பிற

முதுகுளத்தூர் படுகொலை குறித்து …

ராஜராஜேந்திரன்

‘முதுகுளத்தூர் படுகொலை’ புத்தக அறிமுகம்

ஆசிரியர் – கா. அ. மணிக்குமார்

இம்மானுவல் சேகரன் படுகொலையே முதுகுளத்தூர் படுகொலை எனத் தமிழக வரலாற்றில் வர்ணிக்கப்படுகிறது ! இம்மானுவல் சேகரன் யார் ?  அவர் ஏன் படுகொலை செய்யப்பட்டார் ? அவரைக் கொலை செய்தது யார் ? கொலையாளிகள் தண்டிக்கப்பட்டனரா ? கொலைக்குப் பின் நடந்தது என்ன ? கொலைக்கு முன் நடந்தது என்ன ? இதைத்தான் விரிவாக, துல்லியமான ஆவணங்களுடன் நூலாசிரியர் விவரிக்கிறார் !

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக இருந்த திரு.மணிக்குமார், யார் மீதும் எந்தக் காழ்ப்புமில்லாமல், கிட்டத்தட்ட நடுநிலையாகவே இந்த நூலை ஆவணப்படுத்தியிருக்கிறார் !

இதற்கு முன், இந்தப் படுகொலை மற்றும் கலவரங்கள் பற்றி எழுதப்பட்ட சில நூல்களை, ஒருதலைப்பட்சமானவைகள் என்று ஆசிரியர் வர்ணிக்கிறார். அவை பெரும்பாலும் அப்போது ஆளுங்கட்சியாயிருந்த காங்கிரஸ் அல்லது முதல்வர் காமராஜருக்கு ஆதரவாக எழுதப்பட்டவை, பல முத்துராமலிங்கத் தேவருக்கு ஆதரவாக எழுதப்பட்டிருந்தது, ஒரு சில பள்ளர்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டிருந்தன. அப்படி ஒரு சார்புநிலை தன் நூலுக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாகச் செயல்பட்டிருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு விமர்சனத்தையும் நாம் அவரளித்த சான்றுகளைப் பார்த்து சரிபார்த்துக் கொள்ளவும் தூண்டுகிறார்.

இம்மானுவல் சேகரன் படுகொலை ஏன் நிகழ்ந்தது எனப் பார்க்கும் முன், அப்போதைய கிழக்கு ராமநாதபுரம் எப்படி இருந்தது, அங்கிருந்த மக்கள் யார், அவர்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம், பண்பாடு என்ன என்று பார்ப்பதே சரியாக இருக்கும்.

கி.பி. 1850 களுக்குப் பிறகு, இந்தியாவின் பெரும்பகுதி நேரடியாகவே பிரிட்டீஷாரின் கீழ் வருகிறது. தென்னிந்தியா அல்லது தமிழகத்தின் முழுப் பகுதியும் அவர்களுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டது. பாளையக்கார முறை முழுமையாக கலைக்கப்பட்டு, அந்தச் சிற்றரசர்கள் அனைவரையும் செல்லாக் காசாக்கிவிட்டார்கள். ஒரு சில பிரதேசங்கள் சிற்றரசர்கள், ஜமீன்தார்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவர்கள் பிரிட்டீஷ் அரசுக்கு முழு அடிமைகள். கேட்பதைக் கொடுப்பார்கள், சொன்னதைச் செய்வார்கள்.

இதனால், அப்போதைய கிழக்கு ராமநாதபுரம், ராமநாதபுர சேதுபதி மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பாளையக்கார ஜமீன்களில் காவல்காரர்களாய், போர் வீரர்களாய் இருந்த முக்குலத்தோர் (மறவர், கள்ளர், அகமுடையோர்) பெரும்பாலும் இருந்த பகுதியாய்த்தான் கிழக்கு ராமநாதபுரம் இருந்தது. அவர்கள் நில குத்தகைதாரர்களாகவும், குறுநில உடமையாளர்களாகவும் இருந்தனர். அவர்களுடைய நிலங்களில் வேலை பார்த்தோரில் பெரும்பாலோர் பள்ளர்கள் & இதர ஒடுக்கப்பட்ட மக்கள்.

அன்றைய கிழக்கு ராமநாதபுர முக்குலத்தோர் சுபாவத்தில் இயல்பாகவே முரட்டுத்தனம் கொண்டவர்களாகவே இருந்ததாக சொல்லப்படுகிறது. குத்தகைதாரர்கள் உரிய கொடைப்பணத்தைத் தருவதில் அடிக்கடி தகராறு செய்தார்கள். வரி கேட்டு வந்த அரசு நிர்வாகத்தை கடுமையாக மிரட்டினார்கள். போக, கிழக்கு ராமநாதபுரத்தில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்றக் குற்றச் சம்பவங்கள் மிகுதியாக காணப்பட்டது. இதனாலேயே கி.பி. 1871-ல், குற்றப் பரம்பரை எனும் கொடிய நடைமுறையை பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்தது. ஓரளவு நிலைமை சீராக இது உதவினாலும், அனைத்து மக்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்த்து துன்புறுத்தியது சகிக்க முடியாமல் இருந்தது !

