அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 5

திட்ட ஆணையம், நீதிமன்றங்கள் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதல்கள்:

நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் தடலடியாக இவர்கள் செய்த மாற்றங்களைப் பட்டியலிட்டுக் கொள்வோம்.

  1. நாட்டின் பொருளாதாரத்தை பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சந்தையின் கைகளில் அள்ளித் தந்துவிடாமல் மக்கள் நலன் நோக்கில், கூடிய வரையில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்காக சோவியத் ருஷ்ய பாணியில் அமைக்கப்பட்ட திட்ட ஆணையம் (planning commission) ஒழித்துக் கட்டப்பட்டது. அதனிடத்தில் ‘நிதி ஆயோக்’ என்கிற எந்தப் பயனும் அற்ற ஒரு பொம்மை நிறுவனம் வைக்கப்பட்டது.

 

  1. நீதிமன்றங்கள் சுயேச்சையாக இயங்குவது என்பது ஜனநாயக அமைப்பில் மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீதியமைப்பே சுதந்திரமாகத் தேர்வு செய்வதற்கென கடைபிடிக்கப்படும் கலேஜியம் முறையை ஒழித்து அந்த அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் முயற்சியை மோடி அரசு செய்தது. எனினும் கடும் எதிர்ப்பின் ஊடாக உச்சநீதிமன்றம் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தியது. நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்து வருவதைக் கண்டித்து செல்மேஷ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகிய மூத்த, நேர்மை மிக்க நான்கு நீதிபதிகள் முதன் முதலாக வரலாறு காணாத வகையில் வீதிக்கு வந்து பத்திரிகை யாளர்களைச் சந்திக்கும் அவலமும் மோடி ஆட்சியில்தான் நடந்தது.

 

  1. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தபோதும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அவசரச் சட்டங்களின் மூலம் தங்களின் திட்டங்களை மோடி அரசு நிறைவேற்றியபோது அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியே அதைக் கண்டிக்க நேர்ந்தது. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு நிறைவேற்றிய ஓரளவு பாராட்டப்படக் கூடிய சட்டங்களில் ஒன்று (கார்பொரேட் முதலியவற்றின் நலன் நோக்கில்) மக்களின் நிலங்கள் கையகப்படுத்துவது தொடர்பான சட்டம். அதை அவசரச் சட்டம் கொண்டு திருத்தி கார்பொரேட்களுக்குச் சேவை செய்ய மோடி அரசு முனைந்தபோது அது கடும் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டது.

 

  1. உயர்கல்வி நிறுவனங்கள் சுயேச்சையாக இயங்குவது என்பது ஜனநாயகக் கூறுகளில் ஒன்று. எட்டாம் வகுப்புவரை பிள்ளைகளுக்குப் பாஸ், ஃபெயில் முறை கிடையாது என்பதை ஒழித்து மீண்டும் பாஸ் – ஃபெயில் முறையை கீழ் வகுப்புகளிலிருந்து கொண்டு வருவது,

பத்தாம் வகுப்பில் நான்றாகப் படிக்காத மாணவர்கள் என ஒருசாரரை ஒதுக்கி அவர்களை வெறும் தொழிற் பயிற்சி மட்டுமே கற்கக் கூடியவர்களாக மாற்றுவது,

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் எந்தத் தடையும் இல்லாமல் இங்கே கடை விரிப்பதற்கு வாய்ப்புக்களை அதிகமாக்குவது முதலான நோக்கங்களுடன் கூடிய புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.

மத்திய பல்கலைக் கழகங்களில் இந்துத்துவ ஆதரவாளர்களை, அவர்கள் கல்வித்தரம் இல்லாதவர்களாக இருந்தபோதும் துணைவேந்தர்களாக நியமித்தது,  கல்விச் சுதந்திரத்தில் தலையிட்டு மாணவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது,

ஆய்வுப் படிப்பிற்கான உதவித் தொகைகளைக் குறைத்து –  அரசின் அந்த நடவடிக்கை நீதிமன்றத்தால் செல்லாததாக்கப்பட்டவுடன் உதவித் தொகையைப் பெறுவதற்கு ‘நெட்’ முதலான தேர்களில் வெற்றிபெறுவது நிபந்தனையாக்கப்பட்டது,

அதோடு ஆய்வுப் படிப்புகளின் எண்ணிக்கையையே பெரிய அளவில் குறைக்கப்பட்டது

என்பதெல்லாம் இவர்கள் கல்வித்துறையில் செய்த தலையீடுகள்..

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் 2000 மாணவர்கள் ஆய்வுப் படிப்பிற்குச் சேர்வது என்பது வெறும் 400 என்கிற அளவில் குறைக்கப்பட்டது. எல்லா மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைதான். இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது அடித்தள மாணவர்கள்தான். இது அவர்கள் நம்பும் வருணாசிரமக் கொள்கையின் ஒர் அங்கமாகவே அமைந்தது. பல்கலைக் கழகங்களின் தரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பல்கலைக்கழக மான்யக் குழுவிடமிருந்து (UGC) பறித்து அதை ஒன்றுமில்லாததாக்கிய பெருமையும் இவர்களையே சாரும்.

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இந்த அமைப்புகளில் எந்தக் குறைகளும் ருக்கவில்லை என்பதல்ல. ஆனால் குறைகளைச் சாக்காக வைத்து இந்த ஜனநாயக அமைப்புகளை ஒழித்துக் கட்டுவது என்பது எந்த உள்நோக்கிலிருந்து வெளிப்படுகிறது என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

(தொடரும்)

– அ.மார்க்ஸ்.

Related Posts