அரசியல்

ஐடி தொழிலாளர்களும் நவீன கொத்தடிமைத்தனமும்…

சமீபகாலமாக “அவுட்சோர்சிங்” என்கிற வார்த்தை கார்ப்பரேட் உலகில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் செலவுகளைக் குறைப்பதற்கான உத்தி அது என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதன்மூலம் அந்நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் விலையும் நுகர்வோருக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் அது உண்மையா?

இல்லையென்றால், அவுட்சோர்சிங் என்றால் தான் என்ன?

அது ஐரோப்பாவில் எப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது?

முதலாளித்துவத்திற்கு மூன்று முக்கியமான குறிக்கோள்கள் இருக்கின்றன. அது என்னவென்றால் இலாபத்தை பெருக்குவது, இலாபத்தை மேலும் பெருக்குவது, இலாபத்தை தொடர்ந்து பெருக்கிக்கொண்டே இருப்பது. அவ்வளவுதான். ஒவ்வொரு ஆண்டும் இலாபம் வருகிறதா என்று மட்டும் அது பார்ப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும், அதற்கு முந்தை ஆண்டின் இலாபத்தைவிடவும் அதிகமான இலாபம் ஈட்ட  முடிகிறதா என்று கணக்கிட்டே மண்டையைப் பிளந்து ஆய்வு செய்கிறது முதலாளித்துவம். இலாபத்தை குறைப்பதற்கு இரண்டு வழிகளே இருக்கின்றன. ஒன்று, உற்பத்தியின் செலவைக் குறைப்பது. மற்றொன்று, விற்பனை விலையை அதிகரிப்பது. இதில் இரண்டாவது வழி அத்தனை எளிதானதல்ல. முதலாளித்துவம் தன்னுடைய தத்துவத்தைப் பின்பற்றுகிற நிறுவனங்களிடையே உருவாக்கி வைத்திருக்கிற போட்டியின் காரணமாக எல்லா நேரங்களிலும் எல்லா துறைகளிலும் விற்பனை விலையை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்காது. எனவே முதலாவது வழிமுறையான உற்பத்தி செலவைக் குறைப்பது தான் ஒப்பீட்டளவில் நிறுவனங்களுக்கு எளிதான வழி. அதனால் தங்களால் எவ்வளவு முடிகிறதோ, அதைத் தாண்டியும் உற்பத்தி செலவைக் குறைக்க பாடுபடுகின்றன.

பொதுவாக பாரம்பரியமான அனைத்து உற்பத்தித் தொழிற்சாலைகளிலும், மூலப்பொருட்கள் (raw materials) வாங்குவதற்கான செலவும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கான செலவும் தான் ஒரு நிறுவனத்தின் முக்கியமான செலவுகளாக இருக்கும். ஆனால் ஐடி மற்றும் கணிபொறி மென்பொருள் நிறுவனங்களிலோ மூலப்பொருள் என்கிற ஒன்று இல்லவே இல்லை. அப்படி எதையாவது சொல்லித்தான் ஆகவேண்டுமானால், அது தொழிலாளர்களின் மூளை மட்டுமே. ஆக, ஐடி நிறுவனங்களில் தொழிலாளர்கள் தான் முக்கியமான அங்கம். அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் மட்டும்தான் செலவே. ஒரு ஐடி நிறுவனம் தன்னுடைய உற்பத்தி செலவைக் குறைக்க விரும்பினால், தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைப்பது, அவர்களுக்கான இன்னபிற சலுகைகளை நிறுத்துவது, அவர்களில் சிலரை வேலையைவிட்டு அனுப்பி ஆட்குறைப்பு செய்வது என தொழிலாளர்களின் மடியில் கைவைப்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இலாபத்தை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவதற்கு அவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு வழிமுறை அதுதான். ஆனால் மூலப்பொருளாகவும் உழைப்பைச் செலுத்துபவராகவும் இருக்கிற தொழிலாளர்களினால் தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் அனைத்து இலாபங்களும் வருகிறது என்பதை வசதியாக அவர்கள் மறைத்துவிடுகின்றனர்.

தொழிலாளர் நலச்சட்டங்கள் முற்றிலும் இல்லாமல் இருக்கிற மூன்றாம் உலக நாடுகளைவிட, அச்சட்டங்களும் தொழிற்சங்கங்களும் ஓரளவுக்கு மேம்பட்டு இருக்கிற மேற்கு ஐரோப்பிய நாடுகளில், தடாலடியாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொஞ்சம் கடினமான காரியம்தான். அதனால் ஒருபுறம் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாகவும் தொழிலாளர்களுக்கு எதிராகவும் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான லாபி வேலைகளை செய்துகொண்டிருக்கின்றன. மறுபுறமோ “அவுட்சோர்சிங்என்கிற புதிய வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கின்றன.

ஒரு நிறுவனத்தின் சில வேலைகளை ஐரோப்பாவைவிட குறைந்த அளவில் ஊதியம் வாங்கும் ஊழியர்கள் கிடைக்கும் உலகின் வேறு ஏதோவொரு பகுதியில் செய்யலாம் என்றும், அதன்மூலம் ஐரோப்பிய நிறுவனங்களின் செலவு குறைந்து இலாபம் அதிகரிக்கும் என்றும் கார்ப்பரேட் உலகம் சொல்கிறது. அதனைச் செய்வதற்கு ஐரோப்பாவை விடவும் குறைவான ஊதியம் கொடுத்தாலே போதும் என்ற நிலையில் இருக்கும் இந்தியாவில் பல அவுட்சோர்சிங் நிறுவனங்களும் உருவாகி வருகின்றன. குறிப்பாக டிசிஎஸ் (டாட்டா கல்சல்டன்சி சொல்யூசன்ஸ்), ஹெச்.சி.எல். (இந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிட்டட்), விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மகிந்திரா உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் இந்தியாவில் உருவாகியிருக்கின்றன. அந்நிறுவனங்கள் ஐரோப்பிய கார்ப்பரேட் நிறுவனங்களோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