ஆதிக்கச் சாதியினராக மற்றும் நிலவுடமை & குத்தகைதாரர்களாக இருந்த முக்குலத்தோரையே பெரும்பாலும் சார்ந்திருந்த பள்ளர்கள், முக்குலத்தோரால் இயற்றப்பட்ட மிகக் கொடூரமான சட்ட திட்டங்களுக்கு ஆட்பட்டு சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்தார்கள். அவர்களை அந்தளவு கீழ்த்தரமாக நடத்த முக்குலத்தோர் சிறிதும் மனச் சஞ்சலம் கொள்ளவில்லை, லேசான மன உறுத்தல் கூட இன்றி, அவர்களுடையச் சட்டத்திட்டங்களை மீறியவர்களை கடுமையாகத் தண்டித்தார்கள். பள்ளர்களை அப்படி அடக்காவிடில் அவர்கள் தங்களை விஞ்சிச் சென்றுவிடக் கூடும் என ஆழமாக நம்பியதே இவ்வளவு மோசமாக அவர்கள் நடந்துக் கொண்டதற்கு காரணம் என்பது ஆய்வாளர்கள் கூற்று !

கி.பி. 1930 -டிசம்பரில் பள்ளர்களுக்கு (தலித்களுக்கு) முக்குலத்தோரால் விதிக்கப்பட்டிருந்த எட்டு தடைகள் :-

1.) ஆதி திராவிடர்கள் (ஒடுக்கப்பட்டோர்) தங்க, வெள்ளி நகைகள் அணியக்கூடாது !

2.) ஆண்கள் இடுப்புக்கு மேலும், முழங்காலுக்கு கீழ் தொங்குமாறும் ஆடை அணியக்கூடாது ( முதல் மரியாதை படத்துல, சாமீ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு சொல்ற கேரக்டர கண் முன்னால கொண்டு வாங்க )

3.) ஆண்கள், கோட்டு, சட்டை, பனியன் அணியக்கூடாது (அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசனும் பெரும்பாலும் கோட்டில் தென்பட்டதின் உள்குத்து இதுவாகத்தான் இருக்க வேண்டும்)

4.) மட்பாண்டங்களைத் தவிர வேறெந்த உலோகப் பாத்திரங்களையும் வீட்டில் பயன்படுத்தக் கூடாது !

5.) தலித் பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது ( ஒருசில பகுதிகளில் முந்தானை, தாவணி அணியக்கூடாது என்கிற உத்தரவும் இருந்திருக்கிறது )

இதைக் கடக்கும்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. முதல்மரியாதை படத்தில் ராதாவுக்கும், ரஞ்சிதாவுக்கும் ரவிக்கை இல்லை. இதை அப்போதைய விகடன் & குமுதம் & தந்திகளில் வாசிக்கும்போது, ரவிக்கை அணியாமல் நடித்த ராதா & ரஞ்சிதா என்று நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு அவர்களுடைய கவர்ச்சிப் படங்களைப் போட்டு கிளுகிளுப்பாக எழுதி வழிந்திருந்தார்கள். வாசித்தவர்களுக்கும் அதையே கடத்தியுமிருந்தார்கள். ஆனால், இன்றுவரை கூட அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு ரவிக்கை அணிய அதனால்தான் அனுமதியில்லை, மீறி அணிந்திருந்தால் வடிவுக்கரசியின் தாயாதிகள் கிழித்தெறிந்திருப்பார்கள் என்று 99 / 100 பேருக்குத் தெரியாது. அதேபோல, முதல்மரியாதை படம் பற்றிப் பேசும் பல பிரமுகர்களும், சிவாஜி – ராதாவிற்கிடையே நிகழும் காதல் வேதியல் வினைகளை வியப்பார்களேயன்றி இவ்வளவு உள்ளே போயெல்லாம் விளக்கியதுமில்லை 🙁

6.) பெண்கள், பூ, குங்குமம் அணியக் கூடாது !

7.) குடை பயன்படுத்தக் கூடாது !

8.) செருப்பு அணியக்கூடாது ! (அசுரனுக்கு வந்துட்டோம்)

உச்சகொடூரம் என்னவெனில் இந்தத் தடைகளை பள்ளர்கள் சரிவரக் கடைபிடிப்பதில்லை, சிலர் மீறுகிறார்கள் என்று 1931 – ஜூன் மாதத்தில் மேலும் சில தடைகளைத் தண்டனைகளாகச் சேர்க்கிறார்கள் தேவர்கள்.

9.) அவர்களது குழந்தைகள் கல்வி கற்கக் கூடாது, அவர்களை கால்நடைகளை மேய்க்க அனுப்பி வைக்க வேண்டும் !

10.) நிலங்களை குத்தகைக்கு எடுக்கக் கூடாது, சாகுபடி செய்யக்கூடாது, மிராசுதார்களின் பண்ணைகளில் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் !

