சினிமா தமிழ் சினிமா

தாமதமாக கிடைக்கும் நீதி என்றாலும் அதுவும் அநீதி தானே – பொன்மகள் வந்தாள்

சமீபத்தில் சமூகத்தில் நடக்கும் பெண்களுக்கான கொடுமைகள், அநீதிகள் குறித்து படங்கள் அதிகமாக வர ஆரம்பித்திருக்கிறது.அதற்கான வரவேற்பும் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில பெண் திரைக்கலைஞர்கள் சமூக அக்கறைக் கொண்ட,மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஜோதிகாவும் முன்னணியில் இருந்து வருகிறார்.

சூர்யா , ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறி இருக்கிறது.அதற்கான இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று தஞ்சை பெரிய கோவில் குறித்து ஜோதிகா பேசியதாக வெளியான சர்ச்சை மற்றும் இரண்டாவது கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் வெளியாக வேண்டிய படம் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே முதல் முறையாக OTT தளத்தில் வெளியாகி உள்ளதே இந்த பேசு பொருளுக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

“ஒரு படம் தானே அதை கடந்துவிடலாம் என்றெல்லாம் போக முடியாது” இன்றைக்கு இருக்கும் சமூகத்தில் பெண்களின் நிலை என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான் ?

சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வளர்ந்துவிட்டார்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் தொடர்ந்து பெணகளுக்கு எதிரான பல பிரச்சனைகளை இந்த சமூகம் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறது.

குடும்பத்தில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகள், இளம் வயது பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள், பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் என அடுக்கிகொண்டே போகலாம். இப்படியான பிரச்சனைகளில் தொடர்ந்து அதற்கான நீதிகளும் மறுக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது.

நிர்பயா வன்கொடுமைச் சம்பவத்தில் ஆரம்பித்து ஆசிஃபா, ஹாசினி, சுவாதி, நந்தினி, பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள், இப்போது சமீபத்தில் நாகர்கோவிலில் காசி என்பவனால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் நிலை என எக்கச்சக்கமான வன்கொடுமைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம்…

“ஒரு படம் பேசவேண்டிய சமூக அறத்தை பேசி உள்ளது பொன்மகள் வந்தாள்”

இங்கு தேவை உண்மையும் நீதியும் தான் ..ஆனால் அது பல வழக்குகளில் கிடைக்காமல் போய் இருப்பதற்கு காரணம் திரைப்படத்தில் வில்லனாக வரும் வரதராஜன் போன்ற ஆட்களால் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நிஜத்திலும் இப்படியான ஆட்கள் இருக்கிறார்கள். பொள்ளாச்சியில் நடந்த அந்த பாலியல் குற்றங்களுக்கு பின்னால் ஆளும் கட்சியை சார்ந்த முக்கிய புள்ளிகளே இருந்தார்கள். அதேபோன்று சமீபத்தில் காசி என்பவனின் விஷயத்திலும் கூட அதிகார பலமிக்கவர்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சரி இது ஒருபுறம் இருக்கட்டும், கட்டுரையின் வேர்களைப் போய் தொடுவோம். எத்தனையோ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதிலிருந்து மீட்கப்பட்டவகள் பற்றி நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் யாருக்காவது அந்த பாலியல் கொடுமைக்கு ஆளாகியவர்களின் மனநிலையை பற்றி தெரியுமா?

அவர்கள் மீண்டு விட்டார்கள் அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்கு எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் என்று தான் நினைப்போம். ஆனால் உண்மையில் அவர்கள் ஒரு நாளும் மீண்டு வருவதே இல்லை என்பது தான் நிதர்சனம்.

காரணம், அந்த பாலியல் சீண்டல்களின் கொடூரம்.அவர்களை விட்டு விலகாத அந்த கொடூரம் அவர்களுக்கு பயத்தையும் மனதளவிலான பாதிப்பையும் கொடுத்து விடுகிறது. ஒருமுறை அப்படியான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் என்றால் அவர்கள் இறக்கும் வரை அதன் பாதிப்பு அவர்களுக்குள்ளேயே இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இதை எதற்காக இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், படத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை தன் மழலைப் பருவத்தைக் கடந்து 15 வருடங்கள் ஆனாலும் கூட அவள் கண்ணில் அதே வலி , அதே பயம், அதே நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது என்பதை தான் கண்ணீரோடு நீதிமன்றத்தில் சொல்லியிருப்பார் கதையின் நாயகி வெண்பா.

