தமிழ் சினிமா

பட்டாஸ் திரைப்படமும்……. பாரம்பரிய கலைகள் குறித்தான தூய்மைவாதமும்……….

தமிழக பாரம்பரிய கலைகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும். தமிழகம் மட்டுமல்ல, எந்த ஒரு சமூகமும் அதன் பாரம்பரிய கலையை பாதுகாக்க வேண்டும். ஆனால் அது தூய்மைவாதமாக மாறுவதே சிக்கலானது.
மாற்றத்தை, பரிணாம வளர்ச்சியை மறுதலிப்பது என்பது பிற்போக்குத்தனமானது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆடை, வாழ்க்கை முறை உணவு பழக்கம் என மாறுதல் அடையும் போது, பழமையை தக்கவைத்துக் கொள்ள நடத்தும் போராட்டம், மாறுதலால் விளைந்த நன்மை தீமைகளை கருத்தில் கொள்ளாத போது, சில தவிர்க்க முடியாத மாற்றங்களை ஏற்க மறுக்கும் போதும் சிக்கலானதாகிறது.

தூய்மைவாதம்

பண்பாடு, கலாச்சாரம், சாதி, மத, இனத்தின் பெயர்களால் அவற்றில் ஆதிக்க மனநிலை கொண்ட சிலரால் பாதுகாக்கப்படும் தூய்மைவாதம் மூலமாக, மற்ற மனிதர்களை தாழ்மைப்படுத்தி ஏற்றத்தாழ்வு கருத்தாக்கம் நிறுவப்படும் வாய்ப்புகள் அதிகம். இத்திரைப்படமும் அதை செய்கிறது மற்ற கலைகளை இழிவாக காட்டுகிறது. மற்ற கலையை பரப்ப அவர்கள் மிக கேவலமாக நடந்துகொள்வதாக காட்டுகிறது.

உலகம் முழுவதும் தற்காப்பு கலைகளில் எது சிறந்தது என்ற விவாதம் நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதாவது ஒரு கலையை போட்டு அதற்க்கு எதிராக இன்னொரு கலையை நிறுத்தி பதிவு செய்யப்பட்ட YouTube வீடியோக்களை ஏராளமாக காணக்கிடைக்கின்றன. உதாரணமாக kung FU vs karate என YouTube ல் தேடிப்பார்த்தால் உங்களுக்கு காணக்கிடைக்கும். ஒரு வீடியோ குங்பூதான் சிறந்தது என காட்டும், மற்றதோ கராத்தேதான் சிறந்தது என காட்டும். ஒவ்வொரு வீடியோவும் ஒரு பக்கச் சார்பாக இருக்கும்.

உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற மனிதனின் சிந்தனை அப்படியான வழிமுறைகளை தேடி MLM வியாபாரம், அதிக வட்டி கிடைக்கும் சிட், மண்ணுளிப்பாம்பு etc என நம்பி தொலைவது போல்தான் தற்காப்புக்கலைகளிலும் தேட வைக்கிறது. அதிக உழைப்பை செலுத்தாமலே… எல்லாம் சாத்தியமாக்கனும் எனும் மனதின் தேடலுக்கு வலு சேர்க்க இப்படியான புனையப்பட்ட நோக்கு வர்ம கதைகளைக் கூட உண்மை என நம்புகிறார்கள் அதை கதைதான் என நம்ப மறுக்கிறது அவர்கள் மனம். அதை மனதளவில் நம்ப வைக்கத்தான் மற்ற கலைகளை விட நம் பாரம்பரிய கலை சிறந்து, புனிதமானது?!?, அதில் விரல்களாலேயே எதிரியை வீழ்த்திவிட இயலும் கண் பார்வையாலேயே தாக்குதல் தொடுக்க முடியும் என எல்லாம் கதைகளை ஆழமாக நம்புவது. அதன் நீட்சியாகத்தான் உலகின் #ஆதிக்கலை #தாய்கலை என்றெல்லாம் இல்லாத ஒன்றை சொல்வது.

