உலக சினிமா சினிமா

பான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . !

பான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth)           

  -Directed by Guillermo del Toro

போர் தொடர்பான திரைப்படங்கள், பெரும்பாலும் உறக்கமற்ற இரவுகளிலே நம்மைக் கொண்டு செல்லும். அப்படியானதொரு, நிறம் மங்கியிருந்த விடியல் பொழுதொன்றை தான் ஒஃபிலியாவும்(Ofelia) எனக்கு வழங்கியிருந்தாள். வன்முறைகள் எவ்வளவு நிகழ்ந்தாலும், சலனப்படாத கலைஞர்கள்(!) பலரைக் காண்கிறோம். நந்தினி, ஹாசினி போன்ற சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு கொல்லப்பட்டாலும், அனிதாக்கள் மரணித்தாலும், மலக்குழிகளில் இறக்கி மக்களைக் கொன்றாலும், எவ்வித சலனமும் இல்லாமல், கைகள் நிரம்ப மலர்களைக் கொண்டு செல்லும் வண்ணதாசன் போன்ற கவிஞர்களையும்(!) நம் கண் முன்னே காண்கிறோம். ஆனால், போருக்குப் பின், அமைதியான ஈரான் என்ற ஒன்றை என்னால், படம் எடுக்க இயலாது என்ற குர்திஷ் இயக்குனர் பாமென் கோபாடி(Bahman Ghopadi)யின், Turtles Can Fly என்ற திரைப்படம் பல நிம்மதியற்ற நாட்களை எனக்கு வழங்கியிருக்கின்றது. அதிகாரத்தினை நிலைநாட்டும் போரில், பெண்கள், சிறுமிகள் எப்பொழுதும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுகின்றனர்.  நம் கண்ணெதிரே ஈழப்போரில், பெண்போராளிகளும் கூட பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர்.

போரில் மட்டுமில்லை; திருமணத்திற்கு பின்பு, தனது வாழ்க்கைத்துணையை பாலியல் வன்கொடுமை செய்வது இந்தியா உட்பட பல நாடுகளில் சட்டப்படி குற்றமல்ல. இது பெண்களைத் தனது உடமைப் பொருளாக பாவிக்கும் ஆணாதிக்க சமூகத்தின் வழக்கம். பெண்களை குடும்ப உறவிலும், வெறும் பிள்ளை பெற்று வளர்க்கும் கருவியாகவும், பாலியல் தேவைகளுக்காகவும், குடும்ப வேலைகளுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றனர். இரத்தவழி உறவே, அதுவும் ஆணே, தனது உடமைப்பொருளுக்கு வாரிசாக வர வேண்டும் என்னும் ஆணாதிக்கப்போக்கே, பெண்களை கீழே தள்ளி, தனது வாரிசை மேலே உயர்த்துகின்றது.

ஒஃபிலியாவின் தாயும் இங்கே வெறும் பிள்ளை பெறும் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறாள். அவள் உடல்நலம் குறித்து சிறிதும் அக்கறைகொள்ளாமல், தனக்கு பிறப்பது ஆண் குழந்தையே; அதுவும் தந்தையின் அருகிலேயே பிறக்க வேண்டும் என ஒஃபிலியாவின் தாயை நெடுந்தொலைவு பயணித்து வரவழைக்கிறார் கேப்டன் விடல். அந்த மாற்றுத்தந்தையை(step father) தந்தை என சொல்லவும் மறுக்கிறாள் ஒஃபிலியா. போர், இறந்த தனது தந்தை, கருவுற்றதினால் பயணித்து உடல் நலமற்ற தனது தாய், அதிகாரமிக்க தனது மாற்றுத் தந்தை என தன்னைச் சுற்றிலுமான நிகழ் உலகிலிருந்து தன்னை சிறிது சிறிதாக விடுவித்து குழந்தைகளுக்கான விசித்திரக்கதைகளுக்குள் நுழைகிறாள் ஒஃபிலியா.  தனது தனிமை, பயம், விரக்தி, வெறுப்பு என எல்லாவற்றுக்குமாய்ச் சேர்த்து பானை(pan or faun) அணைத்துக்கொள்கிறாள்.

தனது தாயின் கருவறையின் உள்ள ஒரு குழந்தையே, தனது தாய்க்கு பெரும் உடல்நலக்குறைவினை ஏற்படுத்துவதை ஒஃபிலியா உணர்கிறாள்.  தன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வான சாவியை மரத்தின் வயிற்றில் இருந்து பெறுகிறாள். அடிமரத்தில், பெண்ணுறுப்பின் வடிவினை ஒத்ததொரு வடிவில் தொடங்கும் வழியில் நுழைந்து மரத்தினுள் வாழும் பெருந்தவளையினை அழித்து, அதனிடமிருந்த அச்சாவியினைப் பெறுகிறாள்.

புரட்சியாளர்களுக்கு மெர்சடீஸ் உதவுவதை அறிந்த ஒஃபிலியா, அது குறித்து வெளியே பகிர்ந்துகொள்ளாமல் இரகசியம் காக்கிறாள். ஃபலான்ஜிஸ்ட்டான தன்னுடைய மாற்றுத்தந்தையை, அவருடைய ஆணாதிக்கத்தை, அதிகாரப்போக்கை அடியோடு வெறுக்கிறாள். போர், அதிகாரம், பிரசவம் எனும் பெயரில் தாயின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை என தன்னைச் சுற்றிலுமான உலகில் வாழ்ந்துகொண்டே, தன்னை விசித்திரக்கதைகளுடனும் பிணைத்துக்கொள்கிறாள்.

ஒரு புறம் மேஜை முழுவதும் பழரசமும், பழங்களும் கண்ணைக்கவரும் பொழுதில், மறுபுறம் குழந்தைகளைக் கொன்று தின்னும் அவ்வுருவம் அருகே குவிந்துகிடக்கும் குழந்தைகளின் செருப்புகளைக் காணும் பொழுதில், இச்சமூகம் குழந்தைகள் மீது எப்பெரும் வன்முறையை நிகழ்த்திவருகிறது என்பதினை ஒஃபிலியா உணரவைக்கிறாள். இந்தக் கொடூரங்களிலிருந்து விலகி, ஒஃபிலியா இளவரசியாகிறாள்.

ஸ்பெயின் உள்நாட்டுப் போருக்குப் பின்னாலான பழமைவாத ஆட்சியினை எதிர்க்கும் புரட்சியாளர் மெர்சடீஸ், பாசிஸ்ட்டான கேப்டன் விடலைக் கொலை செய்ய முயற்சித்திருந்தாலும், இறுதியில் அவரின் குழந்தையைக் கையில் ஏந்திக்கொள்கிறாள். கேப்டனிடம், இப்படி ஒரு தந்தையின் பெயர் தெரியாமல் இக்குழந்தை வளர்வான் என்கிறார் மெர்சடீஸ். குழந்தைகள் குழந்தைகளாக வாழ வேண்டிய சமத்துவ சமூகத்தினை  உருவாக்க வேண்டும் எனும் மனவெழுச்சியை இத்திரைப்படம் நமக்கு அளிக்கின்றது.

– நிலவுமொழி.

 

Related Posts