பிற

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு . . . . . . ஆண் குழந்தைகளுக்கு சமத்துவம் சொல்லி வளர்ப்போம் . . . . . . . . . . . !

தென்னை மரங்கள் சூழ்ந்து, பச்சைப் பசேலென அழகு கொஞ்சும் பொள்ளாச்சி என்பது இன்று அச்சமூட்டும் பொல்லாச்சியாக நம் மனதில் அழுத்தமாக அமரும் நிலை உருவாகியுள்ளது.

கூட்டு பாலியல் வன்முறை மற்றும் அது பற்றிய வீடியோ பகிர்வால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ணிக்கை கிட்டத்தட்ட 200 க்கு மேல் உள்ளதாக செய்திகள் வருகின்றன . முறையாக விசாரணை நடந்தால் தான் சரியான எண்ணிக்கையே தெரிய வரும் .

முகநூல் தொடர்பை பயன்படுத்தி நட்பாகி அதன் உள்பெட்டி தகவல் பரிமாற்றம் மூலம் நேரடி தொடர்புக்கு வழி செய்துள்ளனர். இதற்காக பெண்கள் பெயரில் போலிக் கணக்குகள் தொடங்குவது , சமவயதுப் பெண்கள் போல நடந்து அவர்களின் உள் மன எண்ணங்களை அறிவது என பலவகை வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளன .

’உங்களை நம்பிதான வந்தேன்‘ என்று இளம் பெண்ணின் கதறல் வீடியோ அனைத்து குடும்பங்களையும் அதிரச் செய்துள்ளது . கிட்டத்தட்ட 1100 வீடியோக்கள் வரை உருவாக்கி பகிரப் பட்டுள்ளதாகத் தெரிகிறது .

கடந்த பிப்ரவரி 26 ம் தேதி இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . பாதிககப்பட்டவரின் பெயர் முகவரி போலீஸால் கசிய விடப்பட்டுள்ள நிலையில் எதிரிகளால் அந்தப் பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்டுள்ளார் .

இந்த செய்தி அறிந்ததும் கோவை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்து கட்சியினரை திரட்டி 04.03.2019 அன்று ஆர்ப்பாட்டம் செய்தும், காவல்துறை கண்காளிப்பாளரிடம் 07.03.2019 முதல் புகார் மனு அளித்தும் , என பலவிதங்களில் பெரும் அழுத்தம் தந்த பிறகு முதல் குற்றவாளியாக திருநாவுக்கரசு கைது செய்யப்படுகிறான் .

பிறகு அவன் வெளியிட்ட ஆடியோ கேட்டதும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எங்கள் கட்சிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கோவை மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் மனு அளிக்கிறார்.

புகார் தந்த பெண்ணின் சகோதரனை தாக்கிய குற்றத்தில் அதிமுக பிரமுகர் ”பார்” நாகராஜன் இன்றைய சமூகவலைதள நெருக்கடிக்கு பிறகு கைது செய்யப்பட்டு கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

மகன் பெயரும் இதில் அடிபடுவதன் மூலம் சந்தேக வலையில் விழுந்துள்ள பொள்ளாச்சி யை சேர்ந்த அரசியல் பிரமுகம், இன்றைய எதிர்கட்சி தலைவர் அறிக்கை மற்றும் போராட்ட அறிவிப்பிற்கு பின் அரசியல்வாதிகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று எஸ் பி மூலம் தீர்ப்பெழுத வைக்கிறார் . தான் தான் பாதிக்கப்பட்ட பெண் புகாரளிக்க உதவியது என்று தொலைபேசி மூலம் டிவியில் அலருகிறார் .

இத்தனைக்குப் பிறகு ஏழாண்டு காலமாக நடந்து வருவதாகச் சொல்லப் படும் இக்கொடூரம் அம்பலத்திற்கு வந்து தொலைக்காட்சிகளின் விவாத பொருளாக மாறியுள்ளது . பாரபட்சமில்லாத நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்பும் நிலையில் டாஸ்மாக் போராட்டத்தின் போது பெண்ணைத் தாக்கிய புகழ்பெற்று பதவி உயர்வும் பெற்ற நியாயவாதி காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனின் பேட்டி ஏராளமான ஐயங்களை உருவாக்குகிறது .

