அரசியல்

இடுப்புத் துண்டை தோளில் ஏற்று…..அடித்தால் திருப்பி அடி…..

ஏப்ரல் 10 அசுரனுக்கு பிறந்தநாள், அந்த அசுரனின் பெயர் பி.எஸ்.சீனிவாசராவ் எல்லோருக்கும் இந்த பெயர் தெரிந்த ஒரு பெயர் தான். சென்ற தலைமுறைவரை ஆனால் இன்றைக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாத ஒரு பெயர் தான் பி.எஸ்.சீனிவாசராவ்.

சென்ற வருடம் தமிழ் சினிமாவில் அசுரன் என்ற ஒரு திரைப்படம் வெளிவந்து பட்டிதொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிக்கொண்டு ஓடியது. அதில் தனுஷ் கதாபாத்திரம் இவரின் வாழ்க்கையில் இருந்து 1% எடுத்து ஒட்டிய ஒரு மாயாஜாலம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும்.

சம்பவம் – 1

அப்போது 1942 க்கு பிந்தைய காலம். அழகான குன்னியூர்ப்பண்ணைக் கிராமத்தின் அய்யனார் கோயில் மைதானம். ஒடிசலான தேகம். கூரிய பார்வை. வீரியமிகு உரைகளை வெளிப்படுத்தும் உதடுகள். விவசாயிகளை அடிமைகளாக நடத்தும் பண்ணையார்களுக்கு எதிராக #கழுத்துநரம்புபுடைக்க முழங்கிகொண்டிருக்கிறார் (அசுரன்சீனிவாசராவ்)

அதே நேரம் கூட்டத்தை ஒடுக்கும் நோக்கில் கடுமையான ஆயுதங்களோடு குண்டர்கள் நெருங்குகின்றனர். இதை கண்டவர் எந்தவித சலனமுமில்லாமல் அய்யனாரே அதிரும் வண்ணம் முழங்குகிறார்.

“இரத்தத்தை உரியும் பண்ணை முதலாளிகளுக்கு எதிராக முஷ்டியை உயர்த்துவோம். எத்தனை நாட்களுக்கு தான் அடிமையாக கிடப்பது? இழப்பதற்கு ஏதுமில்லாத நாம், உரிமைகளுக்காக எதிர்த்து போராடுவோம். வாழ்க்கை ஒருமுறைதான். விவசாய தோழர்களே துணிந்து நிற்போம். எழுந்து நிற்போம்.” என்று மக்களை திரட்டியவர்.

சம்பவம் – 2

மன்னார்குடி ஒப்பந்தம்
இடம்: நீடாமங்கலம்
தலைமை: அமைச்சர் பாஷ்யம்
3 தரப்பு: 1.அரசு, 2.அடியாட்களுடன் பண்ணைகள், 3.சீனிவாசராவ் தலைமையில் 2000ற்கு மேற்பட்ட விவாசய தொழிலாளர்கள்.

காலை 6 மணி முதல் இரவு வரை பேச்சுவார்த்தை நடந்தது. பேசியதில இருந்து, ஒன்றரைப்படி என்று முடிவாச்சு; ஆனா மிராசுதார்கள் ஏற்க மறுத்தனர்.

மிராசுதாரர்கள்: “ஆண்களுக்கு மட்டும் கூலிய ஏத்தித்தர்றோம்.. பெண்களுக்கு முடியாது, இந்த ஒப்பந்தத்த அமல்படுத்த முடியாது..”

அமைச்சர் பாஷ்யம்: “மிராசுதார்கள் ஒத்துக்க மாட்டேனுட்டாங்க. அவுங்க ஏத்துக்கலன்னா நாங்க என்ன செய்யிறது..”

பி.சீ.ஆர்: “ஒப்பந்தத்த அமல்படுத்த முடியலன்னா நீ எதுக்கு?”

அமைச்சர்: “மிஸ்டர் பி.எஸ்.ஆர். நான் யாருன்னு தெரியுமா?”

