கலாச்சாரம் காதல்

காதல் ஃபீனிக்ஸ்

காதலைப் பறவையாக்கி
நெஞ்சோடு அணைத்துக் கொள்ளப் பார்க்கையில்
அதன் இறக்கை துடிப்பு
சுதந்திரத்தைக் கோரியது!

காதலை பனிக்கட்டியாக்கி என்
உள்ளங்கையில் வைத்துச்
சில்லென்று ரசிக்கையில்
உருகி ஓடி வெளியேறிவிட்டது!

காதலே கனவுகளாய்
மூச்சு முட்ட என்னுள் நிறையட்டும் என
ஆசை ஆசையாய்ப்
படுக்கை விரித்த இரவுகளில்
உறக்கம் எட்டியே பார்க்காதிருந்தது!

பின்னர்,
காதல் பூக்களில்
முட்களால் குத்தப்பட்ட கதையும்
காதல் நெருப்பில் என்
இதயம் வெந்த கவிதையும்
இருக்கின்றன அழுக்கேறிய
பழைய டயரி பக்கங்கள் நெடுக!

நேற்று இரவு படுக்குமுன்
சாம்பலாகப் பூசிக் கொண்டேன்
பொசுக்கிய காதல் நினைவுகளை,

இன்றைய நாள் என்னைத் தொட்டு எழுப்பி
சீண்டியவாறு தெரிவிக்கிறது
காதலர் தின வாழ்த்துக்களை –
அருகே புன்னகை பூத்தவாறு சிறகடிக்கிறது
சாம்பலில் இருந்து பறக்கும் காதல் பறவை !

Related Posts