அரசியல்

ஆன்லைன் கல்வியும் இடியாப்பச் சிக்கலும்..

உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா .. அலகிலா விளையாட்டுடையான் . இது போன்று பல பாடல்கள் கொண்ட தமிழ்பாடநூல் !நெபுலாவில் துவங்கி நீர், பாசி, அமீபா, குரங்கு , மனிதன் என பரிணாம வளர்ச்சி சொல்லும் அறிவியல் !

கல்வித்துறை இந்த முரண்பாட்டை உணர்ந்துள்ளதா என்பது முதல் கேள்வி ! ஆசிரியர்கள் இதைப் பற்றி கேள்வி எழுப்பும் வகையில் பாடம் நடத்துகிறார்களா என்பது அடுத்த கேள்வி ! அத்திப் பூத்தாற்போல் யாராவது இந்த முரணை உணர்ந்து கேள்வி எழுப்ப தயாரானால் அது அனுமதிக்கப் படுகிறதா என்பது மூன்றாவது கேள்வி !

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் தனிப்பட்ட முயற்சியால் மாணவ மாணவிகள் பலவித புத்தகங்களை வாசிக்கவும் ,கேள்விகள் கேட்கவும் ஊக்கம் தந்து சுயசிந்தனையுடன் வளர உதவுவதை வலைதளங்களில் காண்கிறோம்.

மாணவர்களுக்கான நூலகங்கள் ஆய்வகங்கள் போன்ற கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையிலான அரசின் முயற்சியும் , கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளும் குறைந்து கொண்டே வருகின்றன .

ஏற்கனவே கிராமப்புற மாணவர்கள் நீட் உள்ளிட்ட பல தனித் தேர்வுகளில் தனியார் பள்ளிகளுடன் போட்டி போட முடியாமல் தத்தளிக்கின்றனர் .

ஊரடங்கு காலம் இந்த நிலைமையை இன்னமும் மோசமாக்கியுள்ளது .வயிற்றுக்கே வழியில்லா காலத்தில் கல்வியை சிந்திக்க முடியுமா எனும் சூழல் உருவாகியுள்ளது. இந்தக் குழந்தைகள் வயிறு நனைய சத்துணவு தந்து காக்கவும் அரசின் ஏற்பாடில்லை .

நோய்த்தொற்று ஊரடங்கு காலத்திலும் தனியார் பள்ளிகள் நேற்று முதல் ஆன்லைன் கல்வியை துவங்கி நடத்துகின்றன. அறிவியல் மற்றும் சமூக வளர்ச்சி அறிகுறியான தொழில்நுட்ப கண்டுபிடிப்பை பயன்படுத்தி முரண்பாடான இதே கல்வி தொடர்கிறது என்பதையும் நினைவில் கொள்வோம் !

இது ஒருபுறமிருக்க தனியார் பள்ளிகளின் இம்முடிவு பலவித குடும்ப சிக்கல்களை உருவாக்கியுள்ளது .தொடுதிரை அலைபேசி இல்லாத வீடு, வேலைக்கு செல்லும் தாய் அல்லது தந்தையிடம் மட்டும் ஒரு அலைபேசி இருக்கும் வீடு ,ஒரு அலைபேசி இருக்க பொதுத் தேர்வு ஆண்டில் உள்ள இரு குழந்தைகளுக்கும் (10, 11, 12) ஒரே சமயத்தில் ஆன்லைன் வகுப்பிருந்தால் சமாளிக்க வேண்டிய வீடு என பலவித சூழல்கள் உள்ளன.

செல்போன் இல்லாத வீடுகள் உண்டா ..எனும் கேள்வி ஒரு தோற்ற மயக்கம் என்பதையே அனுபவம் காட்டுகிறது.எத்தனை வேகத்தில் போன் வாங்கினரோ அத்தனை வேகத்தில் அதை விற்பதையும் இந்த ஊரடங்கில் காண்கிறோம் .

ஏற்கனவே கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் விழி பிதுங்கும் பெற்றோர் குழந்தையின் கல்வித்தேவை கருதி போன் வாங்க வட்டிக்கு கடன் வாங்கும் கொடுமையும் நடப்பதை அறிகிறோம் .

கல்விக்காக லேப்டாப் வாங்க வேண்டுமா, ஸ்பீட் கிடைக்க எந்த நெட்வொர்க் தேர்வு செய்வது என்ற குழப்பமும் பணம் செலவு பற்றிய கவலையும் குடும்பங்களை ஆட்டிப் படைக்கிறது . ஆன்லைன் கல்வி துவங்கியதுமே வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கித் தர இயலவில்லை எனும் வருத்தத்துடன் கேரளாவில் ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்ட வேதனை மிகுந்த தகவலும் உள்ளது .

ஊரடங்கு இன்னும் முடிவுறாத நிலையில் சில தளர்வுகள் இருந்த போதும் வேலைகள் இன்னும் முழுமையாக துவங்கப்படவில்லை , பல துறைகளிலும் ஆட்குறைப்பு நடந்துள்ளது .எனவே வருமானமின்றியும் , சம்பள வெட்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் வீடுகளில் உருவாகி வரும் மன அழுத்தத்துடன் இதுவும் இணைகிறது .

அலைபேசி இருக்கும் வீட்டிலும் பலவகையில் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் .ஒரே சமயத்தில் மொத்தமாய் இயக்கப்படும் போது நெட் கவரேஜ் பலவீனப்படும் பிரச்சனை முதல், தனியறை இல்லா வீட்டின் இடையூறு ,போதையில் வரும் தகப்பனால் படும்பாடு என பலவிதங்களில் கவனச்சிதறல் உருவாகி ஆசிரியரின் வார்த்தைகளை பிள்ளைகள் புரிந்து கொள்வதில் சிக்கல் உருவாகிறது.

தினமும் நடத்தும் பாடங்களின் மீதான எழுத்து வேலைகளை முடித்து மாலைக்குள் ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதால் பெரியவர்கள் வேலைக்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் அலைபேசியை குழந்தைகள் கையாண்டாக வேண்டிய நிலைமை . அதன் நுணுக்கங்களை பெற்றோரை விட மாணவர்கள் எளிதில் அறிந்து கொள்வதும் இணைந்து வாழ்வின் போக்கை திசை மாற்ற செய்யலாம் எனும் கவலையும் முக்கிய விசயமே!

அலைபேசியும் அது சார்ந்த விசயங்களும் மாணவர்களை இன்னொரு தளத்திற்கு நகர்த்துகிறது என்று ஆக்கபூர்வமாயும், ஊரடங்கால் கல்விக் கட்டணம் வீணாகவில்லை எனும் எண்ணமும் கொண்டு பெற்றோர் இதை வரவேற்றாலும் ஆகும் கூடுதல் செலவினங்கள் பெருநிறுவனங்களுக்கு லாபம் ! பள்ளி திறக்கும் வரை குடும்பங்களுக்கு தலைவலி !

ஆர்.செம்மலர்.

Related Posts