அறிவியல்

பழனியும் பறவைகளும்..

பழனியில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் கொங்கூர் குளத்திற்கு குளிர் காலங்களில் ஏராளமான பறவைகள் வருவது பற்றி அறிந்து கொண்டேன். 2011 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் முறையாக கொங்கூர் சென்றேன். பழனியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் தாசநாயக்கன்பட்டி  என்ற ஊரில் இருந்து 3 கி.மீ மேற்கு நோக்கி சென்றால் கொங்கூர் குளத்தை அடையலாம். குளத்தை நெருங்குவதற்கு முன்பே சாலையின் குறுக்கே கௌதாரிகள் (Grey Francolin) கடந்து சென்றன. பறந்து விரிந்திருந்த குளத்தில் நீர் நிரம்பி இருந்தது. பவளக்கால் உள்ளான்களை முதல் முறையாக பார்த்தேன். அவை குளத்தின் கரையில் நீர் குறைவான இடங்களில் நின்று கொண்டிருந்தன. சோளக் குருவிகள் (Rosy Starling) ஆயிரக் கணக்கில் கூட்டமாக  பறந்து திரிந்தன. அந்த மொத்த கூட்டமும் மேகம் போன்ற அமைப்பை உருவாக்கி இருந்தது. ஒரு மேகக் கூட்டமே நகர்ந்து செல்வது போல இருந்தது. செவ்வரி நாரை, அரிவாள் மூக்கன், புள்ளி மூக்கு வாத்து போன்ற பறவைகளை  அதிக அளவில் பார்க்க முடிந்தது. அதன் பிறகு கொங்கூர்  செல்வது எனக்கு மிகவும் பிடித்துப் போனது. இதுவரை கொங்கூரில் நிறைய பறவைகளை பார்த்து பதிவு செய்திருக்கிறேன்.

பனை மரங்களை நம்பித்தான் ஆந்தைகள் வாழ்கின்றன. ஆந்தைகள் எலிகளை உண்டு விவசாயத்திற்கு துணை புரிகின்றன. 2012-ஆம் ஆம் ஆண்டு கொங்கூர் குளம் தூர்வாரப்பட்டு கரை உயர்த்தப்பட்டது. ஆனால் குளத்தின் கரையை அகலப்படுத்துவதற்காக ஏராளமான பனை மரங்கள் வெட்டப்பட்டன. அதன் பிறகு அங்கே அதை ஈடு செய்வதற்காக புதிய பனை மரங்கள் நடப்படவில்லை.

ஒரு‍ முறை குளத்தின் மறு கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த இரண்டு பூ நாரைகளையும் பார்த்தேன். வாழ்வில் முதல் முதலாக பூ நாரைகளை பார்த்த தருணம் மறக்க முடியாதது. ஆழம் குறைவான பகுதியில் அவை நடந்து கொண்டிருந்தன. என்னுடைய இரு கண் நோக்கி மூலமாக அவற்றை கவனித்தபடி இருந்தேன். அவை பெரிய பூ நாரைகள் (Greater Flamingo) இனத்தை சேர்ந்தவை. சிறிது நேரத்தில் அவை பறக்கத் தொடங்கின. குளத்தை அவை சுற்றி வந்தன. இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அவை நான் நின்றிருந்த இடம் அருகே பறந்து வந்த கணம் எப்போதும் மறக்க முடியாதது.

அலையாத்தி காடுகளிலோ அல்லது கடற்காயல் பகுதிகளிலோ பூ நாரைகளை பார்க்க முடியும். தமிழ் நாட்டில் கோடியக்கரையில் பூ நாரைகள் இருக்கின்றன. தண்ணீரில் உள்ள காரத் தன்மை அதிகம் (pH அளவு 7 -க்கும் அதிகமாக) உள்ள இடங்களை பூநாரைகள் தங்கள் வாழிடங்களாக தேர்ந்தெடுக்கின்றன. ஆப்ரிக்காவில் உள்ள நகுரு ஏரி இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம். இங்கே ஆயிரக்கணக்கில் பூ நாரைகள்  வாழ்கின்றன. ஆப்ரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் பூ நாரைகள் அதிகமாக காணப்படுகின்றன. பூ நாரைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அழித்தாலும் இந்தியாவில் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா என உறுதியாக தெரியவில்லை.

