அரசியல்

மெக் டொனால்டை எதிர்த்துப் போராடும் சிறுகிராம மக்கள்….

ஆஸ்திரேலிய நாட்டின் மெல்பர்ன் நகருக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தண்டேனங் என்கிற மலைப்பிரதேசம் அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் காடுகள் சூழ்ந்த சிறுசிறு மலைகள்தான் அப்பகுதியின் அழகு. அப்பிரதேசம் முழுவதிலும் ஆங்காங்கே உள்ள கிராமங்களில் சிறிய அளவிலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தண்டேனங் சிகரத்தின் மீது நின்றுபார்த்தால், சுற்றுவட்டார கிராமங்கள் அனைத்தும் அழகுற காட்சியளிக்கும். பெல்கிரேவ், எமரால்டு மற்றும் ஜெம்புரோக் போன்ற பகுதிகளுக்கு நடுவே மலை இரயில்களில் பயணிப்பதும் சுற்றுலாவாசிகளுக்கு சுகமான அனுபவமாக இருக்கும். 2085 பேர் வசிக்கிற டெகோமா என்கிற அமைதியும் அழகும் நிறைந்த கிராமமும் அம்மலைப்பிரதேசத்தின் ஒரு அங்கமாகும். வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கைவளங்களை முற்றிலும் அழித்து, வெறும் கட்டிடங்களாக மாற்றப்பட்டிருக்கும் செயற்கை நகரங்களிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் டெகோமாவைப் போன்ற இயற்கையைப் பாதுகாக்கும் அழகிய கிராமங்களுக்கு சுற்றுலா வருகின்றனர்.

இத்தனை இலட்சம் மக்களின் வருகையைக் கண்டு சும்மாவா இருப்பார்கள் பெருமுதலாளிகள்? இயற்கையான வாழ்க்கைமுறைக்காகவே சுற்றுலாத்தளமாக மாறியிருக்கிற பகுதிகளிலும் செயற்கைத்தனத்தை புகுத்தி காசு பார்த்துவிடமாட்டார்களா அவர்கள்? அப்படித்தான் 2011இல் டெகோமாவில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய துரித உணவகத்தை துவங்க அனுமதிகேட்டு உள்ளூர் பஞ்சாயத்தில் விண்ணப்பித்தது மெக் டொனால்ட். சுற்றுவட்டார கிராமங்கள் எங்கேயும் துரித உணவகங்கள் எதுவும் இல்லையென்பதை கருத்தில்கொண்டே மெக்டொனால்ட் இம்முடிவை எடுத்திருக்கக்கூடும். மெக்டொனால்ட் திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிற கட்டிடமானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹஸல்வேலே என்கிற கட்டிடமாகும். அதன் சிறப்பு மங்கிவிடும் என்பதோடு மட்டுமின்றி, பள்ளிக்கூடத்திற்கு மிக அருகிலே இவ்விடமுள்ளதால் உடலுக்கு கேடுவிளைவிக்கும் மெக்டொனால்ட் உணவை பள்ளிமாணவர்களின் மீது திணிப்பதற்கும் வழிவகுக்கும். இவை எல்லாவற்றையும் தாண்டி, அம்மக்களின் இயற்கையான வாழ்க்கை முறையையும் காலங்காலமாக பின்பற்றிவருகிற உணவுக் கலாச்சாரத்தையும் சீரழித்துவிடும் என்று டெகோமா மக்கள் அஞ்சினர். அதனால் அவகளனைவரும் ஒன்றிணைந்து உள்ளூர் பஞ்சாயத்தில் 1170 எதிர்ப்புக் கடிதங்களை சமர்ப்பித்தனர்.

