மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 20

நல்லவேளை எல்லோரும் பயந்ததுபோல ஒரு இந்திய – பாக் போர் உருவாகவில்லை
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர் உருவாகலாம் என மூன்ற மாதங்கள் முன்புஅமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது போல் ஆகாமல் 40 இந்திய வீரர்களைப் பலி கொன்அ  புல்வாமா பயங்கரவாதத் தாக்குலை ஒட்டிப் போர் ஏதும் நல்லவேளையாக நடந்து விடவில்லை.  இருந்தாலும் அப்படி எல்லாம் போர்ச் சூழல் உருவாகாது என்கிற மெல்லிய நம்பிக்கை பலருக்கும் இருந்ததற்குக்  காரணம் கடந்த சில ஆண்டுகளாக பாக்கில் இம்மாதிரியான பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் குறைந்திருந்ததுதான். இந்தியாவைக் காட்டிலும் பாக்கை அதிகமாக ஆதரித்து வந்த அமெரிக்கா இப்போது சிலகாலமாக வெளிப்படையாக அதைக் கண்டித்து வந்ததோடு அதன் மீது பொருளாதாரத் தடையையும் வித்தித்திருந்தது.  மோடியின் இந்தியா மிகத் தீவிரமாக அமெரிக்க – இஸ்ரேல் அணியில் இணைந்து நின்றது இதர்கொரு காரணம்.. பாகிஸ்தான் தஞ்சமடைய இபோது சீனாவைத் தவிர வேறு கதி இல்லை என்கிற நிலையில் ட்ரம்ப் பயங்கரவாதக் குழுக்களை ஒழிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து பாக்கிற்கான ஆயுத உதவிகளையும் நிறுத்தினார். இதன் விளைவாக பாக்கும் லக்ஷர் ஏ தொய்பா, ஜெய்ஷ் ஏ முகமது முதலான அமைப்புகளுக்கான ஆதரவுகளை நிறுத்தியிருந்தது. அவ்வமைப்புகளும் தம் பயிற்சி முகாம்களைக் கலைத்துச் சிதறி இருந்தன, அதனால்தான் இன்றைய பிரச்சினைகளுக்குச் சில நாட்கள் முன் (பிப்ரவரி 2019) நடைபெற்ற ம்யூனிச் பாதுகாப்பு அமைப்புச் சந்திப்பில் (Munich Security Forum) இந்தியா – பாக் உரசல் குறித்து எந்த விவாதமும் நடை பெறவில்லை.
இந்தப் பின்னணியில்தான் பிப்ரவரி 14ல் புல்வாமா தாக்குதல் நடந்தது. நமது வீரர்கள் 40  பேர்கள் கொல்லப்பட்டது எல்லோருக்கும் அதிர்ச்சி அளீத்தது. நரேந்திர மோடியைப் பற்றி அறிந்தவர்கள் எல்லோருக்கும் போர்ச்சூழல் உருவாகுமோ  என அதிர்ச்சி அடைந்தனர். எதிர்பார்த்ததுபோல நரேந்திர மோடியும் பாஜகவினரும் தேசிய உணர்வை மிகத் தீவிரமாக விசிறத் தொடங்கினர்.
பிப்ரவரி 26 நள்ளிரவில் இந்தியாவின் மிர்ரேஜ் 2000 விமானங்கள் பன்னிரண்டு பாக் எல்லைக்குள் நுழைந்து அதன் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷே அமைப்பின் பயங்கரவாத முகாம் ஒன்றில் குண்டுகளை வீசி அதிலிருந்த சுமார் 250லிருந்து 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பில் பெரிய அளவில் செய்திகள் பரப்பப் பட்டபோது போர் வந்துவிடுமோ என்கிற அச்சம் அதன் உச்சத்தை அடைந்தது.
 இது இந்தியாவின் இரண்டாவது “துல்லியத் தாக்குதல்“ (surgical strike) எனக் கூறப்பட்டது. தாக்குதலுக்குச் சில மணி நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றிய இந்திய பாதுகாப்புத் துறைச் செயலர் விஜய் கோகலே இது ஒரு “இராணுவ நடைமுறையிலான தாக்குதல் அல்ல முன்கூட்டிய பாதுகாப்புத் தாக்குதல்” – எனும் பொருள் பட “preemptive nonmilitary strike” என்றும், “இது பாகிஸ்தான் மீதான தாக்குதல் அல்ல. பயங்கரவாதத்தின் மீதான தாக்குதல்” என்றும் கூறினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர் பங்கிற்கு, “இது இராணுவ நடவடிக்கை அல்ல. ஒரு சிவிலியன் கூட பாதிக்கப்படவில்லை” – என்றார்.