உண்மையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்துதான் ஒருவர் சென்று உலகம் முழுவதும் போர்க்கலைகளை கற்றுக் கொடுத்திருப்பாரா..? கொஞ்சம் சிந்தித்தாலே இதற்கான விடை கிடைக்கும்.

போர்க்கலை பற்றி பேசும் இந்த திரைப்படம், உலகில் தோன்றிய பல போர்க்கலைகளுக்கும் தமிழக போர்கலைகள் தான் தாய்க்கலை என சொல்கிறது. ஆனால் அது சாத்தியமா..?

உலகின் எல்லா இனக்குழுக்களும் நாகரிக வளர்ச்சிக்கு முன்பு காடுகளில் அலைந்த காலகட்டத்தில் காட்டுவிலங்குகளை வேட்டையாடியும் விலங்குகளால் வேட்டையாடப்படும் இருப்பான். அவர்களுக்கெல்லாம் தமிழகத்தில் இருந்து சென்ற நபரா வேட்டையாடவும், வேட்டையாடப்படும் போது தற்காத்துக் கொள்ளவும் கற்றுக் கொடுத்திருப்பான்? இல்லையே. அந்த காலகட்டங்களில் மற்ற பகுதிகளில் வாழ்ந்த விலங்குகளுக்கு தமிழக விலங்குகளே வேட்டையாட கற்றுக் கொடுத்தன என்றால் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இது.

பிற்காலத்தில் நாகரிகம் வளர்ந்து அரசு மற்றும் பண்ணை நிர்வாகமாக மாறிய காலத்தில் வேட்டையாடிய வேட்டையிலிருந்து தற்காத்துக் கொண்ட கலைகள் போர்க்கலைகளாக உருமாறி இருக்கும்.

ஒவ்வொரு நாடும் படை அணி அமைக்கும்போதே அந்த நாட்டின் பண்பாடு, கலாச்சார, சீதோஷ்ண, நிலவமைப்புகளுக்கு உரிய போர் பயிற்சி இருந்திருக்கும். பின்னர், கடல்வழியான வணிக முன்னேற்றம் ஆன காலத்தில் போர்கருவிகளிலும் கலைகளிலும் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். கலை மாற்றம் கண்டு, பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும். அந்த பரிமாற்றம் நிகழ்ந்த காலங்களில் போதிதர்மர் போன்றவர்களின் பாத்திரம் இருந்திருக்கும்.

பரிணாம_வளர்ச்சி என்பதை ஏற்காத பிற்போக்குவாதிகள் சிலர் அந்த மாற்றத்தை சிதைவு என்றும் கூறுவார்கள். ஆனால், அதுவும் கூட தேவைக் கருதி நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியாக இருக்கும் உதாரணமாக தொழில்துறை வளர்ச்சி பெற்ற காலத்தில் தமிழ்மொழியில் கூட ஆங்கில சொற்களின் கலவை தேவைப்பட்டது போல.

மனிதனுடைய அடையாள சிக்கல், பாதுகாப்பாற்ற உள்ளுணர்வு ஆகியவற்றால் தன்னுடைய பலவீனமான சுயமரியாதை கொண்டு இயங்கியலை, மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத மனநிலையில் இருக்கும்போது கற்பனாவாதத்தில் இறங்கி விடுகிறது, இந்தியன் தாத்தா வித்தை காட்டுவது, நோக்கு வர்மத்தால் சண்டை போடுவது… போன்ற விசயங்களை நம்புகிறது.
25 வயதின் சுறுசுறுப்பு, உடல் வலிமை 55 வயதில் இருக்காது, பலவீனமாகி தோய்வு இயல்பானது என ஏற்றுகொள்ள மறுக்கின்றது மனம். ஆகவே அப்போதும் அந்த வயதிலும் தானே ஆதிக்கம் செலுத்துபவனாக வலிமையானவனாக இருக்க பேராசை கொள்ளும் மனம் அதன் அடிப்படையிலான தேடல், சந்தையில் எதேனும் கிடைக்குமா எனும் தேடல் மூடநம்பிக்கையில் இப்படி முடிகிறது.

