இலக்கியம்

கோயில்களைப் பாதுகாப்போம்…யாரிடமிருந்து..?


யார் கைகளில் இந்து ஆலயங்கள்..? என்ற தலைப்பை புத்தகத்தில் கவனிக்கும் போது  இரண்டு அர்த்தங்களை கொண்டதாக பார்க்கிறேன் “யார்” மற்றும் “இந்து” என்ற இரண்டு வார்த்தைகள் மட்டும் மஞ்சள் வண்ணத்தில் சற்று பெரியதாக அச்சடிக்கப்பட்டுள்ளது..

யார் கையில் இந்து ஆலயங்கள்  என்கிற கேள்விக்கும், யார் இந்து என்ற கேள்விக்கும் இப்புத்தகத்தில் பதில் உள்ளதால் அதன் குறியீடாகவே தலைப்பின் அச்சு வடிவம் இரண்டு அர்த்தம் கொண்டதாக அமைந்திருக்க கூடும் என நினைக்கிறேன்….


சரியான நேரத்தில் வெளிவந்துள்ள புத்தகம் புத்தக்கத்தின் ஆசிரியர்தோழர். எஸ்.ஜி.ரமேஷ்பாபு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) முன்னாள் மாநில தலைவராக செயல்பட்டவர்.

தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்படுகிறார். கடலூர் மாவட்ட மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடும் பணிகளோடு எழுத்துப் பணியையும் சிறப்பாக செய்யும் பன்முகத்திறன் வாய்ந்தவர். பாரதி புத்தகாலயம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது…..

கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் வழிபடும் கோயில்களை அவர்களே நிர்வகிக்கும் போது இந்துக் கோயில்களை மட்டும் அரசு நிர்வகிப்பதா..? இது அநீதி இல்லையா என்கிற குரல் பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி போன்ற இந்துத்துவா அமைப்புகளால் அடிக்கடி எழுப்பப்படும். “அரசே கோயிலை விட்டு வெளியேறு” என்ற குரலோடு போராட்டங்களும் ஆங்காங்கே நடைபெறும் இது கலகக் குரல் அல்ல காவிக்குரல். 

ஏன் இந்து கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்   இருக்க வேண்டும் ஒருவேளை இல்லாமல் போனால் என்ன மாதிரியான ஆபத்துக்கள் நிலவும் என்பதை கடந்த கால வரலாற்று தரவுகளோடு விரிவாக ஆராய்ந்திருக்கிறது இப்புத்தகம். அதோடு இந்துக் கோயில்கள் திடீரென அரசு கட்டுப்பாட்டில் வரவில்லை. காலங்காலமாக அதிகார அமைப்பின்  கட்டுப்பாட்டில் தான் இருந்துள்ளது ஆனால்  கடந்த காலத்தில் அது ஒரு சிறு கும்பலுக்கு மட்டும் பயன்படும்படியாக இருந்துள்ளது. அதை அனைவருக்கும் பொதுவானதாக ஒழுங்குபடுத்தும் வகையில் தான் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது.

1925ல் நீதி கட்சி  காலத்தில் இந்து அறநிலையத்துறை வாரியம் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக1960ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை  உருவாக்கப்பட்டது. பெருந்லைவர் காமராஜர் முதல்வரானதும் தந்தை பெரியாரின் ஆலோசனை படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த திரு.பரமேஸ்வரன் என்பவரை நியமனம் செய்தார்.  பட்டியலின மக்களை முக்கியமான இந்து கோயிலுக்குள்ளே நுழைய முடியாத நிலைமைகள்  இருந்த சூழலில் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒரு பட்டியலினத்தை சேர்ந்த அமைச்சர் என்பது  புரட்சிகரமான நடவடிக்கை.

இந்து சமய அறநிலையத்துறை உருவாகி வளர்வதற்கு திராவிட இயக்கங்கள் முக்கிய பங்களிப்பை செய்திருக்கிறது. ஏற்கனவே கோயில் சொத்தை அனுபவித்து ருசி கொண்ட பிராமணியவாதிகளுக்கு கடிவாளம் போல் இந்து சமய அறநிலையத்துறை இருப்பதால்  இந்த துறையை தகர்த்தெறிய  தொடர்ந்து முயல்கிறார்கள்.


இப்புத்தகம் மூன்று முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது. முதல் பகுதியில் தத்துவங்கள் எழுகின்றன என்ற தலைப்பில் துவங்கிஅறநிலையத்துறை ஏன்.? தலைப்பு வரை 6 பகுதிகளை கொண்டது. 

பௌத்தம், சமணம், ஜைனம் போன்ற பிற மத கோயில்களைஆரியர்கள் எப்படி தரைமட்டமாக்கினார்கள்,  கோயில் சிலைகள் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டது என்பது பற்றியும்அதோடு சோமநாதர் கோயில் கஜினி முகமதுவால் சூறையாடப்பட்டது என்ற இந்துத்துவா கும்பல் திரும்ப திரும்ப சொல்லும் தகவல் எவ்வளவு முரண்பாடானது என்பதையும் விளக்குகிறது.

