அரசியல்

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 19

“உலகமயத்தை (Globalization) காப்பாற்றியே தீர்வோம்” – மோடி ஆவேசம்
உலகமயச் செயற்பாடுகளை ஆதரிப்பவர்கள் மத்தியில் Protectionism என்பது மிகவும் அசிங்கமான  ஒரு கெட்டவார்த்தை. “பாதுகாப்பு வாதம்” அல்லது “பாதுகாப்பு நிலைபாடு” எனப் பொருள்படும் இந்தச் சொல் குறிப்பது வேறொன்றுமில்லை. தன் நாட்டுத் தொழில்கள் பாதிக்கப்படும் என்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் நுழையாமல் தன் நாட்டுக் கதவுகளை மூடிப் பாதுகாப்பு அளிப்பதுதான் protectionism. திறந்த சந்தை என்பதன் ஊடாக வெளிநாட்டுப் பெரு நிறுவனங்கள் இங்கே நுழையும்போது உள்நாட்டுப் பாரம்பரியத் தொழில்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அப்படியான பாதுகாப்பு அளிப்பதைத்தான் protectionism என்பார்கள்.
சங்கிகள் சுதேசி பற்றி எல்லாம வாய்கிழிப அளக்கக் கூடியவர்கள் என்பதை அறிவோம். சங்கப் பரிவாரங்களில் ‘சுதேசி ஜாக்ரன் மஞ்ச்’ என்கிற பெயரிலும் ஒரு அமைப்பு உண்டு. ஆனால் 2018ல் டேவோசில் நடந்த ‘உலகப் பொருளாதார மன்றத்தில்’ (World Economic Forum) நரேந்திரமோடி இந்த protectionism த்தை ஆவேசமாகக் கண்டித்து உரையாற்றினார். அதற்கு அங்கு அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.. இந்தியா போன்ற நாடுகளில் மூலதனத்தைக் கொண்டு வந்து குவித்துக் கொள்ளை அடிக்க நினைக்கும் நாட்டுத் தலைவர்கள் எல்லாம் கைதட்டிக் குதூகலித்தனர்.
Protectionism ஐக் கடுமையாக எதிர்த்து மோடி உதிர்த்த கருத்துக்களைப் பார்க்கும் முன் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இப்படித் தம் நாடுகளை வருவோர் போவோர் எல்லாம் கொள்ளை அடிக்கத் திறந்துவிடுவதால் உள் நாட்டுத் தொழில்கள் பாதிக்கப்படுவதைப் பற்றிய கவலை வளர்ச்சி அடைந்த நாடுகளில் இப்போது தலை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் பொருள் உலகமயத்தை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்றோ, வெறுக்கிறார்கள் என்பதோ அல்ல.
அவர்கள் இப்போது ஒரு நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். முதலாளியம் தொடர்ந்து பல்வேறு வகைகளில் நெருக்கடிகளைச் சந்தித்தே ஆகும் என்பது கார்ல் மார்க்ஸின் முக்கிய கருத்தாக்கங்களில் ஒன்று. 2007 -08 கால கட்டத்தில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா சந்திக்க நேர்ந்ததை அறிவோம். அந்த நெருக்கடி அமெரிக்காவோடு நிற்கவில்லை. உலகமயச் சூழலில் அது இன்னும் பல நாடுகளையும் பாதித்தது.
அதன் பின் அமெரிக்காவும் கொஞ்சம் protectionism பேசத் தொடங்கியுள்ளது. அதாவது தாங்கள் பிற நாடுகளில் எல்லை தாண்டி மூலதனம் இடுவோம். ஆனால் நீங்கள் இங்கு அப்படிச் செய்ய விடமாட்டோம் என்கிற நிலையை அவர்கள் தொடங்கியுள்ளனர். டாவோஸ் மாநாட்டிற்குச் சில தினங்கள் முன்தான் ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி ஆகிற சூரிய ஒளி மின்சாதனங்கள் மீது கூடுதல் வரி விதித்து உத்தரவிட்டார். உள் நாட்டுத் தொழிலதிபர்களின் வேண்டுகோளை ஏற்று. தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ட்ரம்ப் சில நேரங்களில் உலகமயத்தை வெளிப்படையாகக் கண்டிக்கவும் நேர்ந்தது. குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் வேலைக்குக் கிடைப்பார்கள் என்பதற்காக அமெரிக்க முதலாளிகள் தம் தொழில்களைப் பிற நாடுகளுக்கு இடப் பெயர்வு செய்யும் நிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றெல்லாமும் கூட அவர் ஒரு கட்டத்தில் பேசினார். ட்ரம்பின் வெற்றியைப் பற்றி யோசிப்போர் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றில் இதுவும் ஒன்று. அவர் வெறும் இனவாதம் மட்டும் பேசவில்லை. protectionism, தேசியவாதம் ஆகிய சொல்லாடல்கள் அவருக்கு அப்போது பெரிதும் உதவின,.
