அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 2

ரிசர்வ் வங்கி மற்றும் இதர நிதித்துறைகள் சீரழிக்கப்பட்ட கதைகள்

  • ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறைகள்: பா.ஜ.க அரசின் முட்டாள்தனமான நடவடிக்கைகளையும், மதவெறி நோக்கில் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபத்தங்களையும் பொறுக்க இயலாமல் இதுவரை நான்கு பொருளாதார நிபுணர்கள் பதவி விலகியுள்ளனர். அவர்கள்:
  1. ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி ஆளுனர்,
  2. அர்விந்த் பனகாரியா, ‘நிதி ஆயோக்’ இன் தலைவர்,
  3. அரவிந்த் சுப்ரமணியம், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர். 4.உர்ஜித் படேல், ரிச்ர்வ் வங்கி ஆளுநர்.

இரண்டாண்டுகளுக்கு முன் சுப்பிரமணியம், “சமூகப் பிளவுகளை அரசாங்கங்கள் கையாளும் முறை பொருளாதார இழப்புகளுக்குக் காரணமாகிறது…. மாட்டுக்கறித் தடை இந்தியப் பொருளாதாரத்தை எப்படிப் பாதிக்கிறது என நான் சொன்னால், என் வேலையை இழக்க நேரிடும்” என்றார். சுப்பிரமணியன், ரகுராம் ராஜன் ஆகியோர் “தேச விரோதக் கருத்துக்களைக் கொண்டிருப்பதாக” சுப்பிரமணிய சாமி குற்றம்சாட்டியது குறிப்பிடத் தக்கது. பனகாரியாவின் சில கொள்கைகளை ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாக விமர்சித்தது. ரகுராம்

ராஜன் மோடி அரசின் பண மதிப்பீடு ஒழிப்பு நடவடிக்கையை விமர்சித்தது தெரிந்ததே. “ஒரு அரசு அதிகாரி வேலையை ராஜினாமா செய்வதென்பது அரசுக்கு எதிராக வெளியிடும் ஒரு மறுப்பு அறிக்கை” எனவும் அவர் குறிப்பிட்டார். மும்பையில் நடைபெற்ற ஏ.டி.ஷ்ராஃப் நினைவுச் சொற்பொழிவில் பேசும்போது ரிசர்வ் வங்கியின் துணை இயக்குநர் விரல் ஆசார்யா, “மத்திய (ரிசர்வ்) வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது என்பது பொருளாதாரச் சூழல் கொழுந்துவிட்டு எரிவதற்கே இட்டுச் செல்லும். இப்படி இந்தப் பொருளாதார ஒழுங்காற்று நிறுவனத்தின் அடிவேரைச் சிதைத்த அந்த நாளை எண்ணி நீங்கள் பின்னாளில் வருந்த நேரிடும்” எனக் கடுமையாக எச்சரிக்க நேரிட்டது.

பொதுவாக ஒழுங்காற்று நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே இப்படியான சிக்கல்கள் வருவது இயற்கைதான். குறிப்பாக வங்கித் துறையில் வாராக் கடன்கள், ஒழுங்காக வட்டி செலுத்தாமை முதலானவற்றால் ஏற்படும் சுமைகள் (stressed assets) தொடர்பான பிரச்சினைகள் உருவாகும்தான். அரசு இந்த நெருக்கடியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மத்திய வங்கியின் (அதாவது Reserve Bank ன்)  இருப்பில் கை வைக்க நேரும்போது பிரச்சினைகள் ஏற்படும்.  இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அரசு மூர்க்கமாக மத்திய வங்கியில் தலையிடுவது என்கிற நிலை ஏற்பட்டால் பின் மிகப்பெரிய நெருக்கடிகளை நாடு சந்திக்க நேரிடும். அதன் சுமையை இறுதியில் தாங்கப்போவது மக்கள்தான்.

மோடி அரசின் மிகப்பெரிய மூட நடவடிக்கை சென்ற 2016 நவம்பர் 8 அன்று அது மேற்கொண்ட நோட்டுக்களைச் செல்லாததாக்கியதுதான். பணப் புழக்கத்தில் இருந்த சுமார் 80 சதத்திற்கும் மேற்பட்ட நோட்டுக்களை கண நேரத்தில் செல்லாததாக்கிய நடவடிக்கை எந்த வகையிலும் பயனற்றதாக அமைந்த ஒரு கொடு நடவடிக்கை. இதுபற்றி ரிசர்வ் வங்கிக்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாகத்தான் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு நிற்கவில்லை ரிசர்வ் வங்கியை வழிக்குக் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் வெறியரும் வெறும் சார்டட் அக்கவுன்டன்டும் ஆன குருமூர்த்தி அதன் இயக்குனர்களில் ஒருவராகச் சொருகப்பட்டார். அப்புறம் எப்படி ரகுராம் ராஜன் போன்ற நேர்மையான அதிகாரிகள் தன் பதவியை விட்டு ஓட மாட்டார்கள்!

  • மத்தியப் புலனாய்வு நிறுவனம் (CBI): இத்தகைய சட்ட அடிப்படையிலான அரசு நிறுவனங்களில் ஒன்று. இதில் வரலாறு காணாத அளவில் இப்போது பிரச்சினைகள் எழுந்துள்ளன. இவை ஏதோ வெறுமனே அதிகாரிகளுக்கு இடையே நடைபெறும் ஆளுமை மோதல்கள் அல்ல. நிறுவனச் சுதந்திரங்களில் மோடி அரசு தலையிடுவதால் ஏற்படும் விளைவுகள்தான் இவை என்பதைச் சற்று உள் நுழைந்து பார்த்தால் விளங்கிக் கொள்ள முடியும்.

காங்கிரஸ் முதல் ராஷ்ட்ரீய ஜனதா வரை எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் குடையும் நோக்கில் ஜனவரி 2017 ல் மோடி அரசு தனக்கு மிகவும் பிடித்தவரான அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனராக நியமித்தது. அடுத்து ராகேஷ் அஸ்தானா என்கிற இன்னொரு பிடித்தமானவரை உதவி இயக்குனராக்கியது. இருவரும் முட்டி மோதி பிரச்சினை சந்தி சிரித்தவுடன் விதிகளை மீறி இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டு  தனக்கு இன்னும் விசுவாசமானவரான நாகேஸ்வர ராவ் என்பவரை மேலுக்குக் கொண்டு வந்தது மோடி அரசு.

லாலு பிரசாத் போன்றவர்களை ஒழித்ததுபோல அரசியலில் தமக்குப் பிடிக்காத மற்றவர்களையும் ஒரே அடியாக ஒழித்துக் கட்டும் நோக்குடன் இப்படித் தகுதியற்ற ஊழல் பேர்வழிகளை நாட்டின் மிக உயர்ந்த புலனாய்வு அமைப்பில் புகுத்தியதன் ஊடாக இன்று அது சீரழிந்து கிடக்கிறது. உச்சநீதிமன்றம் அலோக் வர்மாவின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்தியக் கண்காணிப்புத் துறைக்ககு (Central Vigilance Commission -CVC) இப்போது உத்தரவிட்டுள்ளது.

(தொடரும்)

– அ.மார்க்ஸ்.

 

Related Posts