பி.சீ.ஆர்: “தெரியும் … மந்திரிதானே..”

அமைச்சர்: “நான் நினைச்சா எட்டுமணி நேரத்துல மெட்ராஸ்ல இருந்து படைய கொண்டுவர முடியும்.. உங்களை ஒன்றுமில்லாமல் செஞ்சிட முடியும்..”

பி.எஸ்.ஆர்: “உங்களுக்கு 8 மணிநேரம் தேவைப்படும். நான் இப்ப ‘புரட்சி ஓங்குக’ன்னு முழக்கமிட்டா போதும், அரைமணி நேரத்துல இங்கு திரளும் எம்மக்களால் சுற்றி வலைக்கப்படுவீங்க.. பாக்குறீங்களா..?’

என்று எந்த பயமும் இல்லாமல் மக்களுடன் நின்றார்

சம்பவம் – 3

சாலை (அக்ரகாரத்தில்) என்பது எல்லோருக்கும் ஆனது

1944 , மே மாத விவசாயிகளுக்கான முதல் மாநாடு மன்னார்குடியில் நடந்ததென்றால் மூன்றாவது மாநாடு வத்திராயிருப்பில் நடந்தது. அப்போது நடந்த உழவர் பேரணி, மறவர்கள் உள்ள மேலப்பாளையம் தெருவில் புகுந்து, கடந்து, அக்ரகாரத்தில் நுழைக்கிறது. இதைக்கண்டு பதறியடித்து வந்த இன்ஸ்பெக்டர், “இங்கே நுழையக் கூடாது” என்கிறார். பி.எஸ்.ஆரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ‘எல்லோரும் மனிதர்கள் தான். விவசாயிகள் இல்லையேல் இங்கு யாருமே வாழ இயலாது. அவர்களே உலக இயக்கத்துக்கான அச்சாணி’ என வெகுண்டெழுந்தார். இறுதியில் சம்மதம் கிடைத்து, அக்ரகாரத்துக்குள்ளும் பேரணி பயணிக்கிறது. சிலருக்கு மட்டும் இருந்த சாலை அப்போது மக்கள் செல்லும் சாலையாக மாறியது.

சம்பவம் – 4

சாமி என்பது அணைவருக்குமானது

திருத்துறைப்பூண்டி பெரியநாயகி கோவில் விழா. ‘கோயில் கொடி கட்டிவிட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் 15 நாட்களுக்கு திருத்துறைப்பூண்டி நகரத்துக்குள்ளேயே நுழையக்கூடாது’ என்பது ஊர் வழக்கம். தற்செயலாக நுழைந்த தலித் சீரங்கன் மற்றும் அவர் மனைவியும் கடுமையாக தாக்கப்படுகின்றனர். இந்த அநீதியைக் கண்டு பொங்கியெழுந்த பி.எஸ்.ஆர், 500 க்குமேற்பட்ட தலித் மக்களை திரட்டிக்கொண்டு, தேர் வரும்போது நடுரோட்டில் தடுத்து நிறுத்தினார்.

“எல்லோருக்கும் பொதுவான கடவுளின் தேரைத் தொழ எங்களுக்கு உரிமையில்லையா?” முழங்கினார்கள். வடம் பிடித்து இழுத்தவர்கள் ஓட்டம்பிடித்தனர். பின்பு ஆட்சியர், கண்காணிப்பாளர், வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பேச்சுவார்த்தை நடந்து இறுதியில் தலித் மக்கள் மீதான தடை நீங்கி உரிமைப் போராட்டம் வென்றது.

மேலும் அவர் பல மாற்றங்களை இங்கு செய்தார். உண்மையில் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு தலைவர் அவர். இங்கு அரசியல் என்பதை தனி நபரை வைத்து வியாபாரம் ஆக்கி மக்களை அடிமை படுத்தி இருக்கும் இந்த சூழ்நிலையில் ஹீரோயிசம் என்பது தனிநபர் சாகசமல்ல, மக்களை திரட்டி அநீதியை ஓடவிடுவதே அசல் ஹீரோயிசம் என்று புரியவைத்த உண்மையான அசுரன் தான் தோழர் ‘பி.சீனிவாசராவ்’.

