அரசியல் புத்தகம் பேசுது‍

எந்த மொழியும் தீட்டு அல்ல….!!!

கடந்த மாதம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.பிருந்தா காரத் அங்கு போராட்டத்தில் குழுமியிருந்த மக்களிடம் நான் ஆங்கிலத்தில் பேசவா..? இந்தியில் பேசவா..? என்ற கேள்வியை கேட்டார். பெருவாரியான மக்களுக்கு இந்தி புரியும் என்பதால் இந்தி என அவர்கள் சொல்லவும், அதை ஏற்றுக்கொண்டு இந்தி மொழியில் தன் கண்டனத்தை பதிவு செய்து பேசினார்.. இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த திராவிட கழக ஆதரவாளர் தோழர். ஓவியா உடனடியாக தன் முகநூல் பக்கத்தில் இந்தி மொழியில் பேசியதற்காக தோழர்.பிருந்தா காரத்திற்கு தன் கண்டனத்தை பதிவு செய்தார். CAA எதிர்ப்பைவிட தோழர்.பிருந்தா இந்தியில் பேசியதை பெரும் குற்றமாக கருதி இரண்டு மூன்று கண்டன பதிவுகளை வெளியிட்டார்.


“அது எப்படி இந்தி பேசாத மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வரும் ஒருவர் இந்தியை தீவிரமாக எதிர்க்கும் தமிழகத்திற்கு வந்து இந்தியில் பேசலாம் என்ற கேள்வியை முன்வைத்தார்.”…?
இந்த கேள்வியில் ஏதாவது நியாயம் இருக்கிறதா..?
மக்களுக்கு எந்த மொழியில்
புரியுமோ அந்த மொழியில் தானே ஒரு தலைவர் பேச முடியும்.? முதலில் தமிழகத்தின் பெரும்பான்மையான
மக்கள் இந்தி என்கிற ஒரு மொழியை எதிர்க்கிறார்களா..?
அல்லது இந்தி திணிப்பை எதிர்க்கிறார்களா..?

தமிழகத்தில் அனைத்து MATRIC,CBSE பள்ளிகளிலும் இந்தி ஒரு பாடமாக கற்றுத்தரப்படுகிறது இந்தி கற்றுக்கொள்வதற்கான பல கோச்சிங் சென்டர்களின் வியாபாரம் படுஜோராக நடக்கிறது. இந்தி எனும் மொழியை தமிழகம் எதிர்க்குமெனில் இதெல்லாம் இங்கு இயங்க வாய்ப்பு இருக்குமா..? இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தலைமையேற்று நடத்திய அறிஞர் அண்ணாவும் இந்தி உட்பட அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்றே வலியுறுத்திருக்கிறார்.

எனவே தமிழகம் இந்தி எனும் மொழிக்கு எதிரியல்ல
மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இந்தி திணிப்பிற்குதான் எதிரானவர்கள். இரண்டுக்குமான வேறுபாட்டை அறியாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள் தோழர். ஓவியா மட்டுமல்ல பொதுவாக திராவிட இயக்கத்தினர், தமிழ்தேசியவாதிகள், மொழி பிரச்சணையில், மாநில சுயநிர்ணய உரிமைகளில் இடதுசாரிகள் மீது ஒரு விமர்சனத்தை இப்போதும் முன்வைத்துக்கொண்டே இருப்பார்கள். இது எந்த அளவு உண்மை என்பதை கடந்த கால போராட்டங்களின் வழியாகவும் கட்சி ஆவணங்களின் வழியாகவும் அவர்களுக்கு தெளிவுபடுத்தலாம்.

கம்யூனிஸ்டுகள் இந்தி மொழியை அனுகும் விதத்தில் சில மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்ந்திருந்தாலும் ஒவ்வொரு மாநிலங்களின் பிராந்திய மொழிகுறித்த தமது நிலைபாட்டில் தெளிவான கருத்துக்களை துவக்கத்திலிந்தே கொண்டிருக்கிறார்கள். அதற்கு சான்றாக வெளிவந்திருக்கிற புத்தகம் தான் “மொழி சிக்கலும் பொதுவுடமை இயக்கமும்”இது தனித்த ஒரு புத்தகமல்ல
பல புத்தகங்களின் தொகுப்பு அல்லது கம்யூனிஸ்ட் கட்சி ஆவணங்களின் தொகுப்பு எனலாம்….

