பிற

இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம்

இடது திருப்பம் எளிதல்ல …

விஜய்பிரசாத்

தமிழில் ச. சுப்பாராவ்

பாரதி புத்தகாலயம் வெளியீடு

 

முன்னுரை

உலக வரலாற்றில் புரட்சிகர மாறுதல்களுக்கு சாதகமில்லாததாக இருக்கும் காலகட்டங்களில் பெரும் பொறுமையின்மை நிலவும், உறைந்து போன அதிகாரத்தின் முடிச்சுகளை உடைக்க ,ஆளும் வர்க்க தத்துவங்களின் நிறுவனங்களின் புதர்க்காடுகளில் ஒரு புதிய பாதையைக் கண்டுபிடிக்க ஆவல் மிகும் .

எதிர்காலத்தில் பெரும் வெடிப்பை உருவாக்குவதற்கான சிறு பொறி எங்கேனும் இருக்குமோ ? என்று கேள்வி எழும் , ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் அதீத வறுமையில் தங்களை வழி நடத்த சீனா , இந்தியா போன்ற நாடுகளை எதிர்நோக்கும் சூழலில் பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள இந்தியாவில் கம்யூனிசத்தின் எதிர்காலம் பற்றிய கவலையுடனும் மீண்டு வரும் எனும் நம்பிக்கையுடனும் 2015 ல் வெளிவந்த புத்தகம் இது .

’’ ஒரு கட்சியின் வரலாற்றை எழுதுவதை , ஒரு நாட்டின் பொதுவான வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் எழுதுவதாகச் சொல்லலாம் ‘’ எனும் அந்தோனியோ கிராம்சியின் சொற்றொடரை எடுத்தாளும் விஜய்பிரசாத் , அதற்கொப்ப இடதுசாரிகளின் நிலையை இந்திய நாட்டின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்திக் காட்டுகிறார் .

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா:

காந்தி நடத்திய நாடு தழுவிய மூன்று இயக்கங்கள் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை ஸ்தம்பிக்க வைத்து ஆட்சி நடத்தும் தார்மீக உரிமையை வீழ்த்தியது. சமத்துவத்தின் பெயரால் தம்மை ஆட்சி செய்து கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது என உணர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கிய மகத்தான தருணங்களில் தான் இந்தியா பிறந்தது .

பருத்திக்கு அற்ப தொகை பெற்ற விவசாயிகள் இங்கிலாந்தில் நெய்து இறக்குமதியான துணிக்கு அதிக விலை கொடுத்தனர் . மக்கள் தானே நெய்தால் இங்கிலாந்தின் லாபம் அடிபடும் என்பது தேசியவாதிகளிடம் எடுபட்டது . சுயசார்பு பற்றியும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பற்றியும் கற்றுத் தந்தது .

தாயாக உயிரியல் ரீதியாக அஹிம்சையைக் கடைபிடிக்கும் பெண்கள் பங்கெடுக்காத சுயராஜ்ஜியத்தால் பலனில்லை என்றார் காந்தி . ஆனால் பெண்கள் காந்தியின் அணுகுமுறையை மீறி ஆண்களுக்கு சமமாக தனக்கான இடத்தைக் கண்டு பொதுவான உரிமைகளைக் கோரத் துவங்கினர் .

1934 ல் காங்கிரசில் இருந்த சோசலிஸ்டுகள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கினர் . அவர்கள் கம்யூனிச பாதையில் செல்கின்றனர் என்று பம்பாயின் அதிகார வர்க்கம் கவலைப்பட்டது .

1943 ல் வங்கப் பஞ்சத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் பெண்கள் , கீழ்ஜாதி ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்கிப் போராடினர் . கீழ்ஜாதிக்கும் ஹிந்துயிசத்திற்கும் உள்ள உறவைப் பற்றிய கவலை காந்தியை ஆலய நுழைவுப் போராட்டத்தை கொண்டு வர வைத்தது .

அரசியல் அதிகாரத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் அஹிம்சை வழியில் ஒத்துழையாமையில் ஈடுபட முடியுமானால் முதலாளித்து -வத்தை எதிர்த்த போராட்டத்தில் ஏன் கூடாது என நினைத்த சிங்காரவேலர் சாத்தியப் பட்ட போதெல்லாம் அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்க செய்யும் வகையில் தொழிலாளி வர்க்கத்தை அஹிம்சைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார்.

