அறிவியல்

வனத்தின் மீதான மக்களுரிமை!

வனத்தை வாழ்விடமாகவும், அதிலிருந்து‍ கிடைக்கும் மூலப் பொருட்களை வாழ்வாதாரமாகக் கொண்டும் வாழும் எளிய சமூக மக்களுக்கும், வனத்தின் வளங்களை ஏகபோக உரிமை கொண்டாடும் முதலாளிகளு‍ம் – மு‍தலாளிகளின் நலன்களை கண்ணும் கருத்துமாகக் கொண்ட முதலாளிகள் நல அரசுக்கும் இடையில் ஒரு‍ சமூக முரண்பாடாடு‍ நீடித்துக் கொண்டே வருகிறது.

வனத்தின் மீதான தமது‍ உரிமைகளுக்காக எளிய மக்கள் தொடர்ந்து‍ போராடியே வந்துள்ளனர். அது‍ மன்னராட்சிக் காலத்திலும், ஜனநாயக ஆட்சியிலும் சரி, மிகவும் மேம்பட்ட சமூகமாக சொல்லப்படும் ஐரோப்பியாவிலும் இதே நிலைதான் அன்றும் இன்றும். இதை கார்ல் மார்க்ஸ் தனது‍ கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஒரே சூழலில் வாழ்ந்து‍ வருபவர்களை நிர்ப்பந்தம் செய்து‍ அரசின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வனத்தை மாற்றும் போது‍ தன் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள் ஆத்திரமுறுகின்றனர்.

அப்படி‍ வெளியேற்றப்படும் மக்களுக்குத் தேவையான எந்த அடிப்படையான வசதிகளையும் செய்து‍ தர முடியாத நிலையிலுள்ள அரசின் நோக்கம் என்னவாக இருக்கும்? என்பது‍ தெளிவு….

காட்டை வணிகப்படுத்தும் நோக்கம் என்பதைத் தவிர வேறு‍ எந்தவொரு‍ நல்ல குணாம்சமும் இந்த அரசுகளுக்கு‍ கிடையாது. காட்டில் கிடைக்கும் வளங்களை தன்னுடையதாகக் கொள்ளும் ஏகபோக உரிமை தனிபெரும் தனியுடமையாளர்களான பெருமுதலாளிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே இந்த அரசுகளின் நோக்கம்.

காலனியாதிக்கம் முடிவுக்க வந்த பிறகு‍ அமைந்த அநேக அரசுகள் வனமேலாண்மை என்ற பெயரில் பெரிய நிறுவனங்களுக்கு துணைபோகும் வகையில் வனங்களை பயன்படுத்த முயற்சிக்கின்றன.

வனங்களை அரசு‍ கைப்பற்றுவது‍ இந்தியாவில் முதன் முதலில் 1853 (டல்ஹௌசி) காலத்தில்தான் நடைபெற்றது. அது‍ பிரிட்டீஷ் இந்தியாவின் இரயில்வேக்காகத்தான் கைப்பற்றப்பட்டது.

இது‍ பிரிட்டீஷ் அரசின் இரட்டைப் பயன்பாட்டிற்கு‍ உதவியது. ஒன்று, பிரிட்டீஷ் பொருட்களை இந்தியாவில் சந்தைப்படுத்தவும், இரண்டாவது‍ இந்தியாவிலுள்ள பொருட்களை பிரிட்டீஷ் மூலதனத்திற்கு‍ எடுத்துக் கொள்ளவும்தான்.

1853-1910 ஆம் ஆண்டுகளுக்குள் 80,000 கிலோ மீட்டர் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது. இந்த விரிவாக்கத்திற்கு‍ 1,000,000 கட்டைகளுக்காக இந்தியா (Garhwal, Kumaon – Uttarakhand State) கார்வால், குமாவூன் மற்றும் அண்டை நாடுகளில் உள்ள காடுகள் பெரிதும் அழிக்கப்பட்டன.

சுதந்திர இந்தியாவில் வனம் சார்ந்து‍ வாழும் எளிய மக்களை அரசுகள் முரட்டுத்தனமாக நடத்துவது‍ நீடிக்கிறது.

மக்களுணர்வுகளைப் புரிந்து‍ கொள்ளாத எந்தவொரு‍ அரசும் இதுவரை புறந்தள்ளப்பட்டு‍ வந்துள்ளது‍ என்பதுதான் வரலாறு- தன்னுரிமைகளை மீட்க மக்கள் சக்தி எழும்போது‍ நிச்சயம் மக்களுரிமை காக்கப்படும்.

மிகச் சிலருடைய நலன்களுக்காக எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கைகள் இனிமேலும் முடமாக்கப்படக் கூடாது. மனித இனத்தின் மேலும் பரந்துபட்ட பொது‍ நன்மைகளுக்காக அனைத்து‍ வளங்களும் பயன்படுத்தப்பட வேண்டும். சமூகம் மனிதகுலத்தால் மறு‍ ஆக்கம் செய்யப்பட்டு‍ வரலாறு‍ படைக்கப்படுவது‍ உறுதி. அதற்கு‍ எளிய மக்கள் சிந்தித்து‍ செயல்பட வேண்டியுள்ளது‍.

Related Posts