சூழலும், தமிழக அறிவு ஜீவிகளில் பெரும்பகுதியினரின் கள்ள மவுனமும் கவலை கொள்ளத்தக்கது. ஒரு நல்ல படைப்பை அதன் மீது விமர்சனம் வந்துவிட்டது என்பதற்காகவே நீக்கிவிடுகிறோம் என்று சொல்வது அந்த முடிவை எடுத்தவர்கள் அதற்கான திறனும், ஆளுமையும், அறிவும் படைத்தவர்கள்தான் என்று நம்ப மனது மறுக்கிறது.

தமிழர்களை வீர மரபு என்று போற்றுவதில் இருக்கிற பெருமிதம் மட்டுமே போதுமா. தாங்கள் வீரர்களாக இருக்க வேண்டாமா?. நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரன் பேசினான், சிவபெருமானையே வாதுக்கழைத்தான் என்பதிலிருக்கும் பெருமிதத்தை தான் வாழ்ந்த காலத்தில் தன் எழுத்துக்கு நேர்மையாக இருந்த ஒரு எழுத்தாளனின் படைப்பை பாதுகாப்பதில் காட்டவில்லையென்றால் இவர்கள் என்ன அறிவு ஜீவிகள், இது என்ன நாகரிக சமூகம்.

இந்தக் கதையால் தன் சாதி அவமானப்படுத்தப்பட்டதாக ஒருவர் கருதுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அது அப்படி அல்ல புரிய வைக்க திறமையற்ற அறிவு ஜீவிகள் கல்வித் தளத்தின் உயர் பொறுப்புகளில் இருப்பதை புரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

தமிழ் எழுத்தாளர் பெருமக்கள் புலமைக்காய்ச்சலிலும், தனிநபர் மோதலிலும் பல நேரங்களில் ஆக்ரோசமாக மோதிக் கொள்கிறார்கள். ஆனால், தங்கள் முன்னோடி, மூத்தான், முற்போக்கு இலக்கியங்களின் முன்னோடி, அவனது படைப்பு சிறுமைப்படுத்தப்படும் போது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, நீக்கப்படும் போது குரல் எழுப்ப வேண்டாமா?.

புதுமைப்பித்தனின் படைப்புகளை ஆதரித்து ராஜ்கவுதமன், ரவிக்குமார் போன்றோர் பேசியிருப்பது வரவேற்கத்தக்க அம்சம். ஆரோக்கியமான விவாதத்திற்கு இது வழி வகுக்கும். இக்கதைகளை நீக்க வேண்டுமென்று பிரச்சனை எழுப்புவோர் தங்கள் கருத்தை மறுசிந்தனைக்கு உட்படுத்த வேண்டும்.

தலித் மக்கள் சிறுபடுமைப்படுத்தப்படக் கூடாது என்கிற ஆவேசம் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால், சிறுமைப்படுத்துவதுதானா இந்தக் கதைகள் என்பதை சீர்தூக்கிப் பார்ப்பதில் தவறிழைத்துவிடக் கூடாது. சொல்லொண்ணா அட்டூழியத்திற்கு ஆளானார்கள் என்பது தலித் மக்களுக்கு அவமானமல்ல. சமூக சிந்தனை நாகரிகம் அடையவில்லை என்பதன் குறியீடே அது. அதற்காக யாரேனும் சிறுமைப்பட்டு கூனிக்குறுக வேண்டுமென்றால் தலித் மக்களை அந்த நிலையில் வைத்திருக்கும் சமூகம் மட்டுமே.

Related Posts