தனியார்மயத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள்: தலித் – பிற்படுத்தப்பட்டோரே!

இடஒதுக்கீடு என்பது வெறும் கொள்கை சார்ந்ததோ, அரசியல் வித்தையோ அல்லது கருணை அடிப்படையிலானதோ அல்ல, இடஒதுக்கீடு என்பது சட்டபூர்வமான கடப்பாடு என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார்.

மனு(அ)தர்மத்தை பின்பற்றும் பிராமண சமூகம், மக்கள் அனைவரையும் சமமாகக் கருதாமல், பிறப்பால் இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்று வகைப்படுத்தியுள்ள வர்ணாசிரமத்தை இச்சமூகத்திலிருந்து அழித்தொழிப்பதே இடஒதுக்கீட்டின் முக்கிய அம்சம்.

மனு(அ)தர்மத்தின் படி தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் கடைநிலை சாதியினருக்கு கல்வி கற்க உரிமையில்லை. அடிப்படை உரிமையான கல்வி மறுக்கப்பட்ட காரணத்தினாலேயே பெரும்பான்மையான தலித்துகள் சட்டம், நீதி மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் பல நூற்றாண்டு காலமாக பங்கேற்க இயலாத சூழ்நிலை நிலவி வந்தது. இதனால் எண்ணிக்கையில் குறைவான அதே சமயத்தில் கல்வியறிவு பெற்ற பிராமண சமூகம் மேற்கூறிய மூன்று துறைகளிலும் பங்கேற்றதோடு இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

மனு(அ)தர்மத்தை பின்பற்றும் பிராமண சமூகம் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளும், மத இயக்கங்களும்/குழுக்களும் இடஒதுக்கீடு என்று வரும் போது “தகுதியின் அடிப்படையில்“, “பொருளாதார ரீதியில்” இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமெனக் கூறுவதன் மூலம் பித்தலாட்ட வேலைகளில் ஈடுபடுகின்றன. தலித்துகளும், பழங்குடியினரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் பெறவேண்டிய இடஒதுக்கீட்டை பெற இயலாமல், ஒவ்வொரு சமூகமும் இந்து மத அடிப்படை மற்றும் வர்ணாசிரம முறைப்படி வரையறை செய்துள்ள தொழிலையே எக்காலத்திற்க்கும் செய்ய வேண்டும் என்பதே இந்துத்துவவாதிகளின் உள்நோக்கம்.

பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிய போது பிராமணர்கள் கடைபிடித்து வந்த தீண்டாமைக் கொடுமைகளான பொது சொத்துகளான ஏரி, குளம் ஆகியவற்றினை பயன்படுத்தும் உரிமையை மறுத்தல், சுடுகாடு/இடுகாடு பயன்படுத்தும் உரிமையை மறுத்தல், ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் குடியமர்த்தல், கோயில்களுக்குள் நுழைய தடை, வர்ணாசிரமத்தின் படி வரையறுக்கப்பட்டுள்ள இழிநிலை தொழில்களான மலம் அள்ளுதல், சாக்கடைகளை சுத்தப்படுத்துதல், தோல் தொழில்கள் செய்தல், விவசாய நில உடைமை உரிமையின்றி பண்ணையடிமையாக இருத்தல் மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் என அத்தனை தீண்டாமைக் கொடுமைகளும் இன்றளவும் இந்திய கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் தொடர்கதையாகவே உள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், அனைத்து சமூக மக்களையும் குறிப்பாக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மக்களை பாதுகாக்க பல சட்டங்களை இயற்றியிருந்தும், அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசுத்துறை நிறுவனங்கள் இன்றளவும் பிராமணர்கள் மற்றும் உயர்சாதி இந்துக்களின் பிடியில் இயங்கும் நிலை நீடிப்பதால், சாதிய அடுக்கின் கடைக்கோடியில் வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளிலிருந்து இன்றளவும் அவர்களை விடுவிக்க இயலவில்லை. சமீபத்தில் நடைபெற்ற தர்மபுரி மற்றும் பரமக்குடி கலவரங்களை நாம் இதன் பின்னணியிலேயே ஆராய வேண்டும்.

