இலக்கியம்

ஒரு கத சொல்லட்டுமா சார்…

வேதா: சார் ஒரு கத சொல்லட்டுமா விக்ரம் சார்?

விக்ரம்: என்னடா பெரிய கதை… அரசியல் ஒரு சாக்கட… அதனால மூக்கை பொத்திக்கிட்டு போகனும். அதான?

வேதா: அதில்ல விக்ரம் சார்… கதையக் கேளு சார்….

———————————–

ஒரு நாட்டில் தங்களுடைய ராஜா அதிகமாக ஏமாற்றுவதை உணர்ந்த மக்கள், ஒன்றுசேர்ந்து அந்த ராஜாவை அடித்துவிரட்டினர். அந்த நாட்டுக்கு புது ராஜா வந்தார்.

அப்புதிய ராஜா, ஊரெங்கும் காய்களோ பழமோ தராத அழகான அலங்கார மரங்கள் நடும் திட்டத்தை அறிவித்தாராம். நாட்டில் பசியோடும் பட்டினியோடும் மக்கள் தவித்துக்கொண்டிருக்கையில், இப்படி அலங்கார மரங்கள் நடுவதால் யாருக்கு என்ன பயன் என்று கேட்டனராம் மக்கள். அதற்கு செலவாகும் பணத்தை விவசாயத்திற்காவது பயன்படுத்தலாமே என்று மக்கள் ஆதங்கப்பட்டனர்.

உடனே மக்கள் முன்னால் தோன்றி மன்னர் சொன்னாராம்,

“மக்களே! உங்கள் கோபம் எனக்குப் புரிகிறது. ஆனால் கவலைப்படாதீர்கள். 50 நாட்கள் மட்டும் பொறுத்திருங்கள். பிறகு பாருங்கள் உங்கள் துன்பங்களும் சந்தேகங்களும் தீர்ந்துபோகும். உங்களுக்கு நல்லகாலம் பிறக்கும். அப்படி நடக்கவில்லையென்றால் என்னை உயிரோடு கொளுத்திவிடுங்கள்”

என்று ஆவேசமாகப் பேசினார் ராஜா.

50 நாட்கள்தானே.. பொறுத்துதான் பார்ப்போமே என்று மக்களும் மன்னரின் பேச்சில் மயங்கி அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு வீடுதிரும்பினர். தெருவெங்கும் அலங்கார மரங்கள் நடுவதற்கு மக்களின் வரிப்பணத்தில் 90 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் 50 நாட்கள் கடந்தும் ஊரில் ஒருமரம் கூட நடப்படவில்லை. மக்கள் மெதுமெதுவாக மரங்கள் நடப்படாததைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.  ராஜா ஊழல் செய்துவிட்டதாகவும் ஆங்காங்கே டீக்கடைகளில் விவாதங்களும் சூடுபிடித்தன. அவ்வாறு பேசிய பலரை கைதுசெய்து சிறையிலும் அடைத்தனர் மன்னருடைய காவலாளிகள். சிலரைக் கொன்றும் போட்டனர். அப்படி கொல்லப்பட்டவர்களில் கௌரி மங்கேஷ் என்கிற பெண்மணியும் ஒருவர்.

தொடர்ந்து எதிர்ப்பு அதிகமாகவே, ராஜா தன்னைக் குற்றமற்றவர் என்று நிரூபிக்க அரசவையைக் கூட்டினார். மக்களும் வந்து அதனை வேடிக்கை பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

“நான் மரங்கள் நடுவதற்கு 90 கோடி ஒதுக்கியதில் ஊழல் செய்துவிட்டதாக  உங்களில் சிலர்  நினைக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். இப்போது நான்  உண்மையைச் சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. மரங்கள்  நடுவதற்கான திட்டம் தீட்டப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஒரே நிறுவனத்திடம் கொடுப்பதற்கு பதிலாக மூன்று வேலைகளாகப் பிரித்து மூன்று நிறுவனங்களிடம் கொடுத்தோம். ஒரு நிறுவனத்திடம் குழிதோண்டும் ஒப்பந்தமும், இன்னொரு நிறுவனத்திடம் மரங்களை நடும் ஒப்பந்தத்தையும், மூன்றாவது நிறுவனத்திடம் தோண்டிய குழிகளை மூடும் ஒப்பந்தத்தையும் கொடுத்தோம். மூன்று நிறுவனங்களுக்கும் ஆளுக்கு 30 கோடி வழங்கினோம். குழியைத் தோண்டும் நிறுவனமான உதானியின் நிறுவனம் மிகச்சரியாக குழியைத் தோண்டிவிட்டார்கள். இரண்டாவதாக மரங்களை நடவேண்டிய நிறுவனமோ சரியாக வேலையைச் செய்யாததால் அவர்களின் ஒப்பந்தத்தை இரத்து செய்துவிட்டோம். அவர்களிடமிருந்து 30 கோடி ரூபாயைத் திரும்பப்பெற்றுவிட்டோம். மூன்றாவது நிறுவனமான உமித்ஷாவின் நிறுவனம் மிகத்துல்லியமாக தோண்டப்பட்ட குழிகளை மூடிவிட்டது. ஆக உதானியையும் உமித்ஷாவையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும். மரங்கள் நட்டிருக்கவேண்டிய நிறுவனம் நமது அண்டை நாடான சொய்னா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் என்று நினைக்கிறேன். அதனால் தான் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். ஆகவே மக்களே! நானும் எனது அமைச்சர்களும் குற்றமற்றவர்கள். அதோடு நான் 90 கோடியில் 30 கோடியை மிச்சப்படுத்தி இந்த நாட்டுக்கு நன்மையும் செய்திருக்கிறேன். நாங்க ஊழலற்ற அரசுதான் என்று நிரூபித்தும் இருக்கிறேன். என்னால் மிச்சப்படுத்தப்பட்ட 30 கோடியில், 15 கோடியை குல்லையாவுக்கும் இன்னுமொரு 15 கோடியை கும்பானிக்கும் கடனாகக் கொடுத்துவிட்டேன். இதன்மூலம் நமக்கு வட்டியாக நல்ல வருமானமும் கிடைக்கும்.”