 1. தங்களது நிறுவனத்தில் என்னென்ன வேலைகளை எல்லாம் உலகின் வேறு ஏதோவொரு பகுதியிலிருந்து செய்ய முடியும் என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கண்டுபிடித்து பட்டியல் ஒன்றைத் தயாரிக்கும். இப்படியாகத் தயாரிக்கப்படும் வேலைகளின் பட்டியலை ப்ராஜக்ட் என்று அழைக்கிறார்காள். பொதுவாக மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களும், வங்கிகளும், எலக்ட்ரானிக் உற்பத்தி நிறுவனங்களும், மற்றும் ஐடி வேலைகள் இருக்கக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களும் தான் இதில் முக்கியமானவை.
 2. பின்னர் அவ்வேலைகளை செய்வதற்கு ஏற்ற, குறைந்த கூலி வாங்கும் ஏழைகள் எந்த நாட்டில் அதிகம் வசிக்கிறார்கள் என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கண்டுபிடிக்கும்.
 3. அந்த நாடுகளில் தொழிலாளர் நலச்சட்டங்களோ அல்லது தொழிற்சங்கங்களோ இல்லை என்பதையும் ஐரோப்பிய நிறுவங்கள் உறுதி செய்துகொள்ளும்.
 4. அந்த நாடுகளில் இருக்கும் அவுட்சோர்சிங் நிறுவனங்களில் தனக்கான பணிகளை ஐரோப்பாவில் செய்வதைவிடவும் குறைவான செலவில் செய்யும் நிறுவனங்களின் பட்டியலை ஐரோப்பிய நிறுவனங்கள் தயாரிக்கும்.
 5. அந்த அவுட்சோர்சிங் நிறுவனங்களிலேயே மிகக்குறைந்த செலவில் வேலையை முடிப்போம் என்று வாக்குக் கொடுக்கிற நிறுவனத்திற்கு அந்த வேலையை ஐரோப்பிய நிறுவனம் வழங்கும். இதனை ஒரு மறைமுக ஏலமாகவே ஐரோப்பிய நிறுவனங்கள் நடத்தும்.

இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் பொறியியலாளர்கள் படித்து பட்டம் பெறுகிறார்கள் என்பதாலும், இந்திய ஐடி மற்றும் தகவல் தொழிற்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கான சட்டங்கள் மிகமிக மோசம் என்பதாலும், அவர்களால் சங்கம் கூட அமைக்க முடியாத சூழல் இருப்பதாலும், ஐரோப்பிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தனது செலவைக் குறைக்கும் இலக்கில் இந்தியா தான் மிகமுக்கியப் பங்காளியாக மாறியிருக்கிறது.

ஐரோப்பிய நிறுவனத்திற்கும் இந்திய அவுட்சோர்சிங் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதும், இந்திய நிறுவனத்திலிருந்து மிகச்சிலர் ஐரோப்பா வருவர். தாங்கள் இந்தியாவிலிருந்து செய்ய வேண்டிய வேலை குறித்த மேலதிக தகவல்களை திரட்டிக்கொண்டு மீண்டும் இந்தியா செல்வர். அங்கே அவர்களுடைய நிறுவனத்தில் இருக்கும் பொறியாளர்களுக்கு அனைத்தையும் விவரமாக விளக்கி வேலையை செய்ய வைப்பர். இதன்பின்னர் வேலை துவங்கியதும், ஒவ்வொரு ப்ராஜக்டுக்கும் இரண்டோ அல்லது மூன்றோ பேர் மட்டும் ஐரோப்பாவுக்கு வந்து, ஐரோப்பிய நிறுவனத்தில் பணிபுரியும் ஐரோப்பிய பொறியாளர்களுக்கும் இந்தியாவில் பண்புரியும் இந்தியப் பொறியாளர்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுவர். ப்ராஜக்டின் தன்மை, அளவு, காலம் போன்றவற்றைப் பொருத்து ஐரோப்பா வரும் அவர்களின் எண்ணிக்கை மாறும். ஆனால் பெரும்பாலும் இந்தியாவில் பணிபுரியும் பொறியாளர்களின் எண்ணிக்கையில் 10 சதவிகிதத்திற்கு மேல் அதிகமாகாமல் இந்திய அவுட்சோர்சிங் நிறுவனங்கள் பாத்துக்கொள்ளும். அப்போதுதானே அவர்களின் இலாபத்திலும் குறைவிருக்காது.

இப்படியாக ஐரோப்பா வரும் தொழிலாளர்கள், இந்தியாவிலிருக்கும் இந்தியப் பொறியாளர்களுக்கும் ஐரோப்பாவிலிருக்கும் ஐரோப்பிய பொறியாளர்களுக்கும் இடையே வெறுமனே தகவல் பாலமாக மட்டுமே இல்லாமல், இந்தியாவில் இருந்தால் என்னவெல்லாம் தொழிற்நுட்ப வேலைகள் செய்யவேண்டிவருமோ, அதையெல்லாமும் கூடுதலாக ஐரோப்பாவில் இருந்துகொண்டே செய்யவேண்டியிருக்கும்.

இந்தியாவிலிருந்து பணிபுரியும் பொறியியலாளர்களின் நிலை குறித்து பேசவேண்டுமானால் அது கொடூரமான கண்ணீர்க்கதைகளாக இருக்கும். நம்முடைய இக்கட்டுரையில் ஐரோப்பா வந்து பணிபுரியும் இந்திய ஐடி தொழிலாளர்களின் அடிமை நிலையை மட்டும் பார்ப்போம்.