உழைக்கும் வர்க்கத்தின் சுதந்திரத்தை ஒழுங்கீனம் என்ற காந்தி முதலாளி தொழிலாளி எதிரெதிர் உறவுமுறையை விரும்பவில்லை. அடிப்படை கட்டுமானம் கெடாமல் சரிசெய்ய நினைத்து தர்மகர்த்தா முறையை வலியுறுத்தினார் . இது முதலாளிகளுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் இந்திய கம்யூனிச ஆபத்துக்கு இது பரவாயில்லை என்று நினைத்தனர்.

1944 ல் ஜிடி பிர்லா , ஜே ஆர் டி டாடா முன் வைத்த பம்பாய் திட்டம் இந்திய அரசின் கொள்கைகளை தீர்மானித்தது . தனியார் சொத்துரிமையின் பெரும் ஆதரவாளராக பாராளுமன்றத்தில் இன்றைய பிஜேபியின் முன்னோரான ஜனசங் இருந்தது .

1945 – 46 ல் இந்திய கப்பற்படை எழுச்சி , இந்திய ராணுவத்தினரை சிறையிலிருந்து விடுவிக்க வலியுறுத்திய போராட்டங்கள் , தெபாகா , புன்னப்புரா விவசாயிகள் எழுச்சிகள் ஆகியவை காரணமாக காங்கிரசில் இருந்த கம்யூனிஸ்டுகள் நீக்கப்பட்டனர் .

சுதந்திர இந்தியாவில்:

காந்தியை ஓரம் கட்டுவதிலும் அவரின் அரசியல் வாரிசாக மக்கள் கூட்டத்தை ஈர்ப்பதிலும் பெரும் பூர்ஷ்வாக்களுக்கு அவர் சிறந்த முகமூடியாகத் திகழ்ந்தார் .

காந்தியின் மறைவிற்கு பிறகு காதி நூற்பு இரண்டும் முக்கியத்துவம் இழந்து இயந்திரமயமாக்கலும் ராணுவ வளர்ச்சியும் அதிகரித்தது . காங்கிரஸ் தொழில் அரசியல் பூர்ஷ்வாக்களுக்கான அரசு அதிகாரக் கருவியாக மாறியது . கார்ப்பரேட் நிர்ப்பந்தங்களைத் தாண்ட வேண்டி வந்த போது மட்டும் சோஷலிசம் எனும் சொல் நேரு இந்திரா இருவருக்கும் பயன்பட்டது .

1959 ல் கேரள கம்யூனிஸ்ட் அரசை மத்திய நேரு அரசு கலைத்தது . 1961 ல் நேரு வளர்ச்சித் திட்டங்களின் தோல்வியை உணர்ந்தார் . ஆனாலும் 65 ல்

கம்யூனிஸ்டுகளின் உணவு இயக்கத்தை நசுக்கியது . 74 ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தின் மீது வன்முறை ஏவியது .

1977 ல் ஜனதா கட்சி வெற்றி பெற்றது . ஆர் எஸ் எஸ் மீதான தடையை நீக்கியது . வாஜ்பாயி அத்வானி , ஹரிபாய் படேல் , பர்னாலா ஆகியோர் அமைச்சர்களாயினர் .

1980 ல் உலக வங்கியிலிருந்து திரும்பிய அலுவாலியா இருபது ஆண்டு காலம் இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றினார் . ராஜீவ்காந்தி பல சீர்திருத்தங்களுக்கு காரணமானார். 1991 ல் நாடு தாராளமயம் நோக்கி திரும்பியது . 2000 ங்களிலிருந்தே ஜனநாயகம் என்பது குளறுபடி எனும் எண்ணம் மக்கள் மனதில் திணிக்கப்பட்டது .

2009 ல் மாநிலங்களவை மூலம் சிங் ஆட்சிக்கு வந்தார் . 2014 ல் மோடி ஆட்சிக்கு வந்ததும் உள்துறை அமைச்சகத்தின் 150000 கோப்புகள் அழிக்கப் பட்டன . நவீன ஜனநாயகத்தின் தரக்குறியீடான அரசாங்கத்தின் பதில் கூறும் பொறுப்பை ஆவணங்கள் இல்லாவிட்டால் துல்லியமாக உறுதி செய்ய முடியாது . சிங் வங்கி அதிகாரியாக ஆட்சி செய்தார் . மோடி பலசாலியாக ஆட்சி செய்கிறார். .