சிறிய சிறிய குழுக்களாக பறந்து கொண்டிருந்தன புள்ளி மூக்கு வாத்துகள் (Indian Spot-billed Duck). கோடை காலங்களில் தண்ணீர் குறைவாகஇருந்தாலும் , குளிர் காலங்களில் குளத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கும் போதும் இந்த வாத்துகளை நான் பார்த்திருக்கிறேன். ஆண் மற்றும் பெண் வாத்துகளை எளிதில் வேறுபடுத்தி அறிய முடியும். ஆண் வாத்திற்கு மூக்கின் மேல் பகுதியில் சிவப்பு நிறம் இருக்கும். இது பெண் வாத்துகளுக்கு இருக்காது. இந்திய துணைக் கண்டம் மற்றும் மியான்மர், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. ஒரு முறை பறவை பார்ப்பதற்காக கொங்கூர் சென்ற போது இந்த வாத்தின்  சிறகுகள் உரிக்கப்பட்டு கிடந்தது. அதை அங்கேயே சுட்டுத் தின்றதற்கான அடையாளங்கள் இருந்தன. பிறகு அங்கிருந்தவர்களை விசாரித்தபோது அந்த வாத்தை, முதல் நாள் ஒருவர் பிடித்து அங்கேயே சமைத்து தின்றது தெரிய வந்தது. பறவைகளை பாதுகாப்பதற்கு நம் மக்களிடேயே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. பாட புத்தகங்கள் முதல் அரசாங்க அறிவிப்புகள் வரையிலான பரவலான முயற்சி தேவைப்படுகிறது. அப்போது தான் அடுத்த தலைமுறையாவது பறவைகளின் பயனை உணர்ந்து அதை பாதுகாக்க முன்வருவார்கள். பொதுவாக அங்கிருக்கும் மக்கள் யாரும் பறவைகளுக்கு இடையூறு செய்வதில்லை. யாரேனும் ஒரு சிலர் செய்யும் தவறுகள் மற்றவர்களுக்கு உந்துதலாகவோ வழிகாட்டுதலாகவொ இருந்துவிடக் கூடாது.

புள்ளி மூக்கு வாத்து வாழும் தேசங்களில் காணப்படும் மற்றுமொரு பறவை செவ்வரி நாரை. இதன் எண்ணிக்கையும் தற்போது குறைந்து வருகிறது. நீர் நிலைகளின் மாசுபாட்டால் இதனுடைய சூழல் சிதைக்கப்படுகிறது. கொங்கூர் குளத்தில்  ஆங்காங்கே இருக்கும் பட்டுப் போன நீர் கருவை  மரங்களில் நின்று கொண்டிருக்கும் செவ்வரி நாரைகள் (Painted Stork). முன்பிருந்த அளவை காட்டிலும் தற்போது இந்த நீர் கருவை மரங்கள் இங்கே குறைந்துள்ள போதிலும், குளத்தின் நடுவில் இருக்கும் இந்த மரங்கள் பறவைகள் வந்தமர வசதியாக இருக்கின்றன. நம் மக்களிடேயே தற்போது கருவேல் மரங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்ப்பட்டு வருகிறது. ஆனால்  கருவேல மரத்துக்கும் நீர் கருவை மரதுக்குமான வேறுபாடு தெரிவதில்லை. சீமை கருவேலம் என்பது அயல் தாவரம். நம் நிலத்தடி நீரை உறிஞ்சி நம் சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. ஆனால் நீர் கருவை மரங்கள் இந்திய மரங்கள். சீமை கருவேல மரங்களை போல எல்லா இடங்களிலும் பரவுவதில்லை.

ஆசிய, ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் காணப்படக்கூடிய பறவை முக்குளிப்பான்கள் (Little Grebe). ஒரு மீட்டர் அழதுக்கும் குறைவாக இருக்கும் நீர் நிலைகளை தேர்ந்தெடுக்கின்றன. தண்ணீருக்குள் சென்று  மறைவதும் பின் வேறொரு இடத்தில் எழுவதுமாக இருக்கும். கொங்கூர் குளத்தில் நீர் நிரம்பி இருக்கும் நாட்களில் இவை கரையோரங்களில் நீந்திக் கொண்டிருக்கும். இலைகளால் ஆன மிதக்கும் கூடுகளை அமைத்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.

தண்ணீருக்கு மேலே ஒரு அடி நீளம் வரை கழுதை நீட்டிக் கொண்டிருக்கும் அந்த பறவையை முதல் முதலாக பார்த்த போது பாம்பு என்று தான் நினைத்தேன். தண்ணீரின் மேலே வருவதும் உள்ளே செல்வதுமாக இருந்தது அந்த பாம்புத் தாரா (Darter). மரங்களின் உச்சியிலோ அல்லது பட்டுப்போன நீர்கருவை மரங்களிலோ அமர்ந்து கொண்டிருக்கும் பாம்புத் தாரா. இவற்றின் சிறகுகளில் நீர் ஒட்டிக் கொள்வதால் சிறகுகளை விரித்தபடி அமர்ந்து வெயில் காய்ந்துகொண்டிருக்கும். இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் இந்த பறவை அதன் வாழிட சிதைவு காரணமாக அழிந்து வருகிறது.

சிறிய கரும்பருந்து (Black-winged Kite) குளத்தை ஒட்டிய மின் கம்பிகளில் அமர்ந்தபடி நோட்டமிட்டுக் கொண்டிருக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் இவை பெரும்பாலும் வேட்டையாடி உண்ணும். 90 கிராம் வரை எடை கொண்ட இரை விலங்குகள், ஊர்வன, பறவைகள் மற்றும் பூச்சிகளை பிடித்து உண்ணும். பல முறை இவற்றை மின் கம்பிகளில் அமர்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன். ஆசிய, ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகின்றன. சிறகுகளில் இருக்கும் கருப்பு நிறம் இதனை மற்ற பருந்துகளிடம் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய உதவுகிறது.

