அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 6

 

“நாங்கள் இந்தத் தேர்தலில் ஜெயிப்பது உறுதி. எப்படித் தெரியுமா?” – சுப்பிரமணிய சாமியின் அசத்தும் நேகாணல்.

சொல்லுங்கள்! இவர்களை ஜெயிக்க விடலாமா?

” ‘நாம் அரசியலில் புறக்கணிப் பட்டுவிட்டோம். இந்துக்களுக்கு உரிய நியாயம் இங்கே கிடைக்கவில்லை’ – என்கிற உணர்வும் ஆதங்கம் இன்று ஒவ்வொரு இந்துவுக்கும் ஊட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக இளைய தலைமுறை இந்துக்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள்.

“நிச்சயமாக பொருளாதாரத்தில் இந்த அரசு படு தோல்விதான். ஜி.எஸ்.டி. பண மதிப்பு நீக்கம் எல்லாம் மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறதுதான். ஆனால் ஜி.ஸ்.டி யால் எந்த சிறு வியாபாரி பாதிக்கப்பட்டுள்ளானோ அந்தச் சிறு வியாபாரிதான் இந்துத்துவாவின் முதுகெலும்பாகவும் உள்ளான் என்பதை மறந்து விடாதீர்கள். இந்துக்கள்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என அவன் விரும்புகிறான.

எங்களின் பொருளாதாரத் தோல்விகள் அவனைப் பாதித்துவிடாது.

“கருத்துரிமை, பசுக் கொலை, மனித உரிமைகள் என்றெல்லாம் இன்டலெக்சுவல்கள் பேசிக் கொண்டிருக்கலாம். சாதாரண இந்துக்களுக்கு அது பிரச்சினையில்லை. பொருளாதாரத்தில் பெரிய சாதனைகள் செய்தவர்களெல்லாம் வென்றிருக்கிறார்களா? மொரார்ஜி தேசாய் கூடத்தான் மிகச் சிறப்பாக விலைவாசியைக் கட்டுப்படுத்தினார். நரசிம்மாராவின் காலத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருந்தது. அவர்களால் அடுத்த தேர்தலில் வெல்ல முடிந்ததா?

“இந்து என்கிற பெருமிதம் இன்று அதிகமாகி உள்ளது. முத்தலாக்கை ஒழித்துள்ளோம். சபரிமலைக்கும் பெண்களும் போகலாம் என ஆகிஉள்ளது. எங்கள் குரலுக்கு இன்று அதிக மதிப்பு வந்துள்ளதை நாங்கள் உணர்கிறோம். வாஜ்பேயி ஆட்சிஏன் தோற்றது? அவர் ராம் மந்திர் என்கிற மந்திரத்தை மேலெடுத்திருக்க வேண்டும். ராமர் கோவில் கட்டுவோம் என முழங்காமல் அவர் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று முழக்கினார். தோற்றார். மோடியும் கூட என்ன செய்திருக்க வேண்டும்? ‘மேக் இன் இந்தியா” என்பதைப் பற்றியெல்லாம் இங்கே யார் கவலைப் படுகிறார்கள். ‘வீரத் ஹிந்துஸ்தான்’ என்பதை அவர் முன்னெடுத்திருக்க வேண்டும். பா.ஜ.க அணிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சி (cadre based party). நினைவிருக்கட்டும். லஞ்ச ஒழிப்பு, இராமர் கோயில், இந்துத்துவா என்கிற முழக்கங்கள் எங்களைக் காப்பாற்றும். “ராமர் கோவில், யூனிஃபார்ம் சிவில் கோட், பசுப் பாதுகாப்பு – இவையே வீரத் ஹிந்துஸ்தானின் அடையாளங்கள். ஹிந்துத்துவா என்கிற அரசியலை முன்னிறுத்தி வெல்வோம்.

“என்ன உன் அடையாளம்? இந்தியாவின் உண்மையான வரலாறு எது? ஏன் நாம் எல்லோரும் சமஸ்கிருதத்தைக் கற்க வேண்டும்? பொருளாதார அணுகல்முறையை எவ்வாறு ஆன்மீக மதிப்பீடுகளுடம் ஒத்திசைய வைப்பது? இறுதியாக நம் தேசப் பாதுகாப்புக் கொள்கை எப்படி அமைய வேண்டும்?”- என்கிற இந்த ஐந்து கேள்விகளை நாங்கள் இளைஞர்கள் முன் வைப்போம். வெல்வோம்.

“2019 தேர்தல் இந்தியாவின் ஆன்மா மதச்சார்பின்மையா இல்லை இந்துத்துவமா என்பதைத் தீர்மானிக்கப் போகும் தேர்தல். இந்து என்பவன் ஒன்றும் மதச் சார்பின்மையை மறுப்பவன் அல்ல. ஆனால் அந்த மதச் சார்பின்மை ஜவஹர்லால் நேருவின் மதச் சார்பின்மை அல்ல. 83.3 சத மக்களை ஒரு பொருட்டாகக் கருதாதா மதச் சார்பின்மை அல்ல.”

இதுதான் இந்துத்துவாவின் strategy யாம். அதாவது மக்களைப் பிளவுபடித்தும் அர்சியலே போதும் நாங்கள் ஜெயிப்பதற்கு என்கிறார் இந்த ஆள்.

(தொடரும்)

– அ.மார்க்ஸ்.

 

Related Posts