அரசியல்

பஞ்ச கவ்ய மருந்துகள், அறிவியல் அவமானம் …

மோடி அரசு ஒரு பக்கம் மக்களை பணமதிப்பை குறைத்து வாட்டி வதைக்கின்றது. மறு பக்கம் சத்தமில்லாமல் பல்வேறு சித்து வேலைகளை ,இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கு பதவியில் இருக்கும் காலத்தை முழுமையாக பயன் படுத்துகிறது . விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியை முடக்குவது, அதன் பெருமைகளை சிறுமைப்படுத்துவது, அதை வேத காலத்தோடு ஒப்பிடுவது, புராணங்களிலேயே இது போன்றவை சொல்லப்பட்டுள்ளது என பொய் பிரச்சாரம் செய்வது என மோடி முதல் காவிக்கூட்டத்தின் அனைவரும் பேசி வருகின்றனர். அரசின் நடவடிக்கைகளிலேயே இது துவங்கிவிட்டது.அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் தற்போது வந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் பசுவின் சிறுநீரில் உள்ள மருத்துவ குணங்களை பற்றிய முழுமையான ஆராய்ச்சி நடத்தப்படும் என அறிவித்துள்ளார். அதுவும் குறிப்பாக கொடிய நோயான புற்று நோய் தடுப்புக்காக என சொல்லியுள்ளார்.

மருந்தாகப்போகும் பஞ்சகவ்யம்.

வேத காலங்களில் பசுவின் சிறுநீர் மற்றும் சில பொருட்களை(நெய்,சாணம்,தயிர்,சிறுநீர்,பால்) பயன்படுத்தியது குறித்து ஏராளமான தரவுகள் இருக்கின்றது. அதனின் மருத்துவ குணம் பற்றிய நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளது. மருந்துகள் அனைத்திற்கும் அதுவே மூலப்பொருளாக இருந்துள்ளது என அமைச்சர் பல தகவல்களை சொல்லியுள்ளார்.தற்போது மனிதனை அதிகமாக பலி வாங்கும் புற்று நோயை குணப்படுத்தும் தன்மைகள் அதில் இருக்கிறதா எனும் ஆராய்ச்சியையும், அது தவிர வேறு சில நோய் தடுக்கும் குணங்கள் பற்றியும் மத்திய அரசின் சார்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.

பஞ்ச கவ்யம் மருத்துவ குணம் கொண்டதா என்பதை பற்றியே முதலில் ஆய்வு செய்யப்பட வேண்டும். பழங்காலங்களில் மட்டுமல்லாமல், தற்போது கூட இயற்கை வேளாண்மையில் இந்த கரைசல் பயன்படுத்தப்படுகிறது.மண்ணின் தரம் காக்க, பயிர்களுக்கு ஊட்ட சத்து கொடுக்க இது பயன்படுவதாக இயற்கை வேளான்மையை பின்பற்றும் விவசாயிகள் கூறுவதை நாம் கேட்டுள்ளோம். விவசாயத்துக்கு ஒரு பொருள் பயன் படுவதை நாம் எதிர்க்க இயலாது. ஆனால் மனிதர்களுக்கு ?

மனிதர்களுக்கு பல வகை மருத்துவங்கள் பயன்பாட்டில் உள்ளன. சித்தா,ஆயுர்வேதம், யுனானி, மருந்தில்லா மருத்துவம், தொடு சிகிச்சை, அலோபதி எனும் ஆங்கில வழி மருத்துவம், இன்னும் சொல்லப்போனால் குடும்பங்களால் பின்பற்றப்படும் எளிய நாட்டு மருத்துவம் என  தமது விருப்பத்திற்கேற்ப ,வசதிகேற்ப, பின்பற்றுகிறார்கள். தற்போது மத்திய அரசின் முழு ஆதரவோடு ,யோகா புகழ் பாபா ராம்தேவ் பதஞ்சலி எனும் பெரிய நிறுவனத்தை கட்டமைத்து பிரம்மாண்ட விளம்பரங்கள் செய்து அன்றாடம் செய்தி,காட்சி ஊடகங்களில் தோன்றி, போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் என இலவச ஆலோசனையை வழங்கி வருகிறார். இவ்வளவு இருக்கும் போது பஞ்ச கவ்யம் எதனடிப்படையில் சோதனை செய்யப்படவுள்ளது என்பதை அமைச்சர் சொல்லவில்லை. காவி மயமாக்குவது என்பது ஏதோ ஒரு விடயத்தில் மட்டுமல்ல மனித வாழ்வின் சகலத்திலும்  என்பதை தான் அமைச்சரின் அறிவிப்பு காட்டுகிறது.