இந்திரா காலத்தில் வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்டதால் 2008 ல் உலக நெருக்கடியிலிருந்து இந்தியா காப்பாற்றப்பட்டது .ஆனாலும் சுதந்திர இந்திய வரலாறில் இந்திய பொருளாதாரத்தில் தன் நலன்களை திணிக்க முடியாத நெருக்கடி இந்திய பூர்ஷ்வாக்களுக்கு என்றுமே ஏற்பட்டதில்லை .

நவீனதாராளமயம் மக்களிடம் புதிய வேறுபாடுகளையும் ஆசைகளையும் உருவாக்கியுள்ளன . உழைக்கும் வர்க்கம் மேலும் பிளவுபடுகிறது .இதனால் ஏற்படும் ஏற்றதாழ்வுகள் பாதுகாப்பின்மையுடன் சாதி அமைப்புகளை மத வாய்ப்புகளை அடையாள அரசியல் குழுக்களை உருவாக்கும் விளைநிலங்களாகின்றன .

முதலில் பிரிட்டிஷ் பணம் 1920 களிலிருந்து இந்திய பணம் என இந்திய பத்திரிகைகள் மூலதனத்தின் பிடியில் இறுக்கமாக கிடந்தன .

நெருக்கடி நிலை கார்ப்பரேட்களுக்கு இருவித சாதகங்களை உருவாக்கின . ஊடக தொழில் நிறுவனங்கள் தனிப் பத்திரிக்கைகளை நசுக்க அனுமதித்தது. தனது சுதந்திரத்திற்காக அரசு கட்டுப்பாடு ஆதரவு நிலை எடுக்க வைத்தது . 2002 ல் ஊடகங்கள் சர்வதேச நிதிமூலதனத்திற்கு அடிமையானதும் சேர்ந்து கொண்டது .

மத்திய டெல்லியில் ஜந்தர்மந்தரில் லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் கலந்து கொண்ட பேரணியை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை .
இந்திய சோசலிசத்தின் பயணம்:

பொருளாதார ஏற்றதாழ்வும் சாதிய ஏற்றதாழ்வும் இரட்டை அசுரர்கள் . இரண்டுமே கொல்லப்பட வேண்டியவை . பரந்துபட்ட இந்திய இடதுசாரி களுக்கு இந்திய சமூகத்தில் சாதியின் விஷத்தனமான தாக்குதல் பற்றி எந்தவிதமான சந்தேகமும் இல்லை .

சாதி அரசியலில் சோசலிசத்தின் நுழைவு சாதி ஒடுக்குமுறைக்கு சவாலாக அமையவில்லை . மாறாக கிராமப்புறங்களின் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளான பிற்படுத்தப்பட்ட சாதிகளின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது . வட இந்தியாவின் இந்த அனுபவங்களைப் போலவே திராவிட கட்சிகளும் இடைசாதிகளின் கட்சிகளாக மாறின அல்லது தனிப்பட்ட தலைவர்களின் கட்சிகளாகின . சாதிக் கட்சிகளின் நோக்கம் தமது சமூகத்தின் வசதி படைத்தோரின் முன்னேற்றம் தான் . பொருளாதார சாதிப் பாகுபாடுகளை விமர்சிக்கும் பரந்த சோசலிச நோக்கிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை .

1922 லேயே எம் என் ராய் சாதியை பழம் சமூகத்தின் மிச்சம் . தீண்டாமையை நீடிக்கச் செய்யும் வழக்கங்களை ஒழிக்காமல் இது ஒழியாது என்றார் . 1930 ல் சிபிஐயின் செயல்திட்ட வரைவு அடிமைமுறை, சாதி அமைப்பு , ஏற்றதாழ்வு அனைத்து வடிவங்களிலும் ஒழிக்கப்பட வேண்டும் , சாதியின் பொருளாதார வேர்களை அறுக்கும் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றது . 1979 ல் பிடிஆர் சாதி வேறுபாடுகளை உணர மறுத்து சாதிக்கு பதிலாக வர்க்கத்தை முன்னிறுத்துவது எனும் கேள்விக்கே இடமில்லை . சாதிக்கு எதிரான தத்துவார்த்த போரில் சற்று கவனக்குறைவு இருந்ததை ஏற்க வேண்டும் என்றார் .

