இதழ்கள்

பேரச்சத்தில் வாழும் பெண்களின் வலி …

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்
சிறுகதை தொகுப்பு
ஆசிரியர்: அ. வெண்ணிலா

இந்த தொகுப்பை வெளியிட்ட அன்றே வாங்கிப் படித்து விட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த நூல் அறிமுகத்தை எழுதி வைத்தாலும் ஊடகங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.

ஆனால் அன்றாடம் பெண்கள் வலிக்கு ஆட்பட்டும் இந்த சமூகத்தில் இக்கதைகள் பற்றி எப்பொழுது பேசினாலும் பொருத்தமாய்த் தான் இருக்கிறது. தினசரிகளில் பெண்கள் வேட்டையாடப்படும் செய்திகள் வழக்கமான ஒன்றாக மாறிப்போன காலம் இது. காலமும் கைவிட்ட அபலைகளாய் பெண்கள் நிற்கும் இந்தத் தருணத்தில் இந்தக் கதைகள் பெண்களின் வலியை வெளிப்படுத்துவதாகவும், குறைந்த பட்ச அன்பை, கழிவிரக்கத்தையேனும் ஆண்களிடம் பெற்று விட இறைஞ்சுவதாகாவும் உள்ளன. இக்கதைகள் வாசகனை பேரதிர்விற்கு உட்படுத்துபவை.

பிருந்தாவின் நிலாக் கும்பல் விளையாட்டோடு தொடங்குகிறது முதற்கதையான எரிநட்சத்திரம் . படித்தவுடன் ஏற்பட்ட அதிர்வில் புத்தகத்தை மூடிவிட்டேன். மேற்கொண்டு படிக்க விடாமல் பிள்ளைப் பருவத்தின் கருப்பு தினம் ஒன்று மனதில் பேயாட்டம் ஆடியது. பிருந்தாவின் கதைகளைப் படிக்கும் எந்தப் பெண்ணும் தன் இளமைக் காலத்தின் கருப்பு தினத்துக்கு சென்று வருவாள் என்பதை உறுதியாக சொன்ன ஆசிரியரின் கூற்று முதற்கதையிலேயே மெய்யானது.

அந்தக் கதை தந்த வலியுடனான வலிமை அடுத்த கதைகளைப் படிக்கத் தூண்டியது. இக்கதைகள் வலியுடனான பெண் வாழ்வை நெசவுத் தொழிலின் பின்புலத்தில் இருந்து வெளிப்படுத்துகிறது. ‘பாவு’, ‘அல்லு’, ‘அலுவு’ , ‘குதிரைக்கட்டை’, ‘தாரு’ என நெசவாளர்களின் சொல்லாடல்கள் நம்மை அந்த சூழலுக்குள் சுவீகரித்துக் கொள்கின்றன.

பாவு பிடிப்பதில் தொடங்கி தாரு சுத்துவது வரை வாசகனுக்கு கற்றுத் தரும் வெண்ணிலா அவர்களின் கதைப் பின்னணியில் நெசவாளியின் நேர்த்தி வெளிப் படுகிறது. நெசவுத் தறிகளின் சத்தம் நம் காதுகளிலும் ஒலிக்கிறது. நெசவாளர் வீட்டுப் பெண்கள் ‘வெளிக்குப் போகப்’ படும் பாட்டை மலநாற்றத்தோடும் பீடிப்புகையோடும் சொல்லுகையில் அரசியல் வாதிகள் பேசும் அறிவியல் வளர்ச்சி கக்கூசுக்கும் பயன்பட வில்லை என்ற உண்மை முகத்தில் அறையும்.