மத்திய அரசின் மருந்து கொள்கை…..

மோடி பதவியேற்றவுடனேயே பெரும் விளம்பரத்தோடு துடைப்பத்தோடு மோடி போஸ் கொடுக்க வந்த திட்டம் ஸ்வச் பாரத்… இதற்காக பல கோடி செலவு செய்யப்பட்டது. அதற்கான விளம்பர தூதுவர்களாக பல நடிகர்கள் களத்தில் இறங்கினர். தற்போது இந்த திட்டம் என்ன ஆனது?

பாரதிய ஜனதா கட்சி உள்நாட்டு மக்களை திருப்தி படுத்த ஒரு திட்டமும், அமல்படுத்துவதற்கென ஒரு தனி திட்டத்தையும் வைத்து கொள்ளும். அதன் படி சுதேசி என பேசிக்கொண்டே பன்னாட்டு நிறுவனங்களுக்கு சகல சலுகைகளையும் வாரி வழங்கும். சேவை நோக்கில் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களை திட்டமிட்டு அழிக்கும். மேட் இன் இந்தியா என தொழில் துறையினரை கவரும். அதே சமயம் “மேக் இன் இந்தியா” என பன்னாட்டு கம்பெனிகளையும் அழைக்கும். இது அவர்களுக்கு புதிதல்ல.

தற்போது  இந்திய மருந்து சந்தை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையது. பெரும் மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால் இது சாத்தியமாகிறது. இதில் கவனிக்கப்பட விவரம் என்னவென்றால்  சுமார் 40% மக்களே மருந்துகளை முழுமையாக வாங்கும் பொருளாதார வாய்ப்பு உள்ளவர்கள்.

இந்த நிலையில் ஆங்கில மருத்துவத்தை பின்பற்றுபவர்களே அதிகம் என்பதால், அதில் முழுமையாக பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது.அதை முழுமையாக்க மேலும் பல வேலைகளை திரை மறைவில் அரசு செய்து வருகிறது என்பதை பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் நாம் உறுதியாக சொல்ல முடியும்.

இந்தியாவில் நோய்களின் மூலம் இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருவதை பல புள்ளி விபரங்கள் சுட்டி காட்டுகின்றன. தொற்று நோய்கள் மூலம் 60% ,தொற்றா நோய்கள் காரணமாக 40% எனும் விகிதத்தில் மரணம் ஏற்படுகின்றது. மக்களுக்கான மருந்து கொள்கை என்பது இல்லாமல் கார்ப்பரேட்டுகளுக்கான கொள்கை(ளை)யாக உள்ளது .ஒரு முழு கொள்கை, இலக்கு இல்லாத திட்டங்களாக அது இருக்கிறது.ஆக அதில் இருக்கும் ஓட்டைகளை பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் பயன்படுத்துகின்றனர்.

நோய்களின் உலக தலைநகரமாக….

உலக நாடுகளில் மக்கட்தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா , பல நோய்களில் உலக நாடுகளை ஒப்பிடுகையில் முதல் இடத்திலும், அதிகம் நோயாளிகளை கொண்ட நாடாக இந்தியா தனது முதலிடத்தை தக்க வைக்கின்றது. நீரழிவு, இரத்த அழுத்தம், மன அழுத்தம், மலேரியா, தொழு நோய், என அந்த பட்டியல் அதிகமாகும் போது நம் நெஞ்சு பதைக்கின்றது. நம சக மக்கள் பல்வேறு ஒழிக்க முடியாத நோய்களால் அவதிப்படுவதும், அதனால் மரணிப்பதும் வேதனை தானே….

உதாரணமாக… தொழு நோயால் கடந்த 2015 ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர். இதில் இந்தியாவில் மட்டும் 1,27,326 புது நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ள்னர். தொழு நோய் ஒழிப்புக்காக சுதந்திரத்திற்கு பிறகு அரசுகள் (மத்திய & மாநில ) எவ்வளவு செலவழித்திருக்கும்? ஆனாலும் இந்த 20ஆம் நூற்றாண்டில் நம் நாட்டில் இந்த கொடிய நோய் ஒழிக்கப்படவும் இல்லை… மாறாக அதிகரித்துள்ளது.இதில் உண்மை என்னவென்றால் 32 நாடுகளில் தொழு நோய் அறவே இல்லை. தொழு நோய் ஒழிப்பிற்கு நம் நாட்டில் அரசுகள் பெரும் தொகை செலவழித்தும் இந்நோய் ஒழிக்க முடியவில்லை.