சமூகத்தின் கடைக்கோடியிலுள்ள மக்களின் முன்னேற்றத்திற்காக இந்திய அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த தவறிய மைய மற்றும் மாநில அரசுகளை இயக்கி வருவது மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதமே உள்ள பிராமண மற்றும் உயர் சாதியினரே.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மக்களின் சமூக-பொருளாதார நிலை இன்றளவும் முன்னேற்றமடையாமல் இருக்கும் நிலைக்கு, சுதந்திர இந்தியாவை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்துள்ள கட்சி என்ற முறையிலும், தலித்துகள் பெரும்பான்மையாக உள்ள மாநிலத்தை ஆட்சி செய்த கட்சி என்ற முறையிலும் காங்கிரசும், அக்கட்சியைச் சேர்ந்த மகாத்மா காந்தி முதல், ராகுல் காந்தி வரையிலான தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும். “மகாத்மாக்கள் வருவார்கள் தூசியைக் கிளப்புவார்கள். ஆனால் அவர்களால் யாதொரு பயனுமில்லை” என்ற அம்பேத்கர் கூற்றை இவர்கள் பல முறை மெய்யென்று நிரூபித்துள்ளனர்.

ஆட்சி அமைக்கும் கட்சிகள் பிராமணர்கள் மற்றும் உயர் சாதி இந்துக்களின் பிடியில் சிக்கியுள்ளதால், டாக்டர் அம்பேத்கர் மறைவிற்குப் பிறகு தலித்துகளின் சமூக-பொருளாதார வாழ்வு முன்னேற அரசு எந்தவொரு நியாயமான சீர்திருத்தங்களையும் முன்னெடுத்துச் செல்லவில்லை. இதைமீறி இயற்றப்பட்ட திட்டங்கள், பல கிடப்பில் போடப்படுகின்றன அல்லது மிகவும் குறைவான நிதியே ஒதுக்கப்படுகின்றன அல்லது அவ்வாறு ஒதுக்கிய நிதிகளை தலித்துகளுக்காக பயன்படுத்தாமல் காமன்வெல்த் விளையாட்டு உட்பட வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது அல்லது திட்டங்கள் வரைவு நிலையிலேயே அழிக்கப்படுகின்றன.

1998 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பல கட்சிகளுள் ஒன்றான பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் தலித்துகளின் உயர்வுக்காக பாடுபடுவதாகவும், சாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிவினை காணும் சமூக அவலங்களை வேரறுப்பதாகவும், சிறுபான்மை இன மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபடுமென்றும், மத்திய மற்றும் மாநில அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிப்பதோடு அதை சட்டப்பூர்வமாக காப்பதாகவும், தீண்டாமையை ஒழிப்போம் எனவும் பல தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைக் கைப்பற்றியது.

அக்கட்சி ஆட்சி செய்த எந்த மாநிலத்திலும் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக சிறுதுரும்பையும் நகர்த்தவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. பிற்படுத்தப்பட்ட சாதி மக்களுக்காக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திவிடக் கூடாது என்று ரதயாத்திரை சென்ற காவிக் கூட்டத்தை சார்ந்தவர்கள் தானே இவர்கள்.

தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை இங்கே கவனிக்கத் தக்கன. வன்கொடுமை தடைச்சட்டம் மற்றும் Protection of Civil Rights சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய வழக்குகள் ஆதிக்க சாதி இந்துக்களின் அழுத்தத்தால் அவ்விரு சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் புறக்கணிக்கப்படுகின்றன. அதையும் மீறி வன்கொடுமை தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பல நிலுவையில் உள்ளன எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சென்ற ஆண்டு நிகழ்த்தப்பட்ட தர்மபுரி கலவரத்திற்குப் பிறகு பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள், தலித்துகள் அல்லாத பிற சாதிகளை ஒன்றிணைத்து வன்கொடுமை தடை சட்டத்தை நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அரசின் பெரும்பாலான உயர் பதவிகளில் பிராமணர்களும், உயர் சாதி இந்துக்களும் ஆதிக்கம் செலுத்துவது போல, காவல்துறையும் அவர்களது ஆதிக்கப்பிடியில் உள்ளதால் தலித்துகள், பழங்குடியினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காமலிருப்பதில் வியப்பொன்றுமில்லை. தலித்துகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுகின்ற காரணிகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் கல்வியில் இன்றளவும் அவர்கள் மிகவும் பின்தங்கியே உள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்விக்காக பல நலதிட்டங்களை இயற்றியிருந்த போதும் ஆதிக்க சாதிகளின் பிடியில் கல்வித்துறை உள்ள வரை, தலித்துகளின் கல்வி தரம் ஒருபோதும் உயரப்போவதில்லை.
கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகம் பல மாறுதல்களை சந்தித்து வருகிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் “மதச்சார்பின்மைக்கும், சமத்துவத்திற்கும் (சோசலிசம்)” கொடுத்துவந்த முக்கியத்துவங்கள் அனைத்தும் பின்வாங்கப்பட்டு, 1990 களின் முற்பகுதிக்கு பிறகு “தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயமாக்கல்” என்று சமூகத்தின் சில குறிப்பிட்ட பிரிவினரே பலனடையும் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு இந்திய ஆளும் வர்க்கம் முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கியது. இத்தகைய கொள்கை மாற்றத்தால் இலாபம் ஈட்டிவந்த அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பல மிக வேகமாக தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டது, அரசின் முதலீடுகள் மெல்ல மெல்ல குறைக்கப்பட்டதுடன், அந்நிய நேரடி முதலீட்டின் கீழ் பல தனியார் நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டன. அரசின் இக்கொள்கை மாற்றம் வெறும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகளை குறைத்து கொள்வது மட்டுமல்ல அதனால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சமுக-பொருளாதார மாற்றங்களையும் கவனிக்க வேண்டும்.

மிகவும் துரிதமாக நிகழ்ந்த தனியார்மயமாக்கலாலும், அன்னிய நேரடி முதலீட்டுக் குவிப்பாலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், அந்நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வெகுவாக குறைந்தது. சுதந்திர சந்தை கொள்கையின் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் தனியார் நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டு PPP எனப்படும் அரசு-தனியார் கூட்டு நிறுவனங்கள் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படுகின்ற கூட்டு நிறுவனங்கள் அனைத்தும் 49:51 என்ற விகிதாசாரத்திலிருப்பதால் இந்நிறுவனங்கள் பொதுத்துறை சட்ட திட்டத்தின் கீழ் வராமல் ஆளும் வர்கம் பார்த்துகொள்கிறது. இச்சதி காரணமாக அரசியலமைப்பு சட்டத்தின் இடஒதுக்கீடு கொள்கைகள் நடைமுறைபடுத்த இயலாத அவல நிலையே நீடித்து வருகின்றது.

ஆகஸ்டு 2012 ஆண்டு EPW என்ற வாரப் பத்திரிக்கையில் வெளியான “Corporate Boards in India Blocked by Caste?” என்னும் தலைப்பில் எந்த சமூகம் இந்திய கார்பரேட்டுகளை கட்டுப்படுத்துகிறது என்பதை அறிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. தேசிய பங்கு சந்தை() மற்றும் பம்பாய் பங்கு சந்தை() ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள 4000 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் போர்டு உறுப்பினர்களில், முதல் 1000 நிறுவனங்களின் போர்டு உறுப்பினர்களின் சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலையை ஆய்வு செய்தது. இந்தியாவில் கடைசிப்பெயர்() பொதுவாக சாதியைக் குறிக்கும். கடைசிப்பெயர் மற்றும் சமூக வலைதளங்களைக் கொண்டு அவர்களின் சாதியினரை கண்டறிந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையின் படி 1000 கார்பரேட் நிறுவனங்களில் 9052 போர்டு உறுப்பினர்களின் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சாதி

