அரசியல்

”ஒருத்தரும் வரேல” -போர்க்களத்தில் நம் கைவாள் . . . . . . . . . . . . !

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி பல தடைகளையும் மிரட்டல்களையும் காவல்துறை அடக்குமுறைகளையும் வழக்குகளையும் மீறி வெளியிட்டிருக்கும் படம் ”ஒருத்தரும் வரேல”. ஆவணப்படத்தைத் தன் போராட்ட ஆயுதமாக வெளிப்படையாக அறிவித்துச் செயல்படும் இடதுசாரியான தோழர் திவ்யபாரதியின் இப்படம் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்க்கதையை ஆவணப்படுத்தாமல் அக்கண்ணீருக்குக்காரணமான குற்றவாளிகளை அடையாளப்படுத்தத் துணிச்சலுடன் முயற்சித்திருக்கிறார்.

சென்ற ஆண்டு நவம்பர் 30 ஆம்தேதி வீசிய புயல் குறித்து மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை செய்யாதது முதல் குற்றம்.மீனவ மக்கள் கடலில் தத்தளித்த படியும் கூட 5 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் பயிற்சியும் வலுவும் உள்ளவர்கள்.அப்படி 5 நாள் தத்தளித்து மிதந்த நாட்களிலும் அவர்களைக்காக்க கடற்படையோ ஹெலிகாப்டர்களோ வரவில்லை.வருவார்கள் என்று அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி அம்மக்கள் செத்தார்கள் ஹெலிகாப்டர்கள் பறக்காத வானத்தில் பிணந்த்தின்னும் வல்லூறுகளே பறக்கக்கண்டோம் என உயிர்தப்பி வந்த மக்கள் பேசுகிறார்கள்.

கேரளத்தில் பேரிடர் மீட்பு அலுவலகத்தில் வந்து உட்கார்ந்து மீட்புப்பணிகளை நேரில் இயக்கிய முதல்வர் இருந்ததால் பல உயிர்கள் மீட்கப்பட்டன.பல உடல்கள் கேரள அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டன.தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒரு உடல் கூட மீட்கப்பட்டுக் கொண்டுவரப்படவில்லை.12 நாள் கழித்து தமிழக முதல்வர் குமரிக்கரைக்குச் சென்று (சகல பாதுகாப்பு சோதனைகளுக்குபின் உள்ளே அனுமதிக்கப்பட்ட)ஒரு கூட்ட அரங்குக்கு அழைத்துவரப்பட்ட மீனவ மக்களை சந்தித்துத் திரும்புகிறார்.ஆர்.கே.நகர் தேர்தலில் மதுசூதனனின் வெற்றிக்காக உழைக்க வேண்டிய அவசரப்பணி இருந்ததால் அவர் சட்டெனக்கிளம்பி குமரிக்கரைக்கு வர இயலவில்லை என்பதை மக்கள் கைத்த சிரிப்புடனும் கண்ணீருடனும் கோபத்துடனும் பேசுகின்றனர்.

19 நாள் கழித்து குமரிக்கு வரும் மோடிஜி மக்களைச் சந்திக்கத் திராணியின்றி டிஜிட்டல் திரையில் பாதிக்கப்பட்ட காட்சிகளைப்பர்த்துவிட்டு விமானம் ஏறிவிடுகிறார்.அவரிடம் முப்படை ராணுவத்தையும் மீட்புப்பணிக்கு அனுபுமாறு எடப்படி வேண்டுகோள் விடுக்கிறார்.

ஏன் இத்தனை அலட்சியம் என்கிற கேள்விக்கு விடை காண நகரும் திவ்யாவின் கேமிரா ,கார்ப்பரேட் நலன்களுக்காக மீனவ மக்களை கடற்கரையிலிருந்து துரத்தும் (சுனாமிக்குப் பின் துவங்கிய) அரசியலைத் தோலுரிக்கிறது.சாகர்மால திட்டம் முதல் கார்ப்பொரேட் கம்பெனிகளுக்குப் பின்னால் மலைபோல் உறுதியுடன் நிற்கும் மோடி(பழைய  காங்கிரஸ் அரசும் கூட)அரசின் வஞ்சக அரசியலை மீனவ மக்கள் வெடிப்புறப்பேசுகிறார்கள்.சமவெளி மக்களின் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நாங்கள் எப்போதும் தோள்கொடுத்துப் போராடும்போது நாங்கள் கண்ணீரில் தத்தளித்த போது நீங்கள் ஏன் வரவில்லை என்கிற மக்களின் கேள்வி படம் பார்க்கும் நம்மைத் துளைத்துக் குற்ற உணர்வில் தள்ளுகிறது.தனிக்கொடியின் பாடல்வரிகள் அரசியல்பூர்வமாகவும் உள்ளத்தை உருக்கிக் குமுற வைப்பதாகவும் அமைந்துள்ளது.கக்கூஸ் படத்தை விட இப்படத்தின்  இடது அழகியல் இன்னும் நுட்பம் கூடியிருக்கிறது.

இந்துத்துவ அரசியலுக்கும் கார்ப்பொரேட் கொள்ளைக்கும் எதிராகப் போர்க்களத்தில் நிற்கும் போராளிகளுக்குக் கூர்தீட்டப்பட்ட கைவாளாக இப்படத்தை திவ்யபாரதி வழங்கியுள்ளார்.ரெட் சல்யூட் காம்ரேட் திவ்யா.

– ச.தமிழ் செல்வன்.

 

Related Posts