கொசுவினால் பரவும் மற்றொரு நோய் மலேரியா… சுற்று சூழல் பாதிப்பு, தட்ப வெப்ப நிலையின் காரணமாக கொசு உற்பத்தி இந்தியாவில் கட்டுபடுத்திட முடியவில்லை.. புது மருந்துகள் வருகிறதே தவிர ஒட்டுமொத்தமாக நோயை கட்டுபடுத்த முடியவில்லை. ஒழிக்க முடியவில்லை. ஆனால் நம் அருகில் இருக்கும் நாடான இலங்கையில் முழுமையாக மலேரியா ஒழிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற வாழ்விடங்களின் ஊடே வாழும் நம் மக்கள் மலேரியாவால் தொடர்ந்து உயிரும் இழக்கிறார்கள்.

கொசுவால் ஏற்படும் மற்றொரு நோய் டெங்கு. நன்நீரில் இருக்கும் கொசுக்களால் மற்றும் தேங்கும் தண்ணீரில் இருந்து உருவாகும் கொசுக்களால் டெங்கு சில சமயங்களில் உயிர்களையே பலி வாங்குகிறது. கடந்த 2009 ஆண்டு அகில இந்திய அளவில் 15,800 பேர் இந்நோயால் பாதிப்படைந்தனர்.2016 ஆம் ஆண்டு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய் தாக்கியது. அரசு புள்ளி விவரம் தான்..இருந்தாலுமே எவ்வளவு மடங்கு அதிகம் பாருங்கள்.

அடுத்ததாக அவ்வப்போது பீதியை கிளப்பும் பன்றி மற்றும் பறவை காய்ச்சல். விலங்கினங்களால் பரவும் இந்நோய் காரணமாக பெரும்பாலான நேரங்களில் மரணம் தான் நிகழ்கிறது. இதை தவிர பல காலங்களில் டைபாய்டு காய்ச்சல், இன்னும் பல தொற்று நோய்கள் இந்தியாவை சுகாதார நிலை பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது.

மேலே சொல்லப்ப்ட்ட தொற்று நோய்களை தவிர வாழ்நிலை மற்றும் உணவு பழக்க மாற்றத்தால் சமீப காலங்களில் பிஞ்சு தளிரை கூட தாக்கும் நீரழிவு நோய், உள்ளிட்ட பல தொற்றா நோய்களால் இந்தியாவின் சுகாதார குறியீடு சரிவை சந்தித்துள்ளது.

அரசியல்….எதிலும் எல்லாவற்றிலும்.

இப்போது மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் பேட்டியில் சொன்னதை கவனிப்போம். இந்தியா..நோய்களின் தலைநகராக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மோடி ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சிகள் வெகுவாக குறைந்துள்ளதாக இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கம் சொல்லுகிறது. ஏனென்றால் பல ஆராய்ச்சிகளிக்கு அரசின் உதவிகள் தேவைப்படுகின்றது. அது தேவையான ஊக்கம் கொடுக்கப்படவில்லை.மாறாக பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் விலை உயர்ந்த மருந்துகளை இங்கே உற்பத்தி செய்யாமல் லைசென்சிங் முறையில் விற்பனை செய்ய அரசு இசைவு தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு எடுத்து கொள்ள வேண்டிய மருந்துகளின் விலையை கட்டுபடுத்தாமல், கூடுதல் விலைக்கு விற்க அரசே உத்தரவு போடுவது கொடுமை.

இதை தவிர இந்தியாவின் பாரம்பரிய சிகிச்சை முறைகளை பெரும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிக்க ஏதுவாக சட்டங்களை இலகுவாக்கும் திட்டங்களும் இருக்கிறது. யோகா சொல்லி கொடுத்த ஒரு சாமியார் மிக குறுகிய காலத்தில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை தொடங்கி எப்படி வேகமாக உற்பத்தி சாலைகளை உருவாக்கி வணிகம் செய்ய முடிகிறது. பழமையான பல நிறுவனங்கள் இன்னும் தடுமாறுகிறதே ஏன்? மருத்துவம் என்பது ஒரு சேவை. அது வணிகமாகி 26 ஆண்டுகள் ஆகிறது. அந்த வணிகத்திலும் பெரும் கொள்ளை நடக்கிறது.