1954ல் துவங்கி1968வரை மொழிகுறித்து ஒரு நீண்ட உரையாடலை கம்யூனிஸ்ட்கள் நடத்தியிருக்கிறார்கள்.
மொழிகுறித்து அரசியல் சட்ட அமைப்பின் 343முதல் 351 பிரிவுகளின் படி 1955ல் ஆட்சி “ஆட்சிமொழி கமிஷன் ” அமைக்கப்பட்டது, 1956ல் தனது அறிக்கையை அக்கமிஷன் சமர்பித்தது.


இந்த அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக திணிக்கும் பரிந்துரைகள் இருந்ததால் அன்றைய ஒன்றுப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர்.அஜய்கோஷ் அதை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஒரு தேசிய கட்சி இந்தி மொழிக்கு தரும் அதீத முக்கியத்துவத்தை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை என்ற தன் கொள்கையிலிருந்து அது வெளிபட்டது.


அன்றைய இந்தியாவில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் வெறும் 1% தான் எனவே அதிக மக்கள் பேசும் இந்தியை ஆங்கிலத்திற்கு பதிலாக கொண்டு வரலாம் என்ற கருத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது
மும்மொழி கொள்கையும் துவக்கத்தில் ஆதரித்தது..


இது இந்தி மொழி மீதான பாசத்திலோ அல்லது இந்தி பேசும் மக்கள் மத்தியில் ஓட்டு வாங்கும் எண்ணமோ அல்ல
ஆங்கிலயேர்களை அகற்றியது போல் அவர்களின் மொழி ஆதிக்கத்தையும் அகற்றி இந்திய மொழிகளான அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டது..

பொது இணைப்பு மொழியாக இந்தி இருக்கலாம் என்ற கருத்தையும் துவக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருந்தது
ஆனால் அது இயல்பாக நடக்க வேண்டும் “ஆட்சிமொழி கமிஷன் அறிக்கை” சொல்வது போல் திணிப்பாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தது…


ஆனால் காலப்போக்கில் இந்தி பேசா மாநிலங்களில் இந்தியை விட ஆங்கிலமே இணைப்பு மொழிக்கு போதுமானது என்ற நிலை உண்டானதால் அக்கருத்தை கம்யூனிஸ்ட் கட்சி மாற்றிக்கொண்டது…
மேலும் கல்வியிலும், நீதிமன்றங்களிலும், அரசின் ஆவண வெளியிடுகளும் அந்தந்த மாநில மொழிகளை கொண்டுதான் வெளியிடப்பட வேண்டும் என்பதில் 1956லியே உறுதியான நிலைபாட்டை கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருந்தது…..

1963ல் தோழர். பி.ராமமூர்த்தி மொழி குறித்து நாடாளமன்றத்தில் சிறப்பான ஓர் உரையை நிகழ்த்தினார்.
இந்தி திணிப்பை கண்டித்தும் உலகளவில் உள்ள தேசிய இன பிரச்சணையின் தோற்றம் முதல் உள்ளூர் அளவில் உள்ள மொழி பிரச்சணை வரை அதன் அடிப்படையிலிருந்து விளக்கி பேசியிருக்கிறார்..
மொழி பயன்பாட்டின் அவசியம் குறித்து பேசும் போது, ஒரு பொதுகூட்டத்தில் முதல் முறையாக முழுவதுமாக தமிழில் பேசிய பி.ராமமூர்த்தி பேசி முடித்து அமர்ந்தபின் உடனடியாக தோழர். ஜீவா அதை மீண்டும் தமிழ்மொழியில் மொழிப்பெயர்த்து பேசினார்.
அந்தளவு தான் பி.ராமமூர்த்தியின் தமிழ் இருந்ததாக அவரே நகைச்சுவையாக பதிவு செய்கிறார். பிறகு வெளியிடப்பட்ட பொலிட் பீரோவின் அறிக்கையும் மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது..