11.) சொந்த நிலங்களை கிராமத்தின் மிராசுதாரருக்கு விற்றுவிட வேண்டும். மறுப்பவர்களுக்கு பாசனவசதி மறுக்கப்படும். மழைப்பாசனத்தில் பயிறு விளைந்திருந்தாலும் அறுவடைக்கு முன் பயிர் நாசம் செய்யப்படும் ! ( பஞ்சமி நில உரிமைச் சட்டத்தால் ஒடுக்கப்பட்டோர் பலருக்கு நிலங்கள் கிட்டியிருந்த காலம் )

12.) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கண்டிப்பாக மிராசுதாரின் வயல்களில் வேலை பார்க்க வேண்டும். ஆண்களுக்கு கூலி நாலனா. பெண்களுக்கு கூலி இரண்டனா !

13.) திருமணம் அல்லது இதர விசேஷங்களில் மேள, தாளங்களுக்கு அனுமதி கிடையாது. சத்தமெழுப்பும் இசைக்கருவிகள் எதையும் பயன்படுத்தக் கூடாது ! ( இத்தனைக்கும் இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களாக ஒடுக்கப்பட்டோரில்தான் பெரும்பாலோர் இருந்தனர் )

14.) திருமணங்களில் குதிரை, பல்லக்கு ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது.

15.) மாற்றாக விசேஷங்களின் போது தங்கள் வீட்டுக் கதவுகளை பல்லக்காகப் பாவித்து அதில் அமரவைத்து போகலாம். மாட்டுவண்டி, குதிரை வண்டியில் போகக் கூடாது !

திடீர் இணைப்புகளை ஏன் சேர்த்தார்களெனில், வெள்ளைக்காரர்களின் ரப்பர், டீ, கரும்புத் தோட்டங்களில் பணிபுரிய ஒடுக்கப்பட்டோரில் பலர் மலேசியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பர்மா, மொரிஷீயஸ் என வெளிநாடுகளுக்குப் போனார்கள். அபாரமாக உழைத்து வெகுவாக பணமீட்டினார்கள். பொருளாதார மந்தத்தால் கைகளில் பணத்துடன் வேலையின்றி தாயகத்துக்கு திரும்பிய அவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் எதுவுமே சகிக்க முடியாமல் இருந்தன. மீறினார்கள். மதம் மாறினார்கள். குழந்தைகளை படிக்க வைத்தனர். கல்வி தர மறுத்தவர்களை உதாசீனம் செய்து அவர்களே பள்ளிகளைக் கட்டினார்கள். கோட் சூட் போட்டார்கள். செருப்பென்ன ஷூவே அணிந்தார்கள். ஊருக்கே விருந்தளித்து திருமணம் செய்தார்கள். கூலி உயர்வு கேட்டார்கள், வேலை நேரத்தைக் குறைக்கக் கோரினார்கள். தாங்குமா ஆண்டைகள் உள்ளம் ??

இதெல்லாம் காலம் காலமாக இருந்து வந்த ஊர்ச் சட்ட நடைமுறைகள்தான் என்றாலும், உரிமைகள் கிட்டத்துவங்கி விட்ட இந்தக் காலத்திலும், தொடர்ந்து அடிபணிய வேண்டுமோ என பள்ளர்கள் மறுத்தார்கள். தேவகோட்டை அருகே இலவங்கோட்டை ஊர்த்திருவிழாவில் பங்கேற்ற பல பள்ள இன ஆண்கள் சட்டை அணிந்து வந்தார்கள். தேர் இழுத்தார்கள். பறை அடித்தார்கள், கொம்பு ஊதினார்கள். இது கட்டுப்பாட்டை மீறியச் செயல் என்று தேவர்கள், பள்ளர்களைத் தாக்கினர். காவல்துறை உள்ளே நுழைந்தது. 63 தேவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. “ வெளிநாடுகளுக்கு போய் சம்பாதித்து நாகரீகமான வாழ்க்கையை வாழக் கற்றுக்கொண்டு வந்த ஆதிதிராவிடர்கள், இங்கும் அதைப் பரப்ப முயன்றதுதான் பிரச்சினைகளின் ஆரம்பம் ” என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வர்ணித்தார்.

சட்டமும் தங்களுக்கு இயைந்து வருவதை உணர்ந்த பள்ளர்கள் இந்த இலவங்கோட்டை சம்பவத்திற்குப் பிறகு மேலும் உத்வேகம் கொண்டனர். காந்தி உருவாக்கியிருந்த ஹரிஜன் சேவா சங்கம் என்கிற அமைப்பு மூலம் ஒடுக்கப்பட்டோர் மேலும் பல உரிமைகளைப் பெற்றனர் !

தமிழ்நாடு ஹரிஜன் சேவா சங்கத்தின் தலைவரான டி.எஸ்.எஸ். ராஜன், மதுரை ஏ. வைத்தியநாத ஐயர், முக்குலத்தோர் சார்பாக முத்துராமலிங்கத் தேவர் முன்னிலையில் ஓர் ஒப்பந்தம் நிறைவேறியது.