அடுத்த இரண்டு பகுதிகளை புரிந்துகொள்ள முதல் பகுதியில் உள்ள செய்திகள் பயனுள்ளதாக இருக்கும்…
இரண்டாவது பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையராக செயல்பட்டு ஓய்வு பெற்ற திரு. ஜெயராமன் அவர்களின் நேர்காணல் தொகுப்பு அவரின் வாழ்க்கை வரலாறும் இந்து சமய அறநிலையத்துறை ஏன் தேவை  என்பதற்கான பதிலும்  ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது.


திருப்புகலூர் அக்னிஸ்வர் ஆலய ஆதினத்தின் முறைகேடுகளை நேர்மையாக எதிர்த்தது , திருக்குவளை ஏட்டுக்குடி தேரில் பட்டியலின மக்கள் ஏறுவதற்கு இருந்த தடையை சாமர்த்தியமாக உடைத்து  அம்மக்களை தேரில் பங்கேற்க வைத்தது, ஆளும் கட்சி அரசியல் தலையீடுகள், உள்ளூர் ரௌடிகளின் மிரட்டல்கள் என எதற்கும்  அஞ்சாமல் தன் கடமையை நிறைவேற்றியது,  சில கோயில்களில் தனக்கு சாதாகமாக விதிகளை வளைத்து செயல்படும் பூசாரிகளின் சுயநல நடவடிக்கைகளை மதம் சொன்ன கதைகள் கொண்டும் ஆகம விதிகளை சுட்டிக்காட்டியும் ஆதாரங்களோடு மறுத்து சாதாரண மக்கள் பக்கம் நின்றது என இந்து மத அமைப்பு நடைமுறைக்கு உள்ளிருந்தே பல சீர்திருத்தங்களை செய்திருக்கிறார் ஜெயராமன். இவர் போன்ற நேர்மையான அதிகாரிகளின் செயல்களால் தான் அரசே கோயில் நிர்வாகத்திலிருந்து வெளியேறு என்ற குரல்கள் ஒலிக்கிறது.

2005-ல் திருவண்ணாமலை கோயில் பொறுப்பிற்கு வந்த ஜெயராமன் கோயில் அருகில்  மேற்கூரையை நிரந்தரமாக அமைக்க 35 லட்சத்திற்கு  ஒப்பந்தம் எடுத்த  கான்ட்ராக்டர் 42 லட்சம் ரூபாய் இருந்தால் தான் கூரை அமைக்கும் பணியை துவங்க முடியும் என்று தகராறு செய்து இரண்டாண்டுகள் எந்த வேலையும் செய்யாமல் கிடப்பில் போட்டார்.அதிரடியாக இதில் தலையீட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்து சொந்த முயற்சியில்  வெறும் 16 லட்சத்தில் அக்கூரை அமைக்கும் பணியை செய்து காட்டினார் திரு.ஜெயராமன். அக்கூரை அமைக்க இஸ்லாமியர்களின் பங்களிப்பு  எவ்வளவு சிறப்பானது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே இவ்வளவு முறைகேடுகள் செய்ய வாய்ப்பிருக்கும் சூழலில் இல்லாமல் போனால்..?

இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள சுமார் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் 22,600கட்டிடங்கள் , 33,665 மனைகளின் நிலை என்னவாகும்..?? பார்ப்பனர்கள் உள்ளிட்ட சில ஆதிக்க கும்பல் ஸ்வாஹா செய்து ஏப்பம் விடவே வாய்ப்புகள் அதிகம். இச்சுரண்டலை தடுக்கவே கோயில் நிர்வாகத்தில் அரசு தலையீடு இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறோம்.திரு. ஜெயராமன் தான் ஏற்றுக்கொண்ட பணியை மிக அர்ப்பணிப்பு உணர்வோடு  ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து நேர்மையாக செயலாற்றியுள்ளார். இவர் நேர்மைக்கு அடித்தளமாக இருந்தது எது என்பதையும் இவர் தன் பெண் குழந்தைக்கு அஸ்ரத் பேகம் என்ற இஸ்லாமிய பெயர் சூட்டியதற்கு  என்ன காரணம் என்பதையும் புத்தகம் முழுவதும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


மூன்றாவது பகுதியாகஒரே மதத்திற்குள் மட்டுமல்ல ஒரே  கோயிலுக்குள்ளே பல வழிபாட்டு முறைகள் சடங்குங்கள் இருக்கும் சூழலில் ஒற்றை கலாச்சாரம் என்கிற கோஷம் எவ்வளவு முரண்பாடானது என்பது பற்றியும் மதம் குறித்து மார்க்சிய அறிஞர்கள் என்னவெல்லாம் கூறியிருக்கிறார்கள் என்பதையும்  சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

இந்த சூழலில் கம்யூனிஸ்டுகள், கடவுள் மறுப்பாளர்கள், இதர ஜனநாயகவாதிகள் கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள் மத்தியில் இணைந்து செயல்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்தும்விரிவாக எழுதியிருக்கிறார்…..

இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக களமாடுவதற்கு  ஏராளமான பலதகவல்கள் அடங்கிய இப்புத்தகத்தை வாசிப்பது முக்கிய கடமை….வாசியுங்கள் நண்பர்களே..!


-S.மோசஸ் பிரபு

Related Posts