சமூகம் தலையங்கம்

‘தந்தை பெரியார்’ காலாவதியாக வேண்டும் !

தலைப்பு உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம். ஆனால், அதுதான் ‘தந்தை பெரியாருக்கு’ அர்த்தமுள்ள நினைவு கூறலாக அமைந்திடும்.

நன்றி:- மணிவர்மா

அவர் சாதீயத்துக்கு எதிராக சுயமரியாதையை முன்நிறுத்தினார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவை புகட்டினார். பெண் விடுதலைக்கு உண்மையான குரல்கொடுத்த மனிதராக இருந்தார். பெரியார் விரும்பிய மாற்றங்கள் இங்கே ஓரளவு நடந்திருக்கின்றன. இருப்பினும், அவரின் வழி நின்று கலகம் புரிவோரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் அரசியல் பின்நோக்கிய மாற்றங்களைக் கண்டு கொண்டிருக்கிறது. தமிழர் என்ற உணர்வு ‘அடையாளமாக’ குறுக்கப்படுகிறது “சாதிப் பெருமித அடையாளங்களுக்குள்” மனிதர்கள் சிறை வைக்கப்படுகிறார்கள். பெரியாரும் கூட ஒரு அடையாளமாக குறுக்கப்படும் நவீன காலத்திற்குள் நுழைந்திருக்கிறோம். பார்ப்பனீயத்தின் போர்வைக்குள் பிற்படுத்தப்பட்டோர் தன்னை நுழைத்துக்கொள்ள, தீண்டாமை ஆபத்தான வடிவமெடுத்திருக்கிறது.

கடவுள் துதிப்பை மட்டுமல்ல – தனிநபர் துதிபாடலை பெரியார் வெறுத்து ஒதுக்கினார். எது நடக்கக் கூடாதென பெரியார் விரும்பினாரோ, அது நடந்து கொண்டிருக்கிறதென்றால், கலகக் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டாமா? பகுத்தறிவாளர்கள் சிந்திக்க வேண்டிய காலம் இது.

கருத்து முதல்வாதமும், பொருள்முதல்வாதமும் இருவேறு முகாம்கள். கடவுள் தான் எல்லாவற்றையும் படைத்தார், துன்பங்களை ‘விதி’த்தார் என்று என்று உலகமெங்கும் ஆள்வோர் கருத்து முதல்வாதத்தை முன்நிறுத்தி. தங்கள் சுரண்டலை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். தனிநபர் துதிபாடலும், மதவாத, இனவாத, சாதி வெறி அரசியலும் அவற்றின் வெளிப்பாடுதான்.

இந்த சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, – மாற்றத்தை முன் நிறுத்தும் பொருள்முதல்வாதத்தில்தான் அடங்கியுள்ளது. சமூக நீதியையும், வர்க்க பேதமற்ற சமூகத்தையும் அதுதான் சாத்தியமாக்கும். பெரியார் பொருள்முதல்வாதத்தின் போர்வாளாக எடுத்தாளப்பட வேண்டியவர்.

‘புரட்சி நீடு வாழ்க!’ என்ற வாழ்த்துச் செய்தியை எள்ளி நகைத்த மாமேதை லெனின் ‘புரட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்று சொன்னால், ‘வர்க்க பேதங்கள் தொடர்ந்து இருக்கவேண்டும் என்றல்லவா? பொருளாகிறது’ என விளக்கினார்.

இன்றயை சூழலில்  பெரியாரின் தேவை நீடிப்பதை நாம் உணர்கிறோம். ஆனால், அது பகுத்தறிவுப் புரட்சியாளர்களுக்கு அது மகிழ்ச்சியான செய்தியல்லவே!

Related Posts