ஐரோப்பிய நிறுவனங்களிடம் ப்ராஜக்டை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று பல இந்திய நிறுவனங்களிடையே பொதுவாகவே கடும்போட்டி நிலவும். அதனால் ஒவ்வொரு இந்திய அவுட்சோர்சிங் நிறுவனமும் தங்களால் தான் மிகக்குறைந்த விலையில் ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தேவையான ப்ராஜக்ட் வேலைகளை முடிக்கமுடியும் என்று டெண்டரின் போதே குறிப்பிடுவார்கள். ஆனால் அவ்வளவு குறைந்த பணத்திற்கு வேலையை முடிக்க வேண்டுமானால், நல்ல அனுபவம் வாய்ந்த திறமையான பல பொறியாளர்களை வேலைக்கு எடுத்து அதிக சம்பளம் கொடுத்தால், அந்த இந்திய நிறுவனங்களுக்கு கட்டுப்படியாகாது. அதனால், பத்து திறமையான பொறியாளர்கள் தேவைப்படுகிற நிலை இருந்தால், வெறுமனே இரண்டோ மூன்றோ திறமையான பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தி, மீதமுள்ள பணியிடங்களில் அதிக அனுபவமில்லாத (அல்லது செய்யவேண்டிய வேலைக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லாத) பொறியாளர்களை குறைந்த ஊதியத்திற்கு இந்திய நிறுவனங்கள் அமர்த்திவிடும். ஆக இதன்மூலம் ஐரோப்பிய நிறுவனத்திற்கும் இலாபம், இந்திய அவுட்சோர்சிங் நிறுவனத்திற்கும் இலாபம். ஆனால் நட்டமடைவது யார் தெரியுமா? இந்திய அவுட்சோர்சிங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தான். அனுபவமில்லாத தொழிலாளர்களும் தங்களது அனுபவத்திற்கு மீறிய வேலைகளைச் செய்யவேண்டியது இருக்கும். அதேபோல அனுபவமிக்க அந்த இரண்டு மூன்று பேரின் நிலையோ அந்தோ பரிதாபம். அவர்கள் தான், பெரும்பாலான நேரங்களில் வேலை தெரியாத மற்ற பொறியாளர்களின் வேலையையும் சேர்த்தே செய்யவேண்டிவரும். ஆனால் அதேவேளையில் இவை அனைத்தையும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு தெரியாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும் என்கிற கட்டாயமும் அத்தொழிலாளர்களுக்கு இருக்கிறது. ஆக ஐரோப்பிய-இந்திய முதலாளிகளின் நடுவே மத்தளமாக மாட்டிக்கொண்டு தவிப்பது இந்தத் தொழிலாளர்களே.

இந்தியாவிலிருந்து வரும் பொறியாளர்களுடன் மேலாளர்கள் என்கிற பெயரிலும் மிகச்சிலர் வருவர். சில நேரம் ஒரு ப்ராஜக்ட்டுக்கு ஒரு மேலாளரோ அல்லது சிறிய ப்ராஜக்ட்டுகளாக இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட ப்ராஜக்ட்டுகளுக்கு ஒருவரோ மேலாளராக நியமிக்கப்பட்டு ஐரோப்பா வருவர். அவர்களின் பணியே, இந்திய அவுட்சோர்சிங் நிறுவனங்கள் செய்யும் தகிடுதத்தங்களை தங்களது நிறுவனத்தின் பொறியாளர்கள் ஐரோப்பிய நிறுவனங்களிடன் சொல்லிவிடாமல் பார்த்துக்கொள்வதும், பொறியாளர்களை அடிமைபோல் வேலைவாங்குவதுமே ஆகும். ஏறத்தாழ சாதி அடுக்கில் இடைநிலை சாதியைப் போன்றவர்கள் தான் இந்த மேலாளர்கள். தாங்களும் நிறுவனத்தால் அடிமைப்படுத்தப்படுகிறோம் என்பதைக் கூட உணராமல், தனக்குக் கீழே உள்ள பொறியாளர்களை அடிமைகளாக ஒடுக்கி நிறுவனத்திற்கு உதவியாக இருப்பர். ஐரோப்பிய கார்ப்பரேட் நிறுவனங்களும், இந்திய அவுட்சோரிங் நிறுவனங்களும், அதன் நிர்வாகமும், அதன் அடியாட்களாக செயல்படும் இடைநிலை மேலாளர்களும் கைகோர்த்துக் கொண்டு ஐரோப்பா வரும் இந்திய ஐடி அகதித் தொழிலாளர்களை எவ்வாறெல்லாம் வாட்டிவதைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

மனிதவிரோத, தொழிலாளர்விரோத, நாகரீகமற்ற, கொத்தடிமைத்தனக் கொள்கைகள்:

ஐரோப்பிய நாடுகள் தங்களை உலக அரங்கில் மிகப்பெரிய மனிதநேய நாடுகளாக சித்தரித்துக் கொள்கின்றன. ஆனால் தங்கள் நாடுகளிலேயே பொருளாதார அகதிகளாக வரும் அவுட்சோர்சிங் ஐடி தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கும் மனிதவிரோத அடிமைத்தனத்தைக் கண்டும் காணாமல் இருக்கின்றன அந்நாடுகள். ஐரோப்பிய நாடுகளின் சட்டப்படியே சட்டமீறலாக  இருப்பது குறித்தும் அவர்கள் கவலைப்படுவதில்லை.