அதனால்தான் மனம் விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றான நோக்கு வர்மத்தை நம்புகிறது அதை இல்லை என சாத்தியம் இல்லை என சொல்வது நம் முன்னோர்களை இகழ்வதாக கட்டமைக்கிறார்கள்.
கண்கள் நோக்கி காதல் வேண்டுமானால் கனியும். எதிரியை எல்லாம் வீழ்த்த முடியாது.

எல்லா கலைகளையும் விஞ்சிய, எல்லா கலைகளையும் எளிதில் வெற்றி கொள்ள இயலும் கலை என ஒன்று உண்டா..? அப்படி ஒன்றும் இருப்பதாக இல்லை. இருந்திருந்தால் நடைமுறையில் அதை நிரூபித்து மிக எளிதாக அது விரவிப் பரவி இருக்கும். அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பதே நிஜம்.

சண்டை என்பதை எல்லாம் முன் முடிவுகளுக்கு உட்ப்பட்டதல்ல… மாறாக அக்கணத்தின் சூழலை பொருத்தது. வெற்றிபெறுபவனின் வலிமை stamina, Quick reaction, speed எல்லாமே சார்ந்து. அதனால்தான் ஒரே சாம்பியன் தொடர்ந்து வெற்றி பெற முடிவது இல்லை. மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் MMA போட்டிகளில் கூட ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு தற்க்காப்புகலை பின்னனி கொண்டவர்கள் வெற்றி பெருகிறார்கள். ராண்டா ரோஸி சாம்பியனாக வலம் வந்த காலங்களில் ஜூடோவை சிலாகித்த நபர்களை நான் அறிவேன் (ஜூடோவை நான் குறைத்து மதிப்பிடவில்லை ஜுடோ மட்டுமல்ல எந்த கலையையும்) ரேண்டா ரோஸியை ஒரு சில வினாடிகளிலேயே தோல்விக்கு தள்ளிய அமெண்டா நியூயான்ஸ் முவய்தாய் வீராங்கனை நாளை அமெண்டாவை வீழ்த்தும் ஒருவர் வேறு ஒரு கலையின் பின்னனியில் இருந்து வரவும் வாய்ப்புள்ளது. கலைகளை தாண்டி அதை எக்ஸ்க்யூட் செய்யும் நபர்களையும் பொருத்தது வெற்றி தோல்வி.

சரி பட்டாசுக்கு வருவோம்.
பொதுவாவே எந்த ஒரு விளையாட்டு படம் என்றாலும். முழு முற்றாக அப்படியே அந்த ஸ்போர்ஸை காட்ட இயலாது ஏன் எனில் இது சினிமா. ஈட்டி படம் பார்த்து அந்த அத்தலட் காட்சிகளை வியந்தது உண்டு ஆனால் நேரு ஸ்டேடியத்தில் அத்தலட் பயிற்சியில் இருந்த ஒரு மாணவன் சொன்னான். இல்ல சார் ஹர்டல்ஸ் இப்படி தாண்ட கூடாது என அவன் சொன்னது மிக நுணுக்கமாக அந்த விளையாட்டை அறிந்தவர்கள் மட்டும் கண்டுபிடிக்க இயலும் விசயம். அது தவறில்லை ஆனா அந்த படத்தில் அதர்வாவின் உடல்வாகு அவர் தாண்டும் இலாவகம் என பார்வையாளர்களை நம்ப வைத்தார் இயக்குனர் இதுதான் சினிமா. பிகிலின் ஃபுட்பாலுக்கும் சக்டே இந்தியாவின் ஹாக்கிக்கும் இருப்பது அப்படியான வேறுபாடுதான். ஹாக்கியை நம்பினோம் பிகிலின் ஃபுட்பாலுக்கு நகைத்தோம். பட்டாசிலோ பல இடங்களில் சொதப்பல் பட்டியலே இடலாம். மிக மிக்கியமான மொக்கை என்றால் MMA கேஜில் மற்ற வீரர்கள் MMA விற்கான உடையிலும் தனுஸ் மட்டும் ஃபேன்ஸி ட்ரெஸ்ஸிலும் சண்டையிடுவது. உடல் மொத்தமாக எரியும் போது புன்னகைத்த படி சிலையை தாங்கி நிற்பது என ஏகப்பட்ட இடங்களில் சொதப்பல்.