2011, அக்டோபர் 11ஆம் தேதி உள்ளூர் பஞ்சாயத்தில், மெக்டோனால்டிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கவுன்சிலர்கள் அனைவரும் வாக்கெடுப்பின்மூலம் உறுதிபடுத்தினர். அதன்மூலம் மெக்டொனால்டின் கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளமுடியாத மெக்டொனால்ட், அதே விண்ணப்பத்தை மாவட்ட மேல் பஞ்சாயத்தில் சமர்ப்பித்தது.ஓராண்டிற்குப் பிறகு (அக்டோபர் 10, 2012) உள்ளூர் மக்களின் எதிர்ப்பினை சிறிதும் கண்டுகொள்ளாமல், மெக்டொனால்டின் கோரிக்கையினை ஏற்று, அதற்கு அனுமதி வழங்கியது மாவட்ட மேல் பஞ்சாயத்து. தீர்ப்பு வழங்கப்பட்ட நான்கே நாட்களில், 600 பேர் குழுமி, “டெகோமோவை மீட்டெடுப்போம்” என்கிற முழக்கத்துடன் மெக்டோனல்டிற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிற இடத்தில் ஒரு சிறு தோட்டமமைத்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர் உள்ளூர் மக்கள். ஒரு மாற்றி ஒருவராக, அத்தோட்டத்திற்கு 24 மணிநேரமும் காவல்காத்தனர். ஒரு மாதத்திற்குப்பின் காவல்துறையினரால் அத்தோட்டத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.


அமைதிவழிப் போராட்டம் ஒருபுறம் நடக்க, மெக்டொனால்டையும் மாவட்ட மேல் பஞ்சாயத்தையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவு செய்கின்றனர் அம்மக்கள். மெக்டொனால்ட் என்கிற மிகப்பெரிய பணமுதலாளியை எதிர்த்து வழக்காட சிறுகிராம மக்களால் இயலாதென்பதால், அம்மக்களுக்கு ஆறுதலாக இருந்துவந்த உள்ளூர் பஞ்சாயத்தின் உதவியை நாடுகின்றனர். அனால், இதற்கெல்லாம் பஞ்சாயத்தின் பணத்தை செலவிட முடியாது என்று நிராகரிக்கின்றனர் உள்ளூர் பஞ்சாயத்து கவுன்சிலர்கள்.

டெகோமா கிராமத்து மக்களின் கோரிக்கையினை ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் எம்.பி. ஜேம்ஸ் மெர்லினோ வெளிப்படையாகவே ஆதரித்தார். அவருடைய உதவியுடன் ஆஸ்திரேலிய திட்ட அமைச்சர் மேத்யூவை சந்தித்தனர் டெகோமா மக்கள். அவர்களது கோரிக்கையினை கேட்டுவிட்டு மெக்டொனால்ட் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அறிவுரை வழங்கி ஒதுங்கிக்கொள்கிறார் அமைச்சர். மெக்டொனால்டொ மக்களுடனெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது என்று நிராகரித்துவிடுகிறது. 3775 கையெழுத்துகள் அடங்கிய கோரிக்கை மனுவினை திட்ட அமைச்சகத்திற்கு அனுப்பிவைத்தனர் மக்கள். அதனை பரிசீலித்த அரசு, இனிவரும் காலங்களில் தண்டேசங் பகுதிகளில் திட்டமிடப்படுகிற எவையும் அப்பகுதியின் கலாச்சார மற்றும் வாழ்க்கை நிலையினை கருத்தில்கொள்ளவேண்டும் என்று அறிவித்தது. ஆனால், ஏற்கனவே அறிவித்துவிட்ட மெக்டொனால்ட் திட்டத்தை ஒன்றும்செய்ய அரசு தயாராகயில்லை என்பதும் அவர்களது அறிக்கையில் தெளிவாகியது.