குளிர் காலங்களில் கொங்கூர் குளத்தை அடைந்ததும் அங்கே நம்மை முதலில் வரவேற்பது பவளக் கால் உள்ளான்கள் (Black-winged Stilt). குளம் எங்கும் அவை பறந்து திரிந்தன. குளத்தின் ஆழம் குறைவான பகுதிகளில் நின்று கொண்டு தன் நீண்ட அலகால் உணவு தேடிக் கொண்டிருக்கும். வலசைப் பறவையான இந்த பவளக் கால் உள்ளான்களை, குளிர் காலங்களில் மட்டுமே கொங்கூரில் காணமுடிகிறது. இளஞ்சிவப்பு நிறக் கால்களும், கூறிய அலகும், வெண்ணிற உடலும், கருத்த இறக்கையுமாக மிகவும் அழகுடன் இருக்கும் இந்த உள்ளான்கள். வளர்ந்த உள்ளான்கள் மட்டுமல்லாது முதிரா இளம் உள்ளான்களையும் பார்க்க முடியும். ஆப்ரிக்க, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவலாக காணப்படும் இந்த பவளக் கால் உள்ளான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆறுதலான செய்தி. திருசெந்தூர் அருகே இந்த உள்ளான்களை நெல் வயல்களின் நடுவே பார்த்திருக்கிறேன்.

ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் கொங்கூர் சென்றிருந்தேன். குளத்தில் இருந்த நீர் வற்றிப் போய் கொஞ்சம் மட்டுமே மிச்சம் இருந்தது. வற்றிப் போன இடங்களில் சேறாக இருந்தது. அங்கே கூலாங்கற்களை உருட்டிவிட்டது போல ஓடிக் கொண்டிருந்தன பட்டாணி உப்புக் கொத்திகள் (Little Ringed Plover). கூட்டமாக இருக்கும் இந்த சிறிய அழகிய பறவையை நன்கு உற்று நோக்கினால் மட்டுமே நம் கண்களுக்கு புலப்படும். எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள இப்படியான உருமறைத் தோற்றத்துடன் இவை விளங்குகின்றன. பவளக் கால் உள்ளங்களைப் போலவே இவை ஆப்ரிக்க, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகின்றன. பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. மணலிலோ அல்லது உலர்ந்த சேற்றுப் பகுதியிலோ முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. ஐரோப்பா மற்றும் வட ஆப்ரிக்காவில் இருந்து சஹாரா பாலைவனத்தை கடந்து இவை வலசை செல்கின்றன. சைபீரியா மற்றும் வட ஆசியாவில் இருக்கும் பறவைகள் தென் கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவிற்கு வலசயாக வருகின்றன.

கரை ஒர மரங்களில் கள்ளிப் புறாக்கள் (Eurasian Collared Dove) அமர்ந்திருப்பதை பார்க்க முடியும். வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் இந்த புறாக்களை நான் கொங்கூரில் பார்த்திருக்கிறேன். ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவை காணப்படுகின்றன. இதன் கழுத்தில் இருக்கும் கோடு இந்த புறாக்களை எளிதில் அடையாளம் காண உதவும். இதன் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி.

தன் அலகுகளை திறக்காமல் ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும் பறவை செம்மார்பு குக்குறுவான் (Coppersmith Barbet). இந்தியா மற்றும் தென் கிழக்கு  காணப்படும் பறவை. இதன் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. உருமறைத் தோற்றத்தில் இருப்பது அறியாமல் இருக்கும் செம்மார்பு குக்குறுவான். மற்ற குக்குறுவான் பறவைகளைப் போலவே இவையும் தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும்.

மாலை நேரங்களில் ஒரு மேகமே வேகமாக நகர்ந்து போவது போலத் தோன்றும். பின் அவை களைந்து புள்ளிகளாக மரங்களின் மீது விழும். இப்படிதான் எனக்கு சோளக் குருவிகள் (Rosy Starling) அறிமுகமாயின. ஆயிரக்கணக்கில் பறந்து திரியும் இவை அங்கிருக்கும் நீர் கருவை மரங்களில் போய் அமரும். அதற்கு முன்பாக இவ்வளவு பெரிய பறவைக் கூட்டத்தை பார்த்தது எனக்கு நினைவில் இல்லை. மாலை நேரங்களில் இவை மொத்தமாக நீர் கருவை மரங்களில் வந்தடையும். ஐரோப்பாவில் இருந்து வரிசையாக வரும் இந்த பறவை குளிர்காலங்களில் இந்தியாவில் காணப்படுகின்றன. சென்னை அருகிலும் இவற்றை நான் பார்த்திருக்கிறேன்.

Related Posts