அறிவியல்

பொட்டாசியமும் புளுட்டோனியமும்…

பொட்டாசியம் பரவலாக நாம் எல்லோரும் கேள்விப்பட்ட பெயர்தான். ஆனால் கூடங்குளமும் புளுட்டோனியமும் பொட்டாசியத்தை மறக்கச் செய்துகொண்டு இருக்கின்றன. பொட்டாசியம் ஒரு முக்கியமான தனிமம். தாவரங்கள் மற்றும் மனிதன் உட்பட்ட விலங்கினங்களின் நல்வாழ்வுக்கு அவசியம்.Potassium-thiocyanate-xtal-3D-vdW-B

தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து (NPK) என அழைக்கப் படும் மூன்று முக்கியமான சத்து/உரம் வரிசையில் கடைசியாக வரும் சாம்பல்சத்து பொட்டாசியம். சாதாரணமான பொட்டாசியம் (K39) அணு நிறை 39 கொண்டது. இரண்டு பொட்டாசிய ஓரகத் தனிமங்கள் (Isotopes) (K40 மற்றும் K41) இருக்கின்றன. K39 & K41 அணுப்பிளவு, கதிர்வீச்சு இல்லாத நிலைத்த தனிமங்கள். ஆனால் K40 அணுப்பிளவு, கதிர்வீச்சு கொண்ட தனிமம்.

பூவுலகில் பொட்டாசியம் K39 & K41 99.98% அளவிலும் K40 சுமார் 0.011% அளவிலும் உள்ளன. பூவுலகில் உள்ள அணுப்பிளவு தனிமங்களிலேயே அதிகம் இருப்பது K40தான். பொட்டாசியம் இருக்குமிடத்தில் எல்லாம் K40 இருக்கின்றது. பொட்டாசியம் எங்கெல்லாம் இருக்கின்றது? எங்கெல்லாம் இல்லை என்று கேட்பது உசிதம்.

இல்லாத இடமில்லை. நீங்கள் நிற்பது சென்னையோ சியாட்டிலோ இடிந்தகரையோ இமயமோ… உங்கள் காலடி மண்ணில் 1 கிலோ எடுத்தால் அதில் 15 கிராம் பொட்டாசியம் இருக்கும். அதில் 0.011 % அணுப்பிளவு, கதிர்வீச்சு K40 இருக்கும். வாழைப்பழத்தில் உள்ளது; பாலில் உள்ளது; தாய்ப்பாலில் உள்ளது; பாலுக்கு அழும் குழந்தையின் கண்ணீரில் உள்ளது; கடல் நீரில் உள்ளது. இருக்குமிடத்தில் எல்லாம் கதிர்வீச்சோடுதான் உள்ளது. எனவே கடலில் நீந்தும் மீண்கள் கதிர்வீச்சிலும்தான் நீந்திகொண்டு இருக்கின்றன. மனிதஉடல் ஒவ்வொன்றிலும் நிரந்தமாக சுமார் 140 கிராம் பொட்டாசியம் இருப்பு பராமரிக்கப் படுகின்றது.

அதில் 0.011% கதிர்வீச்சு K40 உள்ளது. இது விணாடிக்கு சுமார் 4400 அணுக்கரு பிளவுகளை ஏற்படுத்தி கதிர்வீச்சை உமிழ்ந்து கொண்டே இருக்கின்றது. இதைத் தவிர C14 எனப்படும் கார்பன் மற்றும் சில கதிர்வீச்சுத் தனிமங்களும் சேர்ந்து வினாடிக்கு சுமார் 12000 அணுக்கருப் பிளவுகளை மனித உடலில் நிகழ்த்திக் கொண்டு உள்ளன. உடலில் இருக்கும் பொட்டாசியத்தில் 98% செல் கருவைச் சுற்றியுள்ள திரவத்தில் உள்ளது.

எங்கு கதிர்வீச்சு நடந்தால் பாதிப்பு அதிகமோ அங்கு இருக்கின்றது. மனித உடல் இதனைத் தாங்கி விளைவுகளைச் சரிசெய்துகொள்ளும் வல்லமை கொண்டதாகத்தான் பரிணாமம் கொண்டுள்ளது. புளுட்டோனியத்தில் அரை வாழ்வு 24,000 ஆண்டு; பொட்டாசியம் 40 இன் அரை வாழ்வு 130 கோடி ஆண்டுகள்.

அரைவாழ்வும் கதிர்வீச்சும் பிரச்சினை அல்ல எனக்கூறவில்லை. எல்லா அளவுகளிலும் பிரச்சினை என்ற அச்சுறுத்தல் அரை உண்மை; அறிவியல் உண்மை அல்ல.

Related Posts