அதன்படி, இனி ஹரிஜனங்களை ஓசியில் வேலை வாங்கக் கூடாது, என்ன வேலையோ அதற்கேற்ப உரிய கூலி கொடுத்துவிட வேண்டும். அவர்கள் உடை விஷயத்தில் தலையிடக்கூடாது, எந்த அணிகலன்களும் அணிந்துக் கொள்ளலாம், கல்வி கற்கலாம், வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம்.

கி.பி.1937-ல் நிறைவேறிய இந்த ஒப்பந்தம், தான் ஏற்படுத்திய ஓர் அமைப்பால் உருவானது என்பதில் மகிழ்ந்து, இதுகுறித்து நாளிதழில் வரவேற்று எழுதியிருக்கிறார் மகாத்மா காந்தி. ஆனால் ஏனோ அந்த ஒப்பந்தம் விரைவில் முறிந்தது. விளைவு, பின்னாட்களில் பெருங்கலவரங்கள் உருவாக காரணமானது !

கி.பி. 1924, முதுகுளத்தூர் தாலுகா, செல்லூர் கிராமத்தில் பிறந்தார் இம்மானுவல் சேகர். உயர்நிலை பள்ளி வரை சென்றவர். ராணுவத்தில் பணியாற்றி, பின் ஓய்வு பெற்று தன் கிராமத்திற்கு வந்தவர், தன்னாட்கள் படும் பாட்டைச் சகிக்க மாட்டாமல் வெகுண்டு, பெருமாள் பீட்டர் உருவாக்கிய நலிவடைந்தோர் இளைஞர் கழகம் என்கிற அமைப்பில் சேர்ந்து, படித்த பள்ளர் இளைஞர்களை அதில் ஒருங்கிணைத்தார். தன் கிராமத்தில் நிலவி வந்த இரட்டைக் குவளை முறையை ஒழிக்கவும், பொதுக்கிணற்றில் பள்ளர்கள் தண்ணீர் எடுக்கவும் தொடர்ந்து போராடினார். அவருடைய ஊரைத் தாண்டி அக்கம்பக்கக் கிராமங்களிலும் அவர் இயக்கப் புகழ் பரவி கலகம் உச்சம் தொட்டது. அருந்ததியின மக்களையும் அரவணைத்துச் சென்றதால், அவர்கள் மத்தியிலும் இம்மானுவல் புகழ் பெருகியது. 1946-ல் அமிர்தம் கிரேஸ் என்கிற பள்ளி ஆசிரியையை மணந்த இம்மானுவல் தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன !

இம்மானுவலின் இந்தப் போராட்டத்தைக் காட்டிலும் அவருடைய இன்னொரு செயல் தேவர்கள் மனதில் கடும் பகையை கிளப்பி விட்டிருந்தது. முற்போக்குவாதியான சங்கரலிங்க ஜகன்னாத தேவர் என்பவருக்கும், கிருஷ்ணம்மாள் என்கிற தலித் இனப் பெண்மணிக்குமிடையே நிகழ்ந்த காதல் திருமண வரவேற்பை, தன் கிராமத்தில் முன்னின்று நடத்திக் கொண்டாடினார் இம்மானுவல்.

இதற்காக ஒருமுறை மேற்கூரை ஓடுகளைப் பிரித்து, அங்கிருந்து, உள்ளே தூங்கிக் கொண்டிருந்த இம்மானுவல் சேகரன் மீது பாறாங்கல்லை வீசிக் கொல்ல நடந்த முயற்சியில், தற்செயலாக அவர் தப்பித்திருக்கிறார்.

என்னதான் வேகமாக அவர் வளர்ந்துக் கொண்டிருந்தாலும் முத்துராமலிங்கத் தேவர், அவரை பெரிதாக மதிக்கவில்லை. பள்ளர்களின் தன்னிகரற்ற தலைவர் இம்மானுவல் என்பதை அவர் நிராகரித்தார். முக்குலத்தோர்க்கு மட்டுமல்ல, பள்ளர்களுக்கும் நானே தலைவர் என்றார். தாம் தேவர்கள் – பள்ளர்கள் எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. என்னுடைய எஸ்டேட்டில் தேவர்களைக் காட்டிலும் அதிகம் பணி புரிபவர்கள் பள்ளர்கள்தான் என்றார் தேவர். எங்கிருந்தோ புதிதாக வந்து முளைத்துவிட்டு தான்தான் பள்ளர்களின் பிரதிநிதி என வருவதை தன்னால் ஏற்கமுடியாது என்று இம்மானுவல் சேகரனை நேரடியாக அவமதித்தார் தேவர். எங்கு ? என்று ?? ஏன் ???

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் உடனான சந்திப்பிற்குப் பிறகு, அவர் மீது தீராப்பற்று கொண்ட தேவர், 1952-ல் காங்கிரஸிலிருந்து விலகி, சுபாஷ் இல்லாத நிலையில் அவருடைய பார்வட் ப்ளாக்கில் சேர்ந்தார் !

அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற & சட்டமன்ற தேர்தலில், அருப்புக்கோட்டையில் நாடாளுமன்றத்துக்கும், முதுகுளத்தூரில் சட்டமன்றத்துக்குமென, இரண்டுக்குமே சேர்த்து போட்டியிட்டார் முத்துராமலிங்கத் தேவர். இரண்டிலுமே அபார வெற்றியைப் பெற்றார். ஆளுங்கட்சியாயிருந்த காங்கிரஸ் தோற்றது. தேவர் எளிதாக வென்றுவிடவில்லை. தேவருக்கு எதிராக இருந்த நாடார், பள்ளர் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பாலும் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்தனர், முக்கியமாக அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியில். இதை நேரடியாக தேவரின் ஆதரவாளர்கள் பகிரங்கமாக எதிர்த்தார்கள். காங்கிரஸ் கட்சியின் சின்னம் பொருத்தியிருந்த, வரைந்திருந்த வீடுகள், கடைகள் தாக்கப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்டன. என்ன மிரட்டினாலும் இவர்கள் காங்கிரஸ்க்கே வாக்களிப்பார்கள் என நம்பிய தலித்கள் பலரை வாக்களிக்கப் போகவே கூடாதென ஆங்காங்கே முக்குலத்தோர் தடுத்தனர். மீறிச் சென்றோரை தாக்கினர். இதெல்லாமே தேவர் அவர்கள் தூண்டித்தான் நடைபெற்றன எனச் சொல்ல முடியாது. ஆனால் தேவர் அவர்கள் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய பேச்சு, அத்தகைய உத்வேகத்தை முக்குலத்தோரிடையே தூண்டி விட்டன என்றால் அது மிகையில்லை !

நாம் ஆண்ட வம்சம், நம் பாரம்பரிய ஆயுதங்கள், கவச உடைகளுடன் வாருங்கள் நம் உரிமையை மீட்டெடுப்போம், நேருவுக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன், நம்முடைய ஒரே தலைவர் சுபாஷ் சந்திர போஸ் மட்டுமே, அவர் விரைவில் இந்தியாவுக்குத் திரும்பி அதிபரானதும், நான் இங்கு மறவர் நாடு எனும் நம் நாட்டை உருவாக்கி அதற்கு அதிபராவேன், மீண்டும் நாம் இந்த மண்ணை ஆள்வோம், இதெல்லாம் நடக்கவே நடக்காது என்று யாரேனும் சொல்வார்களெனில் சிறிதும் தயங்காமல் அவர்கள் மீது அணுகுண்டை வீசிவிடுவேன், ஆமாம் என் கைவசம் அவைகளும் உள்ளன ( இப்படி தேவர் பேசிய அனைத்துக்கும் சாட்சிகள் உள்ளன. பிற்காலத்தில் பொது அமைதிக்கு இவர் பேச்சு பங்கம் விளைவிக்கிறதென கைதானபோது, இந்தப் பேச்சுக்களையே நீதிமன்றத்தில் சாட்சியாக சமர்ப்பித்தது காமராஜ் அரசு )

முதல்வர் காமராஜருக்கு, முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸை எதிர்த்து, தனியே பலம் பெறுவது பிடிக்கவில்லை. காமராஜருக்கு என்றில்லை, அப்போதைய அமைச்சர்கள் பக்தவச்சலம், சி.சுப்ரமணியம் போன்றோருக்கும். முத்துராமலிங்கத் தேவரின் பலத்தைக் குறைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்தார் காமராஜர் என்றால் அது மிகையில்லை. முக்குலத்தோரின் வாக்குகளால் மட்டுமே தேவர் வெல்கிறார் அல்லவா…. அதை முறியடிக்க, நாடார்கள் மிகுதியாக இருந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியை அருப்புக்கோட்டையுடன் இணைத்தார். பார்வட் ப்ளாக் கட்சியின் சின்னமான சிங்கம் சின்னத்தை பறித்து, அதை ஒரு சுயேச்சைக்கு கொடுக்கச் செய்தார். முக்குலத்தோர் வெறுக்குமளவு நாடார்களுக்கும், பள்ளர்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. மிக எளிதாக அவர்களிடம் அத்துமீறிக்கொண்டிருந்தவர்கள் இப்போது காவல்துறையினரால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். ஆனாலும் தேவர் செல்வாக்கை காங்கிரஸால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதே உண்மை !

1957. இம்முறையும் நாடாளுமன்றம், சட்டமன்றம் இரண்டுக்கும் போட்டியிட்டார் தேவர். அருப்புக்கோட்டை தொகுதி இப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் என பெரிதாக ஆகியிருந்தது. எனினும் தேவரே வென்றார். முதுகுளத்தூர் சட்டமன்றத்திலும் வென்றார். இம்முறை முதுகுளத்தூர் தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார். அங்கு இடைத்தேர்தல் வந்தது. இந்த இடைத்தேர்தல்தான் அந்தப் பகுதியில் கலவரம் உச்சம் செல்ல வழிவகுத்தது.