விடுமுறை முடியும் முன்னே ஊருக்கு கிளம்பத் துடிக்கும் பிருந்தாவின் அழுகைக்கு ஆறுதல் சொல்லாமல் அவ்வளவு நாள் பாசமாக இருந்த மாமா பஸ் ஏற்றிவிடும் போது – கிளியைக் கொன்ற பூனையை நமக்கு அடையாளம் காட்டி விடுகிறார் ஆசிரியர் . அக்காவின் காதலன், டியூஷன் டீச்சர் என பிருந்தாவின் ‘அமில அனுபவங்கள்’ நெஞ்சை அரிக்க யாரையும் நம்ப முடியாத உளவியல் சூழலில் தவிக்கும் பெண்ணின் நிலையும் அன்பை இறைஞ்சும் பிருந்தாவின் ஏக்கமும் ஐந்தாவது கதையில் அழுத்தமாய் பதிவு செய்யபடுகிறது.

கதை தோறும் பெண்கள், உழைப்பை மட்டுமே துணையாகக் கொண்டு சாமான்ய வாழ்வை சாராசரி நிம்மதியோடு வாழ விழையும் பெண்கள். ஆதிச் சமூகம் தொடங்கி இன்று வரை ஆணுக்கு நிகராய் உழைக்கும் பெண்களின் நிலையை கதைப் போக்கில் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

கற்பிதங்களை கட்டுடைத்து சுயமாய் வாழும் வலிமை மிக்க பாத்திரங்களை சுமந்த கதைகளும், சுயத்தை தக்க வைக்கப் போராடும் பெண்களின் கதைகளும் தொகுப்பெங்கும் பெண் மனதை நகலெடுதுள்ளன.குழந்தைப் பருவம் தொடங்கி நாற்பது கடந்த நிலையிலும் தனெக்கெதிராய்த் தொடுக்கப்படும் வன்முறைகளுக்கு தன்னையே குற்றவாளியாக்கும் இச்சமூகத்தின் அவல நிலை கண்டு பதறும் பெண் உளவியலை பிருந்தா துவங்கி ராஜீ வரையிலான பாத்திரங்கள் வழி நம்மால் அறிய முடிகிறது.

கோபத்தோடு மௌனம் காக்கும் கையறு நிலையில் மருவோடு உறவாடும் பெண்ணின் மனநிலையை அடையாளம் கதை உணர்த்துகிறது. ஏனோ அந்தக் கதை படித்ததும் அடுத்த முறை வெண்ணிலா தோழரை பார்க்கும் போது காதுமடலைத் திருப்பிப் பார்க்கத் தோன்றுகிறது.

தமிழ் இலக்கிய வெளியில் கவிஞராக தனக்கென பிரத்யேக இடம் பிடித்தவர் வெண்ணிலா. நான் பெரிதும் மதிக்கும் பெண்ணிய எழுத்தாளர்களில் மிகமுக்கியமானவர். எளிய அன்புடன் வலிய விடயங்களை எழுதுபவர். சிறுகதை நடையில் அவருக்கே உரிய நேர்மையுடன் கதைக்கருவை கையாள்கிறார் .

சோடா சுற்றும் நிபணத்துவத்தை காட்சிப் படுத்தும் போதும், சாராய நாற்றத்தோடு புராதன சின்னங்கள் புதைந்து கிடக்கும் பீக்காட்டை கடந்து அம்மணத் தெருவிற்கு அழைத்து செல்லும் போதும் கதை சொல்லியாய் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் . பாலின சமத்துவம் பற்றி உணர எளிய அகராதியாய் இக்கதைகள் உள்ளன என்றால் அது மிகையில்லை . பேரச்சம் நிரம்பியதாகிப் போயிருக்கிற இன்றைய சமூக சூழலை, பெண் மனதின் வலியை, வலிமையை, சகமனுஷியாய் ஏற்கக் கோரும் கோரிக்கையை முன் வைக்கும் இச்சிறுகதைகள் தமிழ் இலக்கிய உலகமும் பாலின சமத்துவம் வேண்டுவோரும் போற்றிக் கொண்டாட வேண்டியவை .

  • த . ஜீவலட்சுமி

Related Posts