 1. ஐரோப்பா வருவதற்கு முன்னரே, ஐடி அகதித் தொழிலாளர்கள் அவர்களுடைய அவுட்சோர்சிங் நிறுவனம் கொடுக்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அந்த ஒப்பந்தம் என்பது முழுநீள அடிமைசாசன ஒப்பந்தம் தான்.
 1. ஐரோப்பாவில் சராசரியாக ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 20 நாட்கள் ஆண்டுவிடுப்பு உண்டு. ஆனால் பெரும்பாலான அவுட்சோர்சிங் நிறுவன இந்திய ஐடி அகதித் தொழிலாளர்களுக்கு ஐரோப்பாவில் விடுமுறை நாட்களே இல்லை. ஆண்டு முழுவதும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் அவர்கள் உழைக்க வேண்டும். விடுமுறையே இல்லாத கற்கால அடிமைத்தனத்தை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை இல்லையா?
 1. பொருளாதார இந்திய அகதித் தொழிலாளர்களுக்கு மருத்துவ விடுப்புகள் கூட கிடையாது. அவர்கள் நோய்வாய்ப்பட்டு, கட்டாயமாக விடுப்பு எடுக்கவேண்டும் என்று மருத்துவர் கடிதம் கொடுத்தாலும் கூட, அவர்கள் விடுப்பு எடுக்கமுடியாது. அதுதான் இந்திய அவுட்சோர்சிங் நிறுவனம் அவர்களுக்கு வழங்கியிருக்கிற கட்டளையும் ஆணையும். என்ன நோய் வந்தாலும் அவர்கள் அலுவலகத்திற்கு போயாக வேண்டும், அல்லது நடக்கவே முடியாத நிலையேற்பட்டால் வீட்டிலிருந்தாவது அலுவலக மடிக்கணிணியில் வேலை பார்த்தாக வேண்டும். அதுவும் பல நாட்கள் தொடர்ந்து வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதிக்கப்படமாட்டார்கள். நோய் சரியாகிறதோ இல்லையோ, அதுபற்றியெல்லாம் நிறுவனத்திற்கு கவலையில்லை. அவர்கள் கூடிய விரைவில் அலுவலகம் திரும்பிவிடவேண்டும். ஆக, அகதித் தொழிலாளர்கள் நோய்கள் கூட வரக்கூடாது என்பதே நிறுவனங்களின் நிலைப்பாடு. ஆண்டு முழுவதும் நோய்வாய்ப்பட்டாலும் உழைக்க வேண்டும் என்பது எவ்வளவு கொடூரமான அடிமைத்தனம்?
 1. ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் தான் வேலை பார்க்க வேண்டும் என்பதும் அதற்கு வேலை பார்த்தால் கூடுதல் ஊதியம் தரவேண்டும் என்பதும் ஐரோப்பாவில் இருக்கும் கடுமையான சட்டம். ஆனால் இந்திய ஐடி அகதித் தொழிலாளர்களுக்கு இந்த சட்டமெல்லாம் பொருந்தாது என்பதுபோலத்தான் அவர்கள் ஐரோப்பாவில் நடத்தப்படுகிறார்கள். ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்பதெல்லாம் அவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. ஐரோப்பாவில் பணிபுரியும் எந்த ஐடி அகதித் தொழிலாளரைக் கேட்டாலும் அதைவிட அதிகமாகவே சராசரியாக உழைப்பதாகச் சொல்வார்கள். பலரும் சராசரியாக 12 மணி நேரம் கூட உழைக்கிறார்கள். ஆனால், அந்த கூடுதல் நேர உழைப்பிற்கு ஒரு நயாபைசாகூட கூடுதல் சம்பளமாகத் தரப்படுவதில்லை. நேரக்கணக்கெல்லாம் வைத்துக்கொள்ளாமல் உழைத்துக்கொண்டே இருப்பதற்குப் பெயர் தான் அடிமைத்தனம்.
 1. இந்திய அகதித் தொழிலாளர்கள் வருடத்திற்கு 365 நாட்களும் (லீப் ஆண்டில் 366 நாட்களும்), வாரத்திற்கு ஏழுநாட்களும், ஒரு நாளைக்கு 24 மணிநேரமும் உழைக்கத் தயாராக இருக்கவேண்டும். அனைவருக்கும் அலுவலகத்தின் அலுவலக மடிக்கணிணியும் சில சப்போர்ட் பணிகளில் இருப்போருக்கு (பெரும்பாலானவர்கள்) அலுவலக செல்போனும் வழங்கப்பட்டிருக்கும். எந்த நேரத்தில் அந்த செல்போனில் அழைப்பு வந்தாலும் அவர்கள் அவ்வழைப்பை ஏற்று பதில் சொல்லவேண்டும். அது நள்ளிரவாக இருக்கலாம், விடியாத காலையாகவோ விடியற்காலையாகவோ இருக்கலாம், வார இறுதி நாளாக இருக்கலாம், அல்லது வேறேதோ பொது விடுமுறை நாளாகவும் இருக்கலாம். ஆனால் எந்த நேரமானாலும் அழைப்பு வந்தால் உடனே வேலை செய்யத் துவங்கவேண்டும். அதனாலேயே, அவர்கள் கொஞ்ச தொலைவில் இருக்கும் ஏதாவது நண்பர்கள் வீட்டுக்கு சென்றால்கூட, அலுவலக மடிக்கணிணியை தங்களுடன் எடுத்துக்கொண்டே செல்வதைப் பார்க்கலாம். அவர்களுடைய அலுவலக செல்போனுக்கு அழைப்பு வந்து, அதனை அவர்கள் எடுக்கவில்லையென்றால், அவர்களுடைய மேலதிகாரிகளுக்கு அழைப்பு சென்றுவிடும். அதற்குப்பின் அவர்கள் சந்திக்க வேண்டிய விளைவுகளை நினைத்து பயந்தே, எப்போதும் வேலை செய்யவேண்டிய தயார் நிலையிலேயே தங்களது மனதையும் மூளையும் வைத்திருப்பர். அதனாலேயே அவர்களது மடிக்கணிணியும் அதிகாரப்பூர்வ செல்போனும் எப்போதும் அவர்களுடனேயே பயணிக்கும். அப்படி அவர்களுக்கு அழைப்பு வந்துவிட்டால், அன்றைய இரவும் பொழுதும் அவ்வளவுதான். அந்த அழைப்பின் தன்மையைப் பொருத்து, அடுத்த நாள் காலைவரைகூட வீட்டிலிருந்தே உழைக்கவேண்டிவரும். அதனைத் தொடர்ந்து காலையானதும் குளித்துத் தயாராகி, அப்படியே அலுவலகத்திற்கும் போகவேண்டும். இவை எல்லாவற்றையும் செய்வதற்கு ஒரு பைசா கூட கூடுதலாக அவர்களுக்கு வழங்கப்படமாட்டாது. ஏனெனில், அவுட்சோர்சிங் நிறுவனங்களைப் பொருத்தவரையில் அவர்கள் எழுதிய அடிமைசாசனத்தில் இதுவும் இயல்பான ஒன்றுதான். தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தான் பணிபுரியும் நிறுவனத்திற்கென்றே வாழ்ந்து தொலைக்கிற துர்பாக்கிய நிலையினை கொத்தடிமைத்தனம் என்பதைத் தவிர வேறெப்படி அழைப்பது?
 1. வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதே பெரும்பாலான ஐடி அகதித் தொழிலாளர்களுக்கு இருப்பதில்லை. திடீரென வரும் அலுவலக அழைப்புகளைத் தாண்டி, திட்டமிட்ட வேலைகளையும் வாரதி இறுதிநாட்களில் அவர்கள் செய்யவேண்டியிருக்கும். சனி, ஞாயிறு என்றாலே விடுமுறை நாட்கள் தானே, அதற்கும் என்னால் உழைக்கமுடியாது என்று மறுப்பதற்கான உரிமை கூட அத்தொழிலாளர்களுக்கு இல்லை. குடும்பத்துடன் எங்காவது வெளியே போகலாம் என்று கூட அவர்களால் திட்டமிடமுடியாது. அப்படியே போகவேண்டுமென்றால், பல நேரங்களில் அவர்களுடைய மேலதிகாரிகளிடம் அனுமதி வாங்கவேண்டும். அனுமதி கிடைக்காமலும் போகலாம். அனுமதி வாங்காமல் ஊர்சுற்றச் சென்று, அந்த வேளையில் மேலாளர் செல்போனில் அழைத்துவிட்டாரென்றால், கதை முடிந்தது. இவற்றுக்கெல்லாம் கூட எந்த கூடுதல் கூலியும் தரப்படமாட்டாது என்பதை மீண்டும் குறிப்பிடத்தேவையில்லை தானே. வார இறுதி நாட்கள் கூட அவர்களுக்கு சொந்தமில்லை என்பதை நம்பமுடியவில்லை அல்லவா?