1995 லிருந்து தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொடர்ந்து ஆதிக்க சாதியினரால் ( பிற்படுத்தப்பட்ட ) தலித்துகள் தாக்கப்படும் ஒரு போர்க் களமாக மாறிவிட்டது . தலித்துகள் அரசியல் முறைகள் மூலம் அதிகாரம் பெற்றதற்கும் , நிலவுரிமையாளர்களின் அதிகாரம் கைமாறி வருவதற்கும் எதிர்ப்பாகவே இத்தாக்குதல்கள் நடைபெற்றன . மேலவளவு வழக்கின் தீர்ப்பு வந்த சிறிது காலத்திற்குப் பிறகுதான் சாதி மோதல்களுக்கு அடிப்படை தீண்டாமை தான் என்று ஆய்வுகள் கண்டறிந்தன . சுயமாக ஆய்வுகள் நடத்தி சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய மாதர் சங்கத்தின் வழியில் சிபிஎம் சென்றது .

2006 ல் சிபிஎம் தமிழகத்தில் தீண்டாமை கொடுமைகள் பற்றி இருபது மாவட்டங்களில் மாநாடு நடத்தியது. அதில் பத்து பெண்கள் மாநாடு. சாதி பற்றிய ஒரு மார்க்சீய பார்வை எனும் கருத்தரங்கம் நடத்தியது. அதன் இறுதித் தீர்மானம் சாதி ஆதிக்கங்களையும் அதன் வேர்களையும் எதிர்த்து நேரடியாகப் போராடுவதுதான் ஒரே வழி என்றது .

2007 ல் பலகட்ட முன் தயாரிப்புகளுக்குப் பிறகு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைக்கப்பட்டது. (63 தலித் அமைப்புகள் + வெகுஜன அமைப்புகள் )

ஆணாதிக்கம் எதிர்த்த ஹரியானா அனுபவம்….சொத்துரிமை , நில உரிமை , பெண் கௌரவம் , சாதி கௌரவம் , பழக்கவழக்கங்கள் , பாலின உரிமைகள் ஆகியவற்றிற்கு இடையிலான இணைப்புகள் பற்றிய புரிதல் ! சாதி வர்க்கங்களுக்கு உள்ளேயும் அவற்றுக்கு இடையிலும் இருக்கிற சிக்கலான படிநிலைகள் ! பழிவாங்கும் வன்புணர்ச்சிகள் !

பெண்கள் மீதான வன்முறைகள் நமக்கு உணர்த்துவது பயமற்ற சுதந்திரம் என்பதைதான் நாம் பாதுகாக்க , காப்பாற்ற , மதிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதையே ! 2005 ல் பெண்கள் குறித்த ஆவணம் பொது சமூகத்தில் பெண்கள் பற்றிய பார்வையையும் கட்சிக்குள் நிலவும் கண்ணோட்டத்தை குற்றம் சாட்டுவதாகவும் இருந்தது .

மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கான போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் தலைமை வகித்தனர் . இந்தியா என்பது ஒரு தேசமல்ல. ஒரு கூட்டமைப்பு . மொழிவாரி இனங்களுக்கு சொந்தமான நிர்வாக அமைப்புகள் . ஆட்சிமொழியாகஅவற்றின் தாய்மொழி. இந்தியா எனும் தேசத்திற்கு உட்பட்டு வளங்களின் மீதான அதிகாரம் இருந்தால் ஜனநாயகம் இருக்கும் .

இந்தியாவில் இடதுசாரிகளுக்கு மாநில அளவில்தான் பொறுப்பு கிடைத்தது . மத்திய அளவில் அல்ல . இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் ஆள வேண்டும் . அது நல்ல ஆவணம் தான். ஆனாலும் அது சொத்துரிமை உள்ள பக்கம் சாய்ந்திருந்தது .

1947 முதல் 91 வரையிலான இந்திய அரசியல் வரலாற்றில் இடதுசாரி களின் ஆட்சி மிக முக்கியமாக நிலச்சீர்திருத்தத்தை , விவசாய தொழிலாளர் குத்தகை திட்டத்தை , ஆழமான உள்ளாட்சி முறையை உருவாக்கி , மத அரசியலின் விஷமத்தன்மான செயல்திட்டத்திலிருந்து ஒரு பாதுகாப்பை தந்துள்ளது .

