பிற

ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்குண்மை தெரிந்து சொல்வேன் ….. பாரதி

‘ பாரதி ‘ எனும் பெயர் உச்சரித்த கணம் நினைவில் வருவது ‘ எட்டையபுரத்தானுக்கிணையான புலவனை எங்காச்சும் பார்த்தியா மாடத்தி ‘ எனும் கரிசல் கிருஷ்ணசாமியின் கம்பீரமும் மென்மையும் குழைந்த குரலில் ஒலிக்கும் பாடல் வரியே !

விநாயகரையும் சக்தியையும் காளியையும் போற்றி எழுதி உருவ வழிபாட்டில் ஆர்வம் கொண்ட பக்திமானாக அவரை அடையாளம் காட்டும் கவிதைகளே பின்னர் உண்மையும் அறிவும் அன்பும் இயற்கையுமே கடவுள் என எழுதியதில் அவரின் பரிணாம வளர்ச்சி நமக்கு அடையாளமாகிறது.

குயில்பாட்டின் அழகும், நண்பன் காதலன் காதலி தாய் தோழி என பல வகைகளில் கண்ணனை உருவகப்படுத்தி எழுதிய கவிதைகளும் அவரின் கற்பனை வளத்திற்கு உதாரணங்களாக திகழ்பவை.

கொஞ்சு மாதரும் கூட்டுணுங்கள்ளும் இச்சகத்தில் இன்பங்களன்றோ ? இவற்றின் நல்லின்பம் வேறொன்றுமுண்டோ ? என முடியும் கவிதை முந்திரி மற்றும் சுவை மிக்க பழத்தினின்று மது வடித்து பாட்டுபாடிக் கொண்டே மதுவுண்ணும் அழகைப் பற்றி எழுதப்பட்ட அழகிய கவிதை .

நாட்டு விடுதலைக்காக ஏராளமான தனிப்பாடல்கள் எழுதினாலும் அதற்கு மகுடம் சூட்டியது போல் குறுநில மன்னர்களின் விருப்பு வெறுப்பெனும் சூதாட்டத்தால் அன்னியனியனிடம் நாடு அடகு போனதை பொறுக்காமல் பாவி துச்சாதனன் செந்நீர் அந்தப் பாழ் துரியோதனன் ஆக்கை ரத்தம் மேவி குழல் முடிப்பேன் என பாஞ்சாலியை சபதம் செய்ய வைத்ததன் மூலம் விடுதலை இல்லாமல் ஓய்வில்லை எனும் கருத்தை ஆழப்பதித்து ஏகாதிபத்திய எதிர்ப்புணர்விற்கு சிறப்பாக தீனி போடுகிறார்.

சுதேசமித்திரன் , இந்தியா போன்ற பத்திரிக்கைகளில் ஆசிரியராக இருந்து அனல் பறக்கும் கட்டுரைகள் எழுதி, ஆட்சியாளர்களை விமர்சிக்கும் கார்ட்டூன்களை வரைந்ததற்காக பிரிட்டிஷாரின் தேடுதல் வேட்டைக்காளாகி கடும் அடக்குமுறைகளை சந்தித்து, பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் வேளையில் போராட்டக் கவிஞராகிறார்.

அச்சம் தவிர் , உடலினை உறுதி செய் , கீழோர்க்கு அஞ்சேல் , சரித்திர தேர்ச்சி கொள் , தையலை உயர்வு செய் என புதுமை ஆத்திச்சூடியும் , தெய்வம் பலப்பல சொல்லி பகை தீயை வளர்ப்பவர் மூடர் என கொட்டுமுரசு பாடலும் , சாதிகள் இல்லையடி பாப்பா , பாதகம் செய்பவரை கண்டால் நாம் பயங்கொள்ளலாகாது பாப்பா எனும் பாப்பா பாடலும் மிக எளிய முறையில் மாற்று சிந்தனையை வலியுறுத்தும் பாடல்களாகின.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி எனக் கேட்கும் கவிஞர்தான் மனிதரில் ஆயிரம் ஜாதி எனும் வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை என எழுதுகிறார்.