எண்ணிக்கை

சதவீதம்

பிராமணர்கள்

4,037

44.6%

வைசியர்கள்

4,167

46.0%

சத்திரியர்கள்

43

0.5%

மற்றவர்கள்

137

1.5%

இதர பிற்படுத்தப்ப்ட்ட வகுப்பினர்

346

3.8%

பட்டியல் சாதியினர் & பழங்குடியினர்

319

3.5%

மொத்தம்

9,052

100%

கல்வித் துறையையும் விட்டு வைக்காத மேலை நாட்டு பல்கலைக்கழகங்கள், இந்திய கல்வி நிறுவனங்களை வணிக நிறுவனங்களாக மாற்றியதில் வெற்றியடைந்தனர். இத்தகைய மாற்றங்களால் சாதிய கட்டமைப்பின் கடைக்கோடியிலுள்ளவர்களுக்கு கல்வி எட்டாக் கனியாகியது.

இன்று ஊழலில் Ph.D பட்டம் பெற்றுள்ள காங்கிரசுக்கு மாற்றாக ஊடகங்களும், காவிக் கும்பலும் முன்னிறுத்தும் பா.ஜ.க, ஊழல் மற்றும் வகுப்பு கலவரங்கள் என இரட்டை Ph.D வென்றவர்கள். காங்கிரசு அரசு 1991 ஆம் ஆண்டு கொண்டுவந்த தனியார், தாராளமயமாக்கல் கொள்கைகளை, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டனி அரசு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை மிகவும் மலிவு விலைக்கு தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுத்தது. இத்தகைய கொள்கை மாற்றத்தால் தலித்துகள், பழங்குடியினர் மற்றும், பிற்படுத்தபட்ட மக்களின் வேலைவாய்ப்பு மேலும் சுருங்கிவிட்டது.

நவம்பர் 2008 ல் மத்திய அரசு வெளியிட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களின் சமூக-பொருளாதார நிலை அறிக்கையிலிருந்து ஒவ்வொரு துறையிலும் எத்தனை தலித்துகள், பழங்குடியினர் மற்றும், பிற்படுத்தபட்ட மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதையும், மத்திய அரசுத் துறைகளில் எந்த சமூகம் ஆதிக்கம் செலுத்திவருகின்றது என்பதையும் அறிய முடிகிறது.

பிரிவு

பட்டியல் சாதியினர்

பழங்குடியினர்

பிற்படுத்தபட்ட வகுப்பு

உயர் சாதியினர்

மொத்தம்

நிலை I

12,281

4,754

5,331

75,585

97,951

நிலை II

20,884

8,004

5,052

1,06,283

1,40,223

நிலை III

2,86,573

1,27,871

1,47,327

12,60,555

18,22,326

நிலை IV

1,38,466

48,828

3,56,468

1,62,408

7,06,170

துப்புரவு

39,774

4,621

2,548

30,352

77,295

இடஒதுக்கீடுக்கு எதிராக தங்கள் வாதங்களை முன்வைக்கும் எவரும் தவறிக்கூட தரவுகளை கவனிப்பதில்லை. இந்துத்துவவாதிகள் என்ன கூறுகின்றனவோ, அதையே மீண்டும் மீண்டும் ஒப்பிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் சுமார் 75% உள்ள பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மத்திய அரசில் துப்புரவு பணியைத் தவிர்த்து வெறும் 41.98% வேலைவாய்ப்பை மட்டுமே பெற்றுள்ளனர். குறிப்பாக அரசின் உயர்ந்த பதவிகளான நிலை I பணியில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும், இதர பிற்படுத்தபட்ட வகுப்பினர் முறையே 12.53%, 4.85%, 5.44% உள்ளனர். நிலை II பணியில் முறையே 14.89%, 5.70% மற்றும் 3.60% உள்ளனர்.

தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு சுமார் 60 ஆண்டுகள் ஆகின்றன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் படி பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளித்து சுமார் 20 ஆண்டுகளாகின்றன. இவ்வாறு இடஒதுக்கீடு நடைமுறையிலிருந்தும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தபட்ட வகுப்பினரின் சமூக-பொருளாதார நிலை இன்னும் முன்னேற்றமடையாமலேயே உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 10 முதல் 15% பேர் சுமார் 65 முதல் 80% அரசு பணிகளை அபகரித்து ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இடஒதுக்கீட்டிற்கு எதிராக வாய்கிழிய பேசும் அறிவு ஜீவிகள் மத்திய அரசு வெளியிட்டுள்ள இவ்வறிக்கைகளை முதலில் பார்த்துவிட்டு தங்கள் வாதங்களை முன்வைக்கலாம்.

இடஒதுக்கீடு அமலிலுள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிலைமை இதுவென்றால், தனியார் துறையில் எவ்வாறு இருக்கும் என்பதை சற்றே எண்ணிப்பாருங்கள். இதுபோன்று தகவல்கள் தனியார்துறை நிறுவனங்களிடமிருந்து நமக்கு கிடைப்பதற்க்கான வாய்ப்பேயில்லை. தனியார் துறை குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சமூக-பொருளாதார நிலையை பெங்களுரிலுள்ள National Institute of Advanced Studies(NIAS) 2005 மற்றும் 2008 வாக்கில் தங்களது மாதிரி ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளது.

ஆய்வு I

132 தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் பங்கேற்ற இவ்வாய்வில் 71% பேர் உயர் சாதி இந்துக்களாகவும் அதில் சரி பாதி பிராமணர்கள். 84% பேர் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினராவர்கள். வெறும் 5% பேர் மட்டுமே கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள்.

ஆய்வு II

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில், சென்னை, பெங்களுர், ஹைத்ராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களை சேர்ந்த 100 தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் பங்கேற்றனர். இவ்வாய்வின் முடிவில் 75% பேர் உயர் சாதி இந்துக்களாகவும், 12% பேர் கிராமப்புறத்திலிருந்து வந்தவர்களாவார்கள். இவ்வாய்வில் ஒருவர் கூட தலித் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் இல்லை.

ஆய்வு III

தொழிலாளர் பொருளாதார நிபுணர் விஜயபாஸ்கர் 2000 ஆம் ஆவது ஆண்டில் நடத்திய ஆய்வில், பெங்களுர் மற்றும் புது தில்லி ஆகிய நகரங்களை சேர்ந்த 160 தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் பங்கேற்றனர். இவ்வாய்வின் முடிவில் 80% பேர் உயர் சாதி இந்துக்களே.

மேற்கூறிய ஆய்வின் முடிவுகள் அனைத்தும், பெரும்பாலான தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் பிராமணர்கள் மற்றும் உயர் சாதி இந்துக்களின் கூடாரமாகவே உள்ளது அல்லது இந்நிறுவனங்கள் இன்னும் மனுதர்மத்தை கடைபிடித்தே தங்கள் பணியிடங்களை நிரப்பப்படுகின்றனவோ? என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும் 25-30% வரையிலான ஊழியர்கள் Employee Referral என்னும் மற்ற ஊழியர்களின் தொடர்பின் மூலமே பணியிலமர்த்தப்படுகின்றனர். இந்நிறுவனங்கள் எவ்வாறு தங்கள் ஊழியர்களை பணியில் அமர்த்துகின்றனர் என்பதை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் தகவல்கள் உள்ளது போன்று, தனியார் துறை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் தகவல்களை திரட்டி வெளியிட வேண்டும். பல் துலக்கும் பேஸ்டிலிருந்து, பார்த்து மகிழும் ஹாலிவுட் படம் வரை எல்லாவற்றையும் அமெரிக்காவிடமிருந்து காப்பியடிக்கும் இந்திய ஆளும் வர்க்கமும், அரசும் ஏன் அமெரிக்க நாட்டில் கருப்பினத்தவருக்கும் இங்கிலாந்து மற்றும் இதர வளர்ந்த நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கும் தனியார் துறையில் இடஒதுக்கீடு, Affirmative Action எனப்படும் உறுதியாக்க நடவடிக்கை அமலில் உள்ளது போல நம் நாட்டிலும் சட்டரீதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் பொதுத்துறையில் வேலைவாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. தனியார்த்துறையில் திட்டமிட்டு அவர்களின் வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. இத்தகைய நிலையில் தனியார்துறையில் இடஒதுக்கீடு, உறுதியாக்க நடவடிக்கை ஆகிய சமூக நீதிகளை நாம் பெற வேண்டிய கால கட்டங்களில் உள்ளோம்.