இந்நிலையில் இப்பிரச்னையை விசாரிக்க நேர்மையான பெண் அதிகாரி ஒருவரை நியமித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமடையும் விதத்தில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்வதும், இதற்கு பின்புலமாக இருந்து லாபமடைந்த பெரிய மனிதர்கள் யாராக இருப்பினும் கண்டறிந்து உரிய நடவடிக்கையின் மூலம் மக்களுக்கு அடையாளப் படுத்துவதும் அவசியம். மாநில மகளிர் ஆணையமும் தேசிய ஆணையமும் உடனடியாக இதன் மீது கவனம் செலுத்த வேண்டும்.

மாரியாத்தாளும் காளியாத்தாளும் நிறைந்த, பண்ணையார்தனத்திற்கு பேர் போன இந்த கிராமப் பகுதி சமையலறையும் படுக்கையறையும் தான் பெண்களுக்கானது என்பதில் தெளிவாக உள்ள அதே நேரம் ‘எது செய்தாலும் அவன் ஆம்பிளை ‘ என்று காப்பதிலும் பேர் பெற்றது

இப்போது தான் வெளியுலகை எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கும் பெண்கள் இப்படிப்பட்ட பிரச்னைகளை எதிர்கொள்வது சவாலான விசயம்! பிரச்னைகள் வெளியில் தெரியத் துவங்கியதுமே வழக்கம் போல் ஒரு கும்பல் பெண்களுக்கு கல்வி எதற்கு ? செல்போன் எதற்கு ? என பல்லவி பாட ஆரம்பித்து விட்டனர் .

இன்றைய உலகில் இது போன்ற பிரச்னைகள் என்பது மிகப் பெரிய வலைப்பின்னலோடு அதிகார வர்க்கம் , ஆளும் கட்சிகள் , கோடிக் கணக்கில் பணம் புழங்கும் வர்த்தகம் , பெரிய மனிதர்களின் பலவீனத்தை ஈடுசெய்து காரியம் சாதிக்கும் கருவி என பலவிதங்களில் இயங்கக் கூடிய விசயம் !

எனவே இதை பெண்களின் ஒழுக்கத்துடன் மட்டும் இணைத்துப் பார்ப்பதென்பது பிரச்னையின் தீவிரத்தை உணராமல் மிக மிக சிறுமைப் படுத்திப் பார்ப்பதாகும்.

கல்லூரி மாணவிகளை ஆசை காட்டி தவறான பாதைக்கு இழுத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியின் கைது நடவடிக்கையை இணைத்து சிந்தித்தால், அவர் கூறிய மேலிடம் பற்றி எந்த விசாரணையும் கைது நடவடிக்கையும் இதுவரை இல்லை என்பதையும் உணர்ந்தால் நமக்கு பல விசயங்கள் புலப்படும் .

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் தன் புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்ட விசயத்தில் தான் புகார் செய்த பின்னும் அதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மட்டுமல்ல பெற்றோரே தன்னை நம்பவில்லை என்பதும் மனமுடைந்து தன்னையே மாய்த்துக் கொள்ளக் காரணமானது !

நாட்டையே உலுக்கியிருக்க வேண்டிய நூற்றுக்கணக்கான பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள பாலியல் கொடூரத்தில் நியாயம் கிடைக்க இதையும் இணைத்தே சிந்திப்போம் !

ஓரிரு என்கவுண்டரில் பொது சமூகத்தின் மனக்கொதிப்பு அடக்கப்படலாம், ஆனால் அது மட்டுமே நிரந்தர தீர்வாகி விடாது.

நீதி கேட்டு மாதர் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்கு கை கொடுப்போம் ! வழக்கின் விசாரணை சரியான பாதையில் விரைவாக நடக்க குரல் கொடுப்போம் ! ஆண் குழந்தைகளை சமத்துவ பார்வையுடன் வளர்க்க முன் வருவோம் !

– ஆர்.செம்மலர்.

Related Posts