முதலாளித்துவ ஜனநாயகமும் வர்க்க போராட்டமும்:

நடைமுறையில் உள்ள பாராளுமன்ற ஜனநாயக முறை சுரண்டும் சிறுபான்மையோரை எதிர்த்து போராட பெரும்பான்மை சுரண்டப்படுவோ ருக்கு வலுவான ஆயுதம் வழங்குவதால் முன்னவர் ஜனநாயகத்தை சடங்காக மாற்றவும் பெரும்பான்மையோர் அதிகார ஆசனத்திற்கு அருகில் வரும்போது அதை அழிக்கவும் அவர்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள் என்றார் இ எம் எஸ் .

பற்றாக்குறை பட்ஜெட் , பணவீக்க அதிகரிப்பு , பொது விநியோக முறை சீரழிப்பு , எந்த வேலையையும் செய்ய மக்கள் தயாராகும்படி வாழ்வாதார பாதிப்பு இவையே முதலாளித்துவம் கடைபிடித்த புதிய பொருளாதார கொள்கைகள் தந்த பரிசு !

கார்ப்பரேட் தொழில் கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்காதது மட்டுமல்ல ; கூடுதலாக அது தனது ஏகபோக நிலையை மூலதனச் சேர்க்கைக்கு பயன்படுத்தியது ; மாநிலங்களிலிருந்து சலுகைகள் கோருவது ; மக்களுக்கு தீங்கான சில நிபந்தனைகளை மாநில அரசின் மீது விதிப்பது ; நில பேரங்களில் ஈடுபடுவது ; என மூலதனத்தைச் சேர்த்தது என்கிறார் பிரதாப் பட்நாயக்

விளைவாக இந்தியாவில் 90% உழைக்கும் வர்க்கம் முறைசாரா துறைகளில் தொழிற்சாலைகளில் நேரடியாக வேலை செய்யாமல் உப ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரிகிறார்கள் .தொழிற்சங்க அரசியல் நடத்துவது கடினமாக இருக்கும் வகையில் தொழில்துறை வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பாதுகாப்பற்று அடிக்கடி இடம் மாறுவதால் தமது நிலைமைகள் மற்றும் ஊதிய உயர்வுக்காக ஒன்று திரண்ட போராட்டம் நடக்க விடாமல் செய்கிறது . இவர்கள் தொலைதூரப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் வாக்குகள் தேடும் உள்ளூர் அரசியல்வாதிகள் கண்டு கொள்வதில்லை . மொழி கலாச்சார வேறுபாடுகள் காரணமாக உள்ளூர் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறார்கள் .

ஆனாலும் இந்த கடினமான சூழலிலும் தொழிலாளர்கள் வீரமுடன் போராடுகிறார்கள் . நீதிமன்றங்களின் பொதுவான தொனி தொழில் அதிபர்களின் நலன் சார்ந்து … அரசு அதிகாரம் நேரடியாக தொழிலாளர் களுக்கு எதிராக தொழிலதிபர்களுக்கு ஆதரவாக மாறியது .

முதலாளித்துவத்தில் தோன்றும் வர்க்க போராட்டத்தை வெறும் தேர்தல் களத்தை வைத்து மட்டும் பார்க்க முடியாது .

இடதுசாரிகளும் மாநில ஆட்சியும்:

59ல் கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் மத்திய நேருவின் அரசால் கலைக்கப்பட்டது . அரசியல் லாபத்திற்கான அனைத்து ஜனநாயக வாய்ப்புகளும் நிறுத்தப்பட்டன.

மக்களுக்கு உடனடி நிவாரணம் தரும் எளிய திட்டத்தை செயல்படுத்த அரசை அமைக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சிபிஐஎம் வரையறுத்தது . அது உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கத்திற்கு தூண்டுதல் தந்து ஜனநாயக முன்னணி கட்டும் பணிக்கு துணை செய்ய வேண்டும் என்று கூறியது .

64 ல் நெருக்கடியான காலங்களில் கட்சி கட்டுவது பற்றி விவாதித்து நெருக்கமான பகுதிகளில் கட்சியை மக்கள் தளங்களை விரிவுபடுத்துவது குறித்து 67 ல் சிபிஎம் முடிவெடுத்தது .