பொதுதேர்தலில் காங்கிரஸ்க்கு வாக்களித்தவர்கள் என தான் நம்பிய பல சாமானியர்களை கண்டமேனிக்குத் தாக்கியது மறவர் கும்பல். இடைத்தேர்தலின் போது முஸ்லீம் வாக்காளர்களை வாக்களிக்கச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள். தட்டிக்கேட்ட காங்கிரஸ் நிர்வாகியின் மண்டை உடைந்தது. தங்களின் வெறியாட்டத்துக்கு தடையாயிருந்த அரசு அதிகாரிகள், காவலர்களையும் தேவரின் ஆதரவாளர்கள் தாக்குமளவு நிலைமை போனது, இவ்வளவு களேபரங்களுக்கிடையே நிகழ்ந்த முதுகுளத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் சசிவர்ணத் தேவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இந்த வெற்றி, அந்தப் பகுதி முக்குலத்தோரிடையே உச்ச ஆணவத்தையும், வெறியாட்டத்தையும் அதிகரிக்கச் செய்துவிட்டது !

பள்ளர்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொலை, கொள்ளை, ஆடு மாடுகளை அபகரித்தல், வழிப்பறி, பாலியல் அத்துமீறல்கள், பாலியல் வன்முறைகளென தறிகெட்டுக் கிடந்தது 1957-ன் கிழக்கு ராமநாதபுரம். பல்வேறு வழக்குகள், கைதுகள், தண்டனைகள் என தொடர்ந்தாலும் தினமும் பதைபதைப்போடு இருந்த அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட, ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் சி .ஆர். பணிக்கர் ஓர் அமைதிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

10 செப்டம்பர் 1957 அன்று, முதுகுளத்தூரில் கூடிய அந்த அமைதிப் பேச்சு வார்த்தைக்கான அரசு கூட்டத்தில் கலந்துக் கொள்ள ராமநாதபுரத்தின் பிரதானச் சாதிப் பிரதிநிதி தலைவர்கள் மற்றும் டி ஐ ஜி, சூப்பிரண்டன்ட் போன்றோர்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பள்ளர்களின் பிரதிநிதியாக இம்மானுவல் சேகரன், பெருமாள் பீட்டர், வேதமாணிக்கம் போன்றோரை அழைத்திருந்தார் பணிக்கர். பொதுமக்களின் பிரதிநிதியாக சீனிவாசன் ஐயர் என்பவர் கலந்துக் கொண்டார்.

பள்ளர்களின் பிரதிநிதியாக இம்மானுவல் சேகரன் கலந்துக் கொண்டதை, கூட்டத்தில் நேரடியாக எதிர்த்தார் முத்துராமலிங்கத் தேவர். தேவர் முக்குலத்தோரின் பிரதிநிதியாக கலந்துக் கொண்டார். அவருடன் முதுகுளத்தூர் இடைத்தேர்தலில் வென்ற சசிவர்ணத் தேவருக்கும் அழைப்பு. ரிசர்வ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஏ. பெருமாள்தான் பள்ளர்களின் பிரதிநிதியாக இங்கு வந்திருக்க வேண்டுமேயன்றி, ஊர் பேர் தெரியாத ஆளையெல்லாம் ஏன் என் முன் அமரவைக்கிறீர்கள் என ஆட்சியரை கடிந்துக் கொண்டார் தேவர்.

பேச்சுவார்த்தை தொடங்கியது. அப்பாவி முக்குலத்தோரை அடக்க, நாடார்களுக்கும், பள்ளர்களுக்கும் ஆயுதம் மற்றும் பணத்தை ஏதோ ஒரு சக்தி வழங்கிக்கொண்டிருக்கிறது என மறைமுகமாக காங்கிரஸ் அரசை (காமராஜரை) சாடினார் தேவர்.

உடனடியாகத் தலையிட்டு அதை மறுத்த பேரையூர் வேலுச்சாமி நாடார், முக்குலத்தோர்தான் நாடார் கடைகளில் எந்தப் பொருட்களையும் வாங்கக் கூடாதென புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள் என்றார்.

நாடார்களும், பள்ளர்களும் உடனடியாக தேவர்கள் மீது கொடுத்துள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டுமென முத்துராமலிங்கத் தேவர் வலியுறுத்தினார்.

இம்முறை குறுக்கிட்ட இம்மானுவல், தேவரின் கோரிக்கையே ஏற்கிறோம், எல்லா வழக்குகளையும் திரும்பப் பெற்றுவிடுகிறோம், ஆனால், தேவர்களால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு உரிய இழப்பீடை தேவர்வாள் அளிக்க வேண்டுமென்றார்.

நான்தான் இந்த மாவட்டத்தின் தேவர் & பள்ளர்களின் ஒரே பிரதிநிதி, என்னை ஏன் நிராகரிக்கிறீர்கள் எனக் கேட்ட தேவரை, பள்ளர் தலைவர்கள் எள்ளல் செய்ததாக தேவருக்குப் பட்டிருக்கிறது, அது அவரை சீண்டி விட்டதைப் போலவும் ஆனதால், இங்கே குறுக்கே குறுக்கே பேசும் இம்மானுவல் சேகரன் யார் சார்பாக வந்திருக்கிறார் ? தனிப்பட்ட முறையில் வந்திருந்தார் எனில் அவரிடம் பேச எனக்கு ஒன்றுமேயில்லை என முகத்தைத் திருப்பிக் கொண்டார் தேவர்.