இந்தப் பின்னணியில்தான் சென்ற வாரம் டாவோசில் கைதட்டல் வாங்கிய நரேந்திர மோடியின் பேச்சைக் கவனிக்க வேண்டும். மோடி முழக்கிய சில முக்கிய வாசகங்கள்:
“உலகமயம் இப்போது தன் கவர்ச்சியை இழந்து கொண்டுள்ளது.protectionism தான் இப்போது தன் நிலையை வலுவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியா அப்படியல்ல. நாங்கள் பிறநாடுகள் இங்கு தொழில்கள்தொடங்க எல்லாவற்றையும் திறந்து வைத்திருக்கிறோம்”
அத்தோடு நிறுத்தினாரா?
“உலகமயத்திற்குப் பதிலாக protectionism இன்று தலைதூக்கி வருகிறது. protectionism ஐ முன் வைப்பவர்களின் விருப்பம் உலகமயத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல. மாறாக உலகமயத்தின் இயற்கையான நகர்வைத் தடுப்பதுதான் அவர்கலீன் நோக்கம்ம்..”
முத்தாய்ப்பாக மோடி சொன்னது என்ன தெரியுமா? “protectionism பயங்கரவாதத்தைப் போல இன்று பரவிக்கொண்டுள்ளது” என்றார்.
அப்புறம் என்ன அங்கே கூடியிருந்தோர் கைதட்டினார்கள், கைதட்டினார்கள். கைதட்டிக் கொண்டே இருந்தார்கள். நமக்கு ஒரு நல்ல அடிமை கிடைத்தார் என அவர்கள் தமக்குள் கண்சிமிட்டிக் கொண்டனர். தொடர்ந்து பேசுகையில்,
“இரு நாட்டு மற்றும் பன்னாட்டு ஒப்பந்தங்கள் எல்லாம் ஒரு தேக்கத்திற்கு வந்துள்ளன. இதன் விளைவாக எல்லை தாண்டிய முதலீடுகள் குறையத் துவங்கியுள்ளன. உலகளாவிய பொருள் வினியோகத் தொடரும் சரியத் தொடங்கியுள்ளது. உலகமயத்திற்கு எதிராக உருவாகியுள்ள இந்தக் கவலைக்குரிய நிலைக்கான தீர்வு என்பது நாம் இதிலிருந்து துண்டித்துக் கொண்டு ஒதுங்குவதல்ல. இதற்கான தீர்வு வெளிப்படையான வணிகக் கொள்கைகளை உருவாக்குவதுதானே தவிர protectionism அல்ல”
உலகை நோக்கியுள்ள மூன்று சவால்களாக இந்த 1. protectionism. 2. பருவநிலை மாற்றம் (climate change), 3. பயங்கரவாதம் என்பவற்றைக் குறிப்பிட்ட மோடி உலகமயத்தைக் கை விட்டுப் பன்னாட்டு மூலதனங்களுக்குக் கதவை அடைப்பதை பயங்கரவாதத்தையும் விடப் பெரிய ஆபத்து எனவும் சொன்னார்.
வெளிநாட்டு முதலீட்டுக்கான சொர்க்கம் இந்தியா எனச் சொல்லும் அளவுக்குச் சென்ற மோடி,”இங்கு முதலீடு செய்வது, உற்பத்தி செய்வது, இது தொடர்பான உங்கள் வேலைகளைச் செய்வது எல்லாவற்றையும் எளிதாக்கியிருக்கிறோம். ‘லைசன்ஸ், பர்மிட் ஆட்சியை’ வேறோடு தோண்டி எறிவதென முடிவெடுத்து விட்டோம். சிவப்பு நாடாவிற்குப் பதிலாகச் சிவப்புக் கம்பளம் விரிக்கக் காத்திருக்கிறோம்” – எனக் குட்டிக்கரணம் அடிக்காத குறையாகப் பணிந்து வித்தை காட்டி உலக முதலாளியத்திற்குச் சலாம் செய்தார்.
