அரசியல் சமூகம்

வன்கொடுமை தடுப்புச் சட்டம்- சில கேள்விகளும் பதில்களும்

எந்த நாட்டிலும் இல்லாத சாதியும் அதன் பேரில் நடக்கும் கொடுமைகளும் இந்தியாவின் அவமானச் சின்னமாக இருந்து வருகின்றன. ஒடுக்கப்படுவோருக்கு ஆதரவாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்று சில சட்டங்கள் எப்போதாவது பூக்கின்றன. அதையும் ரத்து செய்ய வேண்டும் என்று சாதிப் பித்தும், ஆதிக்க எண்ணமும் கொண்டோர் வழக்கு தொடுத்துள்ளனர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் மேல் சில கேள்விகளையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். அந்த கேள்விகளும் அதற்கு பதில்களும்..

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுதானே நியாயம். அப்படி இருக்கும் போது ஒரு பிரிவினருக்கு மட்டும் தனிச்சட்டமும் சலுகைகளும் கொடுப்பது நியாயமாகுமா?

ஓட்டப்பந்தயங்களின் துவக்கத்தில் வட்டப்பாதைகளில் போட்டியாளர்கள் நேராக ஒரே கோட்டில் நிற்க அனுமதிக்கப்படுவதில்லை. வெளி ஓரத்தில் இருப்பவர் சில அடிகள் முன்னே நிற்க வைக்கப்படுவார். அவருக்கு அடுத்து இருப்பவர் கொஞ்சம் பின்னே நிற்பார். இப்படியாக உள் ஓரத்தில் இருப்பவர் எல்லோரை விடவும் பின்னே நிற்பார். ஆனால் போட்டியில் அனைவரும் கடக்கும் தூரம் ஒரே அளவே இருக்கும். நமது சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர்கள்  வெளி ஓரத்தில் இருக்கிறார்கள். அவர்களை கொஞ்சம் முன்னே நிற்கவைத்தால்தான் வாழ்க்கைப் பந்தயத்தில் சமமாக ஓடிவர முடியும். அதைத்தான் சிறப்புச் சட்டங்களும் இட ஒதுக்கீடுகளும் செய்கின்றன.
 
1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் எஸ்.சி/எஸ்.டி மக்கள் மேல் வழக்கு பதிய முடியாது என்பது ஒருதலைப்பட்சமானதுதானே. இதை நீக்குவதில் என்ன தவறு?

இந்த வாதம் முழுக்க முழுக்க உண்மையான பிரச்சனையை திசை திருப்புவதற்காக சொல்லப்படுவது. இது அரிதினும் அரிது. பாலியல் கொடுமைகளில் இருந்து பெண்களைக் காக்க ஒரு சட்டம் போட்டால் அது ஆண்களுக்கானதாகத் தான் இருக்க முடியும். இல்லை பெண்களும் பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துகிறார்கள் என்றால் அது மிகவும் அரிது. அதைத் தடுக்க பொதுப் பிரிவு சட்டங்களே போதுமானது. பெரும்பான்மையான பிரச்சனையை நீக்காமல் சிறுபான்மையான பிரச்சனையில் கவனம் செலுத்துவது வீண். அதேபோல்தான் இதுவும்.. எஸ்.சி/எஸ்.டி மக்களுக்குள் இருக்கும் பிரிவினைகள் நீக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை.. அதற்கு அவர்களையும் உள்ளடக்கிய ஒரு வலுவான சட்டம் கொண்டு வருவதே தீர்வே அன்றி இருக்கும் சட்டதை நீக்குவது அல்ல

கொலை செய்தாலும், ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினாலும் அந்தக் குற்றவாளிக்கு முன் ஜாமின் பெறுவதற்காக மனுத்தாக்கல் செய்யும் உரிமையுண்டு ஆனால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் விதி 18 முன் ஜாமினுக்கான மனுத்தாக்கல் செய்யும் உரிமையை தடுக்கிறது. இது நியாயமா?

பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு முன் ஜாமின் வழங்கப்படுவதும், தெரிந்தே அவர்கள் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பித்துவிடுவதும் நடக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் கோருவார்கள். ஆனால், அந்தக் குற்றவாளிகள் தப்பிப்பது போலவே, தீண்டாமைக் கொடுமை செய்வோரும் தப்பிக்க வேண்டும் என்பது எப்படியான கேள்வி?. மேலும், சாதி அடிப்படையிலான தீண்டாமை, எந்தக் காரணமும் இல்லாமல் தலைமுறை தலைமுறையாக தலித் மக்கள் மீது சுமத்தப்படுவதாகும்…. கொலையும் வன்புணர்வும் மூடத்தனம் என்றால் அதன் உச்சம் தீண்டாமை.

மேலும், ஒரு பெண்ணை வன்புணர்வு செய்வதற்கும் ஒரு பெண்ணை அவள் தலித் என்பதால் வன்புணர்வு செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்தியாவில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்களில் 58% தலித் பெண்கள் என்பது தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. கலவரத்தை அடக்கப் போகும் போலிசார்களின் துப்பாக்கி தலித்துகளை மட்டும் சுட்டுவீழ்த்துவதும் தற்செயலாக நடப்பவை அல்ல. சாதி அடிப்படையிலான வன்முறைகளைத் தடுக்க வேண்டுமாயின் இத்தகைய சட்டங்கள் மிக அவசியமே.