About ரகுராம் நாராயணன்

 • Deepthi

  மிகத்தெளிவான கட்டூரை. நாட்டில் நடக்கும் சூழலை விவரமாக statistics உடன் குறிக்கிறது. Raghu , இது ஒரு நல்ல முயற்ச்சி. இப்போது இருக்கும் ஜாதி பிரிவுகளை எல்லாம் அகற்றிவிட்டு. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அமைப்பதே சரியானது. ஆனால் அது நடக்குமா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி தானே..

 • m.venkatasubramanian

  I agree with the content.It points again and again the need of the hour is Class struggle.

 • ரகுராம் நாராயணன்

  நம் நாட்டில் சாதியும் வர்க்கமும் இரண்டரக் கலந்துள்ளது என்ற கருத்திற்க்கு மாற்று கருத்தில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு பிறகு சில பிற்படுத்தபட்ட சமூகத்தினர் அரசியல் கட்சிகளாகவும், இயக்கங்களாகவும் உருவெடுத்தன. முஸ்லீம்களை இந்துக்களுக்கு எதிராகவும், SC/ST பிரிவினரை OBC பிரிவினருக்கு எதிராகவுள்ளனர் என்னும் மாய தோற்றத்தை ஏற்படுத்தியதே பார்ப்பனியத்தின் வெற்றி. இந்துவவாதிகளின் முகத்திரையை நாம் கிளித்தெரியாமல் பிராமண சமூகம் கடைபிடித்து வந்த அதே அடக்குமுறையை கடைபிடித்து வரும் சில பிற்படுத்தபட்டவர்கள் கடைபிடித்து வரும் அடக்குமுறையை நாம் அகற்ற முடியாது. BJP & Congress இரண்டும் OBC க்களின் இடத்தை தலித்துகள் தட்டி செல்கின்றன என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சதி வேலைகளினால் மொத்த மக்கள் தொகையில் வெறும் 10% உள்ள உயர்த்தப்பட்ட சமூகமே அனுபவித்து வருகிறது.

  பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தரளாம் என்கிற BJP & Congress காரர்களின் பலுப்பல்களை ஒரு வாதத்திற்க்கு எடுத்துக்கொண்டாலும், அர்ஜுன் சென் குப்தா கமிட்டி அறிக்கையின் படி 77% இந்திய மக்கள் ஒரு நாளைக்கு ரூ 20/- க்கு குறைவாகவே செலவு செய்கின்றனர். இந்த 77% மக்களில் பெரும்பாலனோர் தலித்து, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தபட்ட சமூக மக்களாவே இருப்பார்கள்.

  பல்லாண்டு காலம் சாதி ரீதியாக பிளவுண்டு கிடக்கின்ற சமூகத்தில் சாதி ரீதியாக இடஒதுக்கீடு அளிப்பதே நியாயமனதாகும்.

 • லீப்நெக்ட்

  நிச்சயம் நடுத்தர மக்கள் படிக்க வேண்டிய கட்டுரை….
  இட ஒதுக்கீட்டுக்கு‍ எதிராக கடந்த 2006 ஆம் ஆண்டு‍ போராட்டம் நடைபெற்றது. பலரும் ஏதோ அவர்களுக்கு‍ கிடைக்க வேண்டியது‍ இந்த இடஒதுக்கீட்டினால் மட்டுமே கிடைக்காமல் கெட்டுப் போய்விட்டதாக எண்ணி தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது‍ கோபம் கொள்கிறார்கள். அவர்கள் கோபம் கொள்ள வேண்டியது‍ இந்த அரசின் மீதும் அரசின் கொள்கையின் மீதும்தான் என்பதை கட்டுரை சுட்டிக் காட்டுகிறது……..

