அரசியல்

சாதியாதிக்க அரசியலும் தொட்டியபட்டி வன்முறையும் – ஒரு கள ஆய்வு . . . . . . !

2017, மார்ச் 30 , மாலை 6 மணி அளவில், ராஜபாளையம் பக்கத்தில் உள்ள தொட்டியபட்டி கிராமத்தில், அருந்ததியர் காலனி  வீடுகள் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டன. தமிழக வரலாற்றில் இன்னொரு கருப்பு நாள்.

ஏப்ரல் 1 அன்று நாங்கள் அங்கு சென்று அறிந்த சம்பவத்தின் பின்னணி,

“”தொட்டியபட்டி கிராமம், கொத்தங்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது. தனித்தொகுதி. தொட்டியபட்டியில் ஏறக்குறைய 400 குடும்பங்கள் கம்பளத்து நாயுடு சாதியினர். 50 குடும்பங்கள் அருந்ததியினர்.

கடந்த 30.03.2017 அன்று,  அருந்ததியினர் காலனி குடியிருப்பில் உள்ள 43 வீடுகளை அடித்து நொறுக்கியும், 3 வீடுகளை எரித்தும், சோற்றுப் பானை, குடங்கள், டிவி, மின்விசிறி என அனைத்தையும் சிதைத்தும், சிறுவர்கள், சிறுமிகள், கைகால் விளங்காத முதியவர் என அனைவரையும் தாக்கியும் ஒரு சாதிவெறியாட்டம் நிகழ்ந்திருக்கிறது.

ஊருக்கு வெளியே இருக்கும் சுடுகாட்டில் ஒரு தண்ணீர் தொட்டியும், குழாயும் இருக்கின்றன. குடிதண்ணீர் குழாய் வசதி ஊர் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் கட்டுப்பாடு அதாவது தண்ணீர் திறந்துவிடும் நேரம், சாவி போன்றவை நாயுடு சமூகத்தினரிடம் இருக்கிறது. முறைவைத்து தண்ணீர் பிடிப்பதில் நீண்டநாட்களாகவே பிரச்சினை இருப்பதை அறிய முடிகிறது. அடிக்கடி இந்தக் காலனி பகுதிகளில் தண்ணீர் குழாய் பழுது என்பதாலோ, வேறு சில ஆதிக்கத் திமிராலோ தண்ணீர் வருவதில்லை. ஆகவே, இந்த மக்கள், பக்கத்து ஊரான வன்னியம்பட்டியில், மினிபஸ்ஸில் சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள். பிற பயன்பாட்டுக்காக, சுடுகாட்டில் இருக்கிற குழாயைப் பயன்படுத்துகிறார்கள்.

கண்மாய் அருகே குடியிருக்கும் இக்குடும்பங்கள் பலவற்றுக்குப் பட்டா இல்லை. பத்துக்கும் குறைவான மக்கள் ஒப்பந்தத் துப்புறவு பணியாளர்களாகவும், பிறர் அருகில் உள்ள மில்களிலும் வேலைக்குச் செல்கின்றனர். தனித்தொகுதி என்றாலும் இந்தத் தொட்டியபட்டியில் இவர்களது வாக்கு 90 மட்டுமே. கடந்த ஊராட்சியின் போது சமுதாயக்கூடம் ஒன்று, இந்தக் காலனிக்கு அருகில் கட்டப்பட்டிருக்கிறது. அதை நாயுடு சமூக மக்கள் மட்டுமே பயன்படுத்துவதாகவும், காலனி மக்களை அனுமதிக்கவில்லை என்பதும் ஏற்கனவே இங்கு பிரச்சனையாக இருந்திருக்கிறது.
பள்ளிகளில் பயிலும் அருந்ததியின மாணவர்களைக் கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்வது, சுடுகாட்டுச் சடங்குகளில் அருந்ததியின மக்களை நிர்பந்திப்பது என்று ஏற்கனவே, அடக்குமுறைகளை இம்மக்கள் எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். காலனியில் தனியாகக் கடைகள் ஏதுமில்லை. இவர்கள் நாயுடுகள் பகுதிக் கடைகளுக்கு வரக்கூடாது என்று கட்டுமானம் இருக்கிறது. அருந்ததி இனக் குழந்தைகள் பக்கத்து ஊர்களுக்குச் சென்று தின்பண்டங்கள் வாங்குவதும், அன்றாடத் தேவைகளுக்கும் இம்மக்கள் பக்கத்து ஊருக்குமே செல்கின்றனர்.  ரேசன் கடைகளுக்குக் கூட, குறிப்பிட்ட ஒரு நாள் தவிர்த்து, பிற நாட்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் தீண்டாமைச் சுவர் ஒன்று, கட்டப்பட்டு, எதிர்ப்பு வலுக்கும்போது, சமையற்கூடமாக மாற்றப்பட்டு, அங்கும் அருந்ததியினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இவ்வாறாக, ஊருக்குள் அனுமதி மறுப்பு, சமுதாயக்கூட அனுமதி மறுப்பு, பள்ளி, ரேசன்கடையில் பாரபட்சம், சுடுகாட்டிலும் நிழற்குடை இல்லாத தனிஇடம் என்று பிரச்சினைகள் இருந்திருக்கின்றன.குடி தண்ணீர் பிரச்சினை, அதிகபட்சமாக, புழங்கு தண்ணீரிலும் அடக்குமுறை.