கட்சி கட்டுவது என்பது கருத்தரங்கை நடத்துவது போன்றது அல்ல . அதிகாரம் , பணபலம் இவற்றுடன் பின்னிப் பிணைந்த நிறுவனங்களை எதிர்கொள்ள ஏராளமான துணிச்சல் தேவை . தவறுகள் இயற்கை ! அது போலவே நம்பிக்கை இழப்பும் !

மேற்கு வங்கத்தில் 2008 ல் முதன்முதலாய் இடதுமுன்னணி வாக்கு சதவிகிதம் சரிந்தது . 2011 ல் ஆட்சியை இழந்தது . 2007 நந்திகிராம் துப்பாக்கி சூடு 8 பேர் உயிரிழப்பு இடதுசாரிகளின் பொது பிம்பம் மீது உண்டான வடு . புத்ததேவின் மன்னிப்பு , அரசின் மீது குற்றமில்லை என்று ஆறாண்டுகள் கழித்த சி பி ஐ யின் அறிக்கை என எதுவும் கறையை நீக்கவில்லை .

இடது முன்னணி …

1. நிலச்சீர்திருத்தம் கிராமப்புறங்களில் ஏராளமான செல்வந்தர்களை உருவாக்கி விட்டது . பஞ்சாயத்து அதிகாரப் பரவலாக்கம் கிராமப்புற அரசியலை சரி செய்ய உதவும் என நம்பப்பட்டது . ஆனால் விளைவுகள் கலவையாகத் தான் இருந்தன .

2. தொழில்மயமாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தல் .. சிங்கூர் , நந்திகிராம் தொழில்மயக் கொள்கையே தவறு , அமுலாக்கம் ஜனநாயக விரோதமானது என பலவகைகளில் விமர்சிக்கப் பட்டாலும் அதற்கான தண்டனை சிறிது காலத்திற்கு அனுபவித்தாகணும் .

3 , கல்வி சுகாதார சீர்திருத்த செயல்திட்டங்களில் அழிக்க இயலாததாக இடதுசாரிகளின் முத்திரை அழுத்தமாக பதியவில்லை .

4. இடது முன்னணியின் மேற்குவங்க தோல்வி .. கேரள திரிபுரா ஆட்சியை மறைத்தது . வெகுஜன ஊடகங்கள் முற்றிலும் விரோதமாக இருந்தன . தோல்வியை மிகைப்படுத்தி வெற்றியை மறைத்தன .

இவையெல்லாம் பாடங்களாயின . இவைகளுடன் அதிகாரப்போக்கு , ஆடம்பர வெளிப்பாடு தோல்விக்கு காரணமாயின . அத்துடன் கேரளா மே. வங்கம் இரண்டிலும் இடதுசாரிகள் மீதான வன்முறைத் தாக்குதல்களும் வழக்கமாயின . இவை திரிபுராவின் வெற்றியையும் சேர்த்து மறைத்தன .

தோல்வியின் அரசியல்:

மேற்கு வங்கத்தின் அரசியல் என்று தீதியைச் சுற்றி என்றானது. அவரது பரபரப்பு அரசியலுக்கு தெரு வன்முறை அவசியம் . கலகத்தை தூண்டும் பரபரப்பு அரசியலின் முக்கிய அம்சம் பிளவுபட்ட மக்களின் மோசமான உணர்வுகளை எளிதில் கவர்வதுதான் . கலக அரசியல் ,சுதந்திர சந்தை என்ற இருவகை அரசியல் செயற்களங்களும் , டாக்டர் , 56 இஞ்சர் , அக்கா எனும் மூன்று வகைகளும் வலதுசாரிகளுக்கு சாதகமாக உள்ளன .

முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் மீண்டெழும் சக்தியை இடதுசாரிகள் குறைத்து மதிப்பிட்டு விட்டனர் . சோசலிசத்திற்கான வழி பயணம் பல பின்னடைவுகளைக் கொண்டதாக இருக்கும் என்றார் சுர்ஜித்.