பாக் இராணுவம் தன் பங்கிற்கு, “இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது” என முழங்கியது.அதாவது தாங்கள் பதில் தாக்குதல் தொடுப்போம் என எச்சரித்தது. சரி நிச்சயம் போர்தான் என அஞ்சினோம்.1971க்குப் பின் பல்வேறு சந்தர்ப்பங்களில் மிகத்தீவிரமாகப் பிரச்சினைகள் வந்த போதெல்லாம் கூட இப்படி இரண்டு நாடுகளுமே எல்லை தாண்டித் தாக்குதலை நடத்தியதில்லை. இனி என்ன ஆகுமோ என்கிற அச்சம் நம் எல்லோரையும் சூழ்ந்தது.
இந்த நேரத்தில் மிகவும் பொறுமையாகப் பிரச்சினையைக் கையாண்டது பாக் பிரதமர் இம்ரான் கான் தான்.இரு நாடுகளும் மிகப் பெரிய அழிவாயுதங்களைச் சுமந்துள்ள நாடுகள்.நமக்குள் இப்படியான மோதல் எங்கு கொண்டுபோய் விடும்.பொறுமையாகப் பிரச்சினையை அணுகுவோம் என்றும் அப்படியான பெரிய அளவிலான பயங்கரவாத முகாம்கள் தன் நாட்டில் இல்லை என்றும் அவர் கூறினார்.
இன்னொரு பக்கம் பயங்கரவாத முகாம் ஒன்றைத் தாக்கி 300 பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பில்  சொல்லப்படுவது பொய் எனவும், அழிக்கப்பட்டது ஆள் இல்லாத மரங்கள் சூழ்ந்த ஒரு பகுதிதான் எனவும் புகைப்பட ஆதாரங்களுடன் பாக் தரப்பில் செய்திகள் வெலீயிடப்பட்டன.
பத்திரிக்கைகள் களத்தில் இறங்கின. Huff Post இணைய இதழ் இந்தியா குண்டு வீசிய இடங்களில் வாழ்ந்த ஒரு சிலரை நேர்கண்டு எழுதிய கட்டுரைச் இந்தியத் தாக்குதல் நடந்த இடத்தில் எந்த பயங்கரவாதியும் இருக்கவில்லை என்பதையும், உயிரிழப்புகள் ஏதும் இல்லை எனவும் நிரூவியது.  ‘அல்ஜசீரா’ போன்ற ஊடகங்களும் அதே போன்ற செய்திகளை வெளியிட்டன. குண்டு வீசப்பட்ட இடத்தில் வாழும் நூரான் ஷேக் என்பவர் 250 பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் எங்கே அவர்களின் உடல்கள் எனக் கேட்டுச் சிரிப்பதைப் படத்துடன் ஹஃப் போஸ்ட் வெளியிட்டது. பெரிய முகாம் இருந்தது உண்மை.ஆனால் இப்போது அப்படி எல்லாம் இல்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையில் இந்தியாவின் இந்தத் தாக்க்குதல் நடந்த அடுத்த நாள் (பிப் 27) எல்லை தாண்டித் தமது எல்லைக்குள் நுழைந்த இரண்டு இந்திய விமானப்படை விமானங்களைத் தான் சுட்டு வீ௳த்தியதாக பாக் அறிவித்தது. வீழ்த்தப்பட்ட ஒரு விமானத்தில் இருந்த விமான ஓட்டி அபிநந்தன் வர்த்தமானன் என்பவர் பாக் இராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டார். இந்தப் பிரச்சினையிலும் இம்ரான் கான் வியக்கும்படி நடந்து கொண்டார். அபிநந்தனுக்கு நல்ல சிகிச்சை அளித்து பாதுகாப்புடன் இந்தியாவிடம் ஒப்படைத்தார்,
பாலகோட் தாக்குதலில் ஜெய்ஷே பயங்கரவாத முகாமை அழித்து 300 பயங்கரவாதிகளைக் கொன்ற செய்தி பொய் என்பது எல்லாத் தரப்பிலிருந்தும் நிறுவப்பட்ட பின் மார்ச் 04 அன்றுமத்திய தகவல்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா அரசுத் தரப்பில் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை எனவும் ஊடகங்கள்தான் அப்படிச் செய்தியைப் பரப்பிவிட்டன என்றும் கூறி எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மார்ச் 4 அன்று கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோவா, “எங்களின் நோக்கம் இலக்கைத் தாக்குவதுதானே ஒழிய எத்தனை பேர் இறந்தனர் என்றெல்லாம் சொல்ல முடியாது. அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும்” எனச் சொன்னார்.இந்தச் செய்தியை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இந்தத் தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமித் ஷாஅளந்துள்ளதைச் சுட்டிக் காட்டியது