என்று சொல்லி முடித்துவிட்டு மேடையிலிருந்து கீழிறங்குகையில், “உமித்ஷா, உதானி, குல்லையா மற்றும் கும்பானி ஆகியோர் நமக்கு சேரவேண்டிய பங்கினை நம்முடைய க்விஸ் வங்கியில் போட்டுவிட்டார்கள்” என்று மன்னரின் காதில் அமைச்சர் வருண் பேட்லி மெதுவாகச் சொன்னார். மன்னரும் சிரித்துக்கொண்டே மக்களைப் பார்த்து கையசைத்துவிட்டு அந்தப்புறம் நோக்கி நடந்தார்….

இப்படிப்பட்ட நல்ல மன்னரைப் போய் நாம் சந்தேகப்பட்டுவிட்டோமே என்று வருந்தி மக்கள் வீடுதிரும்பினர். அக்கூட்டத்தில் நான்குபேர் மக்களுக்கு புரியவைக்கமுயன்றனர்… ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை…

——————-

வேதா: இப்ப சொல்லு சார்… யார் சார் இந்தக்கதையில குற்றவாளி?
எதுவுமே செய்யாமலும் யாரிடமும் மாட்டிக்கொள்ளாமலும் எல்லா ஆவணத்தையும் முறையாக வைத்துக்கொண்டு ஊழல்செய்து பலகோடியை ஆட்டையப்போட்ட மன்னன் மற்றும் அமைச்சர்களா?

வேதா: அரசனையே கைக்குள் போட்டுக்கொண்டு தனக்கு வேண்டியதை செய்துகொண்டு மக்களோட பணத்தை ஆட்டையப்போடும் உதானி, உமித்ஷா, குல்லையா மற்றும் கும்பானி ஆகியவர்களா?

வேதா: கல்வியில், மருத்துவத்தில், வேலைவாய்ப்பை உருவாக்குவதில் என எதிலுமே எந்த மாற்றத்தையும் கொண்டுவராமல், வெறுமனே மரம் நட்டா வாழ்க்கை நல்லாகும்னு ஒரு மன்னன் ஏமாத்தினா, அதைக்கூட யோசிக்காம நம்பின அந்த மக்களா?

வேதா: பொய்யாக இருந்தாலும் சத்தமா சொன்னாதான் உலகம் நம்பும் என்று மாறிவிட்டசூழலில் ஒரு நாலு பேர் மட்டும் மக்களிடம் கொள்கை கொள்கைன்னு கத்திட்டு இருங்காங்களே அவங்களா?

வேதா: சொல்லு விக்ரம் சார்… சொல்லு….

வேதா: முன்னாடி இருந்தவன் ஊழல் செய்தான்னு அவன மாத்தி இவனக் கொண்டுவந்தாங்க. ஆனா இவனும் ஊழல் செய்றானே! அப்போ, இவனுங்க ரெண்டுபேருமே யாருக்காக ஊழல் செய்யிறானுங்கன்னு கண்டுபுடி விக்ரம் சார்.. உனக்கு பதில் கெடைக்கும்… கடிவாளம் கட்டின குதிரை மாதிரி உனக்கு தெரிஞ்சதை மட்டும்தான் பாப்பியா விக்ரம் சார்?

விக்ரம்: ?!?!?!?!?!?!?

வேதா: வர்ட்டா….

தனனனனன…. தனனனனன…. தனனனனன…. தனனனனன…. தனனனனன….

(ஒரு நாடோடிக்கதை/எழுதியவர் பெயர் தெரியாதக்கதை, விகரம்-வேதா திரைக்கதை, இந்திய அரசியல் ஆகிய மூன்றையும் கலந்துகட்டி எழுதப்பட்டது)

-இ.பா.சிந்தன்

Related Posts