கடந்த 30.03.2017 அன்று, சுடுகாட்டுக் குழாயில், காலையில் நீர் பிடிக்கவேண்டிய, காலனி மக்கள், வளைகாப்பு ஒன்றுக்குச் சென்றதனால், மாலை செல்கின்றனர். காலையில் தான் வரவேண்டும் இப்போது இல்லை என்று நாயுடு சமூகத்தினர், காலனி மக்களின் குடங்களை வீசி எறிந்தும், விரட்டியும் இருக்கின்றனர். வாக்குவாதம்!

சற்றுநேரத்தில், நாயுடு ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், உருட்டுக்கட்டை, கம்பு, கற்கள்,  மண்ணெண்ணெய்க் கேனுடன், காலனிக்குள் நுழைந்து, வீடுகளை நொறுக்கியும், பண்டபாத்திரங்களை உடைத்தும், டிவி ஒன்றைத் தூக்கிச் சென்றும், மூன்று வீடுகள், சின்னசின்ன கொட்டகைகளை எரித்தும், பெண்கள் இருவர், முதியவர், குழந்தைகளை அடித்தும், வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியதாக அம்மக்களிடம் பேசியதிலிருந்து அறியமுடிந்தது.””

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சி.பி.எம், எல்.ஐ.சி ஊழியர் சங்கம், வி.சி.க, ஆதி தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகளும் கண்டனம் தெரிவித்து, பலவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றன.

சாதி ஆயுதத்தை முன்னிறுத்தி, ஆதிக்கம் நிறுவ, 263 வீடுகளைக் கொளுத்தி, வன்முறை வெறியாட்டம் நடந்த நாயக்கன் கொட்டாயை மறந்திருக்க மாட்டோம். கொடைக்காரி அம்மன் திருவிழாவில், தலித் மக்களின் உரிமை மறுப்புக்கு எதிரான குரலை, இளவரசன் திவ்யா விவகாரத்தைச் சாக்காக வைத்து,  ஒடுக்கியது சாதி ஆதிக்கம். தொட்டியபட்டியிலும் இதேபோல் தான் சாதி ஆதிக்கம் தன் அதிகாரத்தை நிறுவ வெறியாட்டம் நடத்தியிருக்கிறது.

“நிலவுகிற அமைப்பு முறையில் எந்தவொரு நிகழ்வும் தற்செயலானது இல்லை. இந்நிகழ்வுகளுக்கான சமூகத்தின் பெரும்பான்மை  ஒப்புதலை, ஆளும் வர்க்கம் எந்த வகையிலாவது பெற்றுவிடுகிறது “

இதுபோன்ற ஊர் எரிப்பு சம்பவங்களை, பண்பாட்டு அடாவடியாகவோ, மான – கௌரவ விவகாரங்களாகவோ மட்டும் பேசி, நகர முடியாது. ஆதிக்கச் சாதிகள் (அ) சாதி ஆதிக்கத்தின் அரசியல், சாதி அரசியல் கட்சிகளின் தேசிய அரசியல் நகர்வு, தொண்ணூறுகளுக்குப் பிறகான தலித் அரசியல் எழுச்சி ஆகியனவற்றையும் இதனோடு பொருத்தி ஆய்வு வேண்டும். நாயக்கன் கொட்டாய் சம்பவத்துக்குப் பிறகு, பாமக பெற்ற அரசியல் வெற்றி இங்கே கவனம் பெறுகிறது. இதன் பின்னால் இருக்கிற வன்னிய முதலாளிகளின் ஆதாயம், உழைக்கும் வன்னிய மக்களின் பொருளாதாரச் சிக்கல்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதான உழைப்புச் சுரண்டல் அனைத்தையும் கணக்கில்கொண்டு, இவற்றை அணுகவேண்டும்.

