தமிழ் சினிமா

“அறம்” பேசும் அரசியல் . . . . . . .

சினிமா கலைகளின் உச்ச வடிவம். அதன் மொழி, சாகசங்களை நிகழ்த்தவல்லது. ஒளிநிழல் ஊடகமான சினிமா, இருட்டின் மீது பேரொளியைப் பாய்ச்சவல்லது.

எந்தக் கலை வடிவமும் மக்களுக்கானது. மக்களின் குரலை, புறநிலை எதார்த்தத்தை, அழகியலோடு காட்சிப்படுத்தும் இந்த சினிமா மக்களுக்கான மீடியம். புராணக்கதைகள் தொடங்கி, சரித்திரம், சாகசம், அடையாளம், பிரச்சாரம், அரசியல் என தமிழ்சினிமாவை  வகைப்படுத்தலாம்.

“அறம்” அந்த வகையில் அரசியல் சினிமா

படைப்பு முன்வைக்கும் அரசியலைவிட, படைப்பாளியின் அரசியலோ, படைப்புக்குப் பின்னுள்ள அரசியலோ பேசுபொருள் இல்லை. படைப்பின் அரசியலே பிரதானம். அந்த வகையில் “அறம்” பேசும் அரசியலை இங்கு விவாதிக்கலாம்.

“அறம்”, வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் கனதியானது. கடந்த தசாப்தங்களில் இப்படம்  அரசியலாக முக்கியத்துவம் வாய்ந்தது.

“அறம்” பேசும் திரைமொழி, ஆங்காங்கே வசன மொழி, பிரச்சார மொழி தவிர்த்து, அழகியலானது. இசை, கேமரா, கேமரா கோணங்கள், எடிட்டிங் என அனைத்தும் உள்ளடக்கத்துக்குத் தோதாக அமைந்திருக்கின்றன.

கணவன் மனைவி காதல், நீச்சல் மகன், பாம்புக்கும் அஞ்சாத மகள், வலசை போகும் பறவைகள், விரிந்து வறண்ட முட்காடு என சினிமா கச்சிதமாக, காட்சிகள் விரிகின்றன. நடிகர்களின் உடல்மொழி,  இயல்பான தோற்றம், படத்துக்கு வலுசேர்க்கின்றன.  பிரச்சார மொழியை வெகுவாகக் குறைத்து, திரைமொழியில் அரசியல் பேசுகிறது “அறம்”. பிளாஸ்பேக்காக விரியும் திரை, ஒரு இடத்தில் கூட வீழாமல், நேர்க்கோடாக நீண்டு முடிகிறது.

“அறம்” பேசும் அரசியல் முக்கியத்துவம் பெறுகிற புள்ளி, ‘எது மக்களுக்கான அரசியல்’ என்கிற உரையாடலை, மதிவதனி வழியாகப் பார்வையாளர்களை நோக்கி நகர்த்துவது தான்!

வல்லரசு, ஊழல் அரசு, அலட்சிய அரசு என முதலாளித்துவ அரசின் வர்க்கச்சார்பை, படம் முழுவதும் உரித்துக்காட்டுகிறது “அறம்”. அது வசனங்களாகவும்,  காட்சிகளாகவும் கைகோர்த்து நம்மைப் பேசவைக்கிறது. “ஒன்னுக்கு வருதுப்பா!”

“அப்படியே போடாம்மா” போன்ற வசனங்கள் பெண் குழந்தைகளின் சிக்கலைப் பேசுகின்றன, என்றால், காட்டில் பாம்பின் சட்டை உரிக்கப்பட்ட காட்சியில், பாலித்தீன் கவரில் டீ வாங்கி குடிப்பது, சூழலிய நாசத்தைப் போகிறபோக்கில் பேசுகிறது.

தண்ணீர் அரசியலை நேராகவும் கூராகவும் பேசுகிற “அறம்”, எளிய மக்கள் படும்பாட்டைச் சற்று உரக்கப் பேசுகிறது.

சமகால அரசியல் சிக்கலைக் காட்சிகளாகவும், வசனங்களாகவும் பேசுகிற அறத்தின் மைய அரசியல் சரடு, “எது மக்களுக்கான அரசியல்?” “எது மாற்றரசியல்?” என்பதுதான்.

ஆட்சியர் மதிவதனி மிகத்தீர்மானமாக, தனது பதவியைத் தூக்கி எறியும் முடிவோடு, உயர் விசாரணைக்கு வருகிறார். விசாரணையின் போது இரண்டு நாள் பிளாஸ்பேக்காக வரும், சினிமாவில், “எது சனநாயகம்? எது அரசாங்கம்? எது மக்கள் அரசியல்” என்று மதிவதனி தனக்குள்ளும், வெளியிலும் பேசுகிறார். “அரசு அதிகாரிகளா?, அரசியல்வாதிகளா? யார்  அவலங்களுக்குப் பொறுப்பு?” என்பதை, மதிவதனி வழியாக இயக்குனர் அலசுகிறார். கவுன்சிலரிலிருந்து, எம்எல்ஏ, அமைச்சர் வரை தோலுரிக்கும் “அறம்”, விஏஓ விலிருந்து, போலிஸ் அதிகாரி, ஐஏஎஸ் மட்டம்வரை அவர்களையும் அவர்களின் எல்லையையும் சாடுகிறது. கூடவே கொஞ்சம் கரிசனத்துடன் ஆம்ஆத்மி அல்லது சகாயத்தின் மக்கள் பாதை அரசியலைப் பேசுவதாகப்படுகிறது. சிவகாமி ஐஏஎஸை நினைவுபடுத்திவிடக்கூடாதென,  பெயரை மதிவதனியாக வைத்தாரோ என்னவோ தெரியவில்லை! அதுவும் ஓர் அரசியல் குறியீடு தான். தண்ணீர் அரசியல், நீச்சல், கபடி, கல்விக்குப் பின்னுள்ள கார்ப்பரேட் அரசியலையும் பேசுகிற அறம், நிலவுகிற ஆளும்வர்க்க அரசியல் மோசடியைப் பேசி ஒரு அரசியல் சினிமாவாகிறது.

“முதலாளித்துவ அறம் ஒருவரை வாழவைக்காது” என்பதைப் பேசுகிற “அறம்” பாட்டாளி வர்க்க அறம் அல்லது அரசியலை, யூகமாக வைக்கிறது. ஆட்சியர் பதவியைத் துறக்கும் மதிவதனியின் அடுத்த பயணத்தை அவரவர் சாய்ஸ்க்கு விட்டிருப்பது  இயக்குனரின் நிர்பந்தம், அரசியல், அரசியல் போதாமை என எதுவாகவோ, மூன்றுமாகவோ இருக்கலாம். இருப்பதை அம்பலப்படுத்தும் துணிச்சல் இருக்கிற இயக்குனரின் அரசியல் பார்வை பூடகமாகவே இருந்தாலும், சாகச அரசியலை, அடையாள அரசியலை முன்வைக்காமல், மக்கள் பிரச்சினைகளுக்கு  ஒரே காரணம், “கார்ப்பரேட் ஆதரவு அரசு தான்” என அரசை நேரடியாக எதிர் நிறுத்துகிறார். அந்த. வகையில் இப்படம் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

– அ.ரபீக் ராஜா.

 

Related Posts