பிற

பொள்ளாச்சி கூட்டு வன்புணர்வு – யோனிப் பூட்டு அறிவுரைகளும்!ஆணாதிக்க சைக்கோக்களும்!!

ஒரு ரேப் போதுமாக இருக்கிறது தங்களுடைய துறுப்பிடித்த யோனிப் பூட்டு அறிவுரைகளோடு ஆணாதிக்க சைக்கோக்கள் கிளம்ப… பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாக கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே… ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்கு போகாதே, ஷால் போடு… எவ்வளவு அறிவுரை.

அறிவுரைகளைக்காண அருவருப்பாக இருக்கிறது. இதன் தொடர்ச்சிதான் பெண்கள் கல்லூரிக்கு போகக்கூடாது, காதல் பண்ணக்கூடாது, புத்தகம் படிக்க கூடாது மாதிரியான வக்கிர எண்ணங்கள் எல்லாமே. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என இந்த உலகமகா உத்தம ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் . 24 மணிநேரமும் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஃப்ரிட்ஜூக்குள் போய் கால்மடக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டுமா? வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடவேண்டுமா.

பர்தா போட்டுக்கொண்டால் ரேப் நடக்காது என்று சொல்கிற மதவாத முட்டாள்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு. ஒட்டுமொத்த ஆண்சமூகமுமே குற்றவாளிகள் என்று சித்தரிப்பது இன்னொருவகை பைத்தியகாரத்தனம். எத்தனையோ ஆண் குற்றவாளிகள் இருந்தும் இரண்டு பாலினத்தவர்களிடையேயான பரஸ்பர நம்பிக்கையில்தான் பல கோடி ஆண்டுகளாக இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதை சாக்காக வைத்துக்கொண்டு அடிப்படைவாத அறிவிலிகளைப்போல காதலுக்கு எதிராக ஆண்பெண் நட்புக்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுப்பது இன்னும் கேவலம்…  பாதுகாப்பாக இரு என்று அறிவுரை சொல்வது வேறு… ஆனால் குனிந்த தலை நிமிராமல் கட்டைவிரல் பார்த்து நட, அடக்க ஒடுக்கமாக இரு என்பது வேறு. அடிப்படைவாத மயிராண்டிகள் சொல்வது முடங்கிவிடு என்பதுதான்.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் பெரும்பாலான ஒற்றுமை ஒன்று உண்டு. இந்த அயோக்கியர்களின் முக்கியமான ஆயுதமே குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர்கள் மீது இருக்கிற அச்சம்தான். உலகிலேயே குழந்தைகள் தன் வீட்டில் போய் எதையாவது சொன்னால் குழந்தைகளையே சந்தேகித்து அவர்களையே குற்றவாளியாக்கி மிரட்டுகிற வினோதமான சமூகம் நம்முடையது. இந்த பாலியல் சைக்கோக்கள் இதைத்தான் பயன்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளின் தவறுகளுக்காக காத்திருப்பார்கள். அந்த தவறை பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுவார்கள். தங்களிடம் பணியவைப்பார்கள். இதில் அந்தக்குழந்தையின் குற்றம் என்ன இருக்கிறது. பொள்ளாச்சியில் நடந்திருப்பதும் அவ்வகை குற்றமே.

குழந்தைகள் மீதான குற்றங்களில் மட்டுமல்ல பெண்கள் மீது நடக்கிற பெரும்பான்மை சைபர் குற்றங்களில் நடப்பது இதுதான்.  பொள்ளாச்சி வன்கொடுமையில் நடந்ததும் இவ்வகை குற்றம்தான். இந்த வீடியோவை வெளியிட்டால், இந்த புகைப்படத்தை இணையத்தில் பரவவிட்டால் வீட்டில் என்ன சொல்வார்களோ, சமூகம் தன்னை என்ன நினைக்குமோ என்கிற அச்சம்தான் இந்தப்பெண்களை எல்லாம் முடக்கிவிடுகிறது. இதுதான் இந்த குற்றவாளிகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்தியாவில் பாலியல் வன்கொடுமை ஒன்றில் மட்டும்தான் குற்றவாளிகளை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவரை தண்டிக்கிற வினோத வழக்கமெல்லாம் வைத்திருக்கிறோம். Victim Shamingஐ ஒழிக்காமல் ஒரு மண்ணாங்கட்டி மாற்றத்தையும் நம்மால் உருவாக்கிவிட முடியாது.

நாம் தொடங்கவேண்டிய இடம் வீடு. குழந்தைகள் எத்தகைய தவறு செய்திருந்தாலும் அதை வீட்டில் வந்து உரையாடுவதற்கான வெளியை உருவாக்க வேண்டும். நாம் சொன்னால் பெற்றோர்கள் காதுகொடுத்து கேட்பார்கள் என்கிற நம்பிக்கையை விதைக்கவேண்டும். நாம் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவார்களோ என்கிற அச்சம் உருவாகிவிடாத படி சிறுவயதிலிருந்தே வளர்க்க வேண்டும். பாலின பேதங்களின்றி வளர்க்க வேண்டும். ஆம்பளை சிங்கம், பொம்பளை மயில்… என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருக்க கூடாது.

தவறு செய்தாலும் அதை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பையும், பரவால்ல பாத்துக்கலாம் என்று தோள் தட்டிக்கொடுக்கிற நம்பிக்கையும்தான் இவ்வகை குற்றங்களை தடுக்கும். ஏனெனில் என்னதான் கல்வி வந்தாலும் இன்னமும் இங்கே சாதி இருக்கிறது, மதவெறி இருக்கிறது, ஆணாதிக்கம் இருக்கிறது. அதற்கெல்லாம் மேல் இவ்வகை பாலியல் மனநோயாளிகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். இருப்பார்கள்.

– அதிஷா.

 


– அதிஷா.

Related Posts