 • vimala

  Very good…A fine analysis has been done by the writer…. I am fully 100000% agree with the comments>>>மிகச் சிறப்பான கட்டுரை; இதில் உள்ள சோகம் என்னவெனில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் இந்த விவரங்கள் போய்ச் சேருவதில்லை. தங்களுக்கு அளிக்கப்படும் அநீதிகள் அவர்களுக்கே தெரிய்வருவதில்லை>>> Even left political workers are not doing correct propaganda…they have to travel many more miles….Vimala vidya

 • மிகச் சிறப்பான கட்டுரை; இதில் உள்ள சோகம் என்னவெனில் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் இந்த விவரங்கள் போய்ச் சேருவதில்லை. தங்களுக்கு அளிக்கப்படும் அநீதிகள் அவர்களுக்கே தெரிய்வருவதில்லை.

 • வேதன் மது

  அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஆதரிக்கக் கூடியவன் என்ற முறையில் இக்கட்டுரையை ஏற்கிறேன். ஆனால் இதில் பிற்படுத்தப்பட்டவர்கள் தலைமை ஏற்ற அரசியல் கட்சிகளும் கூட வர்ணாசிரமத்தின் நிலைபாட்டில் சமரசம் செய்து கொண்டதையும், தங்களுக்கும் பிராமணர்களுக்குமான அரசியலில் கடுமையாகப் போராடியவர்கள், தங்களுக்குக் கீழுள்ள தலித்துக்கள் எனும்போது அவர்களை கடுமையாக அடக்கி ஒடுக்கி சுரண்டுவதை இம்மியும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற நிலை எடுப்பதையும் நாம் பார்க்கிறோம். இதையும் நாம் விமர்சிக்க வேண்டும். மேலும் சாதி அடிப்படையில் மட்டுமே தனித்துப் பார்ப்பதும் பொருந்தி நிற்காது. வர்க்க அடிப்படையும் இதில் இணைந்தே செயல்படுகிறது. எனவே சாதி ஒடுக்குமுறை, வர்க்க சுரண்டல் என்ற இரண்டு அம்சங்களையும் இணைத்து சரியான நிலை எடுக்க வேண்டும். இடஒதுக்கீடு மூலம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் விடுதலை சாத்தியம் என்ற தொனி இக்கட்டுரையில் உள்ளது. இட ஒதுக்கீடு அவசியம்தான், அதேசமயம் அடிப்படையில் நிலச்சீர்திருத்தம், பொருளாதார விடுதலை என்ற நிலையில் தான் மேற்சொன்ன இந்தியப் பெரும்பான்மை மக்களின் விடுதலை சாத்தியம்! இடஒதுக்கீடு பற்றிப் பேசும்போது அது வர்ணாசிரமத்துக்கு எதிரான ஓர் ஆயுதம் என்ற புரிதல் இருந்தாலும் கூட, இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்தவர்கள், அம்பேத்கர் எதிர்பார்த்தபடி அவர்கள் தங்கள் சமூக மக்களின் விடுதலைக்கான, சமூக மேம்பாட்டிற்கான கருவியாக இதைப் பயன்படுத்தவில்லை. மாறாக அவர்களும் ஒருவகையில் மேட்டிமைக்காரர்களாக தங்கள் சமூகத்தில் இருந்து பிரிந்து சென்று மேல்சாதி மனோபாவம் கொண்டவர்களாக மாறிச் செல்வதையும் பார்க்கிறோம். எனவே சாதி, வர்க்கம் இரண்டையும் சரியானபடி இணைத்த பார்வையும், அணுகுமுறையும் தேவை. அதுவே ஜனநாயக இந்தியாவுக்கான அவசியம்.

 • ArkThamilselvan

  கொண்டு செல்வோம் உரிமை மறுக்கப்பட்டவர்களிடம் இவ்உண்மையை ஒன்று சேர்ப்போம் அமைப்பாக வென்றெடுப்போம் சமதர்மத்தை