2014 ல் இடதுசாரிகள் வரலாற்றுத் தோல்வி கண்ட வேளையில் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் . கடுமையான பொருளாதாரக் கொள்கைகளுடன் கலாசார ரீதியாக மக்களை திணறடிக்கும் பாதகமும் இவர்களிடம் உள்ளது . பேச்சு கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் களுடன் நாட்டின் சமூகப் பரப்பில் கலாச்சார மத அடிப்படையிலான வேறுபாடுகள் மீதான மிரட்டல்களும் உள்ளன . இக்கொள்கை போக்கிற்கு எதிராக இடதுசாரிகளைத் தவிர்த்து வேறு எந்தக் கட்சியிடமும் மாற்று இல்லை .

தேர்தல் தோல்வி பற்றிய கருத்தோட்டத்தின் அடிநாதம் இடது தத்துவத்தின் நிராகரிப்பு என்பதாக உள்ளது . மார்க்சியத்திற்கும் கம்யூனிசத்திற்கும் அஞ்சலிக் குறிப்புகள் அடிக்கடி , அதுவும் 19 ம் நூற்றாண்டிலிருந்து மிகக் கடுமையாக எழுதப்படுகின்றன . ஆனால் மார்க்சியம் மீண்டெழுந்து அந்த மரணக் குறிப்புகளை ரத்து செய்கிறது

முதலாளித்துவ முரண்பாடுகள் உள்ளவரை பல லட்சம் உறுப்பினர்கள் கொண்ட இடதுசாரிகள் முதலாளித்துவத்தின் இடுக்குகளில் புகுந்து கரைந்து போக மாட்டார்கள் .

பொதுவாக பூர்ஷ்வா கட்சிகளுடனான நடைமுறை கூட்டணி கம்யுனிஸ்டுகளின் சுயபலத்தை குறைத்து விட்டது என்றும் மக்கள் போராட்டங்களையும் இயக்கங்களையும் வாக்குகளாக மாற்றுவதில் இருந்த பலவீனம் கம்யூனிஸ்டுகளின் அரசியல் செல்வாக்கை குறைத்து விட்டது என 2014 ம் ஆண்டின் நிலைமையைக் கூறுகிறார் ஆசிரியர் .
கம்யூனிஸ்டுகளின் பண்பும் செயலும்:

தாராளமய காலத்தில் இந்திய அரசியலில் இடதுசாரிகளின் பங்கை வெறுத்த தாராளமய ஆதரவு கும்பலை எதிர்த்து இடதுசாரிகள் தனியாக நின்றார்கள் . 2012 ல் இயக்கங்கள் போராட்டங்கள் நடத்துவது கூட சிரமமாக போய்விட்டது என்று சிபிஎம் ஒப்புக் கொள்கிறது .

கம்யூனிசம் பலமுறை தோற்கடிக்கப் படலாம் . பலமுறை தவறான வழியில் சென்று விடலாம் . ஆனால் போராட்டத்தின் மூலமாக , சுய விமர்சனத்தின் மூலமாக மட்டுமே அது புதிய பலம் பெற்று விஸ்வரூபமாக மீண்டும் எழும் என்பார் மார்க்ஸ் .

இயக்கத்தின் நேரடி போராட்டங்களிலிருந்து தான் உணர்வு வரும் . வெறுமனே சோசலிசம் என்று கோஷமிடுவதால் அல்ல . போராட்டங்கள் உழைக்கும் மக்களின் பிரச்னைகள் எனும் அச்சிலிருந்து உருவாக வேண்டும். அதே சமயம் அது பெண்கள் , சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் உரிமைகள் மற்றும் கௌரவத்தை காப்பதாகவும் இருக்க வேண்டும் என்றார் பிரகாஷ் கராத் .

இதற்கு கட்சி உறுப்பினர்கள் சொந்த வீடுகளிலும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் . குடும்ப உறவுகளில் கம்யூனிச ஒழுக்கம் நியதிகளை கடைபிடிக்க உணர்வுபூர்வ முயற்சி வேண்டும் . இவை பெருமளவில் பெண்களை திரட்டும் அரசியல் முயற்சிக்கு உதவி செய்யும் .

ஒரு கம்யூனிஸ்ட் தன் சொந்த சமூக உலகிற்கு எதிராக நிற்க வேண்டியதாக உள்ளது . அதே சமயம் அதே உலகிற்கு அவன் தலைவனாகவும் ஆக வேண்டியுள்ளது . ஆரம்பத்திலிருந்தே இந்த முரண்பாடு கம்யூனிசத்தை பாடாய் படுத்துகிறது .