 1. ஐடி அகதித் தொழிலாளர்கள் ஐரோப்பிய நிறுவனங்களுக்காகத் தானே உழைக்கிறார்கள். அப்படியிருக்க இந்திய அவுட்சோர்சிங் நிறுவனம் அந்த தொழிலாளர்களை வைத்து ஏதேனும் அதிகாரப்பூர்வ கூட்டங்களோ, நிகழ்ச்சிகளோ, அடுத்து எந்தெந்த ஐரோப்பிய நிறுவனங்களிடமிருந்து ப்ராஜக்ட் வாங்கலாம் என்கிற திட்டமிடலோ நடத்தவேண்டும் என்றால், வார வேலை நாட்களில் நடத்தினால், அந்த நாட்களுக்கு ஐரோப்பிய நிறுவனங்கள் பணம் வழங்காது. அதனால், அக்கூட்டங்களை எல்லாமும் வார இறுதி நாட்களிலேயே தான் இந்திய அவுட்சோர்சிங் நிறுவனங்கள் நடத்துகின்றன. இதனால், மீண்டும் மிச்சமீதி இருக்கிற ஒன்றிரண்டு சனி ஞாயிறுகளும் அத்தொழிலாளர்களுக்கு இல்லாமலே போகும். அதற்கும் எந்த கூடுதல் கூலியும் கிடையாது.
 1. ஏற்கனவே சொன்னது போல, ஐரோப்பா வருகிற இந்திய ஐடி அகதித் தொழிலாளர்கள், இந்தியாவில் பணிபுரியும் ஒருசில அனுபவமற்ற தொழிலாளர்களின் வேலையையும் சேர்த்தே ஐரோப்பாவிலிருந்து செய்ய வேண்டியிருக்கும். இதனை ஐரோப்பிய நிறுவனங்கள் கண்டுபிடிக்காத வண்ணமும் செய்தாகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கும். அதனால் பெரும்பாலும், அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் மாலை வேளைகளில் வீட்டிலிருந்தே அந்த வேலைகளைச் செய்வதும், இந்தியப் பொறியாளர்கள் செய்வதை சரிபார்த்து பிழைதிருத்துவதையும் ஐரோப்பிய நிறுவனப் பொறியாளர்கள் அறியாத வண்ணம் செய்துமுடிக்கவேண்டும்.
 1. ஐடி அகதித் தொழிலாளர்கள் அலுவலகத்தில் மட்டுமல்லாமல் அதற்கு வெளியேயும் தங்களது மேலாளர்களால் அடிமையாகத்தான் நடத்தப்படுகிறார்கள். மேலாளர்களுக்கு ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வது பிடிக்குமென்றால், மற்றவர்களும் அந்த மேலாளர்களின் பின்னாலேயே காலணியை மாட்டிக்கொண்டு மாங்கு மாங்கென ஓடவேண்டும். மேலாளர்கள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் சேடிஸ்ட்டுகளாக மாறிவிடுகின்றனர். அந்த மேலாளருக்கு சமைப்பதோ சாப்பிடுவதோ பிடிக்குமென்றால், அவருக்கு வித்தியாசமான உணவு வகைகளை சாப்பிடவேண்டும் என்று ஆர்வம் வந்தவுடன், அவர் சொல்லும் இடத்திற்கெல்லாம் அவருக்குப் பிடித்தது போலவே சமைத்துக்கொண்டு போய் கொடுக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாமல் போனாலோ, “அணியுடன் கூட்டாக ஒருங்கிணைந்து செயல்படத் தகுதியற்றவர்” என்கிற அவப்பெயரை சம்பாதிக்க வேண்டிவரும். அது அப்படியே அலுவலகத்தில் கிடைக்கிற மரியாதையிலும் பிரதிபலிக்கும். மேலாளரின் விருப்புவெறுப்புகளே உங்களுடைய விருப்புவெறுப்புகளாக இருக்கவேண்டும் என்பது எத்தனை பெரிய வன்கொடுமை?
 1. அதேபோல, எவ்வளவு கொடூரமான கொடுமைக்கு ஆளாகினாலும், தங்களது வேலையினை ராஜினாமா செய்து, வேறு பிடித்த வேலைக்கு போவதற்கும் அவர்களுக்கு உரிமையில்லை. சில நிறுவனங்களில், ராஜினாமா செய்தால், மிகப்பெரிய அளவிற்கான பணத்தை அபராதமாக செலுத்திவிட்டுத்தான் போகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். பல்லாயிரக்கணக்கான யூரோக்களாகவோ அல்லது ஓராண்டு சம்பளமாகவோ ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அது மாறுபட்டு இருக்கும். சில நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்கள் வேலையைவிட்டு வெளியேறுவதை அனுமதித்தாலும், அவர்களுக்குத் தொடர்பிருக்கும் எந்த நிறுவனத்திலும் சேரக்கூடாது என்கிற நிபந்தனையை விதித்திருப்பார்கள்.
 1. ஆனால், அதுவே இந்திய அவுட்சோர்சிங் கம்பெனியோ, தங்களது தொழிலாளர்களை வீட்டுக்கனுப்ப முடிவெடுத்தால், அவர்களுக்கு எந்த நிபந்தனையோ காலக்கெடுவோ எல்லாம் இல்லை. எந்த இழப்பீட்டுத் தொகையும் தராமால் எப்போது வேண்டுமானாலும் ஐடி அகதித் தொழிலாளர்களை வீட்டுக்கனுப்ப முடியும்.
 1. ஐரோப்பாவிற்கு அழைத்துவரப்படும் ஐடி தொழிலாளர்கள், எவ்வளவு நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் ஐரோப்பாவில் தங்கி வேலை பார்க்கவேண்டியிருக்கும் என்கிற தகவலை அவுட்சோர்சிங் நிறுவனமோ ஐரோப்பிய நிறுவனமோ சொல்லவே சொல்லாது.   எப்போதும் மர்மமாகவே அது இருக்கும். எப்போது வேண்டுமானாலும் திருப்பி அனுப்பப்பட்டுவிடுவோம் என்கிற பயத்துடனும் குழப்பத்துடனுமே வாழ்வார்கள். உதாரணத்திற்கு, அவர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஐரோப்பிய நாடொன்றில் தங்கி ஐரோப்பிய நிறுவனத்திற்கு வேலை பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடு வாடகை ஒப்பந்தந்தில், வீட்டை காலி செய்வதற்கு குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பாவது வீட்டு உரிமையாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். மீறினால் முன்தொகையாக செலுத்தப்பட்டிருக்கும் இரண்டு மாத வாடகை திருப்பித்தர முடியாது என்று சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இந்த அவுட்சோர்சிங் நிறுவனமோ திடீரென அந்த ஐடி அகதித் தொழிலாளர்களை இந்தியா திரும்பப்போகச் சொன்னால், முன்னறிவிப்பின்றி வீட்டை காலி செய்யவேண்டியிருக்கும். ஆக அதன்மூலம் அதிகபட்சம் மூன்று மாத வாடகையாக வீட்டு உரிமையாளரிடம் கொடுத்து வைத்திருந்த முன்பணம் திரும்பவராது. அந்த இழப்பினை அவுட்சோர்சிங் நிறுவனங்களும் ஈடுசெய்யவும் செய்யாது. அத்தொழிலாளர்களின் குழந்தைகள் ஐரோப்பிய பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று ஒரு சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு திரும்பச்சொன்னால், அக்குழந்தைகளின் பள்ளிக்கூடம் தொடர்பாகக்கூட திட்டமிடமுடியாது. பாதியில் ஐரோப்பிய பள்ளியிலிருந்து படிப்பை நிறுத்தவேண்டும், பாதியில் இந்தியாவில் புதிய பள்ளியில் இடம் கிடைக்கவேண்டும். இதையெல்லாம் அவுட்சோர்சிங் நிறுவனங்கள் நிறுவனங்கள் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. ஏனெனில் முதலாளிகளைப் பொறுத்தவரையில், அவர்களுடைய நிறுவனத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கும் நாற்காலிகளுக்கும் எந்த வேறுபாடுமில்லை. இரண்டையும் எங்குவேண்டுமானலும் எப்போதுவேண்டுமானாலும் மாற்றவோ தூக்கிவீசவோ முடியும் என்பது முதலாளிகளின் நினைப்பு. இதனால் ஐடி அகதித் தொழிலாளர்கள் எப்போதும் பதற்றத்துடனும் அச்சத்துடனும் பயத்துடனேயே ஐரோப்பாவில் வாழவேண்டியிருக்கிறது.
 1. ஐரோப்பிய நிறுவனங்களில் சிலநேரங்களில் வார இறுதியில் அலுவலகத்திற்கு அதிகாரப்பூர்வமாகவே எல்லா தொழிலாளர்களையும் வேலை செய்ய வரச்சொல்வார்கள். அப்போது ஐரோப்பிய நிறுவனத்தின் நேரடி தொழிலாளர்களுக்கு அதற்கான ஊதியம் இரண்டு மடங்காக வழங்கப்படும். ஆனால் இந்திய ஐடி அகதித் தொழிலாளர்களுக்கு எதுவுமே தரப்படாது. அவர்களின் முதலாளியான அவுட்சோர்சிங் நிறுவன நிர்வாகமோ, ஐரோப்பிய நிறுவனத்திடம் கறாராக எத்தனை ஊழியர்கள் பணிபுரிந்தார்கள் என்று கணக்குக்காட்டி பணத்தை வசூலித்துவிடும். இதில் உழைப்பதும் உழைப்புக்கு எதுவுமே ஊதியமாக வாங்காமல் ஏமாறுவதும் இந்திய ஐடி அகதித் தொழிலாளர்கள் தான். இது நவீன கொத்தடிமைத்தனம் மற்றும் படுமோசமான சுரண்டல்தானே!
 1. அதேபோல இந்திய ஐடி அகதித் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய மேலாளர்களிடமிருந்து ஒரு தொடர்ச்சியான அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும். அவர்கள் சொல்லும் எதையும் எதிர்த்துக் கேள்விகேட்கக்கூடாது. அத்தனையையும் அப்படியே தலைகுணிந்து அமைதியாகக் கேட்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். மீறினால் திரும்பவும் ஊருக்கு அனுப்பிவிடுவார்களோ, தங்களது வேலை பறிபோய்விடுமோ என்ற பயம் அவர்களிடம் இருந்துகொண்டே இருப்பதுதான் அடிமைத்தனத்தைப் பொறுத்துக்கொள்வதற்கான முதற்காரணம்.
 1. அவுட்சோர்சிங் நிறுவனத்தின் மேலாளர்கள் மீது இதனால் ஒரு பயம் உண்டாவது மட்டுமல்ல, ஒன்றாகப் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு இடையேயும் போட்டியையும் பொறாமையும் சண்டையையும் உருவாக்கிவிடுகிறது. ஒரு பத்து பேர் ஐரோப்பா அழைத்துவரப்பட்டு ஒரே ப்ராஜக்டில் ஒன்றாக வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள் என்றால், அவர்களுக்கிடையே கடும்போட்டியை நிர்வாகம் உருவாக்குகிறது. அவர்களில் மிகப்பெரிய அடிமைதான் தொடர்ந்து ஐரோப்பாவில் இருக்கமுடியும் என்று அதிகளவில் நிர்வாகத்தின் ஆணைகளுக்கு தலைகுனியும் நபர்களை பாராட்டி மற்றவர்களை வெறுப்பேற்றுகிறது. இதனால், தானும் அந்த பாராட்டைப் பெறவேண்டும் என்று மற்ற தொழிலாளர்களும் ஏற்கனவே குனிந்து வளைந்திருக்கும் தங்களது முதுகை மேலும் வளைத்து தான்தான் மிகப்பெரிய அடிமை என்று காட்ட முயல்கின்றனர். இப்படி ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு “உங்களில் யார் மிகச்சிறந்த அடிமை” என்று நிர்வாகம் நடத்தும் மறைமுகப் போட்டிவலையில் சிக்கி தாங்கள் அடிமைகளாகத் தான் வாழ்கிறோம் என்பதே தெரியாமல் அடிமைகளாகின்றனர். காலனி ஆதிக்க காலத்தில் ஐரோப்பிய நாடுகள் உலகம் முழுதும் ஆக்கிரமிக்க உருவாக்கிய “பிரித்தாளும் சூழ்ச்சி” தான் இது என்பதை ஐடி அகதித் தொழிலாளர்கள் உணரவில்லை இன்னமும்.
 1. பெரும்பாலான ஐடி அகதித் தொழிலாளர்கள் தொழிற்நுட்ப வல்லுநர்களாகத்தான் ஐரோப்பா வருகிறார்கள். பொறியாளர்களாக தங்களது திறமைகளைப் பயன்படுத்தி திறம்பட வேலை பார்க்கும் அவர்களை, விற்பனைப் பிரதிநிதிகளாகவும் மாறச் சொல்கின்றன அவுட்சோர்சிங் நிறுவனங்கள். “நீ வேலை பார்த்தால் மட்டும் போதாது. அடுத்தடுத்து எப்படியாவது ஐரோப்பிய நிறுவனங்களிடம் பேசி, புதிய புதிய ப்ராஜக்டுகளை பெற்று, நம் இந்திய நிறுவனத்திற்கு இலாபம் கொண்டுசேர்க்க வேண்டும். இல்லையென்றால், நீ ஐரோப்பாவில் இருக்க முடியாது” என்று நேரடியாகவே அவர்களை மிரட்டுவது வாடிக்கையாகவே நடக்கிறது. முதலாளித்துவத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் இலாபம் மட்டுமே கிடைத்தால் போதாது. கடந்த ஆண்டு இலாபத்தைவிடவும் இந்த ஆண்டு இலாபம் அதிகரிக்கவேண்டும். அடுத்த ஆண்டும் அதைவிடவும் அதிகரிக்கவேண்டும் என்று அவர்களது இலாபவெறி நீண்டுகொண்டே போகும். தொழிற்நுட்ப வல்லுநர்களை விற்பனைப் பிரதிநிதிகளாகவும் மாற்றி, அதில் அவர்கள் திறம்பட செயல்படவில்லையென்றால், அதையும் அவர்களது பிழையாகக் கருத்தி இந்தியாவுக்கு திரும்ப அழைக்கும் வேலையும் நிர்வாகம் செய்கிறது.
 1. இவ்வளவு பிரச்சனைகளையும் வைத்துக்கொண்டு, அதற்கு ஏதேனும் தீர்வினைத் தேட எந்த நாட்டு சங்கத்திலும் அவர்கள் இணையமுடியாது. அவர்களைப் பாதுகாக்க ஐரோப்பாவில் எவ்வித சிறப்புச் சட்டங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் இந்தியாவில் வேலைக்கு சேரும்போதே, எந்த சங்கத்திலும் சேரக்கூடாது, அலுவலகத்தில் சங்கமும் அமைக்கக்கூடாது என்று அடிமை ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு தான் வேலைக்கே சேர்க்கின்றனர். உலகின் எந்த சர்வதேச சட்டத்தின்படியும் இது அடிமைத்தனம் தான் என்றாலும், அந்த நிறுவனங்களை யாரும் தட்டிக்கேட்டுவிடமுடியவில்லை. இதையெல்லாம் மீறி, இந்திய ஐட் அகதித் தொழிலாளி ஏதாவது சங்கத்தில் சேர்ந்தால், உடனடியாக வேலையை விட்டே துரத்தப்படுவார்.