மேலும்

  • தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் நிலவிய இரட்டை குவளை முறையை ஒழித்தார்.
  • சாதி தீண்டாமை ஒழிப்பு போராட்டம் மற்றும் அதன் அவசியத்தை மக்களிடம் புரிய வைத்தார்
  • “அடித்தால் திருப்பிஅடி” என்று அடிமை பட்டு இருந்த மக்களை கிளர்ந்தெழுத செய்தார்
  • சூரியன் உதிக்குமுன் வயலுக்கு சென்று மறையும் வரை வேலை செய்யும் உழைப்புச் சுரண்டலை கடுமையாக எதிர்த்தார்.
  • பண்ணையடிமைகள் வேலைக்கு வராமல் போனால், அவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகள் ஈரக்குலையை நடுங்கச் செய்யும்.

ஐந்து பிரி கொண்ட சாட்டையில், பிரியை விலக்கிவிட்டு கூரான கூழாங்கல்லை சொருகி அடிப்பார்கள். சதைகள் பிய்த்துகொண்டு போகும். ரத்தம் பீறிடும். துடித்து அழுதால் அடி அதிகமாகும். இவ்வளவு அடிபட்டவர்களுக்கு எந்த வைத்தியமுமில்லை. வைக்கோலை கொளுத்தி சாணி உருண்டையைச் சூடு காட்டி ஒத்தடம் கொடுப்பது மட்டுமே வைத்தியம். பெண்களும் இதிலிருந்து தப்ப இயலாது.

இந்த கொடூரத்தின் உச்சமே ‘சாட்டையடி சாணிப்பால்’. மாட்டு சாணத்தை கரைத்து மாட்டுக்கு மருந்து கொடுக்கும் மூங்கில் குழாயில் நிரப்பி அந்த சாணிப்பாலை பருக செய்வார்கள். ஒற்றைக்காலில் சுடு மணலில் நிற்கும் தண்டனை, இரும்பு கம்பிகளால் அடி என இரக்கமற்ற தண்டனைகள் விதவிதமாக தொடரும். இவையல்லாமல் பண்ணையடிமை வீட்டு பிள்ளைகள் படிக்கக் கூடாது.

அவர்கள் வீட்டு மகன், மகள் திருமணம் நடக்க வேண்டுமென்றாலும் பண்ணையார் அனுமதி கிடைத்தால் மட்டுமே நடக்கும் இவை அனைத்திற்கும் எதிராக விவசாய சங்கத்தை கட்டி அதில் மக்களை இணைத்து அத்துணை அடிமைமுறைக்கும் எதிராக போராட்டம் நடத்தி மக்களை அடிமை முறையில் இருந்து விடுவித்தார்.

கிராமம் கிராமமாக பயணித்து சங்கத்தை விதையாக்கினார் பி.எஸ்.ஆர். மக்களை ஒன்றாக இணைத்தார், போராடினார் ‘பண்ணையாட்களை சாட்டையால் அடிப்பதை நிறுத்தவேண்டும், சாணிப்பால் கொடுமை அகற்றப்படவேண்டும், முத்திரை மரக்காலில் நெல் அளக்க வேண்டும்’ என்ற மூன்று ஒப்பந்தங்களும் மன்னார்குடியில் ஏற்பட்டு, ஒப்பந்தம் வெற்றி பெற்றது.

இப்படி பல தகவல்கள் சொல்லிக்கொண்டே போகலாம் உண்மையில் வரலாற்றை படிக்க வேண்டும், அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் அசுரன் (பி.எஸ்.சீனிவாசராவ்) க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


அன்புடன்
நவீன்குட்டி
10 ஏப்ரல் 2020

Related Posts