பிற

செஞ்சோற்று கடன் கழித்தார் கிரண்பேடி . . . . . . . . . . !

மக்களாட்சியின் உயிர்துடிப்பு ஜனநாயகம் மீண்டும் ஒரு முறை படுகொலை செய்யப்பட்டது. பாஜக தனது அதிகாரத்தின் வழியாக நியமன சட்டமன்ற உறுப்பினர்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக மீட்பு போராட்டத்தில் காங்கிரஸ் பின்வாங்கி தனது ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவும், காங்கிரஸும் தங்களது அதிகாரத்தை, இருப்பை தக்க வைத்துக் கொண்டன.  ஜனநாயக அடித்தளம் கொண்ட புதுச்சேரி மக்களின் உணர்வுகள் அலட்சியம் செய்யப்படுகிறது. அதிகார அத்துமீறலுக்கும், சந்தர்ப்பவாத அரசியலுக்கும் மக்கள் உரிய நேரத்தில் கணக்கை நேர் செய்வார்கள்.

மத்திய பாஜக அரசு, மாநில அரசின் நியமன உறுப்பினர், உரிமையை பலவந்தமாக பறித்துக் கொண்டன. மேலும் தனது சூழ்ச்சியால் நியமன MLAக்களை சட்டப்பேரவைக்குள் திணித்து அரசியல் கணக்கை தொடங்கியுள்ளது. பாஜக MLAக்கள் சட்டமன்ற படிக்கட்டை தொட்டு வணங்கி தங்களது உடல்மொழியில் பதவி வெறியை வெளிப்படுத்தினர். சட்டமன்றக் கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர்கள் தங்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். இதன் மூலம் மத்திய பாஜக அரசின் சதித் திட்டத்தை உணரமுடிகிறது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் நீதி வென்றது என மனசாட்சியை விற்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

நேர்மை சாயம் வெளுத்தது:

2016 சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2016 ஜூன் 6ல் திரு. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. மாநில அரசு தனக்குள்ள உரிமையை பயன்படுத்தி நியமன உறுப்பினர்களை நியமித்திட முயற்சிக்கவில்லை. இந்நிலையில் துணைநிலை ஆளுநர் வழியாக பாஜக தலைவர்கள் 3 பேர் நியமன உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சகம் 23.06.2017ல் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களக நியமித்து உத்தரவிட்டது. 04.07.2017ல் இரவில் அவசர கதியில் துணைநிலை ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நேர்மையின் அடையாளமாக தன்னை முன் நிறுத்தி வந்த கிரண்பேடியின் சாயம் வெளுத்தது. நாட்டின் கூட்டாட்சி கோட்பாட்டை சிதைத்து பாஜக அரசியலை கிரண்பேடி முன்னெடுத்து வருவது அம்பலமானது.

புதுச்சேரி காங்கிரஸ் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி தனது எதிர்ப்பை முடித்துக் கொண்டன. சிபிஐஎம், சிபிஐ கட்சிகள் கூட்டாக எடுத்த முயற்சியால் திமுக, விசிக மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து 08.07.2017ல் கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி பந்த் போராட்டம் நடைபெற்றது. நிர்பந்தத்தால் காங்கிரஸ் கட்சி தொகுதி வாரியாக கண்டன இயக்கங்களை நடத்தியது. பந்த் போராட்டத்தின் வெற்றியால் நியமன உறுப்பினர் விஷயத்தில் தனக்கு நேரடி தொடர்பில்லை என கிரண்பேடி அறிவித்தார். மாநில உரிமை பறிப்பு மற்றும் ஜனநாயக படுகொலையில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு பாத்திரம் இருந்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

பாஜகவின் சூழ்ச்சி:

கொல்லைப்புற வழியாக நியமிக்கப்பட்ட MLAக்களை அங்கீகரிக்கச் செய்திட பாஜக சகல வழிமுறைகளையும் கையாண்டது. பேரவைத் தலைவர் திரு. வைத்தியலிங்கம் MLAக்களை, சட்டப்பேரவையில் அனுமதிக்க மறுத்துவிட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் திரு.லஷ்மிநாராயணன் MLA உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மத்திய உள்துறை அமைச்சகம் ”உயர்நீதிமன்றம் நியமன MLA விவகாரத்தில் தடை விதிக்காததால் அவர்களுக்கு சம்பளம், படிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் வழங்கிட 21.11.2017ல் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. வழக்கு நிலுவையில் உள்ளதால் மேற்படி உத்தரவினை ஏற்க மாநில அரசு மறுத்தது.