ஐரோப்பிய தொழிலாளர்களுக்கும் அகதித் தொழிலாளர்களுக்கும் திட்டமிட்ட போட்டி:

இவ்வளவு கொடுமைகளையும் சுரண்டலையும் அனுபவித்துக்கொண்டு இந்திய ஐடி அகதித் தொழிலாளர்கள் ஏன் ஐரோப்பாவில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்கிற கேள்வி எழுவது சுலபம் தான். ஆனால் இந்தியாவில் இதைவிடவும் மோசமான சூழல் நிலவுகிறது. அங்கே ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான பொறியாளர்கள் படித்து பட்டம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் வேலை கிடைப்பதிலும், அதனைத் தக்கவைப்பதிலும் அவர்களுக்கு கடுமையான நெருக்கடி இருக்கிறது. எப்படியாவது ஐரோப்பா வந்துசேர்ந்துவிட்டால், சில ஆண்டுகள் மாடாக  உழைத்தாவது கொஞ்சம் பணம் சேர்த்துவிட்டால், கடைசிகாலத்தில் ஓரளவுக்கு நிம்மதியாக வாழலாமே என்கிற நியாயமான ஆசைதான், அவர்கள் மீது செலுத்தப்படுகிற எல்லா வன்முறைகளையும் பொறுத்துக்கொள்ள வைக்கிறது.