சிலை தாங்கிப் பிடிப்பதை பற்றி எழுதிய போதுதான் நினைவுக்கு வந்தது சரி இதையும் எழுதி முடிச்சுக்கிறேன். பொதுவாக இந்த புனிதமாக்கள் பிம்பங்களால்தான் பாரம்பரிய கலைகள் பக்கம் கூட்டம் குறைகிறது. புனிதமாக்களுக்காகவே கலைய கற்றுக் கொள்ளா இவர்கள் நீட்டித்து சொல்லும் கால அளவு. திரைப்படத்திலே ஒரு வசனம் வரும். 5 வருடத்துல என்னடா கத்துக்க முடியும் என, அதாவது பாரம்பரிய கலை கற்றுக்க 12 வருடங்கள் ஆகுமாம் அடிப்படை கற்றுக் கொள்ள. முதலில் நீண்ட காலம் கற்பதுதான் சிறப்பானது. அந்த வர்க்கவுட் எல்லாம் செய்த சீக்கிரம் டயர்ட் ஆகிடுவோம் அவ்ளோ சிறப்புன்னு எல்லாம் சொல்வதே அறியாமைதான். சீக்கிரம் சோர்வாக்குவது எளிது ஆனால் அதனால் உடல் அடையும் தீமைகள் குறித்த அறிவு இருந்தால் அப்படி செய்ய மாட்டோம். சீக்கிரம் டயர்ட் ஆவதல்ல சீக்கிரமாகவோ மெதுவாகவோ டார்கெட்ட அடைகிறோமா ? என்பதுதானே சரி.

உதாரணமாக வாதத்துகாக எடுத்துப்போம். உடலை வளைத்து நெளித்து விளையாடும் ஆட்டம் என்றால் அதில் உலகப் புகழ் பெற்றது ஜிம்னாஸ்டிக் அதை ஏழெட்டு ஆண்டுகள் பயின்றவர்கள் ஒலிம்பிக் வென்றதாக படித்துள்ளேன். பார்கவர் எனும் கடினமான கலைக்கே கால அவகாசம் அதிக பட்சம் மூன்றாண்டுகளாம். அதன் பிறகான பயிற்சிகள் செழுமைப்படுத்தும் அது ஆயுட்காலம் வரை தொடரும்.அவ்வளவுதான் விசயம்

நம்மாளுகளும் (அடிமுறை) கேரளாகாரங்களும்தான் (களரி பயட்டு) எப்ப பேசினாலும் உலகில் எல்லா தற்காப்புக் கலைக்கும் தாய்க்கலை எங்களுதுதான்னு விடாம சொல்லிகிட்டே பரப்பிகிட்டே இருக்காங்க.

சிறப்புகளை கொண்டாடுவோம் எல்லா சிறப்புக்களையும். எதையும் இகழ்ந்தோ இழிவுபடுத்தியோ இன்னொன்றை சிறப்பாக சொல்லும் தூய்மைவாத வெறியிலிருந்து விலகி நிற்போம்.

  • ஃபெரோஸ் பாபு.

Related Posts