“அரசு” நன்றாக வளர்ச்சி அடைந்திருக்கிற தமிழ்நாட்டில், போலீஸ், நீதித்துறை ஆகியவற்றை சட்டைசெய்யாமல், தண்டனை தருகிற அதிகாரத்தை இச்சாதிகள் மீளவும் எடுத்துக்கொண்டு, நிலமானியச் சிந்தனையைத் தக்கவைத்து, ஆளும் வர்க்கச் சேவகத்தைச் செய்கின்றன.

பெரும்பான்மை ஊடகங்களும் இந்தத் தொட்டியப்பட்டி வன்முறையை “குடி தண்ணீர்” பிரச்சனை என்றே முன்வைக்கின்றன. ஆனால், நிலப்பிரச்சினை, ஊருக்குள் கடைகள் மற்றும் ரேசன் கடைகளில் பாகுபாடு, சமுதாயக்கூடம் அனுமதி மறுப்பு, சுடுகாட்டிலும் பாகுபாடு போன்ற கட்டுப்பாடுகளுக்கு எதிரான அருந்ததியினரின் அரசியல் எழுச்சியை, சாதி ஆதிக்கம் ஓங்கி அடித்து ஒடுக்கி இருக்கிறது. இதன் பின்னால் இருப்பது  பொருளாதார நலன்களே.

நிலமில்லாத தொட்டியபட்டி அருந்ததியினர், மில் வேலைகளுக்கும் வேறு சில வேலைகளுக்கும் செல்கின்றனர். இவர்களின் தொழில் பின்புலம் ஊர்ச்சாதியினரைச் சார்ந்திருக்கவில்லை. இந்தத் தற்சார்பு வாழ்வியல் முறையினை, நிலவுடைமைச் சாதியினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை . சாதி இழிவு என்று இவ்வன்முறையைக் குவியப்படுத்தி முடித்துவிடுவது எதனையும் மாற்றிவிடாது. இழிவு படுத்தும் நோக்கம் மட்டுமே என்றால் உடைமைகள் ஏன்  சிதைக்கப்பட்டன ? ஆதிக்கத்தை எதிர்க்கும் உழைக்கும் மக்களைப் பொருளாதாரத் தளத்தில் முடக்கவே இப்பெரும் தாக்குதல் .

சாதியப்படிநிலை அடுக்கின் கீழே உள்ள அருந்ததியினர் சிக்கலை அரசியலாக அணுகவேண்டும் . பள்ளர், பறையர் அரசியல் எழுச்சியைத் தொடர்ந்து அருந்ததியினரும் அரசியல் வெளியைத் தெரிவு செய்யும் போதுதான் இவ்வன்முறைகள் கூர்மையடைகின்றன.

ஒரே மொழி(தெலுங்கு) பேசும் இரண்டு சாதியினரின் வாழ்வியல், தொழில், உற்பத்தி வெவ்வேறாக இருக்கும்போது அங்கு நிலவுகிற முரண்களை ஆளும் வர்க்கம் எவ்வாறு  தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதைப் பேசவேண்டும் . நிலமானிய முறைகளிலிருந்து முதலாளிய வளர்ச்சிப் போக்கில்,  இச்சாதிகளை ஆட்டுவிக்கும் ஆளும்வர்க்கத்தின் போக்கை, ஆதாயத்தை அம்பலப்படுத்திட வேண்டும்.

ஒடுக்குகிற ஆளும் பாசிசம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்களை சட்டம் ஒழுங்கு சிக்கலாகவே கட்டமைக்கும் . தொட்டியபட்டியில் குவிக்கப்பட்ட போலிஸ் எண்ணிக்கையும்,  இருதரப்பினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளும், ஊடகங்களின் பாராமுகமும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

உழைக்கும் மக்களின் அரசியல் வெளியை அடக்க எடுக்கப்படும் ஆயுதமான  சாதிய  அரசியலை, அடையாள அரசியல் மூலமாகவோ, NGO அரசியல் மூலமாகவோ வென்றுவிட முடியாது . நிலவுகிற அரசியல் அமைப்பு முறை, சாதி,  மத அதிகாரங்களைத் தக்கவைத்து ஆளும் வர்க்கத்திற்குச் சேவகம் செய்யும் வகைமையானது.  இதனுள் நின்று ஏதோவொரு வகையில் இதனை முட்டுக்கொடுத்துவிட்டு,  சீர்திருத்த நடைமுறைகளாலோ அடையாளப் போராட்டங்களாலோ இவ்வமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்துவிட முடியாது.

மாபெரும் மாற்றத்துக்குச் சனநாயகச் சக்திகள், உழைக்கும் மக்களுடன் அணியமாவதை மிகத்துல்லியமாக முன்னெடுக்க வேண்டும்.

 

– ரபீக் ராஜா

Related Posts