தான் பள்ளர்களின் பிரதிநிதியாக ஆட்சியரின் அழைப்பின் பேரில் வந்ததாகக் கூறிய இம்மானுவலை நோக்கி, நீ ஓர் அற்பன், உனக்கு பள்ளர்களின் பிரதிநிதியாக கூறிக்கொள்ள என்ன தகுதி இருக்கிறது ? என் அளவுக்கு உனக்கு பள்ளர்களிடையே செல்வாக்கு உள்ளதா என்ன ? என்னோடு சரி சமமாக உட்கார்ந்து பேசுமளவுக்கு தகுதியை நீ பெறவில்லை. பள்ளர்கள் சார்பாக நீ தரும் வாக்குறுதிகளையெல்லாம் பள்ளர்கள் ஏற்பார்கள் என்பதை எப்படி நம்ப முடியும் ? என்று படபடத்தார் தேவர்.

எனக்கு பள்ளர்களிடையே செல்வாக்கு உள்ளது, அதனால்தான் அழைக்கப்பட்டிருக்கிறேன் என இம்மானுவல் சேகரன் கூறியதை தேவர் காதில் வாங்கவில்லை. அவர் சற்று கொதி நிலையில் இருந்திருக்கிறார்.

நாடார் தலைவர்களும், தலித் தலைவர்களும் மறவர்களுக்கு எதிராக வைத்தக் குற்றச்சாட்டை தேவர் மறுத்தார். ( அவர்கள் தங்களின் வசதி, வளர்ச்சி, ஆடை, கல்வி போன்றவற்றைக் கண்டு தேவர்கள் எரிகிறார்கள் என பொதுவானக் குற்றச்சாட்டு ஒன்றை ஆட்சியரிடம் கூறியிருந்தனர் )

தான் எந்தப் பாகுபாடுமின்றி ஹரிஜன் வீடுகளில் உணவு உண்டிருப்பதையும், அவர்களைச் சரிக்குச் சமமாக பாவிப்பதாகவும் சொன்னார் தேவர். தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு போராட்டங்களுக்கு ஆதரவளித்தவனும் நானே என்றார். இப்படி மறவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என உங்களாக் நிருபிக்க முடியுமா என எதிரிலிருந்த பிற சாதித் தலைவர்களைப் பார்த்து முத்துராமலிங்கத் தேவர் கேட்க, எங்க மக்கள் என்கிட்ட என்ன சொன்னாங்களோ அதை அப்படியே நான் சொல்றேன் என்றார் இம்மானுவல் சேகரன்.

மறவர்கள், நாடார்கள் & பள்ளர்களிடமிருந்து கட்டாய வரி வசூல் ( படித்துறை பாண்டி ) செய்வதாக ஆட்சியர் தேவரிடம் கேட்டதற்கு, அது கட்டாயப்படுத்துவதல்ல, அவர்களாக விரும்பித் தருவது என தேவர் ஒரே போடு போட்டார். அந்தப் பணத்தை பொய் வழக்கு போட்டு சிறையில் தவிக்கும் மறவர்களை வெளியே கொண்டுவரவே செலவு செய்யப்படுகிறது என்றும் விளக்கினார் !

ஓகே. இங்கு வந்திருக்கும் அனைத்துத் தலைவர்களும் அமைதிப் பிரகடன அறிக்கை ஒன்றை வெளியிடுங்கள். அதை நானே தயாரிக்கிறேன், நீங்கள் கையெழுத்திடுங்கள், நாளை அனைத்து நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் வருவது போல பிரசுரித்துவிடலாம். இந்த மாவட்டத்தில் அமைதி திரும்ப அது உதவும் என்றார் ஆட்சியர் பணிக்கர்.

ம்க்கும், பள்ளர்கள் பெரும்பாலோர்க்கு எழுத்தறிவே இல்லை, இந்தப் பிரகடனத்தை அவர்கள் எப்படி படிப்பார்கள் ? எனவே அது பயனற்றது என்றார் தேவர்.

இம்முறையும் இம்மானுவல் பாய்ந்து வந்து, ஒரு கணக்கெடுப்பு வேணா நடத்துங்க, பள்ளர்களை விட தேவர்களிடையேதான் எழுத்தறிவு குறைவு. அவர்களால்தான் வாசிக்க முடியாது (இம்மானுவல் அவர்களுடன் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வந்திருந்த பெருமாள் பீட்டர் பள்ளிகளை ஏற்படுத்தியவர். இம்மானுவலின் தந்தை ஓர் ஆசிரியர், மனைவி ஓர் ஆசிரியர். )

அரைமனத்துடன் பிரகடன வரைவில் கையெழுத்திட தேவர் சம்மதித்தார். ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற தகுதியும், என்னுடன் வந்திருக்கும் சசிவர்ணத் தேவருக்கு சட்டமன்ற உறுப்பினர் தகுதியுமிருப்பதால், கையெழுத்திடவும், நாங்கள் சொல்வதை எங்கள் இன மக்கள் ஏற்பதையும் எங்களால் உறுதிப்படுத்த முடியும், எந்தத் தகுதியுமே இல்லாத, செல்வாக்குமில்லாத இம்மானுவல், பெருமாள் பீட்டர் போன்றோர் கையெழுத்திட்டால், நாளை அவர்கள் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தை அவர்கள் மக்கள் கேட்பார்கள் என்பதில் என்ன நிச்சயம். எனவே அவர்களுக்குப் பதிலாக ஏ.பெருமாள் என்பவரை பள்ளர்கள் சார்பாக கையெழுத்திடச் செய்யுங்கள் என்றார் தேவர். ஆட்சியர் இதை மறுத்தார். எனில் நான் கையெழுத்திட மாட்டேன் என தேவர் ஜகா வாங்கினார்.