இந்திய அவுட்சோர்சிங் நிறுவனம் மட்டுமே இந்த அடிமைத்தனத்திற்கெல்லாம் ஒட்டுமொத்த காரணமல்ல. இதில் ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் பெரும்பங்குண்டு. அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வேலவாங்கப்படும் இந்திய அகதித் தொழிலாளர்கள் இப்படியெல்லாம் சித்தரவதை அனுபவிக்கிறார்கள் என்று ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் தெரியும்தான். ஆனால் அதனை அவர்கள் கண்டுகொள்வதில்லை. காரணம் அவர்களும் இலாபமடைகிறார்கள் என்பதால் தான். இலாபம் வருகிறதென்றால், ஏதோ இரண்டு நாடுகளுக்கு இடையில் போரை உருவாக்கி சண்டையிட வைத்து, அவர்கள் இருவருக்கும் ஆயுதங்கள் விற்று, இலாபம் சம்பாதித்து மகிழும் அமைப்புதானே முதலாளித்துவம். அவர்களுக்கு இதுபோன்று கொத்தடிமைத்தனம், சுரண்டல் எல்லாம் மிகச்சாதாரணம்.

தங்களுடைய சொந்த நாட்டின் குடிமக்களை நேரடியாக அடிமைகளாக்கி இலாபம் சம்பாதிப்பதற்கு இடையூறாக தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நலச்சட்டங்கள் என அதிக சிக்கல்கள் இருப்பதாலேயே, எங்கிருந்தோ குறைந்த கூலிக்கு கேள்விகேட்காத தொழிலாளர்களை அழைத்துவந்து அவர்களின் உழைப்பைச் சுரண்டி இலாபம் பார்க்கின்றன ஐரோப்பிய நிறுவனங்கள். இந்தியாவிலேயே அந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க ஆளில்லை, இங்கு ஐரோப்பாவிலா அவர்களுக்காக யாராவது பரிந்துபேசிவிடப் போகிறார்கள் என்கிற திமிர்த்தனமும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு இருக்கிறது.

இது, இந்திய ஐடி அகதித் தொழிலாளர்களை மட்டுமல்லாமல், மறைமுகமாக ஐரோப்பிய தொழிலாளர்களின் உரிமைகளிலும் திட்டமிட்டே கைவைக்கிறது. காலங்காலமாக பல முன்னோர்கள் இரத்தம் சிந்தி போராடி பெற்ற தொழிலாளர் உரிமைகளையும் அவற்றைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்களையும் நேரடியாக அசைத்துப் பார்க்கமுடியாமல், இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அழைத்துவந்து அவர்களை வைத்தே ஐரோப்பிய தொழிலாளர்களின் வேலைக்கு உலை வைக்கின்றன ஐரோப்பிய நிறுவனங்கள். இந்திய ஐடி அகதித் தொழிலாளர்கள் போன்று குறைந்த கூலிக்கு, எல்லாம் இன்னல்களையும் பொறுத்துக்கொண்டு இரவுபகல் பார்க்காமல் அடிமையாகவே வேலை பார்க்கவில்லையென்றால், உனக்கு வேலை கிடையாது, வெளியே போ என்று உள்ளூர் தொழிலாளர்களை மறைமுகமாக மிரட்டுவதும் இந்த அவுட்சோர்சிங்கின் நோக்கம். அதனால் உள்ளூர் தொழிலாளர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய ஐரோப்பிய தொழிலாளர்களை சர்வசாதாரணமாக நீக்கிவிட்டு, அவர்களுக்கு பதிலாக இந்திய ஐடி அகதித் தொழிலாளர்களை இந்திய அவுட்சோர்சிங் நிறுவனங்கள் மூலமாக பணியமர்த்துகின்றன ஐரோப்பிய நிறுவனங்கள்.

இதனால், ஐரோப்பியத் தொழிலாளர்களின் வேலைகளை இந்தியத் தொழிலாளர்கள் பறித்துக்கொள்கிறார்கள் என்று புரிந்துகொள்ளக்கூடாது. வலதுசாரி இனவெறியர்கள் போல, “இந்தியனே வெளியேறு” என்று கோஷம் எழுப்பிடவும் கூடாது. இது உலகத் தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் நேரடி எதிரிகளாக்கி அவர்களை அடித்துக்கொள்ள வைத்து, அதில் குளிர் காய்ந்து இலாபம் தேடும் திட்டத்தை அமல்படுத்தும் சர்வதேச முதலாளித்துவத்தின் கொடூர சிந்தனைதான். நாடுகளின் எல்லைகளையும் அடையாளங்களையும் கடந்து எவ்வாறு ஐரோப்பிய முதலாளிகளும் இந்திய முதலாளிகளும் கைகோர்த்திருக்கிறார்களோ, அதேபோன்று ஐரோப்பிய தொழிலாளர்களும் இந்தியத் தொழிலாளர்களும் கைகோர்த்து, அதைவிடவும் பலமடங்கு வீரியமாகப் போராடவேண்டும். அப்போதுதான் நவீன கொத்தடிமைத்தனத்தை ஒழிக்கமுடியும்.

நாம் உரக்கக் குரல் எழுப்பிக் கேட்காமல் இங்கே எதுவுமே கிடைத்ததாக வரலாறு இல்லை.

 

Related Posts