பிரதாப் கே.போத்தன், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியகராஜன், வினோதினி, சுப்பு பஞ்சு, கிரேன் மனோகர் இப்படி படத்தில் இருக்கிற ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் நம் இயல்பு வாழ்க்கையோட தான் ஒத்துப்போகிறது.

தன் மகள் வெண்பா தனக்கு நேர்ந்த மிகக்கொடூரமான அந்த பாலியல் தொல்லைப் பற்றி நீதிமன்றத்தில் சொல்ல வரும்போது பாக்யாராஜ் தடுக்க நினைப்பதும், அதை வெண்பா மறுத்து உண்மை இங்கு ஜெயிக்கனும் என்பதற்காக நீதிமன்றத்தில் சொல்லும் போது நீதிமன்ற வளாகமே கண்ணீரோடு இருப்பது என்பதும் நம்மை இன்னும் ஆழமாக சிந்திக்க வைக்கிறது.

இங்கு எத்தனை குழந்தைகள், பெண்கள் தங்களுக்கு நடந்த வன்கொடுமைகள் பற்றி இப்படி பேசுவார்கள் /? அதை பாக்யராஜ் போன்ற எத்தனை அப்பாக்கள் தாங்கிக் கொள்வார்கள்?

பார்த்தீபன் நடித்திருக்கும் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது.எத்தனையோ வழக்கறிஞர்கள் பெரிய பெரிய ஆட்களின் கைக்கூலியாக செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் என்னவோ அந்த மாதிரியான பிரச்சனைகள் என்பது அவ்வளவாக இல்லை. ஏனென்றால் பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞர்களும் ஆஜராக மறுத்துவிட்டனர். ஆனால் இது போன்ற பல வழக்குகளை நீதிமன்றம் சந்தித்து இருக்கிறது.

பார்த்தீபன் இருக்கும் எல்லா ஆதாரங்களையும் அழித்தாலும் உண்மையை அவரால் மறுக்கவே முடியாது . பல குழந்தைகளை சிதைத்து இருக்கிறான் என்பது தான் பார்த்தீபன் அறிந்த உண்மை.

“ஒருத்தரின் அடையாளத்தை சிதைக்கிறது தான் மிகப்பெரிய வன்முறை! ..
பசிக்காக ஒருகைப்பிடி அரிசியை எடுத்த ஒருத்தன அடிச்சிக் கொண்ண இதே நாட்டில் இன்னும் 100 பேரை பாலியல் வன்கொடுமை செஞ்சவன் எல்லாம் சுதந்திரமா சுத்திகிட்டு இருக்கான்”

இந்த வசனம் தான் இந்த படத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது …

வெண்பாவின் மூலமாக வெளிப்படும் ஒவ்வொரு வசனமும் நீதிமன்றத்தை ஒவ்வொரு அடியாக கேள்வி கேட்கிறது …

நாங்க தோர்த்து போய்ட்டோம்னு சொல்ல இது ஒன்னும் கேம் இல்ல சார் , “ஜஸ்டிஸ் “

இங்க இதே ஜஸ்டிஸ் தேடி எத்தனை எத்தனையோ பெண்கள் இன்னும் அலஞ்சி கிட்டு தான் இருக்காங்க ?

நீதிமன்றங்கள் இதற்கெல்லாம் பதில் சொல்லுமா??

இந்த திரைப்படத்தில் கதைக்கு வேண்டுமானால் ஒருத்தரின் வீக்னஸ்-ச பயன்படுத்தி உண்மையை வர வைக்கலாம்.ஆனால் நிஜத்தில் இங்கு உண்மையான நீதி கிடைப்பதே இல்லை.

அதுதான் பாதிக்கப்பட்டவர்கள் தேடிகிட்டு இருக்கிற அந்த “ஜஸ்டிஸ்”

பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என ஏற்பட்டிருக்க மோசமான சூழல் இந்த சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம்.

இங்கு வலியோடு இருப்பவர்களுக்கு நீதி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த படத்தில் பாடலாக இருக்கட்டும், வசனமாக இருக்கட்டும் , எடிட்டிங்காக இருக்கட்டும், கேமரா காட்சிகளாக இருக்கட்டும் அனைத்தும் நம்மை ஆழமாக தான் கொண்டு சென்றிருக்கிறது. இயக்குனரின் கதைத்தளம் நம்மையும் இந்த சமூகத்தில் இருக்கிற ஒவ்வொரு மக்களையும் அதிகமாகவே கேள்வி கேட்க வைக்கும்.

தாமதமாக கிடைக்கும் நீதி என்றாலும் அதுவும் அநீதி தானே.

பொன்மகள் வந்தாள்

பா.விஜயலட்சுமி

Related Posts