தொழிலாளர்கள் சமூக , பாலின அடிப்படையில், உணவுப் பழக்கத்தில் பொழுது போக்கும் விதத்தில் தனித்துவம் கொண்ட மக்களாகவும் உள்ளனர்.

தொழிற்சங்கங்கள் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தீர்மானம் போடுவது தவிர உயர்சாதி உறுப்பினர்கள் தன் சாதி விருப்பு வெறுப்புகளை உதறுவதற்கு எதுவும் செய்யவில்லை என்பது பலவீனம் எனும் பரிசீலனை படிப்பினையாக உள்ளது .

அடிப்படை புரிதலில் போதாமையுடன் காலசூழலும் இணைய சிலவகை தொண்டு நிறுவனங்கள் மக்கள் பணி செய்யும் ஊழியர்களை அதிக பணம் தந்து இழுத்து விடுகிறது . இது அரசியல் இயக்கங்களில் பணி செய்ய ஊழியர் இல்லா நிலைமையை எற்படுத்துகிறது .

உழைப்பாளிகள் விவசாயிகள் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் தலைவர்களை உருவாக்குவதற்கு இடைவிடாத தத்துவார்த்த ஸ்தாபன நடைமுறை பணி தேவைப்படுகிறது. ஊழியர்கள் , இடைவிடாத கட்சிக்கல்வி , ஊக்குவிப்பு அனைத்தும் தேவைப்படுகிறது .

தஞ்சை பி சீனிவாசராவ் கன்னட தேசத்திலிருந்து களப்பாலுக்கு வந்தவர். தலித் மக்கள் வாழ்வின் பகுதியாக மாறுவதற்கு மிகவும் சிரமப்பட நேர்ந்தது . உலகம் பற்றிய மரபார்ந்த புரிதலுக்கும் கிராமப்புற இந்தியாவின் யதார்த்தத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பதை வாழ்ந்து உணர்ந்தார்.

கம்யூனிஸ்ட் வரலாற்றாளர்களுக்கு ஒரு பெரிய இடைஞ்சல் உள்ளது. கம்யூனிஸ்ட் தனது சொந்த சமூக வளர்ச்சியை தனது சொந்த தியாகங்களை பதிவு செய்வதை விரும்புவது கிடையாது . எழுதப்பட்டவை மிகக் குறைவு

இந்திய கம்யூனிச இயக்கத்துடன் இந்நூலாசிரியருக்கு இருந்த 25 ஆண்டு கால தொடர்பு ,நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகளின் பேட்டி, படித்த ஆயிரக்கணக்கான கட்சி ஆவணங்கள் , கம்யூனிச நடவடிக்கைகளில் பங்கேற்கவும் பார்வையிடவும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்த அனுபவம் , இத்தனை ஆண்டுகளில் கம்யூனிச இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு ஆய்வு ஆகியவற்றின் விளைவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது .

எனவே இவர் கூறுவது போல் இடதுசாரிகளின் தேர்தல் தோல்விக்கான எதிர்வினை அரசியல் தற்கொலை அல்ல. ஆராய்வதும் வேலை செய்வதும் தான் எனும் அடிப்படையில் மிக விரிவாக எழுதப் பட்டுள்ளது .

கம்யூ காலம் முடிவற்ற சூழல் முயற்சியின் காலம் . நாட்கள் மற்ற நாட்களப் போலவே கடந்து செல்லும் .விவாதங்கள் ஏற்கனவே நடந்ததைப் போன்ற உணர்வு தரும் . இதை எத்தனை முறை விவாதித்திருக்கிறோம் என்று தோன்றும் .

அதிகாரம்தான் பிரச்னை என்றால் அதற்கு தீர்வு இன்னும் சக்தி வாய்ந்த இயக்கங்களை இன்னும் சக்தி வாய்ந்த கட்சிகளைக் கட்டுவது தான் உழைக்கும் வர்க்கத்திற்கு தன் எதிர்காலத்திற்காக அனுமதி கேட்கும் அவசியம் கிடையாது . தன் எதிர்காலத்திற்கான பாதையை உருவாக்க அது கடுமையாக போராட வேண்டியதாக இருக்கும் .

தவறாமல் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் வாசிக்க வேண்டிய விவாதிக்க வேண்டிய நூலிது !

Related Posts