தமிழ் சினிமா

பேட்ட – ஒரு ரசிகரின் முதல் பார்வையில் . . . . . . . . !

தன்னுடைய ட்ரேட் மார்க் படங்களின் இயகுநர்களிடம் இருந்து விலகிய  ரஜினிகாந்த், பா.ரஞ்சித்தின் கபாலி  மற்றும் காலா படங்களில் நடித்தார். இந்த இரு படங்களும் ரஜினியின் முந்தைய படங்களில் இருந்து விலகி, அவருக்கு புதிய முகத்தை கொடுத்தன.  கபாலியை விடவும் காலா அப்பட்டமான மக்களுக்கான அரசியல் சினிமாவாக வெளியானது.

இந்த பின்னணியில் தமிழ் சினிமாவில் சர்கார் திரைப்படத்தின்ன மூலம் ரீ என்ட்ரி கொடுத்த சன் பிக்சர்ஸ், ரஜினியுடன் கைகோர்த்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்குநரானார். கார்த்திக் சுப்புராஜ் ரஜினி ரசிகராகவே தன்னை தொடர்ந்து அடையாளப்படுத்தி வருபவர். ஒரு தீவிர ரசிகனாக ரஜினியின் அனைத்து படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பவர். அவை தான் இயக்கிய திரைப்படங்கள் இல்லை எனும் போதும்.

இந்நிலையில் தீவிர ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது போன்ற காரணிகள், இது இன்னொரு முரட்டுக்காளையாக அமைந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஓப்பனிங் பாடல், காதல், முஸ்லீம் நண்பனை கொல்லும் வில்லன், அவனது குடும்பத்தை பாதுகாக்க தன் வாழ்வையே அர்ப்பணிக்கும் தியாகம் என ரஜினி படத்திற்கான அனைத்து சங்கதிகளையும் சுமந்து தான் பேட்ட வந்திருக்கிறது.

படம் முழுக்க கண்களுக்கு திகட்டாத விருந்து படைத்து வசீகரிக்கிறது திருநாவுக்கரசுவின் கேமரா. அனிருத் ரஜினி ரசிகர்களுக்காகவே இசை அமைத்திருக்கிறார். குறிப்பாக படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக்-கள் கட்டிப் போடுகிறது.

எனினும் அவற்றின் இடையே நின்று தனது அரசியலை அழுத்தமாக பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியின் அறிமுக காட்சியிலேயே கல்லூரியில் நிகழும் ராகிங் கொடுமைகளை பேசுகிறார், மாநில அமைச்சர் வீட்டில் தெர்மோக்கோல்கள் வெட்டப்படும் காட்சியின் பின்னணியில், அவர் மத்திய அரசின் உத்தரவுக்கு அஞ்சுவதாகக் காட்டப்படுவது, காதலர் தினத்தன்று காதலர்களை துன்புறுத்தும் கூட்டத்தை ரவுடிக் கும்பலாக சித்தரித்திருப்பது, மணல்கொள்ளை, சாதி ஆணவ படுகொலை, சாதிவெறி பிடித்த ஒருவன், மதவாத கட்சியின் முக்கிய தலைவராக உருவெடுப்பது, ஒரு கொலைமுயற்சிக்கு மாட்டிறைச்சி வைத்திருந்ததான புகாரே போதுமானதான சூழலை காட்டியிருப்பது. ரயிலில் பிரசவம் பார்க்கும் திருநங்கைகள், வழக்கமான ரஜினி படங்களின் ஆணாதிக்க வசனங்களை முற்றிலுமாக தவிர்த்திருப்பது என தான் யார் என்பதை வலுவாகவே பறைசாற்றுகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ஆனாலும் படத்தை இவ்வளவு இழுத்திருக்க வேண்டுமா கார்த்தி? குறிப்பாக 2 ஆம் பாகம் போகிறது. போகிறது போய் கொண்டே இருக்கிறது. சிம்ரன் உடனான ரஜினிகாந்தின் காதல் தேவையா? பாபி சிம்ஹா அவ்வளவு எளிதில் திருந்துவது எப்படி? திரை முழுக்க நட்சத்திர கூட்டங்களால் நிரம்பி வழிவது ஒரு கட்டத்தில் திகட்ட தொடங்கி விடுகிறது. திரைக்கதையை இன்னும் கூர்மையாக்கியிருந்தால், தரமான சம்பவமாகியிருக்கும்.

என்றாலும் கார்த்திக் சுப்புராஜ் பேசும் சங்கிகளை தோலுரிக்கும் அரசியல் உண்மையில் சிறப்பான சம்பவம் தான்.

 

– அகிலன்.

Related Posts