நோய்கள் பல நம் நாட்டை, மக்களை அச்சுறுத்தும் நேரத்தில் பஞ்சகவ்யத்தை வைத்து புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்போகிறோம் என்பது கற்பனையின் உச்சி. மக்களுக்கு அடிப்படையில் தரமான மருத்துவம் தேவைபடுகிறது. அதற்கான திட்ட செலவினங்களை முற்றிலுமாக குறைத்து வருகிறது. தற்போது ஜெட்லியால் முன்மொழியப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் மருத்துவத்துக்கான நிதி ஒதுக்கீடு 100% குறைந்துள்ளது. எந்த புது சலுகையும் இல்லை. 100% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள மருந்து துறையில் விலைகள் அதிகமாகும். காரணம், தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்தை முற்றிலுமாக கலைத்துள்ளது மோடி அரசு. தன்னாட்சி அதிகாரம் கொண்ட அந்த அமைப்பு தான் இந்தியாவில் விலைகளை கண்காணித்து,ஓரளவிற்கு கட்டுக்குள் வைத்தது. அது இன்று இல்லை. ஆக அனைத்தும் மக்கள் பனத்தை தான் சுரண்டும். மக்களின் அடிப்படை தேவைகளான மருத்துவமனைகள், தரமான மருந்துகள், சுகாதாரமான வாழ்விடங்கள்.சுத்தமான குடிநீர், என பல பிரச்சனைகள் உள்ளது, அதையெல்லாம் விட்டு திசை திருப்பும் பணிகளை செய்வதே இந்த பி.ஜே.பி அரசின் நோக்கமாக இருந்து வருகிறது.

தற்போது புது டில்லி ஐ.ஐ.டியில் புது ஆராய்ச்சி துறையே உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒரு பெரிய குழுவே இதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவ்ல்.அதன் பெயர் பஞ்சகவ்ய திட்டம். இதற்கு மத்திய அரசு நேரடியாக நிதி உதவி செய்யும், மேலும் பஞ்சகவ்யத்தின் மருத்துவ குணங்களை கண்டறிய ஐ.ஐ.டி (இந்திய தொழில் மற்றும் விஞ்ஞான கல்லூரி)அத்திட்டத்தின் துணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் செயல்படவுள்ளனர். அங்கு ந்டைபெறும் ஆராய்ச்சியின் மூலம் பஞ்சகவ்யத்தின் அனைத்து வகை பயன்பாட்டையும் கண்டுபிடிக்க போகிறார்கள்.அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், மத்திய சுகாதார துறை அமச்சகத்துக்கும் அனுப்பி ஒப்புதல் பெற்று “ பசு சார்ந்த சுகாதாரத்தை” உருவாக்க போகிறார்களாம். கொடுமையிலும் கொடுமை.  மாட்டின் சாணத்தை மூலப்பொருளாக வைத்து கொசு ஒழிப்பு சுருள், சுத்திரிகரிக்கபட்ட பசுவின் சிறுநீரிலிருந்து புற்று நோய்க்கான மருந்து, மாட்டு சாணத்தை கொண்டு செங்கல் என 34 ஆய்வுகளை செய்ய போகிறார்கள் என்கிறார் திட்டத்தின் தலைவர் விஜேந்திர குமார் விஜய் .

இந்த விஜேந்திர குமார் விஜய் ராஜஸ்தானில் உள்ள வேளான் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று ( அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் ) சில ஆண்டுகள் தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஹர்ஷ்வர்த்தனுடன் பசுக்களின் மூலம் மருந்துகள் , அதன் வழியே முழு சுகாதாரம் எனும் பேரில் பல ஆய்வுகள் , கூட்டங்கள் நடத்தி முதலில் ராஜஸ்தான் அரசுக்கும் , பின்னர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் பரிந்துரைகளை கொடுத்தவர். அவர் சில நாட்களுக்கு முன்னர் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், பசு என்பது பலர் சொல்வது போல் அரசியல் அல்ல, அது அடிப்படையில் அறிவியல் ,ஆகவே நாங்கள் எங்கள் ஆய்வுகளை தொடர்ந்து செய்வோம், ஒரு வேளை எதிர்பார்த்த பலன் அளிக்காவிட்டால் கைவிடுவோம் .

ஒரு பொறுப்புள்ள மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களின் குறைகளை போக்க நடவடிக்கை எடுப்பது தான் நல்லது. மாறாக இப்போதுள்ள மத்திய அரசோ இந்துத்துவா வேலைகளை அனைத்து துறைகளிலும் செய்வது தான் பிரதானமாக கருதுகின்றது. எது எப்படியோ பஞ்சகவ்ய மருந்துகள் இனி உலா வரத்துவங்கலாம். விஞ்ஞான பூர்வமாக அக்கரைசலின் தன்மைகள் குறித்து எந்த வித ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வரவில்லை… ஆனால் பசுவை வைத்து அரசியல் செய்தவர்கள் பல அசிங்கங்களையும் செய்யவுள்ளார்கள் என்பது மட்டும் உறுதி. அறிவியலை கொச்சைப்படுத்தும் இவர்களின் வெத்து வேலைகளை அம்பலப்படுத்துவோம்.

– என்.சிவகுரு

Related Posts