நியமன உறுப்பினர் தொடர்பான வழக்கு விசாரணை 2017 நவ 29ல் முடிக்கப்பட்டது. இடைக்கால பட்ஜெட் தொடர் நடக்க இருந்த நிலையில் உயர்நீதிமன்றம் 2018 மார்ச் 22ல் தீர்ப்பு வழங்கியது. அதில் 3 நியமன உறுப்பினர்களின் நியமனம் செல்லும், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தது தனது கருத்தை உயர்நீதிமன்றம் கேட்காததால் சட்டப்பேரவைக்க்குள் நியமன MLAக்களை அனுமதிக்க முடியாது என சபாநாயகர் மறுத்துவிட்டார். இதே காலத்தில் தமிழகத்தில் 18 MLAக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும்; அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பு சர்ச்சை எழுப்பியது கவனிக்கத்தக்கது.

நடப்பு (2018-19) நிதி ஆண்டின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு அனுப்பிய கோப்பு 45 நாட்களுக்கு பின்னரே அனுமதி வழங்கப்பட்டது. சட்டமன்ற வரலாற்றில் எப்போதுமில்லாத முன்னுதாரணமாகும். இதன் நோக்கம் தெளிவானது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாரணை தேதிக்கு நெருக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடரை கொண்டுவருவது என்பதாகும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு 2018 ஜூலை 16ல் வந்தபோது உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடையில்லை என்று அறிவிக்கப்பட்டது. பாஜக தரப்பு வழக்கறிஞர்களின் அழுத்தம் காரணமாக 2 நாள் இடைவெளியில் அதாவது ஜூலை 19ல் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. ஜூலை 1ல் தொடங்கி சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் போதே 14.07.2018ல் நிதி ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் பெற கவர்னருக்கு அனுப்பப்பட்டது.. சட்டப்பேரவையில் இருந்து  100 மீட்டருக்கும் குறைவான தூரமே உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து 17ஆம் தேதி வரையில் அனுமதி கிடைக்கப் பெறவில்லை. நிலைமையை உணர்ந்த மாநில அரசு சட்டப்பேரவை கூட்டத்தை 19ஆம் தேதியுடன் முடித்தது. கூட்டத் தொடரை அவசரமாக முடித்துக் கொண்டதற்காக மாநில முதல்வர் கூறிய காரணம் வேறாக இருந்தாலும் மக்கள் உண்மையை அறிவார்கள்.

உச்சநீதிமன்றம் 19.09.2018ல் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடையில்லை, மூன்று நியமன MLAக்களும் சட்டமன்றத்தினுள் சென்று பணியாற்றலாம், சபாநாயகர் இவர்களை அனுமதிப்பார் என்று எதிர்பார்ப்பதாக கூறி இடைக்கால  உத்தரவிட்டது. கவர்னரும் நிதி ஒதுக்க மசோதாவில் கையெழுத்திட்டு 2 நியமன உறுப்பினர்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் எனற நிபந்தனை விதித்தார். மாநில உரிமையா? (அ) ஆட்சி அதிகாரமா என்ற அசாதாரணமான நெருக்கடிக்கு மாநில அரசு தள்ளப்பட்டது. இந்தப் பின்னணியில் மாநில அரசு 1.8.2018ல் சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர்களை அனுமதித்து நிதி ஒதுக்க மசோதா நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு பாஜக சூழ்ச்சி செய்து தனது அரசியலை உறுதிப்படுத்திக் கொள்வது. பாஜக செயல்திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் கிரண்பேடி தனது செஞ்சோற்று கடனை தீர்த்துள்ளார்.