கொடுக்கப்பட்ட புகார்களில் பல பொய்ப் புகார்கள் என்பதற்கு ஆதாரமாக 93 சதவித வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை என்று சென்ட்ரல் கிரைம் பியூரோ கூறுகிறது. இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

பொதுவாக தள்ளுபடியான வழக்குகள் அனைத்தும் பொய்வழக்குகள் என்றாகாது. 1968 இல் நாடறிய வெண்மணியில் நடந்த தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் படுகொலையின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. மிக சமீபத்திய உதாரணம் 1997ல் பாட்னா அருகே 21 பெண்கள் 10 குழந்தைகள் உட்பட 58 பேர் உயர்சாதியினரால் படுகொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளில் 16 பேருக்கு தூக்கு தண்டனை வழங்க  செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால் கடந்த வருடம் மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம் அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்று விடுதலை செய்துள்ளது. இதற்கு ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றம் இந்தியாவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் சாதி அடுக்குகள் தவறாது கடைப்பிடிக்கப்படும் நிலையில், வன்கொடுமை வழக்குகளை நீதி விசாரணைக்கு உட்படுத்துவதும், குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுப்பதும் எத்தனை கடினம் என்பதையே வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகள் காட்டுகின்றன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ’93 சதவித வழக்குகள் நிரூபிக்கப்படாததற்கு காரணம் அதிகாரிகள் திறமையாகவும் அக்கறையாகவும் செயல்படாததுவே’ என்று பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.  உண்மையில் பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்தாலும் பல புகார்கள் பதியப்படுவதில்லை, பதிந்தாலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதியாமல் வேறு எதாவது பொது சட்டங்களில் பதிகிறார்கள். இக்குற்றத்திற்கு பெயில் இல்லை என்றாலும் குற்றம் செய்தவர்கள் பெயிலில் வெளியே வந்துவிடுகிறார்கள்.

இருவருக்குள் வேறு எதாவது பிரச்சனையாக இருந்தாலும் கூட சாதியின் பெயரைச் சொல்லி திட்டிவிட்டார் என்று எஸ்.சி/எஸ்.டி மக்கள் பொய் புகார்கள் கொடுக்கிறார்கள். இதை மறுக்க முடியுமா?

பதியப்பட்ட வழக்குகளைப் பார்த்தால் மிகக் குறைந்த அளவு மட்டுமே திட்டியதற்காக இருக்கும். அதையும் தாண்டி மொட்டையடித்தல், மீசை மழித்தல், தெருவில் நடக்கவிடாதது, ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தல் போன்ற வழக்குகளே அதிகம். தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மொத்தம் 7,44,538 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகள்  1,647. இது மொத்த வழக்கில் 0.22 சதவிகிதம். கடந்த 2012-ம் ஆண்டு இறுதியில் இந்தச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் 4,039 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றில் 119 வழக்குகளுக்கு மட்டும்தான் தண்டனை கிடைத்துள்ளது. எங்கேனும் ஒரிரு இடத்தில் பொய் புகார்கள் கொடுத்திருக்கலாம். ஆனால் எல்லா வழக்குகளும் பொய் என்பது போல் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

காவல்துறை அதிகாரி புகாரை எடுத்துக்கொள்ள மறுத்தால் அவர் மீது வழக்குபதிவு செய்யலாம் என்கிறது இந்தச் சட்டம். இது காவல்துறையையும் அச்சுறுத்தும் செயல் அல்லவா போலியான வழக்காக இருந்தால் கூட அதைப் பதிய நிர்பந்திப்பது எப்படி சரியாகும்?

வெறும் காகிதத்தில் சோறு என்று இருந்தால் பசி ஆறிவிடுமா? காவல்துறையினர் உட்பட வேண்டுமென்றே கடமையைப் புறக்கணிக்கும் அதிகாரிகளுக்கு பிரிவு 4-ன் படி தண்டனை வழங்க வேண்டும். ஆனால், இதுவரை தமிழகத்தில் ஒரு அதிகாரிக்குக்கூட தண்டனை வழங்கப்பட்டதில்லை.

அதுமட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்கென சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் என்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், பல மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இறந்தால் அக்குடும்பத்திற்கு அரசு வேலையோ அல்லது வேளாண் நிலமோ வழங்க வேண்டும் என்றும் அந்த சட்டம் கூறுகிறது. ஆனால் அரசு மரணங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்குகிறது. அதுவும் பணம் மட்டுமே வழங்குகிறது. வன்புணர்வு , கடுமையான தாக்குதல் போன்றவற்றுக்கு எதுவும் வழங்குவதில்லை.

இந்தச் சட்டம் சரியாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர் தலைமையில் இருபத்தி ஐந்து பேர் கொண்ட கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் பலமுறை கோரிக்கை வைத்த பின் ஒரே ஒரு முறை மட்டுமே கூடியது. அதிமுக ஆட்சியில் இதுவரை ஒருமுறை கூட கூடவில்லை. இந்தக் குழு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தொடர்ந்து கூடினால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு சிறியளவு நன்மையாவது நடக்கும்.

நடைமுறைக்கு வராமல் வெறும் காகிதத்தில் உறுதி செய்யப்பட்ட நீதியே இவர்களின் கண்ணை உறுத்துகிறது என்றால் – சாதி வன்மம் எத்தனை ஊறியிருக்கும் என்பது புரிகிறது.

Related Posts