இணையத்தில் டெகோமா மக்களின் கோரிக்கையினை ஆதரித்த கோரிக்கை மனுவில் 70000த்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். டிசம்பர் 2012இல், டெகோமா கிராமத்தில் ஒவ்வொரு வீடாகத்தட்டி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 88.2% மக்கள் (1085 பேர்) மெக்டோனால்டிற்கு எதிர்ப்பும், 7% மக்கள் (86 பேர்) நடுநிலையும், 4.8% மக்கள் (59 பேர்) ஆதரவும் தெரிவித்தனர். உள்ளூர் மக்களிடையே 10இல் 9 பேர் அளவிற்கான எதிர்ப்பிருந்தும் அதனைக் கண்டுகொள்ளாமல் பேச்சுவார்த்தைக்குக் கூட வரத்தாயாராக இல்லாமலிருந்தது மெக்டொனால்ட். டெகோமா மக்களுடன் பேசமறுத்த மேக்டோனால்டை கண்டித்து, 200 ஜீனோம் (Gnome) பொம்மைகளை மெக்டொனால்டின் தலைமையகத்தின் வாயிலில் வைத்துப் போராடினர் மக்கள். ஊடகத்தின் பார்வை அம்மக்களின் போராட்டத்தின்பால் மெல்ல திரும்பியது. 2013, மார்ச் 2இல் 3000 பேர் கலந்துகொண்ட வரலாறு காணாத பிரம்மாண்ட பேரணி டெகோமாவில் நடைபெற்றது. மலைவாழ் இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து டெகோமா மக்களுக்கு ஆதரவாக உருவாக்கிய 16 பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழையும் வெளியிடப்பட்டது. ஆனால், இவையனைத்தையும் புறந்தள்ளி, மெக்டொனால்ட் உருவாகப்போகிற இடத்தின் கட்டிடத்தை இடிக்கும் பணி துவங்குமென மெக்டொனால்ட் அறிவிப்பு வெளியிட்டது.

டெகோமா மக்களின் போராட்டம் சர்வதேச அளவில் பிரபலமடையத்துவங்கி, டிவிட், மறுடிவிட் என 1 கோடி டிவிட்டர் பயனர்களை சென்றடைந்தது. பல்லாயிரக்கணக்கானோர் பேஸ்புக், மின்னஞ்சல், கடிதங்கள் மூலமாக மெக்டோனால்டிற்கு தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டத்துவங்கினர். மெக்டொனால்ட் உணவு உடலுக்குக்கேடு விளைவிக்கும் என்பதனை நிரூபித்துக்காட்ட தன்னுடைய உடலையே பணயமாக வைத்து “சூப்பர் சைஸ் மீ” என்ற ஆவணப்படத்தை இயக்கிய மோர்கன் ஸ்புர்லாக் மற்றும் விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சேவின் தாயார் கிறிஸ்டியன்

அசாஞ்சே, பாப் மடூரே ஆகியோர் இணையத்தில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர். சர்வதேச அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி டெகோமா மக்களை சந்தித்துப்பேச சம்மதித்தது மெக்டொனால்ட் நிறுவனம். டெகோமா மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த மெக்டொனால்ட் அதிகாரிகள், தங்களது முடிவினை மாற்றிக்கொள்ளவுமில்லை, பெரிதாக கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை. ஆனாலும் விடாமல் நம்பிக்கையோடு போராடிக்கொண்டிருக்கின்றனர் டெகோமா மக்கள். கடந்த ஜூலை 25ஆம் தேதி கூட, 3000த்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி தங்களது எதிர்ப்பினை உறுதிசெய்து போராடினார்கள்.

 

 

ஆண்டிற்கு 1.5 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யும் மெக்டொனால்டை, மிகச்சிறிய கிராமத்தின் மக்கள் எதிர்த்து நிற்கின்றனர். பெரும் பணத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையிலே நடக்கிற இப்போராட்டத்தில், மக்களுக்கு ஆதரவாக துணைநிற்பது உலக குடிமக்களாகிய நம்அனைவரின் கடமையாகும். நம்முடைய தெருக்களிலும் நமது வாழ்க்கை முறையினை, வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிற மெக்டொனால்டுகள் நிறைய இருக்கின்றன என்பதையும் மனதில் வைத்து, அம்மக்களது போராட்டம் வெல்ல வாழ்த்துவோம்...

Related Posts