இந்திய சினிமா சினிமா

Parched – நாலு பேருக்கு சொல்ல வேண்டும் என தூண்டிய கதை!

வளர்ந்த நகரங்கள் தான் இந்தியாவின் கலாசாரமாக அடையாளமாக்கப்பட்டு இருக்கிறது, உண்மையில் கிராமங்களின் முகம்தான் நம் நாட்டின் உண்மை முகம், அங்கிருந்து தப்பி வந்து முன்னேறி நகரமயமாக்கபட்ட பகுதியில் வாழ ஆரம்பித்து சில காலம் கழித்து, நாடே மாறிவிட்டதை போன்ற ஒரு உணர்வு உருவாகிறது, அது ஒட்டு மொத்த நிராகரிப்பின் வெளிப்பாடு!

நாம் கடந்து வந்த கலாசாரத்தின் சிறு துகள்கள் இன்னமும் இந்த கிராமங்களில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை நீங்கள் படம் பார்க்கும் போது உணரலாம்!

குஜராத்தில், ஒரு இருபது வருடமாவது நகர வாழ்க்கையில் இருந்து பின் தங்கி கொஞ்சமாக நகரத்தின் தாக்கம் உள் நுழையும் ஒரு பகுதியின் நான்கு பெண்களின் கதை! படத்தில் எனக்கு பிடித்த விஷயமே, இந்த நான்கு பெண்களை சுற்றி நகர்கிற கதை, பெண் அடிமையின் உச்சத்தை தொட்டு, ஆண்களை எதிர்த்து கேள்வி கேட்டு தனக்கான இடத்தை அமைத்து கொள்வதை போலவோ, அவர்களை மாற்றி மீண்டும் அந்த நிழலில் அமரும் படியோ இல்லாமல், இந்த நான்கு பெண்கள் தனக்கான வாழ்க்கையை தன்னிடம் இருந்தே கேள்வி கேட்டு, தன்னையே மாற்றி, சுய பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி, ஆண்களின் பரிதாபத்திற்கோ, அடைக்கலத்திற்கோ ஆசைப்படாமல் விடுதலை அடைகிறார்கள்! விடுதலை கோரவில்லை, எடுத்துக் கொள்கிறார்கள்!

இந்த ஒட்டு மொத்த படத்தில் ராதிகா ஆப்தேவின் இரண்டு காட்சிகள் மட்டும் வாட்ஸ் ஆப்பிள் பரவியது, ஆம் முக்கால் நிர்வாண காட்சி எனலாம்! அதில் ராதிகா ஆப்தே ஆடவருடன் வரும் அந்த காட்சி எத்தனை புனிதமானது என்பதை நீங்கள் படம் பார்த்தால்தான் புரியும், ஒரு வேலை அதன் நியாயம் உங்களுக்கு புரியாமல் போனால், ஐயாம் சோ சாரி, பல வருடம் பின் தங்கிய குக் கிராமத்தின் இழி கலாச்சார துணுக்கு இன்னமும் நவீனமாய் உங்களுக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதான் அர்த்தம்!

ராதிகா ஆப்தே ஆச்சரியத்தை கூட்டிக் கொண்டே நான்கு முறை ஒரே கேள்வியை கேட்பார் “ஆண்களில் impotent உண்டா? ஆண்களில் எப்படி Impotent இருக்க முடியும்? இன்றைய தேதியில் அதை ஒரு அறியாமை காட்சியாய் பார்த்து திரை அரங்கமே சிரித்தாலும், ஆம்பளையில Impotent கிடையாது என்பதை நீண்ட காலமாக நம்ப வைக்கப் பட்ட சமூகம் தான் இது, ஏனினில் “மலடி” என்கிற வார்த்தை புழக்கத்தில் இருந்ததே தவிர “மலடன்” என்கிற வார்த்தை சரியா தவறா என்பது கூட நமக்கு தெரியாது! குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத எத்தனை பெண்கள் அந்த பெயரை சுமந்து இருக்கிறார்கள், ஆனால் இந்த நவீன காலத்திலும் கணவனிடம் ஒரு பெண் “நீங்களும் செக் பண்ணிக்கிறிங்களா” என மற்ற மருத்துவ வைத்தியத்துக்கு அழைப்பதை போல அழைக்க இயலவில்லை! தன் அம்மா, மனைவியை இந்த காரணத்திற்காக காலம் முழுக்க திட்டுவதை கூட சகித்து கொள்கிற ஆண், பிரச்சனை தன் மீது தான் என சொல்ல துணிவது இல்லை!

ஒரு ஆணால் பாதிக்கப்பட்டாலும் ஒரு தாய் தன் மகனை அதே ஆண் திமிருடன் இருப்பதைத்தான் விரும்புகிறாள் என்பதை முதல் பாதியில் காட்சிப்படுத்தி, அதே தாய் ஒரு கட்டத்தில் சினம் கொண்டு “Don’t Hurry to be a Man, Be a Human first” என தன் மகனுக்கே எதிராக திரும்பும்போது Feminism என்பதற்கான முழு அர்த்தம் பிறக்கிறது! இந்திய குடும்ப முறையில் கணவன் தனக்கு செவி சாய்ப்பதை அன்பாக பார்க்கிற பெண்கள், கணவரை உத்தமமாக எடுத்துக் கொள்ளும் பெண்கள், மகன் மருமகளுக்கு செவி சாய்க்கும்போது மட்டும் பொண்டாட்டி தாசன், அடிமை என தானே பெயரிடுகிறது!

இயக்குனர் லீனா அவர்களை ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும் என்றிருக்கிறது! உளவியலையும், யதார்த்தங்களையும், காட்சி படுத்திய விதத்தையும், கதை சொல்லியாகவும் பெரும் பங்காற்றி இருக்கிறார், நான்கு கதா பாத்திரங்களும் அல்டிமேட்!

இன்னொரு முறை அமைதியான பொழுதில் பார்க்க வேண்டும், சில காட்சிகளை இன்னும் தனி தனியாக பேச வேண்டும், கண்டிப்பாய் பாருங்கள்!

Related Posts