பாக் ஒன்றும் பயங்கரவாதிகளுக்குப் புகல் அளிக்காத நாடு அல்ல, அங்கு ஜெய்ஷே முகாம்கள் இருந்ததெல்லாம் உண்மைதான்.அதேபோல பாக் இராணுவம் அரசின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படக்கூடிய நிலைமைகள் இருந்ததும் உண்மைதான்.ஆனால் நிலைமைகள் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை.ஒரு நேரத்தில் தமிழகம் முழுவதும் ஈழப் போராட்ட ஆயுதக் குழுக்கள் எல்லாம் இங்கே ஆயுதப் பயிற்சி முகாம்களை அரசாதரவுடன் நடத்தியதை அறிவோம்.ராஜீவ் கொலைக்குப் பின்னர் அவை கலைத்து ஒடுக்கப்பட்டதையும் அறிவோம்.இன்று பாக்கிலும் ஓரளவு நிலைமை மாறியுள்ளது.பெரிய பயங்கரவாத முகாம்கள் எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை.இராணுவமும் முன்னைப்போல இப்போது அரசை மீறிய அதிகாரமுள்ள அமைப்பாக இருக்கும் நிலையில் இல்லை.இந்தியா பாகிஸ்தான் இரண்டுமே அணு வல்லமை உடைய நாடுகள் மட்டுமல்ல. வறுமை நிறைந்த நாடுகள், அவை தமக்குள் போரிட்டுக் கொள்வதைப்போல மூடத் தனம் ஏதும் இருக்க இயலாது.
மேலும் இரு குறிப்புகள்
1. நாடுகளுக்கிடையேயான கடைபிடிக்கப்படும் சில அவசியமான ஒழுங்குகளில் (Westphalian Order) ஒன்று எக்காரணம் கொண்டும் இன்னொரு நாட்டின் எல்லைக்கோட்டித் தாண்டிப் பிரவேசிக்கவோ தாக்கவோ கூடாது என்பது. 1971 க்குப் பின் நிலைமைகள் எவ்வளவு மோசமான போதும் இந்தியாவும் பாக்கும் அதைக் கடைபிடித்து வந்துள்ளன. எல்லை தாண்டித் தாக்குதல் செய்வதென்பது போர் தொடங்கிவிட்டதான ஓர் அறிவிப்பிற்குச் சமம். கிரீமியாவை ருஷ்யா இணைத்துக் கொண்டதை அவ்வாறே பன்னாட்டுச் சமூகம் எதிர் கொண்டுள்ளது. 2016 அமெரிக்கத் தேர்தலில் ருஷ்யாவின் தலையீடும் இவ்வாறே கருதப்படுகிறது. எனினும் இதன் பொருட்டு அமெரிக்கா ரஷ்யாவிற்குள் இதுவரை எல்லைதாண்டியத் தாக்குதல் நடத்தியதில்லை. இந்தியா 1971 க்குப் பின் இதுவரை இதுவரை இப்படியான செயற்பாடுகளில் இறங்காதது பன்னாட்டளவில் அதன் மீதான மதிப்பு குறையாமல் இருப்பத்ற்கு ஒரு காரணம்.
2. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை ஒட்டி இந்தியா மேற்கொண்ட சில கண்டிக்கத் தக்க நடவடிகைகளில் ஒன்று ஹுரியத் தலைவர்கள் உட்பட சுமார் 170 பேர்களுக்கு வழங்கி வந்த பாதுபாப்பை இந்திய அரசு ரத்து செய்தது. இதில் உயிராபத்து உள்ள பல காஷ்மீர அரசியல் கட்சித் தலைவர்களும் அடக்கம். இந்தியா முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் காஷ்மீர மாணவர்கள், வணிகர்கள், ஊழியர்கள் முதலானோர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கப் பரிவாரத்தினர் இதில் முக்கிய பங்கு வகித்தனர். “இயல்பான தேசபக்தியின் எதிர் விளைவு என இதை அவர்கள் நியாயப்படுத்தவும் செய்தனர். டெராடூனில் ஒரு கல்வி நிறுவனம் அடுத்த ஆண்டுமுதல் காஷ்மீர மாணவர்களுக்குத் தம் நிறுவனத்தில் இடமளிப்பதில்லை என பா.ஜ.க மாணவர் அணிக்கு எழுதிக் கொடுத்துள்ள செய்தியும் பத்திரிகைகளில் வந்துள்ளது. இவ்வாறு இந்தியாவின் பலபகுதிகளிலும் நடந்த தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் ஒரு நாள் கடை அடைப்பும் மேற்கொள்ளப்பட்டது.
(இத்துடன் இத் தொடர் நிறைவுறகிறது)
–  அ.மார்க்ஸ்.

About ஆசிரியர்குழு‍ மாற்று