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃதை பொதுவில் வைப்போம் , தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம் , நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் , ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடி பெண்ணின் குணங்களாம் என்பன போன்ற கவிதை வரிகள் பெண்களைப் பற்றிய பார்வையில் அடிப்படை மாற்றம் கொண்ட கவிதைகள்.

பாரதியின் போதைப் பழக்கம் , செல்லம்மாவின் உணர்வைப் புரிந்து நடந்தாரா , சாதிய எதிர்ப்பு சிந்தனையில் சரியான பார்வையுடன் இருந்தாரா என்பன போன்ற பல அம்சங்கள் குறித்து பலவிதமான கருத்தோட்டங்கள் இருப்பதையும் அவரைப் பற்றிய பலரின் விமர்சன எழுத்துகளில் பார்க்கிறோம்

இவையெல்லாம் தொழில்நுட்ப அறிவு உட்பட விஞ்ஞான அறிவின் வரம்பு உயர்ந்துள்ள நிலையில் கூட சாதியமும் பெண்ணடிமைத்தனமும் ஏகாதிபத்திய ஆதரவு சிந்தனைகளும் வலுவாக நம்மை தாக்கிக் கொண்டுள்ள இந்த காலத்திலிருந்து பார்ப்பவை. இதைத் தாண்டி 1882 ல் பிறந்து 1921 ல் மறைந்த அவரின் காலகட்டத்துடன் இணைத்து அவரின் வாழ்வைப் பார்க்கும் போதுதான் அவர் எழுத்துகளின் மதிப்பை நாம் சரியாக உணர முடியும்

சாதி மற்றும் பெண்ணடிமைத்தனத்தை கட்டமைத்து காத்து வரும் பார்ப்பனிய சிந்தனையின் அன்றாட நடவடிக்கையான கடும் ஆச்சார அனுஷ்டானங்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்து , அதற்கு மாற்றான சிந்தனையை ஏற்க இயலாது அதில் ஊறித் தடுமாறி நிற்கும் குடும்ப பந்தத்தில் இருந்து கொண்டே சாதி மதம் கடந்து பழகுவதும் படைப்புகளை உருவாக்குவதும் கடும் எதிர்ப்பிற்கு இடையிலும் அதை நடைமுறைப்படுத்த சோதனை முயற்சி மேற்கொண்டு வாழ்வதும் சாதாரண விசயமாய் தோன்றவில்லை.

கவிதைகள் தவிர கட்டுரைகள் , கதைகள் என வாழ்நாள் முழுமையும் எழுத்து தவமிருந்து மாற்று சிந்தனைகளையும் விடுதலை வேள்விக்கான எழுத்துகளையும் தந்து  அதன் காரணமாகவே வறுமை மிகு வாழ்வை தனக்கு வரித்துக் கொண்டது நமக்கான நம்பிக்கையாகும்.

மீண்டும் வரலாறு திரும்புவது போல் ஏகாதிபத்திய ஆதரவும், பெருமுதலாளிகள் வலுப்பெறவுமான ஆட்சிமுறையும் , சாதியமும் மதவெறி நடவடிக்கைகளும் அதற்கு பயன்படுத்தப் படுவதும் , ஆணாதிக்கமும் பெண்ணடிமைத் தனமும் ஆளுவோரின் பேச்சால் செயலால் வலுப்படுத்தப்படும் சூழலில் இவைகளை எதிர்த்துப் போராட இன்றும் ஊக்க மருந்தாய் இவரின் எழுத்துகள் உள்ளன.

இவரின் கவிதைகளை பாடதிட்டத்தில் இணைக்க மத்திய அரசு ஆலோசிக்கும் இன்றைய நிலையில் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளார்ந்த சக்தி தரும் இவரை பரவலாக வாசிக்க வைப்பதே இவரின் 135 ம் பிறந்த நாளில் நாம் உணர வேண்டிய சேதி !!

– செம்மலர்.

Related Posts