பின்பற்றப்படும் நடைமுறை மரபு :

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் 1963ல் பிரிவு 3(3) அரசு பதிவியில்லாத 3 பேருக்கு மிகாமல் நியமன உறுப்பினர்களாக நியமித்துக் கொள்ள வழிவகை செய்கிறது. புதுச்சேரியின் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் 25.08.1964ல் நடைபெற்றது. அது முதல் 1985 வரையில் நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. மேற்படி காலத்தில் எந்த ஒரு அரசும் முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கவில்லை. 1985ல் காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் முதன்முதலாக 3 நியமன உறுப்பினர்களை கொண்டு 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தது அது முதல் நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் நியமன MLAக்கள் துணைநிலை ஆளுநர் வழியாக மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும், மத்திய அரசு அனுமதி பெற்று நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது என்பது தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது. அதே நேரத்தில் 1996-2001ல் அதிகாரத்தில் இருந்த திமுக-தாமாக-சிபிஐ கூட்டணி நியமன உறுப்பினர்களை நியமிக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்போது பதவியில் இருந்த துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக நியமன உறுப்பினர்களை நியமிக்கவில்லை. 2011-2016ல் ஆட்சியில் இருந்த என்.ஆர். காங்கிரஸ் அரசுக்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு-2 கூட்டணி அரசு நியமன உறுப்பினருக்கு அனுமதி தரவில்லை. 2014ல் மத்தியில் பாஜக ஆட்சி வந்த பின்னணியில் பாஜகவிற்கு ஒரு உறுப்பினர் பதவியை கொடுத்து 2 நியமனங்களை பெற்றது. மத்திய ஆட்சியாளர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தங்களது அரசியலை முன்னெடுப்பது தொடர்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் போதுதான் நியமன உறுப்பினர்கள் நியமனத்திற்கான வாய்ப்பு வருகிறது. ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதால் மக்களாட்சி இல்லாத போது வெறும் சூனியத்தில் இருந்து நியமன உறுப்பினர்களை நியமிக்க முடியாது. ஆகவே, மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ள கட்சி( (அ) ஆட்சிக்கு தான் நியமன MLA கோரும் தார்மீக உரிமை உண்டு.

சட்டமும் வரலாற்று பின்புலமும்:

யூனியன் பிரதேசங்களுக்கான ஆட்சிப்பரப்பு சட்டம் (The exent of Union Territory Act) 1963ல் இயற்றப்பட்டது. மேற்படி சட்ட மசோதா 1963 மே 4ல் நாடாளுமன்றத்திலும், மே 10ல் மாநிலங்களைவையிலும் மத்திய உள்துறை அமைச்சர் திரு. லால்பகதூர் சாஸ்திரி அவர்களால் முன்மொழியப்பட்டது.

அப்போது 3 நியமன உறுப்பினர்கள் குறித்த வழிகாட்டுதலையும் முன்மொழிந்து பேசினார். குறிப்பாக நியமன உறுப்பினர் நியமனம் குறித்து ஆழமான, நீண்ட விவாதம் நடைப்பெற்றது. விவாதத்தில் பெரும்பாலான ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர்கள் தேவை என வலியுறுத்தினார்கள். குறிப்பாக தேர்தல் மூலம் சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவப்படுத்தாத  பின்தங்கிய மக்கள் பிரிவினருக்கு வாய்ப்பு அளித்திட வலியுறுத்தினர். எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் நியமன உறுப்பினர் தேவையற்றது, ஜனநாயகமற்றது, தவறுகளுக்கு வழிவகுக்கும் என வாதிட்டனர். சிலர் ஆளும் கட்சி (அ) அதிகாரத்தில் உள்ள கட்சி சிறுபான்மையை பெரும்பான்மையாக்க வழிவகுக்கும் என்றனர். சிலர் நாடாளுமன்றத்தில் ஆங்கிலோ இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது போல நியமனம் குறித்து தெளிவான வரையறை தேவை என வலியுறுத்தினர். ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒடுக்கப்பட்ட மற்றும் பின் தங்கிய பிரிவுகளுக்கு வாய்ப்பளிப்பதாக நியமன உறுப்பினர் பதவி இருந்திட வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

