அறிவியல்

நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு

டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலைமை விஞ்ஞானி டகாகி கஜிதா, கனடாவின் சட்பரி நியூட்ரினோ வானியல் ஆராய்ச்சி மையத்தின் (SNO) ஆர்தர் மெக்டொனால்ட் ஆகிய இருவருக்கும் அக்டோபர்  6 அன்று நியூட்ரினோ அலைவுகள் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. SNO தொடங்கப்பட்டு அந்நிய நாட்டு ஒத்துழைப்புடன் 17 ஆண்டுகளாக நடைபெற்ற அந்த ஆராய்ச்சியின் தன்மை குறித்து ஷுபஸ்ரி தேசிகனுக்கு ஆர்தர் மெக்டொல்ட் அளித்த நேர்காணல் தி ஹிண்டு நாளிதழில் அக்டோபர் 13 அன்று வெளியாகியுள்ளது.

பேட்டியில் அவர் கூறியது :
சூரிய நியூட்ரினோவின் அலைவுகள் பற்றி ஆய்வு செய்து துல்லியமான முடிவுகளுக்கு வர கனடா, ஜப்பான் ஆகிய இருநாட்டு ஒத்துழைப்பு வழிசெய்தது. எங்களுடைய பணிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததின் அடையாளம்தான் இந்த நோபல் பரிசு . 1989-இல் ஆய்வு தொடங்கியபோது  அடிப்படை ஆய்வுக்குத் தேவையான மிக அதிக அளவு நிதியைச் செலவிடுவது அன்றைய சூழ்நிலையில்  கனடாவைப் பொறுத்த அளவில் அசாதாரணமானது. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்த நிறுவனங்களிடம் நியூட்ரினோ ஆய்வின் முக்கியத்துவம் பற்றி SNO விஞ்ஞானிகள் எடுத்துக்கூறியும் எங்களது தொழில்நுட்பத் திட்டம் பற்றி சில பரிசோதனைகள் செய்து காண்பித்தும் ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. இந்த அடிப்படை அறிவியல் ஆய்வு குறித்த முக்கியத்துவத்தை சகவிஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டு பலமாகப் பரிந்துரைத்தபிறகுதான் ஆய்வுகளுக்குத் தேவையான நிதியை நாங்கள் பெற முடிந்தது.

கடினமானதொரு பரிசோதனையை மேற்கொள்ளத் தேவையான புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கி நாங்கள் வளர்க்க வேண்டியிருந்தது. நாங்கள் மேற்கொண்ட ஆய்வு உலகைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தக்கூடியது. இம்மாதிரியான திட்டங்களை நோக்கி ஈர்க்கப்படும் மாணவர்களுக்கு மிகச் சிறந்த  பயிற்சியளிக்க உதவக்கூடியது. 1000 லிட்டர்கள் சுத்தமான கனநீரை உடைய 12 மீட்டர் விட்டம் உள்ள பாத்திரம் SNO டிடெக்டரின் ஒரு பகுதி. இதை கனடாவின் அணு ஆராய்ச்சித் துறை எங்களுக்கு அளித்தது. அத்துறையின் மூத்த விஞ்ஞானிகள் எங்களது ஆய்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அரசு எங்களுக்குத் தேவையான கடன் தொகையைத் தருமாறு பரிந்துரைத்தனர்.

அணு உலைகளுக்கும் கனநீருக்கும் உள்ள உறவின் காரணமாக பொதுமக்களிடம் எங்களது ஆய்வு குறித்த கவலை இருந்தது. எங்களது விஞ்ஞானிகளில் ஒருவர் ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு கிளாஸ் கனநீரைக் குடித்து அது பாதுகாப்பானதுதான் என்பதைக் காண்பித்தார்.

உலகிலேயே மிகக் குறைந்த கதிர்வீச்சு கொண்ட இருப்பிடங்களையே  உருவாக்குகிறோம், கதிர்வீச்சு பற்றிய பயம் தேவையில்லை எனத் தொடர்ந்து நாங்கள் சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது. இந்த ஆய்வுக்காக பூமிக்கடியில் மிகுந்த ஆழத்தில் நாங்கள் மிகப் பெரிய சுரங்கப்பாதையை அமைக்க வேண்டியிருந்தது. பூமியைத் தோண்டுவதற்கும் மேலே இருந்த பாறைகள் தாக்குப் பிடித்து நிற்பதற்கும் தேவையான தொழில்நுட்பத்தையும் திட்ட வடிவமைப்பையும் பொறியாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்தனர்.

நியூட்ரினோக்களின் சார்பு பொருட்திணிவுகள் (relative masses) பற்றி இந்தியாவின் நியூட்ரினோ வானியல் மையம் ஆய்வு செய்ய இருக்கிறது. உலகைக் கட்டமைத்த அடிப்படைத் துகள்களான எலெக்ட்ரான்கள், குவார்க்குகள், நியூட்ரினோக்கள் பற்றிய ஆய்வுகள் மிக முக்கியமானவை. அவற்றைப் பற்றிய குணங்களைப் புரிந்துகொள்வது இந்த உலகைப் பற்றிய மிக அடிப்படையான புரிதலை முழுமையாக்கக் கூடியது. குறிப்பிட்ட பொருண்மையுள்ள நியூட்ரினோக்கள் இருப்பதை SNO ஆய்வு மையம் கண்டுபிடித்தது.

இது அடிப்படைத் துகள்கள் பற்றிய திட்ட மாதிரியைத் தாண்டி நம்மை எடுத்துச் சென்று இயற்பியலின் அடிப்படை விதிகள் குறித்த முழுமையான புரிதலை அளிக்கக்கூடியது.  அது உண்மையிலேயே எங்களுக்கு மிகப் பெரிய `யுரேகா தருணம். எங்களது அறிவியல் வாழ்க்கையில் அது ஒரு முக்கியமான நாள் என்பதை எங்களால்

மறக்க இயலாது.

பேராசிரியர் கே. ராஜு

Related Posts