“2010 ல் 5 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்காக ஒன்றே கால் பில்லியன் இந்தியர்களும் எல்லாச் சவால்களையும் சந்திக்கவும், எல்லா மாற்றங்களையும் ஏற்கவும் தயாராக உள்ளோம்”- எனவும் துண்டைப் போட்டுத் தாண்டாத குறையாகச் சத்தியம் செய்தார்.
உலக வர்த்தக அமைப்பிற்கான (WTO) முன்னாள் இந்தியத் தூதர் ஜயந்த் தாஸ்குப்தா மோடியின் உரையை வெகுவாகப் பாராட்டிச் சொல்லுகையில், “நம்முடைய நிலையை நாம் இப்படி அழுத்தம் திருத்தமாகத் தெளிவாக்காவிட்டால் ‘உலக வர்த்தக நிறுவனம்’ போன்ற பன்னாட்டு அமைப்பை protectionism உடைத்து நொறுக்கிவிடும்” என்றார்.
20க்கும் மேற்பட்ட இந்தியப் பெருமுதலாளிகளின் பட்டாளத்தோடு மோடி டாவோசுக்குச் சென்றீருந்தது குறிப்பிடத் தக்கது.
WTO, உலமயம் ஆகியவற்றை அமெரிக்கா முதலான நாடுகள் இந்தியா போன்ற வளர்ச்சியடையாத நாடுகள் மேல் திணித்தது போக மோடி ஆட்சியில்  வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டார்கள்.
மோடி ஆட்சியில் ஏற்பட்ட வரலாறு காணாத
வேலை இழப்புகள் (Unemployment)  பற்றிய ஒரு பின் குறிப்பு
+++++++++++++++++++++++++++++++++++++++++++:
“மோடி ஆட்சியில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை பெருகுவது, கடந்த 45 ஆண்டுகால வரலாறு காணாத வகையில் இன்று வேலையின்மை 6.1 சதமாக ஆகியுள்ளது. 6 இலட்சம் பேர் இன்று வேலை இல்லாமல் இருப்பதற்கு மோடி அரசின் கொள்கைகளே காரணம்” எனப் புகழ் பெற்ற பொருளாதார அறிஞர் கௌசிக் பாசு இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘நியூயார்க் டைம்ஸ் இதழில் எழுதினார் (பார்க்க: Scroll.in, Feb 01, 2019). “வேலையின்மை பற்றிய தரவுகளாஇ இந்தியா மறைக்கலாம். ஆனால் உண்மையை மறைத்துவிட முடியாது” என்பது அக் கட்டுரையின் தலைப்பு.
சென்ற ஜனவரி இறுதியில் Business Standard  இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை 45 ஆண்டு கால வரலாற்றில் காணாத அளவிற்கு 2017 – 18 ம் ஆண்டில் இங்கு வேலை இல்லாமை 6.1 சதம் அளவுக்கு எகிறியது எனவும் அதை ஆய்வுகளின் அடிப்படையில் National Statistical Commission  அறிக்கையில் சுட்டிக்காட்டிய போது மோடி அரசு அதை முடக்கியதைக் கண்டித்து அந்த ஆணையத்தின் இரு உறுப்பினர்கள் பதவி விலகியதாகவும் அந்த இதழ் குறிப்பிட்டது.
நோட்டுக்களைச் செல்லாததாக்கிய மூடத்தனமும், GST யை அமுல்படுத்திய அலங்கோலமும்தான் இந்த வரலாறு காணாத பெரு வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் இந்த முன்னாள் இந்தியப் பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு.
(காஷ்மிர் பிரச்சினையில் மோடி அரசின் தோல்வி பற்றிய ஒரு குறிப்புடன் இத் தொடர் முடிவடையும்)
– அ.மார்க்ஸ்.

Related Posts