அரசியல்

5&8 வகுப்புபொதுத்தேர்வு ஒரு அனுபவப் பகிர்வு………..

ஒரு ஊர் நகரமாகவும் பெருநகரமாகவும் வளர்ச்சியடைகிற (?) போது, அங்கு பணத்தாலோ சாதியாலோ ஒடுக்கப்பட்ட மக்கள் தான் முதலில் அடித்துவிரட்டப்படுகின்றனர். சென்னையின் புறநகர்களில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்களிடம் ஏராளமான கதைகள் இருக்கும். இதுதான் நரகமயமாக்கலின் இயல்புதன்மை. அப்படியாக சென்னையிலிருந்ரு கொஞ்சம் கொஞ்சமாக துரத்தபட்டு, சென்னைக்கு வெளியே சூரப்பட்டு கிராமத்திற்கும் சண்முகபுரம் கிராமத்திற்கும் இடையில் புதிதாக முளைத்திருந்த சில குடிகளைகளோடு ஒரு குடிசைக்குள் வாழத்துவங்கினோம். அங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும் கட்டிடக் கூலித் தொழிலாளர்கள். அவர்களின் பரம்பரையே படித்ததில்லை. எழுதப்படிக்கத் தெரிந்த ஒருவரும் ஒருவீட்டிலும் இருக்கவில்லை. அவர்கள் வேலைக்கு செல்லுமிடத்தில் தரப்படுகின்ற சம்பளத்தைக் கூட சரிபார்த்து வாங்கத்தெரியாத நிலையில் இருந்த மக்கள் அவர்கள். என் அப்பாவும் அவர்களோடு இணைந்து கட்டிட வேலைக்குச் செல்லத்துவங்கினார். அவர்கள் ஏமாற்றப்படுவதைக் கண்கூடாகப் பார்த்ததால், கட்டிடத் தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. அவர்களது உரிமைக்காக அவர்களே குரல் எழுப்பும் நிலைக்கு கொஞ்சம் தைரியமும் பெற்றனர்.

இந்த சூழலில், ஒரு நாள் எங்க வீட்டுக்கு ஒரு பையன் வந்து, எங்கப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
என்னிடம் பேசுமாறு அந்த பையனிடம் சொல்லிவிட்டு அப்பா வெளியே சென்றார்.

“அண்ணா, நான் சூரப்பட்டு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிச்சிருக்கேன். பாஸும் ஆயிட்டேன். அங்க 8 வது வரைக்கும் தான் இருக்கு. அதுக்கு மேல படிக்கனும்னா, அம்பத்தூர் தான் போகனும். அம்பத்தூர்ல குப்தா ஸ்கூல்ல சேரப்போனேன். அவங்க ஏதோ டெஸ்ட் வச்சி, நான் பெயிலாயிட்டேன்னுட்டாங்க. என்னய 9 வதுல சேத்துக்கமாட்டோம்னு சொல்லிட்டாங்க. அதான் ஸ்கூல்ல சேத்துக்கலல, எங்கூட வேலைக்கு வந்துருடான்னு எங்கப்பா வேற கூப்டுகிட்டே இருக்காருன்னா” என்றார்.
பின்னாடியே அவனுடைய அம்மா என் அருகில் வந்து, “தம்பி, இவன எப்டியாவது இஸ்கூல் சேத்துவிட்ருப்பா” ன்னு சொல்லிட்டு வேலைக்குப் போயிட்டாங்க.

அந்த பையனிடம் மேலும் விசாரித்தபோது தான், அவன் சூரப்பேட்டில் படித்த பள்ளியில் ஆசிரியர்கள் மிகப்பெரிய பற்றாக்குறை என்றும், அவன் 8 வது படிக்கும்போது அவன் வகுப்புக்கே ஆசிரியர் இருக்கவில்லை என்பதும் தெரிந்தது. இருக்கிற ஒன்றிரண்டு ஆசிரியர்கள் தான் ஒருநாளைக்கு ஒரு வகுப்புக்கும், இன்னொரு நாள் இன்னொரு வகுப்புக்கும் செல்வார்களாம்.

உடனே, அம்பத்தூர் குப்தா பள்ளிக்கு சென்று அப்பள்ளியின் தலைமையாசிரியரை சந்தித்து விவரம் கேட்டேன்.
அவர், “இங்க பாரு தம்பி, சுத்தமா படிக்காத புள்ளைங்கள இங்க ஸ்கூல்ல சேத்து நாங்க என்ன பண்ணமுடியும். இந்த பையன் கணக்குலயும் ஆங்கிலத்துலயும் 10 மார்க் கூட வாங்கல. வாய்ப்பே இல்ல அவனை சேக்கவே முடியாது” ன்னு சொன்னார்.

“சார், இப்படி சொன்னா எப்படி சார். ஆசிரியர்கள் கூட இல்லாத பள்ளியில் படிச்ச பசங்ககிட்ட எப்படி சார் அதிகமா எதிர்பாக்க முடியும். நீங்க மட்டும் அவன சேத்துக்கிட்டீங்கன்னா, அவன் நல்லா படிச்சி வருவான் சார்” னு சொன்னேன்.