ஆட்சியர் அறிக்கையைத் தயாரித்து எடுத்து வந்தபோது, தேவரய்யா, உங்களளவுக்கு எனக்கு மக்கள் செல்வாக்கு இல்லாவிடினும், என் பேச்சைக் கேட்பதற்கு எங்கள் ஆட்கள் முன்வருவார்கள் என்ற இம்மானுவலிடம், அப்படின்னா நீங்க வேணா தனியா கையெழுத்து போட்டுக்கோங்க தம்பி, நான் போட மாட்டேன் என்றுவிட்டார் தேவர். ஆனாலும் அமைதி பிரகடனம் பின்பு வெளியிடப்பட்டது. இந்த அமைதி பேச்சு வார்த்தையின் முடிவைக் கேட்க கட்டிடத்திற்கு வெளியே பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு காத்திருந்தனர்.

பேச்சுவார்த்தையின் போது தேவருக்கு முன்பே வந்துவிட்டிருந்த இம்மானுவல் சேகரன் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததை தாமதமாக வந்த தேவர் ரசிக்கவில்லை என்றும், ஒரு சாரார், இம்மானுவல் சேகரனை கடைசி வரை நாற்காலியில் அமர தேவர் விடவே இல்லை என்றும் (பிரகடனத்தில் கையெழுத்தைக் கூட இம்மானுவல் நின்றவண்ணமே போட்டார்) பேச்சுக்கள் கிளர்ந்தன. இரண்டுமே உண்மைதான் என பின் சட்டமன்றத்தில் திருவண்ணாமலை எம் எல் ஏ பேசியபோது விளங்கியது. கூட்டத்திற்குச் சரியான நேரத்திற்கு வந்து முன்னமே அமர்ந்துவிட்டிருந்தனர் இம்மானுவல், பெருமாள் பீட்டர் போன்றவர்கள். தாமதமாக வந்ததால் தேவருக்கு நாற்காலி இல்லை. பிறகு தனித்தனியாக சாதித்தலைவர்களை அழைத்துப் பேசியபின் அமைதிப் பிரகடனத்தில் கையெழுத்து போட அழைத்தபோது, ஆட்சியர் அறையில் முதலில் தேவர் அமர்ந்துவிட, இம்மானுவலுக்கு இப்போது நாற்காலியில்லை.

இம்மானுவல் போன்ற ஆட்களையெல்லாம் சரிக்குச் சமமாக அமர வைத்து பேசும் கூட்டத்திற்கு என்னை அழைத்துவிட்டீர்களே என்று அவர்கள் ஆட்களிடையே தேவர் கடுமையாக கடிந்துக் கொண்டதாகவும் பேச்சு பரவியது ! இம்மானுவல் சேகரனால் தேவர் பெரிதும் அவமானப்படுத்தப் பட்டதாக கூடியிருந்த தேவர்களில் பலர் கொதிக்க ஆரம்பித்தனர். உடனுக்குடன் இதற்கு சரியான பதிலடி கொடுப்பது என ஒரு கும்பல் முடிவெடுத்தது !

மறுநாள், அதாவது செப்டம்பர் 11 1957, காலை பரமக்குடியில், பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய, இம்மானுவல் சேகரன், இரவு எட்டரைக்கு டின்னர் முடித்தபின், வெற்றிலை பாக்கு கடைக்குச் சென்று வருகிறேன் என மனைவியிடம் கூறிவிட்டு நண்பர் கிருஷ்ணமூர்த்தியுடன் கிளம்பினார். வெளியே வந்த அமிர்தம் கிரேஸ் அம்மையார், கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க, நிறைய பகையச் சம்பாரிச்சு வச்சிருக்கீங்க என்றிருக்கிறார்.

இரவு மணி 09:30. முதுகுளத்தூர் பஸ் வந்தது. அதிலிருந்து பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்று இறங்கியது. அதில் ஒருவர் அங்குசாமித் தேவர். நீதான்டா நேத்து எங்க தேவர எதுத்து பேசின ஆளு ? இவன் தலையச் சீவுங்கடா என்று பேயன் முனியாண்டித் தேவர் உரத்த குரல் கொடுத்தார். கையில் வேல்கம்பும், வீச்சரிவாவுமா வந்திருந்த அந்தக் கும்பல், தலித் மக்களின் விழைவுகளை தைரியமாகச் சொல்லிக்கொண்டிருந்த அந்த 33 வயது இளைஞனின் குரலை நிறுத்தியது !

Related Posts