மாநிலங்களவையில் விவாதங்களுக்கு விளக்கம் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு.லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார் : நியமனம் என்பது ஜனநாயக விரோதமானது () தவறானது என பார்க்க வேண்டியதில்லை. மாறாக நியமனம் அவசியமானதாகும். நாட்டில் பல்வேறு பழங்குடியின குழுக்கள்/பிரிவுகள் உள்ளன. இவற்றில் அதிக எண்ணிக்கை கொண்ட பிரிவினருக்கு சட்டப்பேரவையில் வாய்ப்பளிக்கலாம். சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கும் வாய்ப்பளிக்கலாம். இந்த இரு பிரிவுகள் மட்டுமின்றி கல்வியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தகுதியுடைய மக்கள் பிரிவினர்கள் தேர்தலில் பங்கேற்காத நிலையில் அவர்களுக்கும் வாய்ப்பளிக்கலாம். தொழில் நுட்பம் தெரிந்தவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தகுதியான மக்கள் பிரிவினர்கள் சட்டப்பேரவையில் இடம்பெற்றால் அவர்களால் நல்ல பங்களிப்பினை அளிக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன்.  என கூறினார்.

 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அவரது உரையில் நியமன உறுப்பினருக்கு அவசியமான முன் நிபந்தனைகள் சேர்க்கப்படும் என்று குறிப்பிட்டார். ஆனால் சட்டத்தில் குறிப்பிட்ட விதிகள் இல்லை என்றாலும் விதிகளில் நியமன உறுப்பினர் தகுதிகள் சேர்க்கப்படும் என உறுதி கூறினார். துரதிருஷ்டவசமாக நியமன உறுப்பினர் தகுதி உருவாக்கப்படவில்லை. என்றாலும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய  போது எழுந்த உணர்வுகள் வழிகாட்டுதல்கள் இன்றைக்கும் மிகப் பொறுத்தமானதாகும். பாஜக தனது அரசியலுக்காக சட்டத்தை, மரபுகளை, வரலாற்று போக்குகளை நிராகரிப்பது மிகப்பெரும் வரலாற்று பிழையாகும். மேலும் பாஜக தனது அரசியல் கணக்கை துவக்கியதோடு சிறுபான்மையை பெரும்பான்மையாக்கும் உள்நோக்கம் கொண்டதுமாகும்.

முதல்வர் பதவி கனவு:

எதிர்கட்சியான என்.ஆர். கங்கிரஸ் கிரண்பேடியின் போட்டி ஆட்சியை, நியமன MLA பதவிகளை பாஜக பலவந்தமாக கைப்பற்றியதை எதிர்க்கவில்லை. மாறாக மாநில அரசு துணைநிலை ஆளுநரோடு விட்டுக் கொடுத்து போக வேண்டும், பாஜக நியமன MLAக்களை சட்டப்பேரவையில் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதற்காக சட்டமன்றத்தில் வெளிநடப்பும் செய்தது. இது காங்கிரஸ் MLAக்கள் ஒருவரை தன் பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்த்து  அதிகாரத்தை கைப்பற்று என்ற முதல்வர் பதவி ஆசையின் வெளிப்பாடாகும். பதவிக்காக மாநில உரிமையை விட்டுக் கொடுப்பதை மாநில மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஜனநாயகம் என்ற விரிந்துயர்ந்த ஆலமரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றதாகும்.

நிறைவாக:

மோடி அரசு சட்டங்கள் வழியாக மாநில அதிகாரங்களை ஆக்கிரமிப்பதும், ஆளுநர்/துணைநிலை ஆளுநர்களால் மாநில நிர்வாகங்களில் நேரிடையாக தலையிடுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசியல் சாசனம் வலியுறுத்துகிற கூட்டாட்சி கோட்பாடு சிதைக்கப்பட்டு வருகிறது. மாநில வளர்ச்சியும், மக்கள் நலன்களும் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.

ஆகவே, மத்திய, மாநில உறவுகளை மேம்படுத்தவும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதுமே தீர்வாகும். மோடி ஆட்சியை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதும், திட்டத்தின் அடிப்படையில் அரசியல் மாற்று உருவாவதும் அவசர தேவையாக உள்ளது. இத்தகைய இலக்கை நோக்கி இடதுசாரி ஜனநாயக சக்திகளை உள்ளடக்கிய மக்கள் இயக்கத்தை கட்டமைப்பது வரலாற்றுத் தேவையாகிறது.

– வெ. பெருமாள்.

Related Posts