அவர், என்ன நினைத்தாரோ, ஏது நினைத்தாரோ தெரியவில்லை. 
“சரி, இதுவரையும் நாங்க அட்மிசன் குடுக்காத யாரும் இந்த மாதிரி வந்து கேட்டதில்ல. நான் அட்மிசன் போட்றேன். ஆனா அடுத்த ஆறுமாசத்துல அவன் எப்படி படிக்கிறான்னு பாப்போம். அரையாண்டு பரிட்சைல எல்லாத்துலயும் பாஸ் ஆகலன்னா, அவனை பள்ளிக்கூடத்துல இருந்து தூக்கிடுவோம். நீங்க தான் கேரண்டி” என்றார்.

அட்மிசன் வாங்கிக்கொடுக்க வந்த நாமல்ல மாட்டிக்கிட்டோம்னு எனக்கு பக்குன்னு ஆயிடுச்சி. என்கூட வந்த பையன்கிட்ட வெளியவந்து பேசினேன்.
அவன், “அண்ணா, ப்ளீஸ்ணா, சேத்துவுடுங்கன்னா, நான் எப்டியாவுது படச்சிடுவேன்னா” என்றான்.

சரியென்று தலைமையாசிரியரிடம் வாக்கு கொடுத்துவிட்டு, அட்மிசன் போட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தோம்.

எட்டாம் வகுப்பு வரையிலும் ஒரு பள்ளிக்குண்டான எந்த வசதியும் இல்லாமலும் ஆசிரியர்களே கூட இல்லாமலும் படித்த ஒரு பையனால், திடீரென ஆறே மாதத்தில் எப்படித் தேற முடியும்னு இரவு முழுக்க தூக்கமே இல்லை.
அடுத்த நாள் அவனை அழைத்து, “தினமும் மாலை எங்க வீட்டுக்கு வா. நான் கொஞ்சம் சொல்லித்தரேன்” என்றேன்.

அவனுக்கு சொல்லித்தர ஆரம்பித்தபோது தான் தெரிந்தது, அவனுக்கு எழுத்துக்கூட்டி கூட எதையும் வாசிக்கத் தெரியவில்லை என்பது. கொஞ்சம் கொஞ்சமாக கற்க ஆரம்பித்தான். புதிய பள்ளியில் ஆசிரியர்களும் இருந்தனர். ஊரில் உள்ள மற்றவர்களின் பெற்றோரும் அவர்களுடைய குழந்தைகளைக் கொண்டுவந்து என்னிடம் மாலை ட்யூசனுக்கு விட ஆரம்பித்துவிட்டனர். அதில் சண்முகபுரம் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அதிகம். ஐந்தாவது வரை இருந்த அப்பள்ளியில் இரண்டே ஆசிரியர்கள் தான் இருந்தனர். அந்த இருவரிலும் ஒருவர் தலைமையாசிரியர். ஆக ஒரே ஆசிரியர் தான் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் கற்பித்தல் பணியைச் செய்யவேண்டும். அவர்களைத் தேற்றிக் கொண்டுவருவது மிகக்கடினமான வேலையாக இருந்தது.

ஆறு மாதத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் குப்தா பள்ளியில் சேர்த்துவிட்ட பையன் எல்லா பாடத்திலும் தேர்ச்சி பெறவில்லை தான். ஆனால், ஒற்றை இலக்க மதிப்பெண் வாங்காமல், கிட்டத்தட்ட தேர்ச்சிபெறுவதற்கான மதிப்பெண்ணுக்கு அருகாமையில் வந்திருந்தான். அதனால் அவனைத் தொடர்ந்து பள்ளியில் படிக்க அனுமதித்தார் பள்ளியின் தலைமையாசிரியர். இந்த அனுபவத்தின் காரணமாக, அதன் பிறகு அந்த ஊரிலிருந்து ஏராளமான குழந்தைகள் படித்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற ஆரம்பித்தினர். எழுதப்படிக்கவே தெரியாத குடும்பத்திலிருந்து வந்த அவர்களில் பலரும் இன்று இஞ்சினியர்களாகவும், கல்லூரிப்படிப்பை முடித்தவர்களாகவும் மாறியிருக்கின்றனர்.

பள்ளிக்கு செல்லும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரேமாதிரியாக படிப்பதற்கான வசதிகளை செய்துகொடுக்க வக்கில்லாத இந்த அரசுதான், ஒரேமாதிரியான பொதுத்தேர்வு நடத்தி, ஏழை எளிய குடும்பத்துப் பிள்ளைகளை பள்ளிகளில் இருந்தே துரத்தப்பார்க்கிறது.

தமிழ்நாட்டில் இன்றும் ஏறத்தாழ 17,000 ஓராசிரியர் ஈராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் பயிலும் இலட்சக்கணக்கான குழந்தைகளுக்கும் சேர்த்து இன்று பொதுத்தேர்வு நடத்துகிறது அரசு. இந்த தேர்வில் தோல்வியுற்றால், அவர்கள் அடுத்து படிக்கவே முடியாத நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். கூலித் தொழிலாளக் குடும்பத்துப் பிள்ளைகள் அடுத்தடுத்த தலைமுறையாக அதே வேலையைத் தான் செய்யவேண்டி வரும். 

நம் சக்தி முழுவதையும் பயன்படுத்தி மிகக்கடுமையாக எதிர்க்கவேண்டிய சட்டம் இது…

  • இ.பா.சிந்தன்.

Related Posts