1968ல் தமிழக சட்டமன்றத்தில் மொழி தொடர்பான தீர்மானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சில திருத்தங்களை முன் வைத்தது அதையும் ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…

ஒன்றுபட்ட இந்தியாவை வலுவாக ஆதரித்த கம்யூனிஸ்டுகள் மாநில மொழிகளுக்கு தரும் முக்கியத்துவம் மூலமாகதான் அதை வலுப்படுத்த முடியும் எந்த மொழியையும் திணிப்பின் மூலமாக செய்ய முடியாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
லெனின் வகுத்த தந்த பாதையும் அதுதான் சோவியத் ரஷ்யாவை அப்படித்தான் அவர் பாதுகாத்தார்.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உருவான இந்தி திணிப்பிற்கு எதிரான எழுச்சி குறித்தும் கம்யூனிஸ்டுகள் பார்வை குறித்தும் 1966ல் தோழர்.சுந்தரய்யா எழுதிய கட்டுரையில் மொழி பிரச்சணையில் உள்ளார்ந்து இயங்கும் வர்க்க பார்வையோடு அனுகுகிறார்.
இந்த மாநில மொழிக்கு ஆதரவான எழுச்சியை பிராந்திய முதலாளிகள் ஆதரித்தார்கள் தேசிய பெரு முதலாளிகள் எதிர்த்தார்கள்.
திமுகவின் போராட்டத்தை முழுமையாக ஆதரித்து எழுதிய சுந்தரய்யா ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் நம்முடைய போராட்ட பங்களிப்பு இல்லாமல் இருப்பதை சுயவிமர்சனத்தோடு பதிவு செய்கிறார். 1965ல் மும்மொழிக்கொள்கையை எதிர்த்தும் இருமொழிக்கொள்கையை ஆதரித்தும் எழுதியிருக்கிறார்..


சட்டமன்றத்தில் அறிஞர்.அண்ணா Hindi Never English Ever என்று சொன்ன போது தோழர்.ஜீவா Then Where is Tamil என்று கேட்டார்..? அந்த கேள்வியை இப்போதும் தமிழகத்திலே கேட்கலாம். தமிழ்வழிக் கல்வியின் நிலை இவ்வளவு மோசமான சூழலுக்கு காரணம் இந்தி எதிர்ப்பில் தீவிரம் காட்டிய நாம் தாய்மொழி கல்வியில் போதிய கவனம் செலுத்தவில்லை அதை இந்த வரலாற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்….


அன்று முதல் இன்று வரை தாய்மொழி வழிக்கல்வியை பலப்படுத்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்துக்கொண்டிருக்கிறது.
அதற்கு சான்றாக இந்த ஆவணங்களை வாசிப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம் மேலும் இப்புத்தகத்தில் தோழர்கள் வானமாமலை மற்றும் குமாரமங்களம் ஆகியோர் எழுதிய ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன பல முக்கிய புள்ளிவிவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளது….

தோழர். அஜய்கோஷ் சொன்னது போல்…

கம்யூனிஸ்ட்கள் மொழிப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்தை வளர்ப்பதற்கு கருவியாக பயன்படுத்தாமல் நமது தேசத்தின் வளர்ச்சி மக்களின் அறிவியல் பண்பாட்டு இவற்றுடன் இணைத்து பார்க்கவேண்டும் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் அந்த ஒற்றுமை நமது மொழிகள் அத்தனையும் சமமானவை என்ற சகோதரத்துவத்தின் மேல் நிறுவப்பட வேண்டும் நமது ஜனநாயக அமைப்புகளை இன்னும் விரிவான அடிப்படையில் அமைக்க வேண்டும் நிர்வாகம் மக்களுக்கு நெருங்கிய தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் பாமர மக்கள் அரசாங்க நடவடிக்கைகளில் பங்கு கொள்ள வேண்டும் என்ற கருத்துடன் மொழிப் பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் அணுக வேண்டும் என்கிறார்…

எந்த ஒரு மொழி மீதான வெறுப்போ கசப்போ கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை

எந்த ஒரு மொழியை கொண்டும் பிற மொழி மீது ஆதிக்கம் செலுத்துவதை கம்யூனிஸ்டுகள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள். தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் இதை வலுவாக மேற்கூரிய ஆவணங்கள் பேசுகிறது…

தோழர்கள் வீ. அரசு காமராசன் ஆகியோர் இணைந்து இப்புத்தகத்தை பதிப்பித்திருக்கிறார்கள்
அனைவரும் வாசிக்கவும்…

சிந்தன் புக்ஸ் வெளியீடு
விலை.ரூ.270
தொடர்புக்கு 9445123164

S.மோசஸ் பிரபு

Related Posts