பிற

மேலாண்மறை நாடு கண்டெடுத்த முத்து பொன்னுசாமி !

” நான் என் எழுத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும். என் கிராமத்தில் நிலவும் சூழல்களுக்கு நேர்மையாக இருப்பதன் மூலம், நான் உத்தரபிரதேசத்தில் இருக்கும் இன்னொரு கிராமத்திற்கு பொருந்தும் எதையாவது எழுதியிருப்பேன். நாம் யாருடைய பிரச்னையை எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம் இல்லையா ? “

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியை மகசசே விருது பெற்ற பிரபல ஊடகவியலாளர் சாய்நாத் சந்தித்து எடுத்த பேட்டி இந்த வகையில் முடிகிறது.

அன்றைய ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் உள்ளார்ந்த கிராமமான மேலாண்மறை நாட்டின், அன்னபாக்கியத்திற்கு மகனாய் பிறந்து தொடக்கக் கல்வி மட்டுமே முடித்து தன் வீர்யமிக்க எழுத்துகளால் செம்மலரின் மகனாக மாறி வாழ்வில் மேன்மையடைந்த பொன்னுசாமியின் சொற்கள் இவை.

1972 ல் ‘ பரிசு ‘ எனும் சிறுகதை செம்மலர் மாத இதழில் பிரசுரமாகி அவரின் எழுத்துப் பயணம் துவங்கியது. 22 சிறுகதை தொகுப்புகள், 6 நாவல்கள், 6 குறுநாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு என எழுதிக் குவித்தவர். விருதுகள் இவரால் பெருமை பெரும் அளவு ஆதித்தனார் விருது , வட அமெரிக்க தமிழ்சங்க பேரவையின் மாட்சிமை விருது, இலக்கிய சிந்தனை விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றதுடன் ‘ மின்சாரப்பூ’ சிறுகதை தொகுதிக்கு சாகித்ய அகாதமி விருதும் பெற்றார். அதனுடன் தொடக்கக் கல்வி படித்தவரின் எழுத்துகள் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெருமையும் பெற்றார்.

அவரின் படைப்புகளை வாசிக்கும் யாராயினும் அவரின் எழுத்துகள் கிராமிய மணம் கமழும் பேசுபொருளுடன் இருப்பதை உணர இயலும்.

உதாரணமாக ”மானுடப்பிரவாகம்” எனும் தொகுப்பின் முதல் சிறுகதையின் தலைப்பு மானுடப் பிரவாகம் ! மாமன் மச்சினன் உறவில் செய்முறை செய்வதில் உருவாகும் அதிருப்தி , வேறொரு பிரச்னையில் காவல்துறை வரை சென்று கதாநாயகன் அவமானப்படும் சூழலாய் மாறுகிறது. தங்கை குடும்பத்தினருடன் முகமுழி கூடாது என ஒதுங்கியிருப்பவனை மருமகனான சிறுவனின் சாவு தாய்மாமனாக கதாநாயகனை ஓடச் செய்வதும் அனிச்சையாய் ஒருவரோடொருவர் கலப்பதுமே கதை.

‘ ஊர்மண் ‘ எனும் நாவல். இதில் கிராம மனிதர்களின் காதல், காமம், விவசாயம், வியாபாரம், சாதிப்பிரிவினைகள், அதை தாண்டிய மனிதம், அரசியல் கலக்கும் சாதி விசம், அதன் விளைவுகள், மாற்று அரசியல் அந்த விசத்தை முறியடித்து மனிதம் காப்பது என பல்வேறு அம்சங்களை கொண்டு வந்திருப்பார்.

இவையிரண்டும் ஒரு சோற்று பதம். இவரின் எழுத்துகள் மனிதர்களை எந்தப் பூச்சும் இன்றி நம் முன் உலவ விடும். அவைகளில் இழையோடும் காதல் காமம் வன்மம் எதுவாயினும் கிராமத்து மண்ணுக்கேயுரிய யதார்த்தம் மிக்கவை. அதன் காரணமாகவே அவை அவரின் தனிச்சிறப்பாகவும் வீரியம் கொண்டதாகவும் உள்ளன. முதலாளித்துவ இதழ்கள் கூட நிராகரிக்க இயலாத அழகியலை பெற்றிருக்கின்றன.

இப்படிப்பட்ட தலைசிறந்த எழுத்தாளராக இருப்பினும் தோற்றத்தில் உள்ள எளிமை போலவே பழகும் தன்மையிலும் எளிமையானவர். சாய்நாத்தின் புத்தகத்தில் அவரைப் பற்றிய பேட்டி இருக்கிறது. அதை நான் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என குழந்தையின் குதூகலத்துடன் தொலைபேசியில் அவரிடம் கூறியபோது மிகவும் பொறுப்புடன் பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த அடக்கம் அவரிடம் கற்க வேண்டிய விசயமாய் என்னுள் பதிந்தது.

எழுத்தாளராக மட்டுமின்றி த மு எ க சங்கம் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.

” எழுதுவது பிறவியிலேயே வருகிறது என்கிறார்கள். அது உண்மை இல்லை என்று நமது அமைப்பு நிரூபித்து வருகிறது. அதன் நேரடி சாட்சி மேலாண்மை பொன்னுசாமி ” என மறைந்த தோழர் முத்தையா பேசியதாக எழுத்தாளர் தேனி சீருடையான் தன் அஞ்சலிக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

அது உண்மை என்பது தொடர் வாசிப்பு, மக்களை கூர்ந்து கவனித்தல், அரங்க செயல்பாட்டின் தீவிரம், விவாதங்கள், விமர்சனங்களுக்கு செவி சாய்த்தல் எனும் மேலாண்மையின் வாழ்வை உற்று நோக்கும் யாராயினும் உணர இயலும்

உடல்நலக் குறைவால் அவர் இயற்கை எய்திய போதும் அவரின் எழுத்துகளின் வழியே காலத்தை மீறி நம்முடன் வாழ்ந்து வருவார். சமூக மாற்றத்திற்கு வித்திடும் அவரின் படைப்புகளை வாசித்து உள்வாங்குவதும் படைப்புகளை உருவாக்க முயல்வதுமே அவருக்கு நம் அஞ்சலியாகும்.

– செம்மலர்.

Related Posts